தான் வாழப்போகும் நாட்கள் இனி அதிகம் இல்லை என்பதை தன் மனதில் கொண்ட மனிதனிற்கு அவன் கடந்தகாலத்தின் நெருக்கமான, அந்தரங்கமான கணங்கள் சிலவற்றை மீட்டெடுப்பது என்பது சகஜமான ஒன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. புற்றுநோயால் பீடிக்கப்பட்டு தன் வாழ்வின் அந்திமத்தை எட்டிவிட்ட ஆடம் வாக்கரும் இவ்வாறாகவே தனக்கு அந்தரங்கமான கணங்கள் சிலவற்றை நினைவுகூருகிறான்.
தன்னுடன் ரகசியமாக இருந்துவந்த வாழ்க்கையின் அந்தக் கணங்களை மூன்று பகுதிகளாக பிரித்து அவன் எழுத ஆரம்பிக்கிறான். ஆடமின் பல்கலைக்கழக நண்பனும், இன்றைய நாள் பிரபல எழுத்தாளனுமான ஜிம் என்பவனின் பார்வைக்கு தன் வாழ்க்கை கணங்களின் காகிதப் பிரதிகளை ஆடம் அனுப்பி வைக்கிறான். ஜிம்மால் தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆடமிடம் இருந்திருக்கலாம். அல்லது பிரபல நாவலாசிரியன் ஒருவன் தன் எழுத்துக்களை எவ்விதம் எடைபோடுகிறான் என்பதை தன் இறுதி மூச்சின் முன்பாக அறிந்து கொள்ளும் ஆர்வமாகவும் அது இருக்கலாம். ஆனால் நாவலின் கணிசமான புலப்படாத கூறுகளில் ஒன்றாகவே இதுவும் அமைகிறது.
1967ம் ஆண்டுப் பகுதியில் ஆடமின் வாழ்க்கையில் நடந்தேறிய சில நிகழ்வுகளை முன்வைத்து இளவேனிற்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் என மூன்று பகுதிகளாக தன் வாழ்க்கையை எழுத்துக்களில் புலப்படத்த ஆரம்பிக்கிறான் ஆடம்.
Paul Auster எழுதியிருக்கும் Invisible நாவலின் முதல் பகுதியானது மேல்கூறிய எந்த விபரங்களையும் வாசகனிற்கு புலப்படுத்தாது, நேரடியாகவே ஆடம் வாக்கரின் 1967 இளவேனிற்காலத்தின் வாழ்க்கைக்குள் வாசகனை நுழையச்செய்கிறது. கதையை ஜிம் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும், ஆடம் வாக்கர் 60 வயதில் புற்றுநோய் தீவிரமான நிலையில் தன் நினைவுகளை எழுதுகிறான் என்பதும் இளவேனிற்காலத்தின் முடிவினிலேயே வாசகனிற்கு புலனாகிறது. இளவேனிலின் முடிவு வரை வாசகன் ஆடம் வாக்கரின் கடந்த காலங்களின் நினைவுகளின் துணையுடன் அவனுடைய புலப்படாத நிகழ்காலத்தில் பயணம் செய்கிறான்.
ஆடமின் இளவேனிற்கால நினைவுகளின் மீள்வருகையில், கொலம்பிய பல்கலைக்கழக இலக்கியதுறை மாணவனான ஆடம், நீயூயார்க்கில் நிகழும் விருந்தொன்றில் ருடொல்ஃப் பார்ன் என்பவனுடனும் அவன் துணைவியான மார்கோ என்பவளுடனும் அறிமுகமாகிக் கொள்வதும் தொடரும் நாட்களில் ஆடமிற்கு தன்னைவிட வயதில் மூத்தவளனான மார்கோவுடன் உருவாகும் ஒரு காதல் உறவுமாக கதை ஆரம்பிக்கிறது. ஆடமிற்கும், மார்கோவிற்கும் இடையில் நிகழும் ஒரு வாரக் காதலில் கதாசிரியரின் வரிகள் எம்மை ஆடமின் உணர்வுகளில் கரையச் செய்கின்றன. காதலும், காமமும் அதிக வார்த்தைகளின்றி அவர்களிற்குள் கொதித்து அடங்குகையில் ஆசிரியரின் வரிகள் எம்மை சொற்களின் எளிமையான சக்தியை உணரச் செய்கின்றன.
