பரந்து விரிந்த பெர்ஷிய ராஜ்ஜியத்தை திறம்பட ஆட்சி செய்து வருகிறான் நீதி வழுவாத மன்னன் ஸாரமான். பெர்ஷிய மன்னன் ஸாரமானிற்கு டஸ், கார்சவி, தஸ்டான் [Jake Gyllenhal] எனும் மூன்று மைந்தர்கள் இருக்கிறார்கள். இதில் தஸ்டான் பெர்ஷிய மன்னனின் வளர்ப்பு மகன் ஆவான்.
பெர்ஷிய ராஜ்ஜியத்தின் எல்லையில் அலமுத் எனும் நகர் அமைந்திருக்கிறது. காலகாலமாக இந்நகரம் ஒரு புனித நகரமாக கருதப்பட்டு வருகிறது. புனித நகர் மீது போர் தொடுத்த களங்கம் தன்னை வந்து சேரக் கூடாது என விரும்பும் மன்னன் ஸாரமான், பேச்சுவார்த்தைகள் வழியாக அலமுத் நகரை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர விரும்புகிறான். இதற்காக தன் கூடப் பிறந்த தம்பியான நிஸாமை [Ben Kingsley], தன் மூன்று மகன்களுடனும், சேனைகளுடனும் அலமுத் நகரை நோக்கி அனுப்பி வைக்கிறான் அவன்.
பெர்ஷிய மன்னனின் சேனை அலமுத் நகரை நெருங்கிய வேளையில் தனது சித்தப்பா நிஸாமின் ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு, அலமுத் நகர அதிகாரத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது அந்நகரை தன் சேனைகளைக் கொண்டு தாக்கிக் கைப்பற்றுவது எனும் முடிவிற்கு வருகிறான் ஸாரமான் மன்னனின் மூத்த மகனான டஸ்.
இந்த முடிவினால் அலமுத் நகரின் மீதான தாக்குதல் ஆரம்பமாகிறது. அரச சேனைகளுடன் கலந்து போரிடாமல், பிறிதொரு வழியால் தன் குழுவினருடன் தந்திரமாக அலமுத் கோட்டைக்குள் புகுந்து, பெர்ஷிய படைகள் அலமுத் நகரினுள் நுழைவதற்கான வழியொன்றை ஏற்படுத்தி தருகிறான் தஸ்டான். இதனால் நீண்ட யுத்தம் ஒன்றினால் ஏற்படக்கூடிய உயிரழப்புக்கள் தவிர்க்கப்படுகின்றன.
அலமுத் நகரிற்குள் பெர்சியப் படைகள் நுழையும் சமயத்தில், அந்நகரின் இளவரசியான தமின்னா [Jemma Arterton], அலமுத் நகரில் மிகவும் புனிதமான பொருளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு அபூர்வ சக்தி பொருந்திய குறுவாளை தீயவர்களின் கைகளிற்குள் சிக்கிவிடாது நகரை விட்டு ரகசியமாக வெளியேற்றி விட முயல்கிறாள்.
துரதிர்ஷ்டவசமாக இக்குறுவாளை தஸ்டான் ஒரு மோதலின்போது தனதாக்கிக் கொள்கிறான். அலமுத் இளவரசி தமின்னாவும் பெர்சிய வீரர்களால் பிடிக்கப்படுகிறாள். இளவரசி தமின்னாவின் அழகில் மயங்கும் முடிக்குரிய இளவரசன் டஸ், இளவரசியை தன் மனைவியாக்கி கொள்ளப் போவதாக அறிவிக்கிறான்.
அலமுத் நகரை தன் சேனைகள் மோதல் மூலம் கைப்பற்றியதை அறிந்து கொள்ளும் மன்னன் ஸாரமான் கோபத்துடன் அலமுத் நகரை வந்தடைகிறான். வன்முறையைப் பிரயோகித்து புனித நகரை டஸ் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்ததை கண்டிக்கிறான் மன்னன் ஸாரமான். அலமுத் நகரம் பெர்ஷிய ராஜ்ஜியத்தின் எதிரிகளிற்கு ஆயுதம் தந்து உதவியது என்பதை தான் ஆதாரங்களுடன் நிரூபிப்பதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு அலமுத் நகரை விட்டு கிளம்புகிறான் இளவரசன் டஸ்.
அலமுத் நகரை விட்டு இளவரசன் டஸ் நீங்கிச் செல்லும் முன், தஸ்டானை அவன் சந்திக்கிறான். அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மேலங்கியை தஸ்டானிடம் தரும் இளவரசன் டஸ், அந்த மேலங்கியை தன் தந்தைக்கு தஸ்டான் பரிசாக வழங்க வேண்டும் என வேண்டுகிறான். தந்தை ஸாரமான் மகிழ்ந்திருக்கும் வேளையில் இளவரசி தமின்னாவுடனான தன் திருமண விடயம் குறித்து நயமாகப் பேசி அவரின் சம்மதத்தை தஸ்டான் வெல்ல வேண்டும் எனவும் டஸ் கேட்டுக் கொள்கிறான்.
