Tango [Don Cheadle], போதைப் பொருள் விற்பனைக் கோஷ்டிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, அக்கோஷ்டிகளிற்கு மத்தியிலேயே தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு பொலிஸ் அதிகாரி. போதைப் பொருள் கும்பல்களின் மத்தியில் தன் பொலிஸ் பணிக்காக அவன் வாழ்ந்து வரும் அபாயமான ரகசிய வாழ்க்கை மீதான அவன் வெறுப்பு, நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்புகிறான் அவன். ஆனால் அவன் மேலதிகாரியோ டாங்கோவிடமிருந்து மேலும் மேலும் பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறான். டாங்கோ பதிலுக்கு தன் பதவியை உயர்த்தும்படி தன் மேலதிகாரியை அழுத்துகிறான். போதைப் பொருள் விற்பனைக் கோஷ்டி ஒன்றின் தலைவனும், டாங்கோவின் நண்பனுமாகிய Caz [Wesley Snipes] ஐ பொலிஸிடம் வகையாகச் சிக்க வைப்பதற்கு டாங்கோ உதவினால் அவனிற்கு பதவி உயர்வு நிச்சயம் என உறுதியளிக்கிறான் டாங்கோவின் மேலதிகாரி…
Sal [Ethan Hawke], பொலிஸ் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரிபவன். பொலிஸ் பணியால் அவனிற்கு கிடைக்கும் சொற்ப வருமானம் அவன் குடும்பத்தைக் காப்பாற்றவே போதாத நிலையில், தன் மனைவிக்கும், குழந்தைகளிற்கும் வசதியான வீடொன்றை வழங்க விரும்புகிறான் ஸல். இதற்கான பணத்தை எவ்வகையிலும் அடைந்துவிடத் துடிக்கும் ஸல், போதைப் பொருள் ரெய்டு நடக்கும் இடங்களில் கண்டெடுக்கப்படக்கூடிய பணத்தை யாரிற்கும் தெரியாமல் அபகரிக்க திட்டம் போடுகிறான்…
Eddie [Richard Gere], பொலிஸ் சேவையில் இருபத்தி இரண்டு வருடங்களை எந்தவித சிராய்ப்புக்களுமின்றி கடந்து வந்தவன். காலையில் காப்பிக்கு பதிலாக மதுவை அருந்துபவன். அவனது பொலிஸ் சேவையில் சொல்லிக் கொள்ளும்படியாக அவன் சாதித்தது எதுவுமில்லை. தனது சகாக்களின் கிண்டல்களை அமைதியாக விழுங்கிக் கொள்பவன். விலைமாது ஒருத்தியின் அணைப்பில் அன்பைத் தேடுபவன். அவன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதற்கு இன்னமும் ஒரு வாரம் இருக்கையில், நகரின் அபாயமான பகுதிகளில் தகுந்த வகையில் பணியாற்றுவதற்கு புதிய பொலிஸ் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் பொறுப்பு அவன்மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. இதேவேளை தான் பணி புரியும் பொலிஸ் நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் காணாமல் போன அறிவிப்பும் எடியின் கண் பார்வையில் விழுகிறது…
புரூக்ளின் நகரில், மிகவும் அபாயகரமான பகுதி எனக் கருதப்படும் 65 வது வலயத்தில் இந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தம் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்….
கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை, விபச்சாரம் போன்ற குற்றச் செயல்களிற்கு மத்தியில், தம் பணியில் சிதறும் மூன்று பொலிஸ் அதிகாரிகளின் கதையை இயல்பான வகையில் கூற முயல்கிறது Brooklyn’s Finest எனும் இத்திரைப்படம். அழுத்தங்களையும், அபாயங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டிய பொலிஸ் பணியுடனும், தங்கள் கைகளை விட்டு வேகமாக நழுவி ஓடிவிட்ட வாழ்க்கையுடனும் இந்த மூன்று மனிதர்களும் நிகழ்த்தும் ஓயாத போராட்டத்தை விபரிக்கிறது கதை.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் மத்தியில் அவர்களில் ஒருவனாக கலந்திருக்கும் டாங்கோ. தன் பணியின் அழுத்தம் தாளாது அதிலிருந்து விடுபட ஏங்குபவன். தனது மேலதிகாரியிடம் தன் வாழ்க்கையை தன்னிடம் திருப்பித் தரும்படி வேண்டுபவன். கடத்தல் கும்பலில் தன்னோடு மிகவும் நெருங்கி விட்ட காஸை முதுகில் குத்த விரும்பாதவன். எதற்கும் அஞ்சாத ரவுடிகளின் முன்பு மன உறுதியுடன் நிமிர்ந்து நிற்பவன். இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் டான் சீடேல் அதனை மிகவும் இயல்பாக செய்திருக்கிறார்.
