புதிய உலகைத் தேடிச் சென்ற ஐரோப்பியர்களின் கடற்பயணங்களும், அப்பயணங்கள் ஐரோப்பியப் புவிப்பரப்பிற்கு எடுத்து வந்த விந்தையான தகவல்களும், சாகசக் கதைகளும் மேற்குக் கடலின் காற்றுடன் கதைபேசிப் பறந்த காலப்பகுதி. கடற்கொள்ளையர்கள், புதையல் தீவுகள், புதையல் வேட்டை என சாகசப் பயணங்களிற்காக தம் வாழ்க்கையையே அர்பணிப்பதற்கு மனித உள்ளங்கள் ஏங்கிய காலம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபு பைரொன் ஹேஸ்டிங்ஸ், ரகசியமான ஒரு வரைபடத்தை பெரும் விலை கொடுத்து வாங்குகிறான். அமேசானின் அடர்ந்த காடுகளிற்கிடையில் மறைந்திருக்கும் புதையல் நகரமான கயனாகேபாக்கை சென்று அடைவதற்கான பாதை அதில் பொதிந்திருக்கிறது.
இதனை அடுத்து கப்பல் ஒன்றில் தன் மாலுமிகளுடன் புதையல் நகரத்தை தேடிப் பயணமாகிறன் பைரொன் ஹேஸ்டிங்ஸ். இங்கிலாந்தில் இருக்கும் அவன் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பு பைரொன் ஹேஸ்டிங்ஸின் மனைவியான விவியானிடம் வந்து சேர்கிறது.
விவியான், ஆடம்பரமான வாழ்க்கைமுறை கொண்டவள். இதனால் ஹேஸ்டிங்ஸின் சொத்துக்கள் இளவேனிலின் சூரியக் கதிர்கள் பட்டு உருகும் பனிபோல் மெதுவாக கரைய ஆரம்பிக்கின்றன. புதையல் நகரைத் தேடிச் சென்ற பைரோனிடமிருந்து மூன்று வருடங்களிற்கு மேலாக எந்தவித தகவல்களும் வந்து சேராத நிலையில் பொருளாதார சிக்கல் விவியானை நெருக்க ஆரம்பிக்கிறது.
பைரோன், புதையல் நகரைத் தேடிச் சென்ற பின்பாக பல ஆண் நண்பர்களுடன் உறவுகளை தேடிக் கொள்ளுகிறாள் விவியான். அவள் தன் ஆடம்பர வாழ்வினை ஓரளவேனும் பேணுவதற்கு இந்த உறவுகள் உதவுகின்றன. விவியானின் இவ்வகையான உறவுகளால் அவளிற்கு கண்ணியம் குறைந்தவள் என்ற பெயர் சமூகத்தால் இலகுவாக சூட்டப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அவள் கொண்ட உறவுகளின் விளைவாக தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிகிறாள் விவியான். நிலைமை மோசமாகும் முன்பாக அவள் சமீப காலமாக நெருங்கிப் பழகிவரும் பிரபுவான பிரிஸமை திருமணம் செய்து கொள்வது எனும் தீர்மானத்திற்கு வருகிறாள் விவியான்.
தன் கணவனான பைரோன் ஹேஸ்டிங்ஸ் இறந்துவிட்டான் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு பிரபு பிரிஸமை திருமணம் செய்து கொள்ளலாம் என விவியான் எண்ணுகிறாள். பிரபு பைரோன் ஹேஸ்டிங்ஸின் சொத்துக்கள் கரைந்து போன உண்மை அறியாத பிரபு பிரிஸம், அச்சொத்துக்களை தான் அடையலாம் எனும் பேராசையில் விவியானை திருமணம் செய்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறான்.
இங்கிலாந்தில் இலையுதிர்காலம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, குளிர், கதவுகளை தன் உறைந்த விரல்களால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்களில் தன் மறுமணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறாள் விவியான். அந்த பரபரப்பான தருணத்தில் பைரோன் ஹேஸ்டிங்ஸின் சகோதரனான எட்வர்ட், ஒரு செய்தியை விவியானிற்கு எடுத்து வருகிறான்.
