அமெரிக்காவின் டென்னெசி மாநிலத்தின் சிறு கிராமமான சர்ச் ஹில், வடக்கு, தெற்கு உள் நாட்டு யுத்தத்தின் காயங்களை மெளனமாக தாங்கி கொண்டு நிற்கிறது. அதன் சிறிய புகையிரத நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதிய ஷெரீஃப் டாம், ஜெனரல் லீயைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
புகையிரத நிலையத்தின் அருகில் நிற்கும் மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வரப்போகும் ரயிலுக்காக இரு பெண்மணிகள் தங்களிற்கருகில் ஒர் சவப்பெட்டியுடன் காத்திருப்பதை காணும் ஷெரீஃப், பெண்மணிகளிடம் பேச்சுக் கொடுக்கிறார்.
சவப்பெட்டியில் இருப்பது பத்து நாட்களின் முன் பீட்டர்ஸ்பெர்க்கில் இடம்பெற்ற மோதலில் உயிர் நீத்த தன் சகோதரன் வில்லியமின் உடல் எனக் கூறுகிறாள் இள நங்கை ஷானோன். அவன் உடலை அடக்கம் செய்வதற்காக மெம்பிஸ் நகரிலுள்ள தங்கள் குடும்பக் கல்லறைக்கு கொண்டு செல்லப்போவதாகவும் ஷானோன் தெரிவிக்கிறாள். இப் போர் என் மகனை பலியெடுத்துக் கொண்டாலும், என் கணவனை விரைவில் என்னிடம் மீளத் தந்துவிடும் என்கிறாள் ஷனோனின் தாயான லூயிஸ் கிராஞ்சர்.
இத்தருணத்தில் புகையை மேகங்களாக கக்கியவாறே ரயில் நிலையத்தில் நுழைகிறது ரயில். ரயிலின் தபால் சேவை பெட்டியை தன் துப்பாக்கியுடன் நெருங்குகிறான் ஷெரீஃப் டாம். அப் பெட்டியின் கதவுகள் திறக்க, அதனுள் ஒர் மரப் பெட்டியை காவல் காத்தபடி நிற்கிறார்கள் சில இளைஞர்கள்.
அந்த மரப் பெட்டியினுள், போரில் சேதமடைந்துள்ள சர்ச் ஹில்லின் தேவாலயத்தை புணரமைப்பதற்காக யாங்கிகளிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் இருக்கிறது. பெட்டியைக் காவல் காத்து நிற்கும் இளைஞர்களை தன் சகோதரனின் சவப்பெட்டியை தூக்கி ரயிலில் ஏற்றுவதற்கு உதவி செய்யும்படி கேட்கிறாள் இளம் பெண் ஷானோன்.
முதலில் பணப் பெட்டியினை பாதுகாப்பாக கொண்டு சேர்த்த பின் அவளிற்கு உதவுவதாக தெரிவிக்கும் இளைஞர்களை கடிந்து கொள்கிறான் ஷெரீஃப் டாம், யுவதிகளிற்கு உடனடியாக உதவும்படி அவர்களிற்கு உத்தரவும் இடுகிறான். இதனால் அரை மனதாக இளைஞர்கள் சவப்பெட்டியை தூக்க செல்கிறார்கள். சவப்பெட்டியை இளைஞர்கள் தூக்கியதும், தன் மேல் கோட்டுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டுகிறாள் ஷானோனின் தாயாகிய லூயிஸ் கிராஞ்சர்.
இளைஞர்கள், லூயிஸின் கையிலுள்ள துப்பாக்கியைக் கண்டு திகைப்படைந்த அதே வேளை, ஷெரீஃபிற்கு பின்னால் நின்ற ஷானோன், தன் கைத்துப்பாக்கியால் ஷெரீஃபின் தலையில் அடித்து அவனை மயக்கமுறச் செய்கிறாள். ஷெரீஃப் கீழே வீழ்ந்ததும் விரைவாக ரயில் பெட்டியினுள் பாய்ந்து ஏறும் ஷானோன் பணப்பெட்டியை துப்பாக்கியால சுட்டு திறக்கிறாள், இச்சமயத்தில் ரயில் நிலையத்தை குதிரைகளுடன் வந்தடைகிறான் ஷானோனின் தம்பி வில்லியம்.
