Sunday, January 16, 2011

சின்னஞ் சிறு கிளியே


arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-1342677962 இதய நோயால் வருந்தும் சிறுவன் Sho, அவனிற்கு நடக்க இருக்கும் சத்திரசிகிச்சையின் முன்பாக சில நாட்களை அமைதியாக கழிக்க தன் தாயின் பிறந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன், வீடுகளின் கீழ் மனிதர்களின் கண்களில் படாது ஒளிந்து வாழும் வினோதமான சின்னஞ் சிறிய அளவுடைய இனமான இரவலர்கள் குடும்பம் ஒன்றின் மகளான அரியெட்டியை கண்டுகொள்கிறான். ஒரு புதிய நட்பு அவர்கள் இருவரிற்கிடையிலும் பிறக்க, தம் இருப்பை மனிதர்கள் அறிந்து கொண்டார்கள் எனும் அச்சத்தில் ஷோ தங்கியிருக்கும் வீட்டின் அடியிலிருந்து வேறு இடம் தேட ஆரம்பிக்கிறார்கள் அரியெட்டியின் பெற்றோர்….

கிப்லி ஸ்டுடியோவின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தரத்திலும்கூட அவற்றை எட்டிவிடுவது என்பது சிரமமானதே. அசைவூட்ட சினிமா நுட்பங்கள் இன்று பல எல்லைகளை தொட்டு விட்ட போதிலும்கூட தம் படைப்புக்களில் இருக்கும் மரபுத்தன்மையை கிப்லி படைப்புக்கள் தொழில்நுட்பங்களிற்காக விட்டுத் தருவதில்லை.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-627926656 கிப்லியின் படைப்புக்கள் சாந்தமான நிழல் வழங்கும் உயர்ந்த மரமொன்றின் கீழே பாட்டியின் அருகமர்ந்து தன்னை மறந்து கதை கேட்கும் அனுபவத்திற்கு எம்மை அழைத்துச் செல்லக் கூடிய தன்மையை கொண்டவை. கிப்லியின் புதிய வெளியீடான Karigurashi no Arietti [The Borrower Arrietty] அசைவூட்ட திரைப்படத்திற்கு திரைக்கதையை எழுதித் தருவதுடன் திருப்தி கொண்டிருக்கிறார் கிப்லியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான Hayao Miyazaki. படத்தை அழகாக இயக்கியிருப்பவர் அவரது சிஷ்ய பிள்ளையான Hiromasa Yonebayashi. திரைக்கதை Mary Norton எழுதிய The Borrowers எனும் மிகுபுனைவுக் கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-838387803 திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளுமே ஒரு வீட்டினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. அழகான பெரிய வீடு, அதனை சுற்றியிருக்கும் வனப்பான பூந்தோட்டம், வீட்டின் அடியில் ரகசியமாக ஒளிந்து வாழும் சின்னஞ் சிறு மனிதர்களின் ரசனையான வீடு, இவற்றினை சார்ந்து வாழ்ந்திருக்ககூடிய உயிரிகள் என்பனவே பிரதான பாத்திரங்கள். குருநாதர் மியாசகி இயற்கையில் வாழும் தேவர்களை உருவாக்காமல் விட்டுவிட்டார் போலும்.