நண்பன் காஸிற்கு துரோகம் இழைப்பதா அல்லது தன் பதவி உயர்வா என மனதினுள் திணறும் தருணங்களிலும், தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதை வலியுடன் ஏற்றுக் கொள்ளும் கணத்திலும், தன் மேலதிகாரிகளுடன் ஆக்ரோஷமாக வெடிக்கும் சமயங்களிலும் நடிகர் டான் சீடேலின் திறமை அழகாக வெளிப்படுகிறது. திரைப்படத்தின் முன்பகுதியில் சற்று பின்னால் தள்ளப்பட்டது போன்ற உணர்வைத் தரும் டான் சீடேலின் பாத்திரம், உச்சக்கட்டக் காட்சியில் விட்டதை எட்டிப் பிடிக்கிறது [இரும்பு மனிதனில் விட்டதையும்தான்]. டான் சீடேலின் நண்பனாக வரும் கடத்தல் கும்பல் தலைவன் காஸ் வேடமேற்றிருக்கும் வெஸ்லி சினைப்ஸ் கூட தன் வழமையான அலம்பல்களை தள்ளி வைத்துவிட்டு வித்தியாசமான ஒரு பாத்திரமாக கதையில் உருப்பெற்றிருக்கிறார்.
தனது அன்பான குழந்தைகள், கர்ப்பமுற்றிருக்கும் மனைவி, இவர்களைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு உதவாத அவன் சம்பளம். இருப்பினும் ஒரு பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்திற்கு நல்லதொரு வாழ்க்கையை எவ்வகையிலும் வழங்கிட வேண்டுமென நிலை கொள்ளாது ஓடும் மனிதனாக ஸல்.
ஸல்லிற்கு திரையில் உயிர் தருகிறார் நடிகர் ஏதன் ஹாக். தனது குடும்பத்தின் நலனிற்காக கொலை செய்வதற்குக்கூட தயங்காத ஸல், தான் ஆற்றும் செயல்கள் வழங்கும் குற்றவுணர்வில் அமிழ்ந்து தொலைபவன். தந்தை, கணவன், பொலிஸ் என ஒவ்வொரு கடமையிலும் தோல்வி தன்னை அடித்து வீழ்த்துவதை உணர்பவன். போதைப்பொருள் கோஷ்டிகளின் பணத்தை அபகரிக்க முயன்று தோற்கும் போதெல்லாம் அவன் வாழ்க்கை அவனை நோக்கி திருப்பும் அழுத்தங்களில் அவன் உடைந்து உருமாறுகிறான். நடிகர் ஏதன் ஹாக் இந்தப் பாத்திரத்தின் உணர்வுகளையும், அழுத்தங்களையும், உருமாற்றத்தையும் மிகையின்றி அற்புதமாக உணர வைக்கிறார். தான் செய்யும் செயல்களை தனக்குள்ளே நியாயப்படுத்தி அல்லலுறும் பாத்திரமாக அவரின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. திரைப்படத்தில் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்களில் முதலிடம் பிடிக்கிறார் ஏதன் ஹாக்.
பணியில் இருந்தாலும் தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பாது வெறுமையாக விட்டிருக்கும் பொலிஸ் அதிகாரி எடியாக ரிச்சர்ட் கீய்யர். தனது வாழ்வின் வெறுமையை கணம்தோறும் சுவைக்கும் எடி, அதிலிருந்து விடுபட முயலும்போது அவனிற்கு துணையாவது மது, விலைமாது மற்றும் தற்கொலை முயற்சி. தன் மன அழுத்தங்களை வெளித்திறந்து விடும் வாசலாக விலைமாதுவின் வாய்ப்புணர்ச்சி அவனிற்கு அமைகிறது.
இருபத்தியிரண்டு வருட பொலிஸ் சேவையில் தன் வாழ்வின் முழு அர்த்தங்களையும் தொலைத்து விட்ட எடி, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பாக புதிதாய் பிறக்க விரும்புகிறான். நீண்ட நாட்களின் பின் கலைஞர் ரிச்சர்ட் கீய்யரின் பக்குவமான, சாந்தமான நடிப்புத் திறன் எடி பாத்திரம் வழியாக திரையில் பார்வையாளனோடு கை குலுக்கிக் கொள்கிறது.
பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அவரின் பொலிஸ் பட்ஜ் குப்பைபோல் தூக்கி எறியப்படும் வேளையிலும், தான் நேசிக்கும் விலைமாது தன்னுடன் வாழ மறுத்துவிடும் போதும், மேலதிகாரிகள் பொய் சாட்சி சொல்ல தூண்டும்போது அதனை பிடிவாதமாக எதிர்க்கும்போதும் அமைதியாக அசத்திக் காட்டுகிறார் ரிச்சர்ட் கீய்யர். இறுதியில் எடி பாத்திரத்திற்கு கிடைக்கும் திருப்பம் அருமை.
போதைப் பொருள் கோஷ்டிகளின் நடவடிக்கைகள், அவர்கள் மீதான பொலிஸ் ரெய்டுகள், புரூக்ளின் தெருக்களில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் என பரபரப்பான காட்சிகள் இருந்தாலும் திரைப்படம் நிதானமான ஒரு வேகத்திலேயே நகர்கிறது. அதிரடி ஆக்ஷன்களையும், வற்புறுத்தி திணிக்கப்படும் பரபரப்புகளையும் தவிர்த்து இயலுமானவரை மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் பணியிலும், வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் நம்பத்தகுந்த நிகழ்வுகளுடன் கதை பயணிக்கிறது. படத்தின் உரையாடல்கள் பல தருணங்களில் எளிதாக இதயங்களை தொட்டு விடுகின்றன.
திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் புரூக்ளினின் ஒரு சூடான பகுதிக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகளையும் வெவ்வேறு நோக்கங்களிற்காக இட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கைகள் போலவே அப்பகுதியில் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் அந்த மனிதர்கள் சந்திக்கும் முடிவுகள் பார்வையாளனை அதிர வைக்கும் தன்மை கொண்டவையாக அமைந்திருக்கின்றன.
லிப்டுகள், இருண்ட வாராந்தாக்கள், மறைவிடங்கள் என ஒவ்வொரு பாத்திரத்தினதும் பயணத்தையும் காட்சி காட்சியாக மாற்றிக் காட்டி அக்காட்சிகளில் வாழ்ந்திருக்கும் இருளை ரசிகனிடம் வெற்றிகரமாக எடுத்து வருகிறார் இயக்குனர். அந்த உறுதியான, சஸ்பென்ஸ் நிறைந்த உச்சக்கட்டக் காட்சிகள் ரசிகர்களை தம் வலிமையான பிடிக்குள் இறுகப் பற்றிக் கொள்கின்றன. இயக்குனரின் திறமை முத்திரையையும் திரையில் பதித்துச் செல்கின்றன.
பொலிஸ் துறையின் வெற்றிப்பதக்கங்களை தவிர்த்து, அத்துறையின் சேவையில் தம்மைக் கரைத்து அழிந்துபோகும் மனிதர்களின் கதையை திரைக்கு சிறப்பான முறையில் எடுத்து வந்திருக்கிறார் Training Day திரைப்படம் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் Antoine Fuqua. ட்ரெயினிங் டே திரைப்படத்தின் வேகமும், காரமும் இப்படத்தில் இல்லாது போனாலும் கூட Brooklyn’s Finest நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டிய நல்லதொரு த்ரில்லர் நுவார். [***]
ட்ரெயிலர்
me the 1st
ReplyDeleteகாதலரே,அருமையான கதை,அற்புதமான நடிகர்களை கொண்ட, நடைமுறை வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களைப் பற்றிய கதை...அப்படி தானே.ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு மனப் போராட்டத்தில்....
ReplyDeleteவெற்று துப்பாக்கி என்பதை பார்த்த உடன் படம் தேறாதோ என்று எண்ணினேன்...இல்லை என்று தெரிகிறது....
விமர்சனம் அருமை காதலரே. அவசியம் பார்க்க வேண்டும்.
ReplyDelete//லிப்டுகள், இருண்ட வாராந்தாக்கள், மறைவிடங்கள் என ஒவ்வொரு பாத்திரத்தினதும் பயணத்தையும் காட்சி காட்சியாக மாற்றிக் காட்டி அக்காட்சிகளில் வாழ்ந்திருக்கும் இருளை ரசிகனிடம் வெற்றிகரமாக எடுத்து வருகிறார் இயக்குனர். //
ReplyDeleteஅருமை...
