பிரபஞ்சத்தின் பல உலகங்களை தன்னகத்தே கொண்ட Orbital எனும் நேசக் கூட்டமைப்பின் சர்வ உலக ராஜதந்திர அலுவலகத்தின் புதிய ஏஜெண்டுகளாக Caleb Swany மற்றும் Mezoké Izzua பதவியேற்கிறார்கள். Upsall எனும் கிரகத்தில் வாழும் Javlodes இன மக்களிற்கும் அக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Senestam ல் அனுமதியின்றி குடியேறி காலனிகளை உருவாக்கியிருக்கும் மனிதர்களிற்குமிடையில் உருவாகியுள்ள முறுகல் நிலையொன்றிற்கு அமைதியான வழியில் இணக்கத்தை உருவாக்குவது Swany மற்றும் Izzua வின் முதல் பணிக்கட்டளையாக அமைகிறது. இப்பணியை நிறைவேற்ற இரு புதிய ஏஜெண்டுகளும் Upsall கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.
பல்லுலக நேசக்கூட்டமைப்பு, விசித்திரமான விண்கலங்கள், வேற்றுலக ஜீவிகள், விந்தை பிராணிகள், வேறுபட்ட காலவெளிக்குள் சிக்கல்கள் ஏதுமின்றி பயணிக்க உதவும் ஒரு தளம் என பிரபஞ்சத்தின் கற்பனை வெளிக்குள் வாசகனை இழுத்துச் செல்கிறது Orbital எனும் காமிக்ஸ் கதை வரிசை. இத்தொடரின் கதாசரியராக Sylvain Runberg ம் ஓவியங்களிற்கு பொறுப்பாக Serge Pellé ம் பணியாற்றி வருகிறார்கள்.
ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பினுடன் மனித குலமானது இணைவதற்கு நடாத்தப்படும் ஒரு பொது வாக்கெடுப்பில் இடம்பெறும் குண்டுவெடிப்பில், ஏஜெண்ட் கலேப்பின் பெற்றோர்களும், மேலும் பலரும் அநியாயமாக பலியாகும் பக்கங்களே கதையின் ஆரம்பமாக அமைகின்றன. அந்தப் பக்கங்களிலேயே சிறுவன் கலேப், தான் விரும்பியதை சாதிப்பதில் பிடிவாத குணம் கொண்ட ஒருவன் என்பது உணர்த்தப்பட்டு விடுகிறது.
காலங்கள் உருண்டோட, அடுத்து வரும் பக்கங்களில் ஆர்பிட்டால் நேசகூட்டமைப்பின் ராஜதந்திர ஏஜெண்டாக வளர்ந்து நிற்கிறான் சிறுவன் கலேப். ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பில் மனித குலத்தின் உண்மைநிலை, மனித குலத்தின் மீதான வேற்றுலகவாசிகளின் ஏளனப் பார்வை மற்றும் வெறுப்பு, அடிமட்டப் பணிகளிற்கே மனிதர்கள் தகுதியானவர்கள் என வகுக்கப்பட்டிருக்கும் நிலை இவற்றினூடாக மனித குலத்தை சேர்ந்த முதல் ராஜதந்திர ஏஜெண்ட்டான கலேப் மீதான துவேஷம் என்பன கதையின் தொடரும் பக்கங்களில் வெளியாகின்றன. மனித குலத்தின் மீதான வேற்றுலகவாசிகளின் வெறுப்பிற்கு பிரதான காரணமாக மனிதர்கள், Sandjarr இன மக்கள் மீது தொடுத்த அநீதியான யுத்தமும், அந்த யுத்தத்தினால் சாண்ட்ஜார் இனமானது அழிவின் எல்லையை தொட்டதும் முன்வைக்கப்படுகிறது.
ஆர்பிட்டாலின் ராஜதந்திர ஏஜெண்டுகள், இருவர்கொண்ட அணியாக செயற்படுதல் வேண்டும் எனும் விதிக்கமைய ஏஜெண்ட் கலேப்பின் இணை எஜெண்டாக ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் ஏஜெண்ட் மெஸோக்கே இஸுவா. ஏஜெண்ட் மெஸோக்கே, மனித குலத்தால் அழிவின் எல்லைக்கு இட்டுச்செல்லப்பட்ட சாண்ட்ஜார் இனத்தை சேர்ந்தவள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிரிகளாக தம்மை கருதக்கூடிய இரு இனங்களை ராஜதந்திர ஜோடிகளாக இணைப்பதன் மூலம் இவ்விரு இனங்களிற்குமிடையில் புதியதொரு ஆரம்பத்தை ஏற்படுத்த மனம் கொள்கிறது ஆர்பிட்டால் அமைப்பு.