ஆடமின் இந்த உறவானது மார்கோவை அவன் துணைவனான ருடொல்ஃபிடம் இருந்து பிரிக்கிறது. ஆனால் மார்கோ ஒரு வார்த்தைகூட சொல்லாது ஆடமையும் பிரிந்தே செல்கிறாள். அதன்பின் நிகழும் ஒரு அசம்பாவிதம் ஆடமை, ருடொல்பிடம் இருந்து வெகுதூரம் ஓடச்செய்கிறது. மார்கோ வழியாக ஆடம், தன் மீதே தான் கொண்டிருந்த அச்சங்களையும், ஐயங்களையும் களைந்தான் எனில் ருடொல்ஃப் வழியாக தன்னுள் வாழ்ந்திருந்த ஒரு கோழையையும், தன் ஆளுமையின் ஒரு வெறுக்கத்தக்க பக்கத்தையும் தெளிவாக புலனாக்கி கொள்கிறான். இதனாலேயே அவன் வாழ்நாள் முழுவதும் ருடொல்ஃபை மன்னிக்க முடியாதவனாக இருக்கிறான்.
நாவலின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஆடம் எழுத முடியாத ஒரு மனத்தடை நிலையில், நாவலின் முதல் பகுதியை சிறப்பான ஒன்றாக விமர்சித்து, நாவலைத் தொடர சில வழிகளை ஆடமிற்கு கூறுகிறான் ஜிம். கதையின் இரண்டாம் பகுதியான வசந்தம், அமெரிக்காவை விட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ருடொல்ஃபும், மார்கோவும் தத்தமது காரணங்களிற்காக சென்றுவிட்ட நிலையிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆடம் தங்கியிருக்கும் வீட்டில் அவனுடன் கூட தங்க வரும் அவன் மூத்த சகோதரி க்வெய்னுடனான ஒரு மாத காதல் உறவை சங்கோஜத்தையும், வெட்கத்தையும் துறந்து ஆடம் இப்பகுதியில் விபரிக்கிறான். சமூகம் விதித்த நெறிகளிற்கு முரணான இந்த உறவு குறித்த எந்த குற்றவுணர்வும் ஆடமிற்கோ அவன் சகோதரிக்கோ அந்த உறவு நிகழும் சமயத்தில் இருப்பதில்லை. மிக நிச்சயமாக நாவலின் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பகுதியாக இது அமைகிறது. சிறுவயதில் இறந்துபோன சகோதரன் ஆண்டியின் பிரிந்து செல்ல மறுக்கும் நினைவுகளிலிருந்து க்வெய்னும், ஆடமும் எவ்வாறு வெளியேற ஆரம்பிக்கிறார்கள் என்பதும் இப்பகுதியில் விபரிக்கப்படுகிறது.
ஆனால் ஆடமின் நாவல் குறித்து பின்பு ஜிம் வழியாக அறிந்து கொள்ளும் க்வெய்ன், அவன் எழுதிய வசந்தம் பகுதியில் தனக்கும் ஆடமிற்குமிடையில் நிகழ்ந்தாக எழுதப்பட்ட உறவை மறுத்துவிடுகிறாள். இது, நிகழ்ந்திருக்காத கணங்களை வாசகன் கண் முன்பாக புலனாக்க வைப்பதற்கான ஆடம்மின் முயற்சியா அல்லது தன் மனக்கண்களிலிருந்து, அல்லது பிறரின் பார்வையிலிருந்து இந்த நினைவுகளை மறையச் செய்வதற்கான க்வெய்னின் எத்தனமா என்பதற்கு விடையை அது புலனாகும் பட்சத்தில் வாசகனே தேடிக் கொள்ள வேண்டியதுதான்.