மூன்று வருடங்களிற்கும் மேலாக எந்த தகவல்களுமின்றி உலகின் ஏதோ ஒரு மூலையில் தொலைந்து, இறந்து போனதாக கருதப்பட்ட பைரோன் ஹேஸ்டிங்ஸ் அனுப்பி வைத்திருக்கும் செய்தி அது. அவன் தேடிச் சென்ற புதையல் நகரத்தை பைரோன் கண்டுபிடித்து விட்டான் என்பதுதான் அந்தச் செய்தி. பைரோன் கண்டுபிடித்த புதையல் நகரத்தில் குவிந்திருக்கும் செல்வங்களை, யாரும் அறியாது மிக ரகசியமாக கடத்திக் கொண்டு வருவதற்கு பைரோனிற்கு இன்னுமொரு கப்பல் அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக எஞ்சியிருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஒரு கப்பலையும், மாலுமிகளையும் புதையல் நகரிற்கு இட்டுவரப் பணித்து, ஒரு பழங்குடி இந்தியனிடம் மடல் எழுதி அனுப்பி வைக்கிறான் பைரோன் ஹேஸ்டிங்ஸ்.
அது மட்டுமல்லாது தன் சொத்துக்களின் மீது பூரண அதிகாரம் கொண்டவனாக தன் சகோதரன் எட்வர்டை நியமிக்கிறான் பைரோன் ஹேஸ்டிங்ஸ். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தான் நாடு திரும்பி வரும் வரையில் தன் மனைவி விவியானை ஒரு கன்னியாஸ்த்ரீகள் மடமொன்றில் அடைத்து வைக்கும்படியும் பைரொன் கேஸ்டிங்ஸ் அம்மடலில் கேட்டுக் கொள்கிறான்.
பைரொன் ஹேஸ்டிங்ஸின் இந்தப் புதிய திட்டத்தால், விவியானின் ஆசைக் கனவுகள் யாவும் சிதறிப் போகின்றன. தன் கணவன் பைரோன் ஹேஸ்டிங்ஸிடம் அவள் ஊமையாக அனுபவித்த கொடுமைகளிற்கு பழிதீர்க்கத் துடிக்கிறாள் விவியான். பைரோனின் மடலினால் அடங்கிப் போவதற்கு விவியான் பத்தினிப் பெண்ணல்ல. பைரோனின் சொத்துக்களை விற்பதற்குரிய ஆவணங்களில் அவள் கையொப்பம் இடுவதற்குரிய விலையாக, புதையல்நகரம் நோக்கிப் பயணமாகும் கப்பலில் அவளும் பயணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை பைரொனின் சகோதரன் எட்வர்ட்டை மிரட்டி ஏற்படுத்திக் கொள்கிறாள் விவியான்.
மேலும் தன் கொடுமைக்காரக் கணவன் கண்டுபிடித்த புதையலில் ஒரு பங்கை எவ்வாறாவது தனதாக்கிக் கொள்ளவும் திட்டம் வகுக்கும் விவியான், புதையல் நகரை நோக்கி பயணிக்கும் கப்பலில் தனக்கு சாதகமாக செயற்படக்கூடிய சில மாலுமிகளை கொண்டு செல்ல விரும்புகிறாள். இதற்காக விவியான், டாக்டர் Livesey ஐ சென்று சந்தித்து அவரின் உதவியை கேட்கிறாள்.
விவியானின் திட்டத்திலுள்ள அபாயங்களை அவளிற்கு நயமாக எடுத்துரைக்கிறார் டாக்டர் லிவெசி. ஆனால் விவியானோ தான் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காது இருக்கிறாள். வேறுவழி இல்லை என்ற நிலையில் டாக்டர் லிவெசி, ஒரு கடலோடியிடம் விவியானை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒரு காலத்தில் பல உள்ளங்களை பயத்தினால் ஒடுங்க வைத்த கடலோடி அவன். அவனை அறியாதவர்களிற்கு அவன் பெயர் ஜான் சில்வர். அவன் நெருங்கிய நண்பர்களிற்கு Long John Silver ….
உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த சிறுவர் இலக்கியம் Treasure Island ஆகும். Robert Louis Stevenson எழுதிய அந்த அமரகாவியம், வாசகர்கள் மனதில் விதைத்துச் சென்ற பெருங்கனவொன்றின் ஒரு சிறு துகளை கண்டடைவதற்கான ஒரு சிறு முயற்சியே இது என்று தாழ்மையாகக் கூறியே Long Jhon Silver எனும் இக்காமிக்ஸ் தொடரின் முதல் பாகமான Lady Vivian Hastings ஐ ஆரம்பிக்கிறார் கதாசிரியர் சேவியர் டாரிசன்.
லாங் ஜான் சில்வர் எனும் அழியாப் புகழ் பெற்ற கடற்கொள்ளையனின் வாழ்க்கை, புதையல் தீவு சாகசத்தின் பின்பாக எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர் கண்முன் எடுத்து வருகிறது கதை. டாக்டர் லிவெசியும் புதையல் தீவு கதையில் வரும் ஒரு பாத்திரமே.
புதையல் நகரம் நோக்கிப் பயணிக்கும் கப்பலில் சில நிர்பந்தங்களால் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட டாக்டர் லிவெசி, சம்பவங்கள் நிகழ்ந்து 50 வருடங்களின் பின், தன் இறுதிக்காலத்தில், அவை குறித்த நினைவுகளை அவன் மனதிற்கு நெருக்கமான ஒருத்தியுடன் கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதாகவே கதை ஆரம்பமாகிறது.
அமேசான் காட்டு ஏரிகளில், அயர்வுற்று, நோய் பீடித்து, மாலுமிகள் ஒவ்வொருவராக இறந்து வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதையல் நகரை தேடிச் செல்லும் பைரோன் ஹேஸ்டிங்ஸின் கப்பல், எதிர்பாராத நிலையில் புதையல் நகரை கண்டடைவதாக ஆரம்பிக்கும் ஆல்பத்தின் ஆரம்பக்காட்சிகள் அசத்திப் போடுகின்றன. குறிப்பாக இப்பக்கங்களில் சித்திரங்கள் ரசிகனை தம் மந்திரத்தால் கட்டிப்போடுகின்றன.
தொடரும் கதையில் விவியான் வாழ்க்கை குறித்த தகவல்களும், அவள் எதற்கும் அஞ்சாத தந்திரம்மிக்க துணிச்சல்காரி என்பதும் கூறப்படுகிறது. லாங் ஜான் சில்வரின் அறிமுகம் அருமையாக இருக்கிறது. ஆஜானுபாகுவான ஒரு பாத்திரமாக கதை, மற்றும் சித்திரங்கள் வழி ஜான் சில்வர் உலா வருகிறான். விவியான், தன் ரத்தத் துளிமூலம் லாங் ஜான் சில்வருடன் செய்யும் ஒப்பந்தமும், அதன் பின் ஜான் சில்வர், எவ்வாறு தன் மாலுமிகளுடன் புதையல் நகரம் நோக்கிச் செல்லும் Neptune கப்பலில் இடம் பிடிக்கிறான் என்பதும் படு விறுவிறுப்பாக ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன.
காமிக்ஸ் தொடரின் கதாசிரியர் சேவியர் டாரிசன், தொய்வில்லாது கதையை நகர்த்துகிறார். இரண்டாவது ஆல்பமான Neptune ல் சஸ்பென்ஸும், லாங் ஜான் சில்வரும் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் கதையை நகர்த்துவதில் அசாத்திய வெற்றி காண்கிறார் கதாசிரியர். ஆல்பத்தின் சித்திரக்கலைஞரான Mathieu Lauffray, ஒளி மங்கிய இங்கிலாந்தின் இலையுதிர்காலம், குளிர்காலம், அமேசான் ஏரி, என்பவற்றின் சூழ்நிலைகளோடு வாசகனை ஒன்ற வைக்கிறார். கடற்கொள்ளையர்கள் நெப்ட்யூன் கப்பலை சாமர்த்தியமாக தமதாக்கும் ஆக்ஷன் காட்சிகளில் சித்திரங்கள் சபாஷ் போட வைக்கின்றன.