// போதைப் பொருள் கோஷ்டிகளின் நடவடிக்கைகள், அவர்கள் மீதான பொலிஸ் ரெய்டுகள், புரூக்ளின் தெருக்களில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் என பரபரப்பான காட்சிகள் இருந்தாலும் திரைப்படம் நிதானமான ஒரு வேகத்திலேயே நகர்கிறது. அதிரடி ஆக்ஷன்களையும், வற்புறுத்தி திணிக்கப்படும் பரபரப்புகளையும் தவிர்த்து இயலுமானவரை மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தங்கள் பணியிலும், வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் நம்பத்தகுந்த நிகழ்வுகளுடன் கதை பயணிக்கிறது //
ReplyDeleteஎதெது சமிபத்துல போக்கிரி படம் பார்த்த மாதிரி தோணுது
இம் மாதத்தின் அடுத்த பதிவு ஒரு காமிக்ஸ் ஆக இருக்கலாமே !!!
படங்களின் மேலே எழுதியிருக்கிற கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு.. :) நல்ல பகிர்வு.. இதுக்கு முன்னாடி நான் Training Day பார்த்துட்டு வந்துடறேன்..
ReplyDeleteஏற்கனவே டவுன்லோடு பன்னிட்டு பார்க்காம வெச்சுருக்கற படம் இது. உங்க விமர்சனத்த பார்த்த உடனே கண்டிப்பா பார்கனும்னு நினைக்கறேன். நன்றி.
ReplyDeleteபோங்க காதலரே,
ReplyDeleteபோங்கு ஆட்டம் இது. சரியாக நான் ஒரு மீட்டிங்கில் இருக்கும் நேரத்தில் பதிவிட்டால் எப்புடி நாங்க வந்த மீ த பரஸ்ட் போடுவதாம்?
ஆகையால், மீ தி எட்டாவது.
என்ன ஸ்டார் காஸ்ட் இது? அதுவும் என்னோட ஆல் டைம் பேவரிட் ரிச்சர்ட் கியர் வேற, சொல்லவா வேணும்? அட்டகாசமா இருக்கும்.
ReplyDeleteகண்டிப்பாக பார்த்துவிடுவேன்.
ரிச்சர்ட் கியர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ரன் அவே ப்ரைட் பாருங்கள் - என்ன ஒரு நான்ச்சலன்ட் ஏக்டிங். வாஹ்ரே வா. அவருடைய படங்கள் எதையும் நான் மிஸ் செய்வதே கிடையாது. வெயிட் செய்து பார்த்துவிடுவேன். லெட் அஸ் வாட்ச் இட் பேபி (காதலர் ஸ்டைல்).
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteநீங்கள் பார்த்த முடிவு, திருத்தப்பட்ட ஒன்றா? அல்லது பழைய முடிவேதானா? நான் டைரக்டர்ஸ் கட் வெர்ஷனில் வரும் முடிவுக்காக காத்திருக்கிறேன்.
நம்ம ஊரில் ஒரிஜினல் டிவிடி வர சற்று நேரமாகிறது. அதான்.
காதலரே,
ReplyDeleteஇவரின் ட்ரைனிங் டே படத்தை விட டியர்ஸ் ஆப் தி சன் சூப்பர் ஆக இருக்கும். கிங் ஆர்த்தர் பட வரிசையில் இவரது படமே சிறந்ததாக கருதப்படுகிறது. என்னுடைய பேவரிட் கிங் ஆர்தர் படமும் அதே (அந்த பணியை துளைக்கும் நெருப்பு அம்பு நினைவிருக்கிறதா?).
காதலரே,
ReplyDeleteஇந்த படத்தின் இயக்குனரை என்னால் மறக்கவே முடியாது. அவரது முதல் (?) படமாகிய ரீபிளேஸ்மென்ட் கில்லர்ஸ் படத்தின் டிக்கெட்டை என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து (சுமார் பதினைந்து பேர்) தியேட்டர் வாசல் வரை சென்றுவிட்டு பின்னர் மனம் மாறி நாங்க மூவர் மட்டும் (பெங்களூரு மோசடி மோகன், இருட்டு ஹேமந்த் மற்றும் உங்கள் அபிமான கிங் விஸ்வா) வெளியே வந்து விற்றுவிட்டு காலேஜ் வந்துவிட்டோம் (நல்ல பேர் வாங்க).
அதனால் எங்க மூவருக்கு கிடைத்த பெயர் - ரீபிளேஸ்மென்ட் செல்லர்ஸ்.
பின்னர் அதே படத்தை மறுநாள் சென்று பார்த்தோம்.