நாவலின் மூன்றாம் பகுதியை ஜிம் படிக்கும் முன்பாகவே நோய் முற்றி ஆடம் இறந்து விடுகிறான். 1967ன் பின்பான ஆடமின் வாழ்க்கை குறித்த சிறிய பார்வை வாசகனிற்கு கிடைக்கிறது. கனவுகளுடனும், லட்சியங்களுடனும் வாழ்ந்திருந்த மனிதர்கள் மாயமாகிவிட அவர்கள் இடத்தில் காலமும், வாழ்க்கையும் வேறுமனிதர்களை புலனாக்கும் ரஸவாதத்தின் விந்தை மகத்தானது. தோற்கடிக்க முடியாதது. புலப்படாதது.
இலையுதிர்காலமான மூன்றாம் பாகத்தில் பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க செல்லும் ஆடம், அங்கு மார்கோ மற்றும் ருடொல்ஃபை மீண்டும் சந்தித்து கொள்வதையும், சிசில் எனும் இளம் நங்கையுடன் அவன் நட்பையும், மிகவும் அவமானத்தை ஏந்தி உடைந்த நிலையில் ஆடம் பிரான்ஸ் நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவதையும் முன்வைக்கிறது. இதன் பின் 2008ல் பிரான்ஸிற்கு பயணிக்கும் ஜிம், ஆடம் தன் இலையுதிர்காலத்தில் விபரித்த சிசிலை சந்தித்து ஆடம் குறித்த அவள் அனுபவங்களையும், உணர்வுகளையும் அறிந்து கொள்வதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.
ஒரு இளைஞனின் தவிப்புக்களை, அவமானங்களை, அழுத்தங்களை, அந்தரங்கங்களை தன் எளிமையான ஆனால் அசர வைக்கும் கதை சொல்லலால் உணர்ச்சி ததும்ப தந்திருக்கிறார் நாவலாசிரியர் பால் ஆஸ்டர். ஒரு திகில் நாவலிற்குரிய விறுவிறுப்பை அவர் தன் கதை நகர்வில் சாத்தியமாக்கியிருக்கிறார். கதை மாந்தர்களிற்கிடையில் நிகழும் உரையாடல்கள் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.
கதை மாந்தர்கள் கதையின் ஓட்டத்தில் மாயமாகிறார்கள் பின் கதையின் வேறு ஒரு தருணத்தில் புலப்படுகிறார்கள். அவர்கள் பிறர்மேல் கொண்டுள்ள உணர்வுகளின் உண்மை முகங்களை கதை காலத்தை எடுத்துக் கொண்டே புலப்படுத்துகிறது. சில நிகழ்வுகளிற்கான முடிவுகள் கதையில் புலனாவேதேயில்லை என்பதாக புலனாக கதை ஒன்றை வாசகனை உருவாக்க விட்டு விடுகிறார் பால் ஆஸ்டர்.
பால் ஆஸ்டர் கதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் உணர்ச்சி சுழலில் வாசகனை சிக்க வைக்கிறது. நாவலின் முடிவானது கதையோட்டம் உருவாக்கிய எதிர்பார்ப்பை திருப்தி செய்யாவிடிலும்கூட சிறப்பான பாத்திர படைப்புக்களாலும், அற்புதமான கதை சொல்லும் திறனிற்காகவும் தவிர்க்க முடியாத நாவலாகவே பால் ஆஸ்டரின் Invisible அமைகிறது. காதலும், காமமும், அன்பும், கண்ணீரும் புலப்படாமலே மறைந்து வாழ்ந்து மறையும் சந்தர்ப்பங்கள் மனித வாழ்வில் இல்லை என்று முற்றாக மறுத்து விட முடியுமா என்ன.
Haiya after a long time
ReplyDeleteMe the 1st
// ஒரு இளைஞனின் தவிப்புக்களை, அவமானங்களை, அழுத்தங்களை, அந்தரங்கங்களை தன் எளிமையான ஆனால் அசர வைக்கும் கதை சொல்லலால் உணர்ச்சி ததும்ப தந்திருக்கிறார் //
ReplyDeleteஅதை நீங்க ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க :)
.
அன்பு நண்பரே
ReplyDeleteநல்ல நாவலை பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளீர்கள். கருப்பு வெள்ளை படத்தில் நாவலின் அட்டைப் படம்....
இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். கதாசிரியரை ஏன் பிள்ளை பிடிகாரன் என சொல்லுகின்றீர்கள் என தெரியவில்லை. :)
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுகிறேன்.