பணப்பெட்டியிலிருந்து எடுத்த பணப் பையை வில்லியத்திடம் எறிந்து விட்டு, ஒர் குதிரையில் தாவி ஏறுகிறாள் ஷானோன். தன் துப்பாக்கியை சவப்பெட்டியை தூக்கியபடி நிற்கும் இளைஞர்களை நோக்கி குறி வைத்தவாறு நிற்கும் லூயிஸ், தன் வாயில் புகையும் சிகரெட்டில் ஒர் டைனமைட் குச்சியை பற்ற வைத்து, ரயில் நிலையத்தில் வீசி விட்டு, வில்லியம் தந்த குதிரையில் ஏறிக் கொள்கிறாள். தங்கள் கைகளிலிருக்கும் சவப்பெட்டியை எறிந்து விட்டு தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் டைனமைட்டிலிருந்து விலகிப்பாய்கிறார்கள். ரயில் நிலையம் வெடித்து சிதற, குதிரைகளில் தப்பிச் செல்கிறது ஜெனரல் கிராஞ்சரின் குடும்பம்.
நீண்டு கிடக்கும் புல்வெளியினூடாக, ஆறு கைதிகளை தாங்கியவாறு குதிரை வீரர்களின் காவலுடன், யாங்கிகளின் மக்லாகிலென் கோட்டையை நோக்கி செல்கிறது அவ்வண்டி. ஆறு கைதிகளில் ஒருவனான கலப்பின செவ்விந்தியன் ஒருவன் சக கைதி ஒருவனால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறான். அவன் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை கண்டு கொள்ளும் கைதிகள் , செவ்விந்தியனை தாக்கிய முரட்டுக் கைதியின் வீரம் குறித்து கிண்டல் செய்கிறார்கள்.
செவ்விந்தியன், யாங்கிகளின் துருப்பில் வழிகாட்டியாக பணியாற்றியவன், தன் கலகக் குணத்தினால் மக்லாகிலென் கோட்டையின் உருக்கு ஆலைகளில் கடூழியம் செய்வதற்கான தண்டனை பெற்றவன். வழமையாக கலகம் செய்பவர்களிற்கு தண்டனையாக கிடைப்பது தூக்குத்தான். இவன் அதிர்ஷ்டம் இவனிற்கு தெரிந்த அதிகாரி ஒருவனின் தலையீட்டால் தூக்கு தண்டனை கடூழியத் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கைதிகளின் கூச்சல்களோடு மக்லாகிலென் கோட்டையை வந்தடைகிறது வண்டி. காயமுற்ற செவ்விந்தியன் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுகிறான். செவ்விந்தியன் குணமடைந்தாலும் கூட கோட்டையில் இருக்கும் முரட்டுக்கைதிகள் அவனைக் காலி செய்து விடுவார்கள் எனக் கூறுகிறான் கைதிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் கோட்டையின் சார்ஜெண்ட். இதனை விட அவனை தூக்கிலிட்டிருக்கலாம் எனவும் தன் அபிப்பிராயத்தை தெரிவிக்கிறான்.
தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட மயக்கத்திலிருந்து மீளும் ஷெரீஃப் டாமை, நகரின் மூதாட்டிகள் கடிந்து கொள்கிறார்கள். பணத்தை கவர்ந்து சென்றது கிராஞ்சரின் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், ஷெரீஃபையும், ரயிலில் பணத்தை எடுத்து வந்த இளைஞர்களையும் கிராஞ்சரின் இல்லத்தில் சென்று கிராஞ்சர்களிற்காக காத்திருக்கும் படி சொல்கிறார்கள். அவர்களும் வேறு வழியின்றி துப்பாக்கிகளுடன் கிராஞ்சரின் இல்லத்தில் அவர்களை எதிர் நோக்கி காவல் இருக்கிறார்கள்.
மாக்லாகிலென் கோட்டையின் மருத்துவர் காயமுற்ற செவ்விந்தியனை தன் கவனிப்பில் எடுத்துக் கொள்கிறார். செவ்விந்தியனை மருத்துவரிடம் தூக்கி வந்த ஜாக் எனும் வீரன், மோர்பின் எனும் வலி நீக்கும் மருந்தின் போதைக்கு அடிமையானவன், அவன் மருத்துவரிடம் மோர்பின் கிடைக்குமா என வினவுகிறான். மறு நாள் கோட்டைக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியில்தான் மோர்பின் மருந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என அவனிற்கு பதிலளிக்கும் மருத்துவர், ஜாக் ,மோர்பின் இல்லாது வாழப் பழகிக் கொள்ளல் வேண்டும் என அறிவுரை தருகிறார்.
இதேவேளை கோட்டையின் இன்னொரு அறையில் ஒர் கைதியை மோசமாக தாக்கி விசாரனை செய்து கொண்டிருக்கிறான் காப்டன் லோப்மேன் எனும் கொடூரன். அந்தக் கைதி வேறு யாருமல்ல, அவன் பெயர் கிராஞ்சர். ஜெனரல் கிராஞ்சர்.
கிராஞ்சர் 1863ம் ஆண்டின் பிப்ரவரி, எப்ரல் மாதங்களிற்கிடையில் ரகசியமாக ஆற்றிய நடவடிக்கை ஒன்றைக் குறித்து அவனைத் துளைத்தெடுக்கிறான் காப்டன் லோப்மேன். அவன் கேள்விகளிற்கு சரியான பதில் தராது மழுப்புகிறான் கிராஞ்சர். தன்னிடம் சிகிச்சைக்காக வரவேண்டிய கிராஞ்சரை இன்னமும் காணவில்லையே என தேடும் கோட்டை மருத்துவர், அவனை லோப்மானின் விசாரணை அறையில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கண்டு கோபம் கொள்கிறார்.
மருத்துவரின் கோபத்தை சிறிதும் சட்டை செய்யாத லோப்மேன், நாளைக்காலை கிராஞ்சர் மீண்டும் தன் விசாரணைக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவரிடம் கூறிவிட்டு செல்கிறான்.
கிராஞ்சரின் காயங்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவன் முன்பு தங்கியிருந்த சிறை அறையிலிருந்து எடுத்து வந்த அவனிற்கு சொந்தமான சில பொருட்களை அவனிடம் கையளிக்கிறார். அந்தப் பொருட்களின் மத்தியில் இருந்த பைபிள் ஒன்றினை தன் கையில எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்கிறான் கிராஞ்சர்.
கிராஞ்சரின் அறையை விட்டு வெளியேறும் மருத்துவர், சிறைச்சாலையின் சிகிச்சைப் பிரிவின் இன்னொரு அறையில் சற்றுத் தேறிய நிலையில் காணப்படும் செவ்விந்தியனை அணுகி அவன் பெயர் என்ன என்று கேட்கிறார், தன் பெயர் நத்தானியல் கூப்பர் என அவன் கூறுகிறான், மறு நாள் அவன் உடல் தேறியதும் அவன் தண்டனைக் கைதிகள் உள்ள பகுதிக்கு மாற்றப்படுவான் என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார் மருத்துவர்.
சர்ச் ஹில்லில் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன், தன் கணவன் காலனல் கிராஞ்சரின் கீழ் பணிபுரிந்த லெப்டினண்ட் ஜோசேயை அவன் மறைவிடத்தில் வந்து சந்திக்கிறாள் லூயிஸ் கிராஞ்சர். தன் கணவனை காப்பாற்ற உடனே நடவடிக்கைகளை எடுக்கும் படி ஜோசேயிடம் பணத்தினை தந்து அவள் கேட்டுக் கொள்கிறாள்.
ஜோசேயின் திட்டப்படி, மறு நாள் காட்டில் மறைந்திருந்து, மாக்லாகிலென் கோட்டைக்கு மருந்துப் பொருட்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் வண்டியை தாக்குகிறார்கள் ஜோசே குழுவினர். காவலிற்கு வந்த வீரர்களின் உயிர்களைப் பறித்து விட்டு அவ்விடங்களை ஜோசேயும், அவன் வீரர்களும் எடுத்துக் கொள்ள, ஆம்புலன்ஸ் வண்டியில் வந்த கன்னியாஸ்திரிகளின் உடைகளை களைந்து அவற்றை தாங்கள் அணிந்து கொண்டு வீரர்களுடன் கூடவே செல்கிறார்கள் ஷானோனும், லூயிஸும்.