வீட்டையும், அதனைச் சுற்றியிருக்கும் பூந்தோட்டத்தையும், மரங்களையும் அற்புதமாக அசைவூட்டமாக்கியிருக்கிறார்கள். அங்கு உலவும் காற்று உங்கள் காதோரம் கிசுகிசுப்பதை நீங்கள் உணர முடியும். சிறுவன் ஷோ, தன் பூனையுடன் அந்த தோட்டத்தில் படுத்திருக்கும் காட்சியின் அழகு ரசிகர்களை கலங்கடிக்க வைக்கும் அழகை கொண்டிருக்கிறது. அதே போல் வீட்டின் அடியில் ஒளிந்து வாழும் இரவலர்கள் உலகில் தன் கற்பனையை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹிரோமசா யொன்பயாசி.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-270827527 மனித வீட்டிற்கு அடியில் இருக்கும் அந்த இரவலர்களின் வீட்டின் அலங்காரம் அற்புதமான ரசனையை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சிறுமி அரியெட்டியின் அறை ஒரு அழகுக் காக்டெயில். மனிதர்களின் வீடுகளினுள் புகுந்து சில பொருட்களை இரவலாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு. அதற்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகசமே. ஆணியில் உருவான படிகள், அவர்களை அச்சுறுத்தும் எலிகள், கரப்புகள், சினேகம் கொண்ட தத்துவெட்டிகள், பிரம்மாண்டாமாக அவர்கள் முன் விரியும் மனித இருப்பிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களிற்காக அவர்கள் உருவாக்கியிருக்கும் தந்திரங்கள் என அந்த உலகின் வாழ்க்கை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-83652363 சிறுவன் ஷோ தானாகவே முன் வந்து அரியெட்டியுடன் நட்பை உருவாக்க விழையும் முயற்ச்சிகள் எல்லாம் நெகிழ்வானவை. முதன் முதலாக ஷோவிற்கு தன் முகத்தை அரியெட்டி காட்டும்போது அவள் முகத்தில் வரும் அழகு,,, ஆகா.. ஆகா. குறும்பும், தைரியமும் நிறைந்த சிறுமியான அரியெட்டி, அழிந்து போகும் நிலையிலிருக்கும் இனங்கள் குறித்து மனித குலம் காட்டும் உதாசீனத்தை கோபமான ஒரு கேள்வியாக ஷோ முன் நிறுத்துகிறாள். மனிதர்களால் இனங்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பரிதாபமாக வாழ்ந்து அழிந்தொழிவது புதியது அல்லவே. மேலும் அரியெட்டியின் குடும்பத்தை போலவே இரந்து வாழும் மனிதர்களை நாம் நாள்தோறும் காண்கிறோமே. ஏன் இங்குகூட குப்பைதொட்டிகளில் உணவை எடுத்து உண்டு வாழும் மனிதர்கள் இருக்கிறார்களே. அவ்வகையில் அதிகாரமும், வசதியும் நிறைந்த மனித குலத்தினை நோக்கிய ஒரு பார்வையாகவும் இப்படைப்பு அமைகிறது.

arrietty-le-petit-monde-des-chapardeurs-2011-21122-169728777 திரைப்படத்தின் இசை உங்களை மயக்கிவிடும் சக்தியை கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் பாடகியான Cécile Corbel பாடும் பாடலான Arrietty Song மனதை காற்று வெளியில் காலாற வைக்கிறது. செல்டிக் இசை கலந்து திரைப்படம் முழுதும் உறுத்தாத தென்றலாக தடவிக் கொடுக்கிறது இசை. இப்படம் வெளியாகியிராவிடில் சிசில் கொர்பெலின் திறமை அப்படியே பிரெத்தான் அலைகளுடனும், காற்றுடனும் மட்டுமே இசைத்து மகிழ்ந்திருக்கும். ஜப்பானியர்களின் கண்டிப்பான ரசனைக்கு மற்றுமொரு சான்று சிசில் கொர்பெல்.

இசை, அசைவூட்டம் என அசர வைத்திருந்தாலும் கதையின் பின்பகுதி அதிக எதிர்பார்ப்புகளிற்கு ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கிறது. மியாசாகியின் சீடர் குருவை விஞ்சவில்லை என்பது ரசிகர்களிற்கு சற்று கவலையான ஒன்றுதான். ஆனால் மனதை நெகிழ வைக்கும் ஒரு உச்சக்கட்டக் காட்சியை வழங்கி மனங்களை எல்லாம் அள்ளி எடுத்து விடுகிறார் இயக்குனர் யொன்பயாசி. அரியெட்டி தன் பையில் பாதுகாத்து வைத்திருக்கப் போகும் ஒரு சக்கரைக் கட்டியைப் போலவே அரியெட்டியும், ஷோவும் ரசிகர்கள் மனதில் கரையாமல் இருப்பார்கள். [***]

ட்ரெயிலர்

13 comments:

  1. ஸ்டுடியோ கிப்ளி படம் என்றாலே அல்வாதான். சொல்லவே வேண்டாம்.

    அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. நோ கட்ஸ் புகழ் இயக்குனரின் புதிய படம் இன்னமும் டிவிடி வரவில்லை. உங்களுக்கு ஆங்கில / பிரெஞ்சு மொழியில் ரிலீஸ் ஆனதா?

    ReplyDelete
  3. பார்த்தேன். மிகப் பிடித்தது. குறிப்பாக இசை, பாடல்கள் அருமை.
    நாமும் ஆசியர்கள் என்பதால் அவ்விசை கவர்ந்ததோ? தெரியவில்லை.
    உங்கள் விமர்சனமும் அருமை!
    //ஆணியில் உருவான படிகள், அவர்களை அச்சுறுத்தும் எலிகள், கரப்புகள், சினேகம் கொண்ட தத்துவெட்டிகள், பிரம்மாண்டாமாக அவர்கள் முன் விரியும் மனித இருப்பிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களிற்காக அவர்கள் உருவாக்கியிருக்கும் தந்திரங்கள் என அந்த உலகின் வாழ்க்கை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.//
    இவற்றை நானும் ரசித்தேன்.
    ஏனோ தானோ என என்னுடன் பார்த்த என் மனவி மிகரசித்ததாக கூறினார்.
    உங்கள் இப்பதிவை அவரும் பார்த்தார்.