//கனவுகளுடனும், லட்சியங்களுடனும் வாழ்ந்திருந்த மனிதர்கள் மாயமாகிவிட அவர்கள் இடத்தில் காலமும், வாழ்க்கையும் வேறுமனிதர்களை புலனாக்கும் ரஸவாதத்தின் விந்தை மகத்தானது. தோற்கடிக்க முடியாதது. புலப்படாதது.//
ReplyDelete:) ஒத்துக்க முடியாது.
தோற்கடிக்க வழி இருக்கு.அன்பும்,புன்னகையும்..
அப்புறம்,இப்பயே நிறைய நாவல் பெண்டிங்ல இருக்கிறதால இதை மகா பொறுமையா தான் படிக்க முடியும்.ஆனா,நல்லா மட்டும் இருந்து தொலைஞ்சுது,அவ்ளோ தான்.போஸ்ட் கொடுமைய எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும். :)
ReplyDeleteநல்லதொரு நாவலைப் பற்றிய நல்லதொரு பகிர்வு நண்பரே.
நண்பர் சிபி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஜோஸ், அந்த அட்டைப்படத்தில் உறைந்திருக்கும் கணத்தில் சற்று உங்களை வைத்துப் பாருங்கள்.. ஆகா என்ன ஒரு அருமையான கற்பனை.. செயின் நதியின் ஓரத்தில், அழகான நங்கையின் மடி சாரத்தில் சாய்ந்து மரகத வண்ணக் காதல் வரிகள் படிக்கிறாயே என் தம்பி :) நீங்கள் சொல்வது உண்மையே இன்னமும் நிறைய எழுதியிருக்கலாம்.. நாவலாசிரியைகளின் போட்டோக்களைப் பார்த்து அவர்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே நாவல்களை வாங்கி படித்து அவற்றை ஒகோ என பாராட்டும் நண்பர் ஒருவர், பால் ஆஸ்டரின் போட்டோவை பார்த்து விட்டு சொன்ன கருத்துதான் பிள்ளை பிடிகாரன் என்பதாகும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமினாட்டி, தோற்கடிக்க முடிவது என்பது வெளிவேடமாகவும் இருக்க வாய்ப்பில்லையா. எத்தனை புன்னகைகளின் வடிவில் குறுவாள்கள் ஒளிந்திருக்கின்றன... காலம் தங்களிற்கு பதில் அளிக்கும். ஆனால் உங்கள் வயதைப் பார்க்கையில் அது எட்டாக் கனிதான் :)) கெஞ்சிக் கேட்கிறேன் பதிவை மட்டும் போடாதீர்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
//கெஞ்சிக் கேட்கிறேன் பதிவை மட்டும் போடாதீர்கள் :) //
ReplyDeleteகொசுவ அம்புட்டு சீக்கிரம் அழிக்க முடியாது ஓய்..உம்ம கொடுமைக்கு பதில் கொடுமை கண்டிப்பா உண்டு! ;)
தங்களின் வலைத்தளத்தை அண்மைக்காலமாகப் படித்து வருகிறேன். ட்ராபிக் ஜாமில் சிக்கித் தவிக்கும் சாரதிக்கு நெடுஞ்சாலை மரத்தின் ஓரம் இருக்கும் வேப்பமர நிழல் எவ்வளவு இனிமையாக, இதமாக இருக்குமோ.. அதைப் போல் தங்களின் வலைதளம் ஒரு சினிமாவை நேராக சென்று பார்த்ததைப் போல் இருக்கிறது.... அருமை ( சும்மா! வாழ்த்துக்கள் என்று சொல்லும் பழக்கத்தை நான் எதிர்க்கிறேன்)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. இன்றே வாசிக்க வேண்டும் போல் உள்ளது உங்களின் பதிவு. விசாரித்து இருக்கிறேன். படித்து விடுவேன். இடை இடையில் இப்படியான நாவலை பற்றி அறிமுகபடுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, பதில் கொடுமை வர இன்னமும் சில வருடங்கள் ஆகும் அல்லவா அதுவரை ஜாலிதான் :)
ReplyDeleteஅங்கிதா வர்மா, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் வேல்கண்ணன், மிக்க நன்றி.