இளவரசன் டஸ் நகரை விட்டு நீங்கியபின், தன் வளர்ப்புத் தந்தையான மன்னன் ஸாரமானை சென்று பார்த்து தன் மரியாதைகளைச் செலுத்துகிறான் தஸ்டான். டஸ் தன்னிடம் தந்த அழகான மேலங்கியையும் அவரிற்கு பரிசாக வழங்குகிறான். மன்னரும் மகிழ்ச்சியுற்றவராக அழகான அந்த மேலங்கியை உடனே அணிந்து கொள்கிறார். தக்க தருணத்தில் மன்னரிடம் டஸ்ஸின் திருமண விடயம் குறித்து பேச ஆரம்பிக்கிறான் தஸ்டான். சற்று சிந்தனையில் ஆழும் மன்னன் ஸாரமான், டஸ்ஸிற்கு ஏற்கனவே மனைவி இருப்பதால் அழகான இளவரசி தமின்னாவை தஸ்டானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவாகக் கூறி விடுகிறார்.
இவ்வேளையில் மன்னன் அணிந்திருந்த அழகான மேலங்கி புகைய ஆரம்பிக்கிறது. மேலங்கியில் ரகசியமாகத் தடவப்பட்டிருந்த கொடிய விஷம் மன்னன் ஸாரமானைக் கொல்ல ஆரம்பிக்கிறது. உடல் எரிந்து பரிதாபமாக இறந்து போகிறான் மன்னன் ஸாரமான்.
மன்னரிற்கு மேலங்கியை பரிசாக வழங்கிய தஸ்டானே கொலைகாரன் என அங்கிருப்போர் யாவரும் முடிவிற்கு வந்து தஸ்டானை கைது செய்து தண்டிக்க விரும்புகிறார்கள். ஆனால் தஸ்டானோ அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறான். இந்தக் குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தஸ்டானுடன் சேர்ந்து நழுவுகிறாள் இளவரசி தமின்னா. தஸ்டான் அலமுத் நகரிலிருந்து பாதுகாப்பாக தப்பி செல்வதற்கு தான் உதவுவதாக தமின்னா தஸ்டானிடம் கூறுகிறாள். தஸ்டானும், தமின்னாவும் சேர்ந்து வெற்றிகரமாக அலமுத் நகரை விட்டு தப்பிச் செல்கிறார்கள்.
தந்தையின் இறப்பின் பின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் டஸ். தப்பிச் சென்றுவிட்ட தஸ்டானையும், தமின்னாவையும் பிடித்து வர இளவரசன் கார்சவி தலைமையில் ஒரு குழு கிளம்புகிறது.
தன் தந்தையின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க விரும்புகிறான் தஸ்டான். தஸ்டானின் இடையில் நைச்சியமாக குந்தியிருக்கும் மந்திரக் குறுவாளை எவ்வழியிலாவது கைப்பற்றி அதனை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறாள் இளவரசி தமின்னா. ஆனால் அந்த மந்திரக் குறுவாளை தன் ஆசைக் கனவை தீர்த்துக் கொள்வதற்காக அடைய விரும்புகிறான் இன்னொருவன். இதற்காக மிகவும் தேர்ந்த கொலையாளிகளை அவன் தஸ்டான், தமின்னா ஆகியோரைத் தேடிச் செல்ல ஏவுகிறான். இவர்களின் விருப்பங்கள் நிறைவேறியதா? அந்த குறுவாளில் மறைந்திருக்கும் அபூர்வ சக்திதான் என்ன?
வீடியோ கேம் ஏரியாவில் மிகவும் பிரபலம் பெற்ற, உலகெங்கும் ரசிகர்களை வென்ற கேம்களில் ஒன்றுதான் Prince of Persia. அதனை வெள்ளித் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Mike Newell. மந்திரம், மாயம், ஆக்ஷன், காதல், காமெடி எனும் கலவையுடன் கதையை நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆனால் அதில் அவர் முழுமையான வெற்றி காணவில்லை என்பது வேதனையானது.
படத்தின் நாயகனாக, தஸ்டான் வேடம் ஏற்றிருக்கும் நடிகர் ஜேக் ஜிலென்ஹால் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்திருப்பவர். ஒரு சாகசக் கதாநாயகனாக இப்படத்தில் அவரின் உருமாற்றம் அதிகம் ஏமாற்றத்தை தரவில்லை. எந்தக் கட்டுகளுமின்றி, பெர்ஷியன் தெருக்களில் பாய்ந்து திரியும் ஜாலியான ஒரு இளவரசனாக அறிமுகமாகும் அவர், பின் தான் நிரபாரதி என்பதை நிரூபிக்க தப்பி ஓடும் போது, குறும்பு, ஆக்ஷன், எனச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அவரின் கட்டு மஸ்தான இளமை அவரிற்கு பக்கபலமாக நின்றாலும் காதல் காட்சிகளில் அவர் அதிகம் சோபிக்கவில்லை. இளவரசி தமின்னாவின் ஓயாத வாய்க்கு [வெரி நைஸ் வாய்] அவர் ஈடு கொடுப்பது அழகு. ஜேக் ஜிலென்ஹாலிடம் இப்போது இதற்குமேல் எதிர்பார்க்க கூடாது. முடியாது.[ ஜேக்கை, ஜெம்மாவிற்கு ஒரே ஒரு முத்தம் தர- அதுவும் லேசான- அனுமதித்த இயக்குனரிற்கு என் மனதார்ந்த நன்றிகள்]
திரைப்படத்தில் என்னைப் போன்ற ஜொள்ளு ஒட்டகங்கள் அதிகம் எதிர்பார்த்து சென்றது இளவரசி தமின்னாவாக வரும் செல்லக்குட்டி, வெல்லக் கட்டி ஜெம்மா ஆர்தெர்டெனை. அந்தோ!!! பெர்ஷிய சூரியனின் கதிர்கள் தடவியதால் சிவந்த ஜெம்மாவின் வதனம் மட்டும் அழகாக இருக்கிறது. மற்ற அயிட்டங்களைக் காட்டினால்தானே பார்ப்பதற்கு. முழுமையாக போர்த்திக் கொண்டு திரிகிறார் ஜெம்மா. துணிகளும் சற்றுத் தடிப்பான துணிகளாக இருந்து தொலைக்கின்றன. எவ்வளவு நேரம்தான் முகத்தை மட்டுமே பார்ப்பது. இருப்பினும் தன் அழகான யெளவனத்தாலும், துடுக்குத்தனமான நடிப்பாலும், வா டார்லிங், வா வந்து கவ்வு என அழைப்பு விடுக்கும் அந்த உன்னதமான மேலுதட்டாலும் ஜொள்ளு ஒட்டகங்களின் இதயத்தில் சிறு ஓட்டை போட்டு விடுகிறார் ஜெம்மா பேபி.
படத்தில் இடம்பெறாத ஜெம்மாவின் ஸ்டில் ஒன்று ஜொள்ளு ஒட்டகங்கள் சார்பில் இங்கு இணைக்கப்படுகிறது[ ஜெம்மாவின் சகோதரனே என ஆரம்பிக்கும் உங்கள் மேலான பின்னூட்டங்களைப் பதிந்து எனக்கு இதய வலி வரப் பண்ணாதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்]
திரைப்படத்தில் நகைச்சுவைக்காக அடிமை வியாபாரி மற்றும் தீக்கோழி ரேஸ் நடத்தும் ஷேக் அமர் பாத்திரம் இடம் பெற்றிருக்கிறது. ரசிகர்களை ஒரளவு அவர் சிரிக்க வைக்கிறார். பெரிய வாளாக இருந்தால் அது சின்னதாக என்ற ஜோக் சிறுவர்களின் நகைச்சுவை உணர்வு வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது. ஷேக் அமரின் ஆபிரிக்க நண்பனாக வரும் குறுவாள் வீச்சு வல்லுனர் திரைப்படத்தின் இறுதித் தருணங்களில் மனதை தொட்டு விடுகிறார். பென் கிங்ஸ்லி நடிப்புக் குறித்து எழுத என்னிடம் எதுவுமே இல்லை. ஆனால் அவரின் கண் மை செம அழகு.
மாயம், மந்திரம், ஆக்ஷன் எனக் கலக்கியிருக்க வேண்டிய திரைக்கதையில் அவற்றின் அளவும், தரமும் குறைந்தே காணப்படுகின்றது. அலமுத் நகரைக் கைப்பற்றும் காட்சிகளில் இருந்த விறுவிறுப்பு, நகைச்சுவை, ஆக்ஷன் என்பன தொடரும் திரைக்கதையில் காணமல் போய்விடுகிறது. எனவே சலிப்பு மெல்ல தன் முகத்தைக் காட்டிவிடுகிறது.
மிகக் கொடூரமானவர்களும், வல்லவர்களுமான ஹஸஸின்கள் குழுவானது, தஸ்டானையும், மந்திரக் குறுவாளையும் தேடி வரும் சமயங்களில் ரசிகர்கள் மனதில் உருவாகும் எதிர்பார்ப்பு அவர்கள் நேரில் மோதிக் கொள்ளும் போது நசிந்து போகிறது. ஆக்ஷன் காட்சிகள் வலிமை வாய்ந்தவையாக இல்லை என்பது ஒரு குறையே. கூரை விட்டு கூரைகள் பாய்ந்து ஓடும் ஆக்ஷன் காட்சிகளை இன்னமும் எத்தனை படங்களில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் ஹஸஸின் குழுவின் மந்திரத்திற்குள் கட்டுப்பட்ட பாம்புகள் தஸ்டானை தாக்கும் காட்சி திகில் ரகம்.
திரைக்கதையில் மாயம், மந்திரம் இருப்பதால் காதில் பூச்செடி வைக்கும் உணர்வைத் தரக்கூடிய இறுதிக் காட்சிகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. உச்சக்கட்டக் காட்சி கூட சுமார் ரகமே. இந்தப் பெர்ஷிய இளவரசனில் கொஞ்சம் கவர்ச்சியிருக்கிறது. ஆனால் ரசிகர்களின் ராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்கு அது மட்டும் போதாதே. [**]
ட்ரெயிலர்