    ReplyDelete
  4. அழகுத்தமிழில் அற்ப்புதநடை தங்கள் விமர்சனம்.நல்ல தமிழ் படத்துக்கு விமர்சனம் எழுதுங்கள்.இது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
  5. தோழரே! தங்களின், ஒவொரு பதிவையும் காணும் போது "சூப்பர் போஸ்ட்" என்று ஒரு வார்த்தையில் எழுதி முடித்து விட நான் விரும்புவதில்லை. மிக பிரயாசையோடு போடப்படும் எந்த ஒரு பதிவுக்கும், அந்த ஒரு வார்த்தை மட்டுமே!!! போதுமானதல்ல, எனவே நேரம் கிடைக்கும்போது நீண்ட விமர்சனம் எழுதும் மூடில் தங்களுடைய வலைதளத்தை அணுகும்போது, அங்கே! பதிவு புதியதாக மாறி இருக்கும்.

    இந்த வகையான ஜப்பானிய திரைப்படங்களெல்லாம், மனதை நெகிழ மட்டும் வைப்பதில்லை,சமயத்தில் கண்கலங்கவும், வைத்து விடும். ஏனோ? இது ஒரு சினிமா தானே என்ற எண்ணத்தை தருவதில்லை காரணம் அவர்கள் சொல்லும் விதம் அப்படியானதாகும்.

    // மனிதர்களால் இனங்கள் தம்வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பரிதாபமாக வாழ்ந்து அழிந்தொழிவது புதியதுஅல்லவே.//
    இதை எப்படி புறிந்து கொள்வது என்று, தெரியவில்லை மனித இனம் இறக்கமில்லாதது என்றா? மனிதனின் வாழ்விடங்களில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பாக சில இனங்கள் தங்களின் குடில்களை அமைப்பதும், அதன் மூலம் மனித இனத்திற்கே ஊருவிளைவிப்பதும் ஆரோக்கியமானதா? அவைகளை விரட்டியட்ப்பதில் என்ன தவறு?

    ஜப்பானியர்கள் மென்மையான ஜீவராசிகளான எறும்பு, பட்டுப்பூச்சி, வெட்டுக்கிளி, நத்தை, போன்றவற்றை கொண்டும், உருவாக்கும், திரைப்படங்கள் கூட நம்முடைய மனதில் தாக்கத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துமாறு சொல்வது அலாதியானது. அல்லது அது அவர்களின் திறமையாகும்

    இந்த திரைப்படத்தைப்றி தாங்கள் அருமையாக சொல்லிய விதத்தில், இப்படி ஒரு இரவலர்கள் குடும்பம்(இனம்) இருக்காதா?
    அந்த "அரியெட்டி" யை போன்று ஒரு சிறுமி ஓடி வந்து என் கையைபிடித்து, முத்தம் தரமாட்டாளா?என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகிறது!!!!
    //அரியெட்டி தன் பையில் பாதுகாத்து வைத்திருக்கப் போகும் ஒரு சக்கரைக் கட்டியைப் போலவே அரியெட்டியும், ஷோவும் ரசிகர்கள் மனதில் கரையாமல் இருப்பார்கள். [***]//
    அன்புடன்,
    ஹாஜா இஸ்மாயில். எம்.

    ReplyDelete
  6. தோழரே! தங்களின், ஒவொரு பதிவையும் காணும் போது "சூப்பர் போஸ்ட்" என்று ஒரு வார்த்தையில் எழுதி முடித்து விட நான் விரும்புவதில்லை. மிக பிரயாசையோடு போடப்படும் எந்த ஒரு பதிவுக்கும், அந்த ஒரு வார்த்தை மட்டுமே!!! போதுமானதல்ல, எனவே நேரம் கிடைக்கும்போது நீண்ட விமர்சனம் எழுதும் மூடில் தங்களுடைய வலைதளத்தை அணுகும்போது, அங்கே! பதிவு புதியதாக மாறி இருக்கும்.

    இந்த வகையான ஜப்பானிய திரைப்படங்களெல்லாம், மனதை நெகிழ மட்டும் வைப்பதில்லை,சமயத்தில் கண்கலங்கவும், வைத்து விடும். ஏனோ? இது ஒரு சினிமா தானே என்ற எண்ணத்தை தருவதில்லை காரணம் அவர்கள் சொல்லும் விதம் அப்படியானதாகும்.

    // மனிதர்களால் இனங்கள் தம்வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பரிதாபமாக வாழ்ந்து அழிந்தொழிவது புதியதுஅல்லவே.//
    இதை எப்படி புறிந்து கொள்வது என்று, தெரியவில்லை மனித இனம் இறக்கமில்லாதது என்றா? மனிதனின் வாழ்விடங்களில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பாக சில இனங்கள் தங்களின் குடில்களை அமைப்பதும், அதன் மூலம் மனித இனத்திற்கே ஊருவிளைவிப்பதும் ஆரோக்கியமானதா? அவைகளை விரட்டியட்ப்பதில் என்ன தவறு?

    ஜப்பானியர்கள் மென்மையான ஜீவராசிகளான எறும்பு, பட்டுப்பூச்சி, வெட்டுக்கிளி, நத்தை, போன்றவற்றை கொண்டும், உருவாக்கும், திரைப்படங்கள் கூட நம்முடைய மனதில் தாக்கத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துமாறு சொல்வது அலாதியானது. அல்லது அது அவர்களின் திறமையாகும்

    இந்த திரைப்படத்தைப்றி தாங்கள் அருமையாக சொல்லிய விதத்தில், இப்படி ஒரு இரவலர்கள் குடும்பம்(இனம்) இருக்காதா?
    அந்த "அரியெட்டி" யை போன்று ஒரு சிறுமி ஓடி வந்து என் கையைபிடித்து, முத்தம் தரமாட்டாளா?என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகிறது!!!!
    //அரியெட்டி தன் பையில் பாதுகாத்து வைத்திருக்கப் போகும் ஒரு சக்கரைக் கட்டியைப் போலவே அரியெட்டியும், ஷோவும் ரசிகர்கள் மனதில் கரையாமல் இருப்பார்கள். [***]//
    அன்புடன்,
    ஹாஜா இஸ்மாயில். எம்.

    ReplyDelete
  7. விஸ்வா, இங்கு பிரெஞ்சு சப் டைட்டில்களுடன் ஜப்பானிய மொழியில் பார்த்தேன், டிவிடி கிடைத்தவுடன் பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஜோகன், நீங்கள் கூறியதுபோல் இசை பாடல்கள் என்பன என்னை மிகவும் கவர்ந்தன. அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றதால் எனக்கு சிறிதளவில் ஏமாற்றமும் உருவாகியது.தங்கள் கனிவான கருத்துக்களிற்கும், பதிவை பார்வையிட்ட தங்கள் துணைவியார்க்கும் என் நன்றிகள்.

    நண்பர் உலக சினிமா ரசிகரே, தமிழ் படத்திற்கு எழுதிவிடலாம், நல்ல படம் வரட்டும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஹாஜா இஸ்மாயில், உண்மை, தரமான ஜப்பானிய அசைவூட்டத் திரைப்படங்கள் நம் மனதை தொடுவதே தெரியாமல் எம்மை ஆக்கிரமித்துவிடும். நாமும் அதில் எம்மை சங்கடங்கள் ஏதுமின்றி தொலைத்திருப்போம். அது அவர்களின் திறமை என்பதை ஒத்துக் கொள்ளவே வேண்டும். மனிதனை விட அபாயகரமான இனம் உலகில் உள்ளதா என்ன :) அடடா, அரியெட்டியை விட ஒரு அழகான தேவதை உங்கள் கன்னத்திலேயே முத்தம் தரட்டும்:) தங்களின் விரிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    முஸ்தபா, எண்ணூர்.

    ReplyDelete
  9. அருமையான அறிமுகத்துக்கு நன்றி காதலரே . டோராண்ட் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை

    ReplyDelete
  10. அனிமேஷன் படம் என்றாலே எனக்கு உயிர். லிஸ்ட்டில் போட்டு வைத்துக் கொள்கிறேன். டிவிடி வரும்போது பார்ப்பேன். கொஞ்ச நாளாக எந்த வலைப்பூ பக்கமும் வர முடியவில்லை. இன்று தான் நேரம் கிடைத்தது. இன்றிலிருந்து திரும்பவும் வருவேன் :-)

    ReplyDelete
  11. வாவ் வழக்கம்போல உங்கள் மொழி நடையில் அசத்தி விட்டீர்கள்

    கலக்குங்கள் காதலரே :))
    .

    ReplyDelete
  12. நண்பர் முஸ்தபா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி லிமட், நல்ல பிரதி கிடைக்கும்போது பாருங்கள், உங்களிற்கு பிடிக்கும். கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், பார்த்துவிட்டு நீங்களும் எழுதிடுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  13. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

    ReplyDelete