ஆரம்பத்தில் மெளனமான உறவாக ஆரம்பிக்கும் கலேப், மொஸோக்கே உறவு அவர்கள் எதிர்கொள்ளும் பயிற்சிகள், சூழ்நிலைகள், ஆபத்துகள் போன்றவற்றின் வழியாக சிறப்பான ஒரு உறவாக உருக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்நிலையில் அவர்களின் முதல் பணிக்கட்டளை அவர்களை வந்தடைகிறது.
உப்சால் என்பது ஜாவ்லோட் இனமக்கள் அடர்ந்து வாழும் கிரகமாகும். அதன் நிலவுகளில் ஒன்றாக செனெஸ்தம் இருக்கிறது. செனெஸ்தம் நிலவில் நிலவும் காலநிலையின் உவப்பற்ற தன்மை அந்நிலவினை குறித்து ஜாவ்லோட்கள் அதிக அக்கறை செலுத்தாததிற்கு காரணமாக அமைந்தது. சாண்ட்ஜார் இனமக்களை காப்பாற்றுவதற்காக ஆர்பிட்டால் நேசக்கூட்டமைப்பு மேற்கொண்ட யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்ட மனிதர்கள், ஜாவ்லொட்களின் அனுமதியின்றி செனெஸ்தமில் தம் காலனிகளை அமைத்தார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அதன் பெயர் திரெலியம். அது ஒரு கனிமம்.
மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் திரெலியம் எனும் கனிமத்தை அகழ்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார்கள் செனெஸ்தமில் குடியேறிய மனிதர்கள். திரெலியம் கனிமத்தின் வணிகமும் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில் உப்சால் கிரகத்தில் ஏற்படும் நோயொன்றினால் உணவுத் தயாரிப்பிற்காக வளர்க்கப்படும் விலங்குகள் இறந்து மடிகின்றன. உப்சால் மக்களின் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இதுவரையில் ஜாவ்லோட்கள் அதிக அக்கறை செலுத்தாத செனெஸ்தம் நிலவு மீதும், திரெலியம் கனிமம் மீதும் ஜாவ்லோட்களின் ஒரு சாராரின் பார்வை திரும்புகிறது.
செனெஸ்தம் நிலவின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க அங்கு செல்லும் மூன்று ஜாவ்லோட் இனத்தை சேர்ந்த கல ஓட்டிகள் அங்கு மர்மமான முறையில் மரணமாகிறார்கள். இது மனித இன எதிர்ப்பை முன்னெடுக்கும் ஜாவ்லோட்கள் கொதித்தெழ காரணமாக அமைகிறது. மனிதர்களை தம் நிலவான செனெஸ்தமிலிருந்து வெளியேறச் சொல்லி ஜாவ்லோட்கள் குரல் எழுப்ப, மனிதர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். இரு இனங்களிற்குமிடையில் முறுகல் நிலை ஒன்று வெடித்து அழிவுகளை உருவாக்குவதற்கான தருணங்களை பார்த்திருக்கிறது. இந்த நிலையை சுமுகமாக தீர்த்து வைக்க அங்கு வந்து சேர்கிறார்கள் கலேப்பும், இஸுவாமும்….
ஜாவ்லோட் கல ஓட்டிகளின் மரணத்திற்கான உண்மைக் காரணம் என்ன? ஆர்பிட்டாலின் இரு ஏஜெண்டுகளாலும் தம்மை சூழ்ந்திருக்கும் சதிகளையும், அபாயங்களையும் வெற்றி கண்டு ஜாவ்லோட்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய இரு இனங்களிற்குமிடையில் இணக்கத்தை உருவாக்க முடிந்ததா? Cicatrices, Ruptures ஆகிய இரு ஆல்பங்களில் இக்கேள்விகளிற்கு பரபரப்பாக விடையை தருகிறது ஆர்பிட்டால் காமிக்ஸ் கதைவரிசை.
கதையின் ஆரம்பத்தில் வேற்றுலக இனங்களின் பெயர்களும், வகைகளும், ஆர்பிட்டாலின் செயற்பாடுகளும் கதையினுள் எளிதாக நுழைய சற்று தடையாக இருந்து, உன்னிப்பான வாசிப்பை வாசகனிடம் வேண்டினாலும், ஆரம்ப பக்கங்களை தாண்டியபின் கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்ல ஆரம்பித்து விடுகிறது. மனித உலகில் பரவிக்கிடக்கும் இனத்துவேஷம், கனிமங்களிற்கான போர், யுத்தவெறி போன்றவற்றை பிரபஞ்சத்தில் வாழும் இனங்களிற்குமிடையில் சிறப்பாக கதையில் பிரயோகித்திருக்கிறார் கதாசிரியர்.
முதல் இரு ஆல்பங்களிலும் அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்களில் என் மனதைக் கவர்ந்தது ஏஜெண்ட் மெஸோக்கே இஸுவா பாத்திரமேயாகும். கதையில் மிகச்சிறப்பான ஆக்ஷன் பகுதி இஸுவாக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சாண்ட்ஜார் இனம் குறித்து இரு ஆல்பங்களிலுமிருந்தும் அதிகம் அறிந்து கொள்ள முடியாவிடிலும்!! இஸுவாவின் திறமைகளில் கவர்ச்சி படிந்துபோய்க் கிடக்கிறது. இரண்டாம் ஆல்பத்தில் திருப்பங்களும், மர்மங்களும் மலர்ந்து உதிரும் விதமும் கதையில் சலிப்பிற்கு இடம் ஏற்படாது காத்துவிடுகிறது. சஸ்பென்ஸை அற்புதமாக காத்திருக்கும் கதை சொல்லல் பாராட்டிற்குரியதே.
கதையின் சித்திரங்களும் சற்று மாறுபட்ட உணர்வையே ஆரம்பத்தில் அளித்தாலும் கதையின் ஓட்டத்தில் சித்திரங்களுடன் பழகிக் கொண்டவுடன் அவற்றை நன்கு ரசிக்க முடிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் சித்திரங்கள் பரவசம் தருகின்றன. செனெஸ்தம் நிலவின் கொடும் ஜந்துக்களான Stilvulls களுடான மோதல் காட்சிகள் ஆல்பத்தின் மிகவும் சிறப்பான சித்திரப்பக்கங்கள் என்று நான் கருதுகிறேன். அறிவியல் புனைகதைகளிற்குரிய உலகுகளையும், விண்கலங்களையும், இனங்களையும், ஜந்துக்களையும் தன் ஓவியத் திறமையால் சிறப்பாக ஆல்பங்களின் பக்கங்களில் கொணர்ந்திருக்கிறார் ஓவியக் கலைஞர் சேர்ஜ் ப்பெலே.
எளிமையான ஆனால் சுவாரஸ்யாமான கதை, சிறப்பான கதாபாத்திரங்கள், தனித்துவமான ஓவியப்பாணி என அறிவியல் புனைகதை காமிக்ஸ் பிரியர்களை மட்டுமல்லாது ஆக்ஷன் கதைப் பிரியர்களையும் ஆர்பிட்டால் கதைவரிசை தன் பக்கம் ஈர்த்துவிடும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. சினிபுக் இக்கதையை ஆங்கில மொழியில் வெளியிட்டிருக்கிறது என்பதால் பிரதிகளை தரவிறக்கத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கவே செய்யலாம். [***]
அசத்தலான தொகுப்பு
ReplyDeleteபடமாக வர வாய்ப்பு உள்ளதா
Download links..
ReplyDeletehttp://rapidshare.com/files/422836856/Orbital_1_-Scars.cbr
http://rapidshare.com/files/423479329/Orbital_2_-_Ruptures.cbz
நண்பர் nis, யாராவது தயாரிப்பாளர்களின் கண்பட்டால் வரலாம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, சுட்டிகளிற்கு நன்றி.
வாவ் சூப்பர் அடுத்த பதிவும் காமிக்ஸ் தானா
ReplyDeleteகலக்குங்கள் காதலரே :))
.
உடனடியாக இந்த காமிக்ஸ்களுக்கு சுட்டிகள் கொடுத்து உதவிய
ReplyDeleteஅண்ணன் இலுமி அவர்கள் வாழ்க ;-)
.
நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteBuddy,
ReplyDeleteGreat.. I thought this comic is for kids and was hesitating to buy this. Thanks for the review.
Regards,
Mahesh
நண்பர் மகேஷ் குமார், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteஆர்பிடல் தொடர் ஒரு வழியாக உங்கள் கண்களில் தென்பட்டு விட்டதற்கு மகிழ்ச்சி. சினிபுக்கின் ஏனற்ற வரிசைகளில் இத்தொடரை பார்த்த போது, சித்திரங்களில் கார்டூன் தனமான ஓவியவரைகலையை கண்டவுடன் இது இன்னொரு சுமாரான தொடராக தான் இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்ப பக்கங்களில் மனிதர்களை நேச உலக படைக்கு சேர்க்கும் கட்டத்தில் ஒரு விபத்தின் மூலம் சோகமாக ஆரம்பிக்கும் பக்கங்களில், பின்பு கூட்டணி, புதிய பயிற்சி முறைகள், தூரத்து கிரகங்களின் குகை மற்றும் வெளி பிரதேசங்களில் சண்டை காட்சிகள் என்று விருவிருப்பாக கொண்டு சென்றிருந்தார்கள்.
சாண்ட்ஜார் இனத்தை சேர்ந்த ஏஜென்ட் முகத்திறை அணிந்தே அறிமுகமாகிறார், ஒரு வேளை அது அவர் உருவ அமைப்பேதானா என்று கேள்விகள் பல கேட்க வைத்து, அடுத்த ஆல்பங்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். இது வரை 2ம் ஆல்பம் இந்தியாவில் வெளியாகவில்லை. அது கிடைக்காபெற்றால் மர்ம முடிச்சுகள் அவிழ்க்க உதவியாக இருக்கும் என்று பொருத்து கொண்டிருந்தேன். உங்கள் விமர்சனத்திற்கு பிறகு, ஆன்லைனில் தருவித்த ஸ்கான்களையாவது பார்த்து மர்மத்தை தெரிந்து கொள்ள ஆவல் கிளம்பிற்று.
செர்கே பெல்லேவின் ஓவியங்களில் அசாத்திய திறமை உண்டு. மனிதருக்கு இணையங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அனைத்து கூட்டங்களும் ப்ரெஞ்சு மொழி என்பதால், படங்களை மற்றும் பார்த்து மனதை நிறைத்து கொள்ள தோன்றுகிறது.
ReplyDeleteஅவரின் அசாத்திய திறமையை பட்டை போட்டு காட்டும் இத்தளங்களை காணுங்கள்.
பேஸ்புக் குழுமம்
CBO வின் ஓவியர் பார்வை
ஓவியரை பற்றி
பன்டா டேஸினியை சினிபுக் எந்த அளவிற்கு ஆங்கிலம் பேசும் மற்ற நாடுகளுக்கு அறிமுகபடுத்திகிறதோ, அதே முறையில் தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பார்த்திராத, அறிந்திராத கதை தொடர்களை தொடர்ந்து அறிமுகபடுத்தி வரும் தங்கள் சேவை, இம்மக்களுக்கு தேவை.
ககவில் காமிக்ஸ் வாரத்தை ஆர்பிடல் மூலம் இனிதே முடித்து வைத்திருக்கிறீர்கள். இன்னும் பல காமிக் வாரங்கள் மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன்.
பி.கு.: ஏற்கனவே நான் இட்ட கருத்துகள் இரண்டும் மாயமாக போன மர்மம் தெரியவில்லை... அனேகமாக பெரிய கருத்துகள் ப்ளாக்கர் தனிச்சையாக நீக்கபடுகின்றன போலும். நல்ல வேளை கமெண்ட் சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் ஒரிஜினல் கிடைத்து விட்டதால், திரும்ப டைப் அடிப்பதில் இருந்து தப்பித்து கொண்டேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரஃபிக், தாங்கள் இட்ட கருத்துக்கள் மறைந்த மாயம் உண்மையிலேயே புரியவில்லை. ஆன்லைனிலும் உங்களை சந்திக்க இயலுவதில்லை :) இருப்பினும் உங்கள் கருத்துக்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சியே. தாங்கள் வழங்கியிருக்கும் சுட்டிகளிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.
ReplyDelete