நான்கு ஆல்பங்களில் நிறைவடையும் கதையாக திட்டமிடப்பட்ட கதையில், இதுவரை மூன்று ஆல்பங்கள் வெளியாகியுள்ள நிலையில், வாசகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற ஒரு காமிக்ஸ் தொடராக லாங் ஜான் சில்வர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. கடற்கொள்ளையர்கள், புதையல் என எம் மனங்களின் ஒரு ஓரத்தில் வாழ்ந்திருக்கும் கனவுகளை மறுபடியும் உயிர்க்க வைக்கிறது இக்காமிக்ஸ் தொடர். அசத்தலான அட்டைப்படங்களைப் பாருங்கள் வாய்ப்புக் கிடைத்தால் எந்தக் காமிக்ஸ் ரசிகனாவது இந்த ஆல்பத்தை புரட்டிப் பார்க்காமல் இருப்பானா என்ன!!
வெகுவிரைவில் சினிபுக் இக்காமிக்ஸ் தொடரை ஆங்கிலத்தில் வெளியிடவிருக்கிறது. புதையல் தீவு கதையின் முடிவில் மறு உலகில் லாங் ஜான் சில்வரிற்கு நல்வாழ்வு கிடைப்பது என்பது சந்தேகமே என்கிறான் ஜிம் ஹாக்கின்ஸ். லாங் ஜான் சில்வர், மறு உலகு செல்வதற்கு முன்பாக அவனிற்கு கொஞ்சம் நல்வாழ்வு கிடைக்குமா என்பதை நீங்கள் அறியவிரும்பினால் உடனடியாக லாங் ஜான் சில்வரின் நெப்ட்யூன் கப்பலில் ஏறுங்கள் நண்பர்களே. [****]
மீ தி பரஸ்ட்
ReplyDeleteமிரட்டும் பாணியில் ஓவியங்கள், கண்ணை பறிக்கும் வண்ணகோர்வை, சிறப்பான கதையாக்கம் - வாவ், உடனடியாக படிக்க தூண்டுகிறது காதலரே.
ReplyDeleteஉடனடியாக எனக்கு மனதில் பல நாட்களாக பதிவிடாமல் வைத்திருக்கும் பைகோ காமிக்ஸ் தான் நினைவில் வருகிறது, Yes that's when i read this as a comics for the 1st time.
ReplyDeleteme the 2nd
ReplyDeleteவழக்கம் போல உங்கள் மொழி நடை மிக அருமை
ReplyDeleteபடிக்கவேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்
// வெகுவிரைவில் சினிபுக் இக்காமிக்ஸ் தொடரை ஆங்கிலத்தில் வெளியிடவிருக்கிறது //
எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அன்பு நண்பரே
ReplyDeleteகடும் மழையுனுட ஆரம்பிக்கும் முதல் சித்திரமே அற்புதமாக உள்ளது. இந்த சித்திரக்கதையின் முதல் புத்தகத்தை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். மற்ற மூன்று பாகங்களும் எப்போது கிடைக்கும் என தெரியாத நிலையிலும் படித்து விட வேண்டியதுதான்.
நல்ல அறிமுகம். கடற்கொள்ளைக்கார வாழ்க்கை வாழ ஆசைப்படாத சிறுவனும் உண்டா? தமிழில் வந்த ஒரே ஒரு கடற்கொள்ளைக்கார படமும் லெஜெண்டாக நின்று விட்டது.
சமீபத்தில் ப்ரான்ஸ் நாட்டில் உருவான கடற்கொள்ளைக்காரனை மையமாக வைத்து ஒரு கதைத் தொடரும் பாதியிலேயே நின்று விட்டது.
ஓவியங்கள் அசத்தலாக இருக்கிறது.
ReplyDeleteகதை. அதைவிட சுவாரஸ்யம்.. புதையல், கொள்ளையர், தேடல்.. எப்பொழுதுமே படிக்க அலுக்காதது.
ஆவலை தூண்டிவிட்டீர்கள்.. சினிபுக் வெளிட்டாலும் ... குறைந்த விலையில் கெடைக்குமா?.....
ReplyDeleteகாதலரே,
ReplyDelete// விந்தையான தகவல்களும், சாகசக் கதைகளும் மேற்குக் கடலின் காற்றுடன் கதைபேசிப் பறந்த காலப்பகுதி. //
வழக்கம் போல அருமையான சொற்தொடர் தாங்கி துவங்கியிருக்கிறீர்கள்.... அவ்வரிகள் பதிவு முழுவதும் நம்மை ஆட்கொள்கிறது.