மாக்லாகிலென் கோட்டையில் காலை வழமை போல் வழுக்கி கொண்டிருக்கிறது. மருத்துவரை தேடி வரும் சார்ஜண்ட், காலனல் கிராஞ்சரை குறித்த நேரத்தில் காப்டன் லோப்மேன் தேடி வருவான் என்பதைக் கூறிவிட்டு, உடல் தேறிய நிலையிலுள்ள செவ்விந்தியன் நாத்தானியலை சிகிச்சைப் பிரிவிலிருந்து அழைத்துச் செல்கிறான். கைதிகள் பிரிவிற்குள் செல்லுமுன்பாக தன்னை கோட்டைக்கு எடுத்து வந்த அதிகாரியுடன் தான் சற்று உரையாட விரும்புவதாகத் தெரிவிக்கிறான் நத்தானியல். கோட்டையை விட்டு புறப்படத் தயாரான நிலையிலிருக்கும் அந்த அதிகாரியை நத்தானியல் காண்பதற்காக அழைத்துச் செல்கிறான் சார்ஜண்ட்.
கிராஞ்சரை விசாரிப்பதற்காக தயாராகிறான் காப்டன் லோப்மேன. இத்தருணத்தில் கோட்டையின் கதவுகள் திறக்க புழுதியைக் கிளப்பியவாறே உள்ளே நுழைகிறது ஆம்புலன்ஸ் வண்டி. சிகிச்சைப் பிரிவை நெருங்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்து மருந்துப் பெட்டிகள் இறக்கப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படுகின்றன. கன்னியாஸ்திரிகள் வேடத்திலிருக்கும் கிராஞ்சர் பெண்மணிகளும், லெப்டினண்ட் ஜோசேயும், கோட்டை மருத்துவரின் உதவியுடன் சிகிச்சைப் பிரிவின் உள்ளே நுழைகிறார்கள்.
சிகிச்சைப் பிரிவின்உள்ளே அவர்கள் நுழைந்ததும், கன்னியாஸ்திரி உடையில் இருக்கும் லூயிஸ், கோட்டை மருத்துவரின் உதவிக்கு நன்றி செலுத்துகிறாள், மருத்துவரோ கிராஞ்சரை உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார். சிகிச்சைப்பிரிவு சீருடை ஒன்றையும் கிராஞ்சரிடம் தந்து அணிந்து கொள்ளச் சொல்கிறார். கிராஞ்சர், ஷானோனிடம் தன் பைபிளை பத்திரமாக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்கிறான். இந்தக் குழு விரைவாக சிகிச்சைப் பிரிவின் கதவுகளை நோக்கி நகர்கிறது.
தன் அலங்காரங்களை முடித்துக் கொண்டு கிராஞ்சரை விசாரணை செய்வதற்காக அழைத்து வருவதற்காக வெளியே வருகிறான் காப்டன் லோப்மேன். நத்தானியல், தன்னை கோட்டைக்கு இட்டு வந்த அதிகாரியிடம் தன் மரண தண்டனையை கடூழிய தண்டனையாகக் குறைக்க ஏற்பாடு செய்த காப்டன் லாயிட்டிடம் தன் நன்றிகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறான். சிகிச்சைப்பிரிவின் வாயிலில் நிற்கும் ஆம்புலன்ஸ் வண்டியைக் கண்டு கொள்ளும் மோர்பின் போதைக்கு அடிமையான வீரன் ஜாக், போதையின் தாகத்துடன் ஆம்புலன்ஸ் வண்டியை நெருங்க ஆரம்பிக்கிறான்.
சிகிச்சைப் பிரிவின் கதவுகளின் முன் காவலில் நிற்கும் லெப்டினண்ட் ஜோசெயின் வீரனை நெருங்கி வரும் போதைப் பிரியன் ஜாக்கை, அவ் வீரன் தடுத்து நிறுத்துகிறான். தான் உடனடியாக மருத்துவரைக் காணவேண்டுமென அவ்வீரனிடம் கூறுகிறான் கிறுக்கு பிடித்த நிலையிலிருக்கும் ஜாக், அவனை சற்று நேரம் கழித்து வரும்படி அவ்வீரன் கேட்க ஜாக்கோ உரக்க கத்தியவாறே தன் கத்தியை ஓங்கியபடி வீரனை நோக்கி பாய்கிறான். ஜாக்கின் இந்த வெறிக் கூச்சல் லோப்மேன், நத்தானியல், சார்ஜண்ட் என அனைவரின் பார்வையையும் சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கி திசை திருப்பி விட்டு விடுகிறது.
தன் மேல் கத்தியுடன் பாயும் ஜாக்கை துப்பாக்கியால் சுடுகிறான் ஜோசேயின் வீரன், இதே வேளை சிகிச்சைப் பிரிவின் கதவுகளை உதைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள், கிராஞ்சரின் மீட்புக் குழுவினர்…..
கிராஞ்சர் மீட்கப்பட்டானா? செவ்விந்தியன் நத்தானியலின் கதி என்ன? கிராஞ்சர்களிற்காக அவர்களின் இல்லத்தில் காத்திருக்கும் ஷெரீஃப் குழுவின் நிலை என்ன? கிராஞ்சர் மறைத்து வைத்திருக்கும் மர்மம் என்ன? காப்டன் லோப்மேன் என்ன செய்யப் போகிறான் எனும் கேள்விகளிற்கு பரபரப்பாக விடையளிக்கிறது Gibier De Potence எனும் காமிக்ஸ் தொடரின் முதல் பாகமான Le Jardin De Lys .
பிரென்ஞ்ச் காமிக்ஸ் கதைகளில் வெஸ்டர்ன் கதைகள் அரிதாகவே வெளிவரும் காலப்பகுதியிது. அப்படியே வந்தாலும் அவை பெரும்பாலும் வாசகர்களின் ஆதரவு கிடைக்காது சுருண்டு விடுவதும் உண்டு. ஆனால் இக்காமிக்ஸ் கதைத்தொடர் வெஸ்டர்ன் கதை ரசிகர்களின் தாகத்தை தாராளமாக தீர்த்து வைக்கிறது.
கிராஞ்சரை மீட்பது என்பதை மையமாக கொண்ட கதையில், கிராஞ்சர் மறைத்து வைத்துள்ள ரகசியம் என்ன என்பதும் அதனைக் கண்டுபிடிப்பதும் திருப்பங்களாக அமைந்து விடுகின்றன. கதையில் காணப்படும் திருப்பங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி விடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கதையில் நடுவில் வரும் செவ்விந்தியன் நாத்தானியலின் பாத்திரம் எதிர்பார்பை தூண்டுகிறது. கொடூர வில்லனாக காப்டன் லோப்மேன் பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. தந்திரமும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பவனாகவும் லோப்மேன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். லோப்மேன் பாத்திரம் இல்லாவிடில் கதை சற்றுக் காரம் குறைந்ததாகவே காணப்படும் என்பது என் தாழ்மையான கருத்து ஆகும்.
தொடரிற்கு கதையை எழுதியிருப்பவர்கள் François Capuron மற்றும் Fred Duval எனும் இருவர் கூட்டணி. கதைக்கு வித்தியாசமாக சித்திரங்களை வரைந்திருப்பவர் Fabrice Jarzaguet ஆவார். மூவரும் பிரெஞ்சுக் கலைஞர்கள். 2001 முதல் வெளியாகிய ஆரம்பித்த இத்தொடரில் இதுவரை நான்கு ஆல்பங்கள் பிரசுரமாயிருக்கின்றன. விறு விறுப்பான கதை சொல்லலும், எதிர்பாராத திருப்பங்களும் இத்தொடரை வாசகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது , நான்காவது ஆல்பத்துடன் தொடர் நிறைவு பெற்றது. விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட கதை, அபாரமான வண்ணத் தெரிவுகளுடன் கூடிய படு மோஸ்தரான சித்திரங்கள் என மனதைக் கவர்ந்த இக்கதைத் தொடர் திடீரென நிறுத்தப்பட்டது வேதனையானதே. வெஸ்டர்ன் கதைப் பிரியர்களை இக்காமிக்ஸ் தொடர் நிச்சயம் கவர்ந்திழுக்கும். [***]
ஆர்வலர்களிற்கு
GIBIER DE POTENCE