நீயூயார்க்கின் JFK விமானநிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கும் போயிங் விமானம் ஒன்று, தரையிறங்கலின் பின்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழக்கிறது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள், அந்த விமானத்தில் பயணித்த மனிதர்கள் யாவரும் இறந்து போயிருக்கும் அதிர்ச்சியான தகவலை அவர்களிற்கு வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க மண்ணில் பேரழிவை உருவாக்கக்கூடிய தொற்று நோயொன்றின் ஆரம்பமாக இது இருக்ககூடும் என ஊகிக்கும் அதிகாரிகள், டாக்டர் Ephraim Goodweather தலைமையிலான ஒரு குழுவை இந்த துயர சம்பவத்தின் பின்னிருக்கும் காரணிகளை கண்டறியுமாறு பணிக்கிறது….
நல்லதொரு திகில் நாவலிற்குரிய ஆரம்பத்துடன் தொடங்கும் The Strain எனும் காட்டேரி நாவலானது, தொடரும் அதன் பக்கங்களில் காணக்கிடைக்கும் கதை சொல்லலில் அயர்ச்சியையும், ஏமாற்றங்களையும் காட்டேரிக்குள் உள்ளேறும் குருதிபோல் வாசகனிடம் ஏற்றிவிடுவதில் வெற்றி காண்கிறது.
நாவலின் ஆரம்பம் பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலாவை கவுரவித்தாலும், நாவலின் சில பகுதிகளில் கதாசிரியர்கள் பிராம் ஸ்டோக்கர் ட்ராகுயூலாவில் இயற்றிய மிகைப்படுத்தல்கள் குறித்த சில விமர்சனங்களையும் முன்வைக்க தவறவில்லை. ரத்தக்காட்டேரிகளிற்கு முன்பாக ஆசிர்வதிக்கப்பட்ட நீர், குருசு போன்றவற்றின் செயற்படா தன்மையையும், ரத்தக்காட்டேரிகள் பிற விலங்குகளாக உருமாறுவது குறித்த மூடத்தனமான அபிப்பிராயங்களையும் அவ்விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் திகில் இலக்கியத்திற்கு பிராம் ஸ்டோக்கரின் ட்ராகுயூலா ஆற்றிய சேவையை Hell Boy, Pan’s Labyrinth ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Guillermo Del Toro வும் பிரபல நாவலாசிரியர் Chuck Hogan ம் இணைந்து படைத்திருக்கும் The Strain ஆற்றுமா எனும் கேள்விக்கு எனது விடை இல்லை என்பதே ஆகும். பிரிவின் விளிம்பில் அல்லல்பட்டு அழுதுவடியும் ஒரு குடும்பத்தின் கதையை உள்ளடக்கிய ஒரு தொலைக்காட்சி நாடகத்துடன், ஒரு காட்டேரிக் கொலை வீடியோ கேமை சேர்த்து உருவாக்கி அதை புத்தக வடிவிற்கு மாற்ற முடியுமானால் அதற்கு The Strain எனப் பெயரிடலாம்.
பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரில் வாசம் செய்துவரும், பலம் பொருந்திய ஒரு ரத்தக் காட்டேரி, காலங்களை கடந்து, தன் இருப்பை நிலைநாட்டி, மனிதன் ஒருவனின் உதவியுடன் அமெரிக்க மண்ணில் நுழைந்து, அங்கு தன் ராஜ்ஜியத்தை உருவாக்க விழைகிறது. விடுவார்களா அமெரிக்க மண்ணின் மைந்தர்கள்?! ரத்தக்காட்டேரிகளிற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகிறது.[ அமெரிக்க மண்ணிலும், உலகிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமல்லவா]
விமானம் ஒன்றின் அனைத்து செயற்பாடுகளும் இறந்துவிட்டநிலையில், அதிகாரிகளால் ஆராயப்படும் அந்த விமானத்தில் அனைத்துப் பயணிகளும் உயிரிழந்திருப்பதும், இந்த புதிரான சம்பவத்திற்கு பின்னாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து கண்டறிய டாக்டர் எப்ராய்ம் தன் குழுவுடன் வந்து சேருவதும், பயணிகளில் நான்குபேர் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடிப்பதும், பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் இறந்த பயணிகளின் உடல்கள் காணாமல் போவதும், உயிர் பிழைத்த நான்கு பயணிகளினது உடல்கள் மாற்றங்களிற்கு உள்ளாவதும், டாக்டர் எப்ராய்மை சந்திக்கும் முதியவரான Abraham Setrakian, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் ரத்தக்காட்டேரிகளாக உருமாறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதும், இவற்றிற்கு எல்லாம் காரணமான தீமையின் மாபெரும் சக்தியான காட்டேரித்தலைவனை அவர்கள் அழிக்க கிளம்புவதாகவும் கூறப்படும் கதையின் ஆரம்ப பகுதியை ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது.
முதிய புரபசரான ஏப்ரகாமிற்கு காட்டேரித் தலைவன் குறித்த அறிவும், அனுபவமும் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது இடைச்செருகல் வடிவில் நாவலில் விபரிக்கப்படுகிறது. யூத இன அழிப்பு முகாம் ஒன்று கதையில் இடம்பிடித்திருக்கும் என்பதையும், அந்த முகாமில் ஏப்ரகாம் இளம்வயதில் அனுபவித்த வேதனைகளையும், கண்ட கொடூரங்களையும், நாவலைப் படிக்காமலே நண்பர்கள் ஊகித்திடலாம். நாசிகளைவிட காட்டேரித்தலைவன் மீது ஏப்ரகாம் பெரும் வஞ்சம் கொண்டுள்ளதற்கான வலிய காரணம் நாவலின் இப்பாகத்தில் இல்லை. எனவே ஏப்ரகாம் பாத்திரம் பலமற்ற ஒன்றாகவே உணரப்படக் கூடியதாகவிருக்கிறது. நாவலின் எந்தப் பாத்திரங்களும் ஆழமான தடம் எதனையும் வாசகன் மனதில் பதிக்க தவறிவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேற்கூறியவற்றை அறிந்து கொள்வதற்கு வாசகன் புரட்ட வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை அநாவசியமான ஒன்றாகும். விமானத்தில் உயிர்தப்பிய நான்கு பயணிகளிலும் உருவாகும் மாற்றங்களும், அதன் விளைவுகளும் தனித்தனியே விரிவாக விளக்கப்பட வேண்டியதின் அவசியம்தான் என்ன? நாவலின் முடிவில் இவர்கள் யாவரும் ஏனையவர்களைப் போலவே ரத்தக்காட்டேரிகளாக மாறி ரத்தம் உறிஞ்சுவதை தவிர கதையில் சிறப்பாக என்ன செய்துவிடுகிறார்கள். தேவைக்கதிகமான திகிலையும், அதன் வழியே பக்கங்களையும் அதிகரிப்பதை தவிர நாவலில் இப்பாத்திரங்கள் வேறு எதனையும் செய்துவிடவில்லை.
சொல்லப்பட்ட கதையிலாவது புதுமை இருக்கிறதா! மிகவும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்து சேரும் சூரியகிரகணம் குறித்த அத்தியாயம் ஏன் என்பது எனக்கு புரியவேயில்லை. இதற்குரிய காரணங்கள் எதிர்வரும் பாகங்களில் விளக்கப்படலாம் [ படுமா! ]. வழமையான காட்டேரி படைப்புகள் வழியே அறிந்ததைவிட இக்கதையில் அப்படி என்ன புதுமையாக இருக்கிறது என்பது என்னைப் பொறுத்த வரையில் புதிர்தான். வினோதமான வைரஸ் தொற்று, ரத்தம் உறிஞ்சல், ரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி காட்டேரிகள் ஆகல் [ 28 Days ], சூரிய ஒளி ஒவ்வாமை, வேறுபட்ட ஆதி காட்டேரி குலங்கள், இவற்றிற்கிடையே மதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தங்கள் [ Underworld ] என எதுவுமே புதிதாய் தோன்றவில்லை. இந்நாவலில் மனித உடல் கொள்ளும் மாற்றம் விபரமாக கூறப்பட்டுள்ளது என்றால் 1986ல் வெளியாகிய The Fly எனும் திரைப்படத்தில் மனித உடல் கொள்ளும் மாற்றம் இந்நாவலில் உள்ளதைவிட சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பேன். நிச்சயமாக இந்நாவல் வரிசையானது திரைப்படங்களாக உருவாகும் என்பதில் எனக்கு சந்தேகங்கள் இல்லை. எனவே திரையிலும் ஏமாற்றங்கள் தொடரும்.
நாவலாசிரியை Anne Rice அவர்கள் எழுதிய The Tale Of The Body Thief நாவலின் ஆரம்ப பக்கங்களிலேயே சூரிய ஒளியுடன் பொருதி தற்கொலை!! முயற்சியில் இறங்கும் காட்டேரியாக லெஸ்டாவை [Lestat] நாம் காணமுடியும். இங்கு லெஸ்டா உயிர்பிழைத்துக் கொள்கிறான். எனவே சூரிய ஒளியை தாங்கிக்கொள்ளக்கூடிய காட்டேரி என்பது எனக்கு புதிதான ஒன்றல்ல. வெள்ளி ஆயுதங்களும், முன்னொரு காலத்தில் பிரபலமான க்ரைம் நாவலாசிரியையான Patricia Cornwell கதைகளின் மூலம் வாசகன் அறிந்திருக்ககூடிய புற ஊதாக்கதிர், கறுப்புக்கதிர் பிரயோக பயன்களும்கூட புதியவை அல்ல.
டாக்டர் எப்ராய்ம் குழுவினர் காட்டேரித்தலைவனை எதிர் கொள்ளும் இறுதித் தருணம்வரை கதையை இழுஇழுவென்று இழுத்திருக்கிறார்கள். டாக்டர் எப்ராய்மின் சொந்தக்கதை சோகக்கதை கடுப்பைக் கிளப்புகிறது. மிக மோசமான ஒரு அமெச்சூர் நாடகத்தை அதனுடன் ஒப்பிடலாம். காட்டேரிகள் மற்றும் ஸோம்பிகளை பாத்திரங்களாக கொண்டு வெளியாகிய திரைப்படங்களில் சகட்டுமேனிக்கு அவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். திரையில் இவற்றை கடந்து வந்துவிடலாம் ஆனால் நாவலில் இவ்வகையான மோதல்கள் திகட்டுமளவிற்கு தொடர்ச்சியாக விபரிக்கப்படும் போது கதையை சீக்கிரம் முடிங்கப்பா எனக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லை. [ முடிப்பார்கள் என நம்புகிறீர்களா ]
கதையின் இறுதிவரை சூரியனிற்கு தலை காட்டாது மறைந்திருந்த காட்டேரித் தலைவன் இறுதியில் அதே சூரியனிற்கு சவால் விடுவாராம், டாக்டர் எப்ராய்ம் க்ரூப்புடன் ஓடியாடி கண்ணாமூச்சி விளையாடுவாராம். மறைந்த தமிழ் நாவலாசிரியர் ராஜேந்திரகுமார் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதனை விட விறுவிறுப்புடன் ஒரு கதையை எழுதியிருப்பார்.
சந்தைப்படுத்தல் உத்திகள், விளம்பர தந்திரங்கள், நகைச்சுவையுடன் ரசிக்ககூடிய ட்ரெயிலர்கள், பிரபல இயக்குனரின் பெயர் என கும்மு கும்மு எனக் கும்மி சுமாரான இந்த நாவலை ஒரு International Bestseller ஆக்கியிருக்கிறார்கள். இந்நாவலின் வாசிப்பு அனுபவத்தை விட ரத்தக் காட்டேரி ஒன்றிடம் கடி வாங்கும் அனுபவம் மோசமான ஒன்றாக இருக்கமுடியாது.
பிரான்சு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட ட்ரெயிலர் கீழே… [ யூ ட்யூப்பில் பிற ட்ரெயிலர்களும் கிடைக்கின்றன அதில் ஒரு ட்ரெயிலரில் டிப்டாப் உடைகள் மற்றும் மேக்கப்புடன் காட்டேரி வேட்டையாட வரும் டாக்டர் ஏப்ராய்ம் குழுவை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது]
புதுவருடத் தீர்மானம் ஒன்று: The Hobbit நாவலை திரைப்படம் வெளியாகும் முன்பாக படித்துவிடுவது.