அதுவும் அந்த முதல் பக்கத்தில் வழிகாட்டியை காலில் மிதித்து கொண்டு அந்த மர்ம பிரதேசத்தை அணுகும் காட்சி கிலியை ஏற்படுத்துகிறது.
// நாடு திரும்பி வரும் வரையில் தன் மனைவி விவியானை ஒரு கன்னியாஸ்த்ரீகள் மடமொன்றில் அடைத்து வைக்கும்படியும் //
என்னா ஒரு வில்லத்தனம்.... அத அவன் போறதுக்கு முன்னாடியே செஞ்சிட்டு போயிருக்கலாமே :) கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம் தேவைதானா
// 50 வருடங்களின் பின், தன் இறுதிக்காலத்தில், அவை குறித்த நினைவுகளை அவன் மனதிற்கு நெருக்கமான ஒருத்தியுடன் கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதாகவே கதை ஆரம்பமாகிறது //
நிகழ்கால நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுவதை விட இப்படி இறந்த காலை நினைவுகளை நினைவு கூறும் பாணியில் தான் ஒரு நொயிர் வகை உணர்வு வரும் என்பதில் சந்தேகம் உண்டா.... கதாசிரியர் அவ்விசயத்தில் எந்த குறையும் வைக்கவில்லை போலிருக்கிறது.
அருமையான ஒரு காமிக் தொடரை பற்றி அறிமுகம் பிரமாதம். சித்திரங்கள் மட்டும் கதை சொல்லும் பாணி பிரமிக்க செய்கிறது... ப்ரான்ஸ் நாட்டு கலைஞர்களின் கலையார்வம் அவர்கள் சொல்நடையிலும், ஓவியத்திறமையிலும் சிறப்பாக வடிவமைப்பு பெறுவது இது முதல் முறை அல்லவே.... சினிபுக் இந்த தொடரை வெளியிட போகிறார்கள் என்று அவர்கள் தளம் மூலம் அறிந்து கொண்ட போது, அட்டைபடங்களை வைத்து ஓரளவு சிறப்பான தொடராக தான் இருக்கும் என்று எண்ணி கொண்டேன். இப்போது தங்கள் விமர்சனம் மூலம் சினிபுக் மீண்டும் ஒரு முறை ஒரு சிறந்த தேர்வை ஆங்கில ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய போகிறது என்று நிம்மதி கிடைத்தது... ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
நண்பர் ஜோஷ்: தமிழில் வந்ததாக தாங்கள் கூறும் அந்த கடற்கொள்ளைக்காரன் படம் எம்ஜிஆர் நடித்தது மட்டும்தானே... இல்லை வேறு ஏதாவது ஒன்றா....
நண்பர் ரமேஷ்.... சினிபுக் எப்போதும் குறைந்த விலையில் தான் புத்தகங்களை இந்தியாவில் விற்பனை செய்வது தாங்கள் அறியாததா ?
நண்பரே கதையும் படமும் மிகவும் அருமை.
ReplyDeleteHi,
ReplyDeletevery nice post. The picture are really good.
U can download this comics in the below link.
http://rapidshare.com/files/332086203/Long_John_Silver_01_-_Lady_Vivian_Hastings.rar
but not in English.
Thankx & Bye,.. Keep posting!!!!!!!!!!!!!
காதலரே - - இப்போது தான் படித்தேன்.
ReplyDeleteஅட்டைப்படங்களைத்தான் முதலில் பார்த்தேன். பட்டையைக் கிளப்பி, உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன அவை. வாரே வாஹ் !!
மட்டுமல்லாது, இப்போதே இந்தக் காமிக்குகள் எனக்கு வேண்டும்.. இவற்றைப் படிக்காது இனிமேல் இருக்க முடியும் என்று எனக்குத் தோணவில்லை ;-(
ஆனால் ஆங்கிலத்தில் இன்னும் வரவில்லையே !! :’-(
மிக மிக அற்புதமான விவரிப்பு. . அசந்தே போய் விட்டேன் . . அதனாலேயே உங்களுக்கு இக்கதைகள் எப்படிப் பிடித்துப்போயினவென்று அறிய முடிந்தது..
உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமையானவை என்றாலும், கடந்த காலங்களில் எனது மனதைக் கொள்ளை கொண்டுவிட்ட பதிவு இது என்று முழுமனதுடன் சந்தோஷமாகக் கூறுவேன். .
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அட்டகாசம் !!!!!
@ விஸ்வா - அருமை ! பைகோ க்ளாஸிக்ஸை என்னாலுமே மறக்க இயலாது. அதில் ஹௌண்ட் ஆஃப் பேஸ்கர்வில்லைப் படித்துப் பயந்தது நன்றாக நினைவிருக்கிறது.. எனது ஷெர்லாக் ஹோம்ஸ் பதிவிலும் பைகோவை நினைவு கூர்ந்திருக்கிறேன்.
ட்ரெஷர் ஐலாண்ட், கிட்னாப்பெட், டாம் சாயர் (பைகோவின் முதல் வெளியீடு என நினைக்கிறேன்), ஸெண்டாவின் கைதி, ரோமியோ அண்ட் ஜூலியட், இரும்பு முகமூடி மனிதன் (மேன் இன் த ஐயர்ன் மாஸ்க்), க்ரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் போன்றவை நான் பைகோவில் படித்து மகிழ்ந்த மற்ற வெளியீடுகள். அது நிறுத்தப்பட்டது எனக்குப் பெரிய வருத்தம் :’-(
மறுபடியும் சேம் பின்ச் ! நம் இருவரின் விருப்பங்களும் குழந்தைப் பருவத்தில் ஒருமித்தே இருந்துள்ளன என்று அறிய இன்னொரு உதாரணம் இது... சூப்பர் !!
விஸ்வா, நீங்கள் சொல்வது உண்மையே. எல்லாவகையிலும் மனதை திருப்தி செய்யும் வகையில் இந்த ஆல்பங்கள் இருக்கின்றன. பைலோ கிளாசிக் கதைகளை உங்கள் நேர வசதிப்படி அறிமுகம் செய்து வைத்திடுங்கள். நண்பர் கருந்தேளும் அதன் தீவிர வாசகராக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் சிபி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ஜோஸ், இன்று இப்புத்தகம் உங்கள் கையில் இருக்கும் என்று நம்புகிறேன். நூலகரை மிரட்டி மற்றப் பாகங்களையும் தருவித்து விடுங்கள் :) கடற்கொள்ளைக்காரன் படம் ஒரு லெஜண்ட் என்பதில் சந்தேகமில்லை. கடற்கொள்ளைக்காரன் ஒருவனின் எண்ட்ரி ஆக்சன் காட்சியை இன்று எழுதி முடித்தேன் :) கதை தொடரும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் பின்னோக்கி, மிக்க நன்றி.
நண்பர் ரமேஷ், சினிபுக் குறைந்த விலையில் கிடைக்காது என்பது உண்மை. ஆனால் தற்போதைக்கு வேறுவழிகள் ஏதும் இல்லையே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ரஃபிக், சினிபுக் நல்ல தெரிவுகளை செய்வது அதன் ரசிகர்களிற்கு விருந்துதானே. மேலும் வேறு ஒருவர் வழியாக கதையைக் கூறிச் செல்லும் உத்தி, கதையின் பிரதான பாத்திரம் குறித்து வாச்கர்களின் எண்ணங்களை அலைபாயச் செய்வதற்கும் உதவும். இங்கு லாங் ஜான் சில்வரின் நிலை என்னவென்று வாசகன் முன்பே கணிக்கக் கூடிய ஒரு வாய்ப்பிருக்கிறது. எனவே முடிவு அதிகம் அவர்களை ஏமாற்றாது :))தங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் கீதப்பிரியன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
அனானி அன்பரே, கருத்துக்களிற்கும், தாங்கள் வழங்கியிருக்கும் சுட்டிக்கும் நன்றி.
நண்பர் கருந்தேள், இன்னமும் சிலகாலங்கள் பொறுத்தால் இவற்றை நீங்கள் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.