காதலரே,
ReplyDeleteஇந்த படத்தின் இயக்குனரை என்னால் மறக்கவே முடியாது. அவரது முதல் (?) படமாகிய ரீபிளேஸ்மென்ட் கில்லர்ஸ் படத்தின் டிக்கெட்டை என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து (சுமார் பதினைந்து பேர்) தியேட்டர் வாசல் வரை சென்றுவிட்டு பின்னர் மனம் மாறி நாங்க மூவர் மட்டும் (பெங்களூரு மோசடி மோகன், இருட்டு ஹேமந்த் மற்றும் உங்கள் அபிமான கிங் விஸ்வா) வெளியே வந்து விற்றுவிட்டு காலேஜ் வந்துவிட்டோம் (நல்ல பேர் வாங்க).
அதனால் எங்க மூவருக்கு கிடைத்த பெயர் - ரீபிளேஸ்மென்ட் செல்லர்ஸ்.
பின்னர் அதே படத்தை மறுநாள் சென்று பார்த்தோம்.
Training Day மட்டுமே Antoine Fuqua வின் சிறந்த படைப்பு. The Replacement Killers ஒரு நல்ல ஆக்ஷன் படம். King Arthur சுமார் ரகம். அப்படியிருக்க இது Training Day வரிசையில் அவரின் சிறந்த படம் என்று சொல்லாம். நல்ல பகிர்வு காதலரே. எங்க நம்ம மணிரத்னம் பதிவு பக்கம் உங்களைக் காணோம்??
ReplyDeleteபொலிஸ் வாழ்க்கை என்றால்... விமர்சனம் சூப்பர்
ReplyDeleteஹை நண்பரே, நான் இந்த படம் பார்த்தே விட்டேன். அருமையான படம். போலீஸ் பற்றிய படங்களில் காமா சோமா படங்களை போல் அல்லாமல் இருப்பதே பெரிய ஆறுதல்.
ReplyDeleteசிறப்பான பதிவிருக்கும் பகிர்வுக்கும் நன்றி
நண்பர் சிபி, போக்கிரியை விட இது நன்றாகவிருக்கும், இம்மாதத்தில் காமிக்ஸ் பதிவு இட முடியாமைக்கு வருந்துகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஇலுமினாட்டி, அவர்களின் வாழ்க்கைதான் வெற்று துப்பாக்கி. தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சரவணக்குமார், அவசியம் பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
விஸ்வா, நீங்கள் கூறிய படங்களில் கிங் ஆர்தர் மட்டுமே பார்த்திருக்கிறேன், குளிரில் உறைந்த ஆறு ஒன்றின் மேல் நடக்கும் சண்டைக் காட்சி நினவிற்கு வருகிறது. தங்கள் காலேஜ் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்தமைக்கும், கருத்து மழைக்கும் நன்றி நண்பரே. ஓ யா இந்தப் படத்த பாருங்க பேபி:) எனக்கு சுறா டைரக்டர்ஸ் கட் பார்க்க ஆவல் வந்து விட்டது :))
நண்பர் பிரசன்னா ராசன், டென்ஸலின் பாத்திரத்தை ட்ரெயினிங் டேயில் மறக்க முடியுமா, கனகம்பீரம். மணிரத்தனம் பதிவை படித்தபின் என் கருத்துக்களை உடனே பதிய முடியவில்லை. சில நாட்கள் எனக்கு தேவைப்பட்டது. அதற்குள் உங்கள் கருத்துக்களம் சூடாகி தணிந்திருந்தது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் உதயன், தங்கள் ஆதரவிற்கு நன்றி.
நண்பர் வேல்கண்ணன், மிக்க நன்றி நண்பரே.
நண்பர் ஜெய், ட்ரெயினிங் டே என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்று. பார்த்து விட்டு பதிவு ஒன்றைப் பதிந்திடுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ராமசாமி கண்ணன், படத்தை பார்த்து ரசியுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.
ஆஹா. . . இப்பதிவையும், பிரின்ஸ் பதிவையும் டோட்டலாக மிஸ் செய்துவிட்டேனே . . நான்கு நாட்கள் நெட்டின் பக்கமே வராததனால், இந்தக் குழப்பம்.. :-(
ReplyDeleteஇப்படம் மட்டுமல்ல. . டிரைனிங் டேவும், இவரது வேறு எந்தப் படமும் நான் பார்த்திருக்கவில்லை . . இதோ ஆரம்பிக்கிறேன் வேட்டையை !!!!
நண்பர் கருந்தேள், முதலில் ட்ரெயினிங் பாருங்கள், அப்புறம் இதனைப் பாருங்கள். இரண்டும் ஒவ்வொரு ரகம். ட்ரெயினிங் டேயில் டென்ஸல் பின்னியிருப்பார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete