Tuesday, October 27, 2009

ரயில் கூரையின் பெயரற்ற கனவுகள்


மெக்ஸிகோவின் பொம்பிலா எனப்படும் சிறிய ஊர் ஒன்றில் பலம் பொருந்திய தாதா குழுவாக லா மாரா செயற்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் ஒர் அங்கத்தவனாக தன் வாழ்க்கையை கழித்து வருகிறான் கஸ்பர்(Edgar Flores) எனும் இளைஞன். பொம்பிலாவில் லா மாரவின் தலைவனாக இருக்கிறான் லில் மகோ(Tenoch Huerta Mejia). மிகவும் கொடியவனான லில் மகோ தன் குழுவில் இருப்பவர்கள் தன்னிடமிருந்து எதையும் மறைத்து வைத்திருக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறான்.

லா மாராவில் அங்கம் வகிப்பதற்கு வயது என்பது ஒர் தடையல்ல. அக்குழுவில் புதிதாக இணைந்து கொள்ளும் சிறுவன் ஸ்மைலி, கஸ்பரிற்கு நெருங்கியவனாக இருக்கிறான். லா மாரா எனும் குற்றப் பள்ளியின் புதிய மாணவ வரவு ஸ்மைலி(Kristyan Ferrer).

பொம்பிலாவிலிருந்து அமெரிக்கா எல்லையை நோக்கி செல்லும் ரயிலில்களில், அமெரிக்க நாட்டிற்குள் ரகசியமாக நுழைந்து விடுவதற்காக பயணிக்கும் வழியற்ற மக்களிடம் இருந்து வழிப்பறிகள் செய்வதும், தங்கள் எதிரிகளை தலையில் சுட்டுக் கொண்ட பின், துண்டம் துண்டமாக வெட்டி, தாம் வளர்க்கும் நாய்களிற்கு உணவாக தருவதுமாக லா மாராவில் அவர்கள் நாட்கள் நகர்கின்றன.

ஹொண்டூராஸ் நாட்டில் வசித்து வரும் இளம் பெண் சயாரா(Paulina Gaitan), அங்கு தன் எதிர்காலத்தின் வெறுமையான நிசப்தத்தை உணர்ந்து கொள்கிறாள். அமெரிக்காவிற்குள் ரகசியமாக நுழைய விரும்பும் தன் தந்தையுடனும், மாமனுடனும் அமெரிக்க எல்லையை நோக்கிய நீண்ட பயணத்தை அவள் ஆரம்பிக்கிறாள்.

தங்கள் ஊரிலிருந்து நீண்ட தூரத்தை வாழைத் தோட்டங்களினூடாக நடந்தே கடந்து வரும் அவர்கள், அமெரிக்கா எல்லையை நோக்கி செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக பொம்பிலாவை வந்து சேர்கிறார்கள். ஊரை வந்தடையும் அவர்களை காவல் துறை சோதனை எனும் பெயரில் அவர்களிடமிருக்கும் பெறுமதியான பொருட்களை அபகரிக்க பயன்படுத்திக் கொள்கிறது.

sin_nombre_020 லா மாராவின் தொடர்சியான வன்செயல்களால், தளர்வு உற்றவனாக இருக்கிறான் கஸ்பர். அவன் காதலி மட்டுமே அவன் வாழ்வின் மகிழ்வான ஒர் கணமாக அவனிற்கு இருக்கிறாள். தனக்கு ஒர் காதலி இருப்பதை அவன் மிக ரகசியமாக வைத்திருக்கிறான். லா மாராவில் ஸ்மைலியைத் தவிர இந்த விடயம் வேறு யாரிற்கும் தெரியாது அவன் பார்த்துக் கொள்கிறான். ஸ்மைலியும் கஸ்பரிற்காக இது குறித்து யாரிடமும் பேசாது இருக்கிறான்.

ஒரு மாலை கஸ்பர் தன் காதலியுடன் உரையாடிக் கொண்டு வருவதை தற்செயலாக அவ்வழியே வரும் லா மாரா குழுவினர் பார்த்து விடுகிறார்கள். இந்த தகவல் லில் மகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து லா மாராவின் கூட்டம் ஒன்றை கல்லறை ஒன்றில் ஒழுங்கு செய்யும் லில் மகோ, கஸ்பரையும், ஸ்மைலியையும் தன் குழு உறுப்பினர்களைக் கொண்டு நையப்புடைத்து தண்டிக்கிறான்.

தண்டனை முடிந்து தன் வலியையும், காயங்களையும் மெளனமான கண்ணீருடன் துடைத்துக் கொண்டிருக்கும் கஸ்பரை சந்திக்க கல்லறைக்கே வந்து சேர்ந்து விடுகிறாள் அவனது காதலி. தன் காதலியைக் கண்டு அதிர்ச்சியுறும் கஸ்பர் உடனடியாக அவளை அங்கிருந்து போகச் சொல்கிறான். ஆனால் லில் மகோ கஸ்பரின் அழகிய காதலியை கண்டு விடுகிறான்.

கஸ்பரின் காதலியை தான் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து செல்வதாக கூறுகிறான் லில் மகோ. லில் மகோவை எதிர்த்து எதுவுமே செய்யாத நிலையில் கஸ்பர் தன் காதலியை அவனுடன் அனுப்பி வைக்கிறான். செல்லும் வழியில் கஸ்பரின் காதலியின் அழகால் ஈர்க்கப்படும் லில் மகோ அவளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க அவளோ அவனை எதிர்த்துப் போராடுகிறாள். தன்னை எதிர்க்கும் அவளை லில் மகோ பலமாக உதைக்க, கீழே விழும் அவளின் தலை கல்லில் மோதி அவள் இறந்து போகிறாள்.

3934837816_58e84e9729 தன் காதலி கொலையுண்ட தகவல் அறியும் கஸ்பரின் உள்ளம் ஊமையாக உடைகிறது. வேறொரு பெண் உனக்கு கிடைப்பாள் என அவனிற்கு ஆறுதல் கூறும் லில் மகோ, மறு நாள் டொனாலா எனும் ஊரிற்கு ஒர் காரியமாக செல்ல வேண்டியிருப்பதால் ஸ்மைலியையும், கஸ்பரையும் அதற்கு தயாராக இருக்கச் சொல்கிறான்.

அமெரிக்கா நோக்கி செல்லும் ரயிலை எதிர்பார்த்து, தண்டவாளங்களிலும், கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளிலும் உறங்குகிறார்கள் சயாரா குழுவினர். அவர்களின் பதட்டமான காத்திருப்பை நிறைவேற்றுவதைப் போல் சரக்கு ரயிலொன்று ரயில் நிலையத்தை வந்தடைகிறது. தங்கள் எதிர்காலத்தையே கையில் பிடித்து விட்டாற்போல் ரயிலின் கூரைகளில் ஏறி உடகார்ந்து தங்கள் கனவுப் பயணத்திற்காக ஆயத்தமாகி விடுகிறார்கள் அந்த ரயில் நிலையத்தில் குழுமியிருந்த மக்கள்.

ரயில் தன்னை உலுக்கிக் கொண்டு கிளம்புகிறது. மெதுவாக ஓடிச்செல்லும் ரயிலில் ஓடிவந்து ஏறிக் கொள்கிறார்கள் லில் மகோ, கஸ்பர் மற்றும் ஸ்மைலி. வறுமை விளைந்து பலவீனமாக புன்னகைத்துக் கொண்டிருக்கும் பாதையை ஊடறுத்து மெதுவாக விரைகிறது ரயில். அதன் கூரையில் தங்கள் கனவுகளை பொதிகளாக சுமந்தவாறு பயணிக்கும் வறிய மக்கள். டொனாலா எனும் ஊரை ரயில் நெருங்கும் வேளை வானம் தன் மேகங்களை திறந்து கனவுகள் மேல் நீரூற்ற ஆரம்பிக்கிறது.

தங்கள் பைகளிலிருந்த பிளாஸ்டிக் போர்வைகளால் தங்களை மூடிக் கொள்கிறார்கள் ரயில் கூரைப் பயணிகள். இந்த வேளையில் அவர்களிடம் வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறான் லில் மகோ. தன் துப்பாக்கியை காட்டி மிரட்டி கூரைப் பயணிகளிடம் எஞ்சியிருக்கும் ஏதோ கொஞ்சத்தையும் அபகரிக்கிறான் லில் மகோ. அவனிற்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள் ஸ்மைலியும், கஸ்பரும்.

ரயிலின் கூரையில் சராயா இருக்கும் இடத்திற்கு வரும் லில் மகோ, அவள் அழகைப் பார்த்து வெறி கொண்டு துப்பாக்கி முனையில் அவளை பலவந்தம் செய்ய ஆரம்பிக்கிறான். சராயாவின் கூச்சல்களிற்கு அபயம் தர அங்கு யாருமில்லை. ஆனால் கஸ்பரின் மனதில் மழையைத் தாண்டி உணர்வுகள் மெதுவாக கொதிக்க ஆரம்பிக்கின்றன.

கஸ்பரின் மனம் தன் காதலியை எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அவன் கையில் வைத்திருந்த வாள் மழையினூடு ஓடும் ஒர் மின்னல் போன்று லில் மகோவின் கழுத்தில் பதிகிறது. ரயிலின் கூரையில் மழை நீருடன் குருதியும் சேர்ந்து வழிந்து ஓடுகிறது. தன் கண்களைப் பார்க்கும் லில் மகோவை ரயிலிலிருந்து கீழே தள்ளுகிறான் கஸ்பர். இந்தக காட்சியைப் பார்த்து திகைத்து நிற்கும் ஸ்மைலியை ரயிலிலிருந்து இறக்கி விடுகிறான் கஸ்பர். பின் ரயில் பெட்டியின் கூரையில் ஒர் ஓரமாக தனியாக உட்கார்ந்து கொள்கிறான் அவன்.

sin-nombre_jpg_595x325_crop_upscale_q85 தொடரும் ரயில் பயணத்தில் கூரைப் பயணிகள் கஸ்பரை வெறுத்து அவனைக் கூரையிலிருந்து தள்ளிவிட முயல்கின்றனர். ஆனால் சராயாவின் கூச்சலினால் சுதாரித்துக் கொள்கிறான் கஸ்பர். கஸ்பர் தனியே விலகி இருந்தாலும் அவனைத் தேடிச் சென்று உரையாட ஆரம்பிக்கிறாள் சராயா, தன் தந்தையின் எச்சரிக்கைகளை அவள் பொருட்படுத்துவதே இல்லை.

கஸ்பரும் தாதாக் குழுவிற்காக நாட்டின் எல்லைகளை தாண்டி ஆட்களை கடத்தி சென்ற தன் அனுபவத்தைக் கொண்டு கூரைப் பயணிகளிற்கு உதவ ஆரம்பிக்கிறான். கஸ்பரிற்கும் சராயாவிற்குமிடையே ஒர் புதிய கனவின் ஆரம்பத்திற்கான சாத்தியம் அழகான ஒரு விடியல் போல் புலர ஆரம்பிக்கிறது .

தன் ஊருக்கு திரும்பி வரும் ஸ்மைலியை விசாரிக்கும் லா மாராவின் புதிய தலைவனான சோல், அவனிடம் ஒர் துப்பாக்க்கியை தந்து கஸ்பரைச் சுட்டுக் கொல்வதன் மூலமே அவன் லா மாரா மேல் கொண்ட விசுவாசத்தை நிரூபிக்க முடியும் என்கிறான். கஸ்பரை தான் சுட்டுக் கொல்வேன் என்று கூறி கிளம்பிச் செல்கிறான் ஸ்மைலி….

சராயா குழுவினர் தங்கள் கனவு தேசத்தை அடைந்தார்களா? ஸ்மைலி தன் விசுவாசத்தை நிரூபித்தானா என்பதனை சோகமும், வலியுமாக சொல்கிறது அமெரிக்க- மெக்ஸிக்கன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பானிய மொழித் திரைப்படமான SIN NOMBRE [ பெயரற்றவர்கள்]

sin_nombre_1 ரயில் கூரை ஒன்றின் மேல் சந்தித்துக் கொள்ளும் இரு வேறுபட்ட வாழ்க்கைகளின் கதையை அதன் தருணங்களின் வெப்பத்துடன் காட்டியிருக்கிறார் இயக்குனர். மிகக் குரூரமான மெக்ஸிக்கோ தாதாக்களின் உலகம், கனவு தேசம் நோக்கி நாட்டு எல்லைகள் கடந்து ஓடும் மக்களின் வேதனையான வாழ்க்கை என்பவற்றில் பார்வையாளர்களை அமிழ்த்துகிறார் அவர்.

ரயில் பயணிக்கும் பாதைகளில் இயற்கை அழகாக இருக்கிறது. ஆனால் அதன் ஓரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கை வறுமையால் சீரழிக்கபட்டிருப்பதையும், அவர்களின் எதிர்காலம் வெறும் சூன்யம் என்பதையும் எளிதாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர். ஸ்மைலி பாத்திரம் வறுமை என்பது எவ்வாறு சிறுவர்களைக் கூட வன்முறைக் கலாச்சாரத்திலன் சுழலில் தள்ளிவிடுகிறது என்பதைக் காட்டுகிறது.

படத்தில் வரும் இளம் பாத்திரங்களின் யாதார்த்தமான நடிப்பு, படத்தின் கதையை விட்டு பார்வையாளனை வேறு எங்கும் அழைத்துச் சென்று விடாத அலங்காரங்களற்ற அழகான ஒளிப்பதிவு என்பன படத்தின் பலம்(SUNDANCE 2009- சிறந்த ஒளிபதிவிற்கான விருது). படத்திற்கு கதையை எழுதி இயக்கியிருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் இயக்குனர் Cary Joji Fukunaga.

இப்படத்திற்காக அவர் ரயில் கூரைப் பயணிகளுடன் பயணம் செய்திருக்கிறார், மெக்ஸிக்கோ தாதாக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார். இதன் விளைவு திரைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. அவருடைய முதல் திரைப்படமான இது அவரிற்கு 2009ம் ஆண்டின் அமெரிக்க SUNDANCE திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனரிற்கான விருதைப் பெற்றுத் தந்தது. எடின்பேர்க் சர்வதேச திரைப்பட விழாவில்[2009] அறிமுக இயக்குனரிற்கான விருதை வென்றது. பிரான்சின் DEAUVILLE அமெரிக்கத் திரைப்படவிழாவில் [2009] இத்திரைப்படத்திற்கு ஜூரி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

142467-4-sin-nombre கூரையில் பயணிக்கும் பயணிகள், மற்றும் லா மாரா தாதாக் குழு போன்றவை உலகின் பல பாகங்களில் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் பல ஜீவன்களிற்கு பொருந்திப் போகக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. ரயில் கூரைகளில் பயணிக்கும் இவ்வகையான பயணிகளைப் போன்ற பெரும்பாலானோர் அவர்கள் கனவின் முகவரிகளைக் கண்டு கொள்வதில்லை ஆனால் பயணங்களும் முடிந்தபாடாக இல்லை.

பயணிகளை கூரையின் மீது தாங்கிச் செல்லும் ரயில் வண்டி ஏற்றிச் செல்லும் சரக்குகளின் சுமைகளை விட பார்வையாளனின் மனதை கனக்க வைத்து விடுகிறது திரைப்படத்தின் இறுதிப் பகுதி.

ரயில் பயணம் செய்யும் வழியில், நிமிர்ந்து நிற்கும் மலையொன்றில் எழுந்திருக்கும் பிரம்மாண்டமான கிறிஸ்துவின் சிலையைக் காணும் ரயில் கூரைப் பயணிகள் சிலுவை அடையாளமிட்டு அவரின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறார்கள். ஆனால் தன் கைகளை அவர்களை நோக்கி விரித்து விட்ட நிலையில் அவர் நிற்பதாகவே எனக்கு தோன்றுகிறது. [***]

ட்ரெயிலர்

7 comments:

  1. ந‌ல்ல‌ ப‌திவு ஸார். ப‌ட‌ அறிமுக‌த்திற்கு என் ந‌ன்றி.

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,

    இம்முறை ஒரு வித்தியாசமான ஸ்பானிஷ் படத்தை தேர்ந்தெடுத்து நடுநிலையான விமர்சனத்தை மீண்டும் கொடுத்திருக்கிறீர்கள். பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.

    //இது அவரிற்கு 2009ம் ஆண்டின் அமெரிக்க SUNDANCE திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனரிற்கான விருதைப் பெற்றுத் தந்தது.
    //
    மெக்ஸிகோவை இந்தளவிற்கு ஒட்டாண்டியாக ஆக்கியதற்கு அமெரிக்காவிற்கும் பங்கு உண்டு என்பது இங்கே குறிப்பிடதக்கது.

    ReplyDelete
  3. காதலரே,

    ஹிமாலய மலை தொடர்களில் ஒரு குட்டி ரயில் பயணத்தை முடித்து திரும்பியிருக்கும் வேலையில், அதை நினைவுபடுத்தும் வகையில் அதே கதைகளத்தை கொண்ட ஒரு பட விமர்சனத்தை பதிவேற்றி இருக்கிறீர்கள். முதலில் அதற்கு நன்றியை பிடியுங்கள்.

    // ரயில் பயணிக்கும் பாதைகளில் இயற்கை அழகாக இருக்கிறது. ஆனால் அதன் ஓரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கை வறுமையால் சீரழிக்கபட்டிருப்பதையும், அவர்களின் எதிர்காலம் வெறும் சூன்யம் என்பதையும் எளிதாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர். //

    உண்மையான வரிகள். வாழ்க்கையின் விளம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலை எல்லா ஊரிலுமே ஒன்று தான் போல. மெக்சிகோவின் வளர்ச்சியடையா தரத்திற்கு அண்டை நாடான அமெரிக்கா கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஒரு பெரும் கொடுமை. மட்ட சம்பளத்தில் வேலை பார்ப்பதற்காக அவர்களை வளரவிடாமல் செய்வதில் அவர்கள் பங்கு இல்லாமலா போய் விடும்.

    // ஆனால் தன் கைகளை அவர்களை நோக்கி விரித்து விட்ட நிலையில் அவர் நிற்பதாகவே எனக்கு தோன்றுகிறது //

    இயேசு கிரிஸ்துவின் அகன்ற அரவணக்கும் பாணி கைகளை நான் இன்று வரை இவ்வர்த்தத்தில் கற்பனை செய்து பார்க்கவில்லை. உங்கள் ரசனை அபரிதம்.

    ஆமாம் ஸ்பானீஷ் மொழி படத்தை எப்படி பார்த்தீர்கள்....? மொழி விளக்க அடிகட்டைகளுடனா? இல்லை ப்ரெஞ்சு மொழியில் இது மாற்றம் செய்யபட்டதா? (உங்களுக்கு ஸ்பானீஷ் மொழியும் தெரியும் என்று கூறி, இந்திய மொழிகளில் இரண்டை கற்றுக்கொண்டு காலம் தள்ளும் என்னை சங்கடபடுத்தி விட மாட்டீர்களே?)

    இணையத்தில் தேடி பார்த்து விட வேண்டியதுதான். நீங்கள் தான் சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்களே (:)

    திரைப்படம், நாவல், காமிக்ஸ் என்று பல்வேறு திசைகளில் உங்கள் விமர்சனங்கள் அடுக்கபட்டாலும், ஒவ்வொன்றிலும் உங்களின் தனித்துவமான உண்மை ரசிகனின் வர்ணணை, உங்களுக்கே உண்டான தனி பாணி. அமர்க்களமாக தொடருங்கள் காதலரே.

    ReplyDelete
  4. கூடவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், கனவுகளின் காதலரே. பிரான்ஸில் கொண்டாட்டங்கள் கலைகட்டட்டும்.... கார்லா ப்ரூனோ அம்மையார், மெகான் பாக்ஸுடன் ஒரு பிரத்யேக இசை(?!!) நிகழ்ச்சி உங்களுக்காக ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கசிவது உண்மையா....

    மரியாதையாக ஏர்-பிரான்ஸில் ஒரு பிரத்யேக அன்பளிப்பை அனுப்ப மறவாதீர்கள்.

    பி.கு.: ஜோஸுக்கு உண்டான பங்கையும் எனக்கே அனுப்பி வைத்து விடுங்கள். கண்டிப்பாக அவரிடம் கொண்டு சேர்த்து விடுகிறேன் (ஹி.. ஹி... ஹி....)

    ReplyDelete
  5. நண்பர் TOTO அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    ஜோஸ், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. மெக்ஸிகோ பற்றி எழுதுங்கள் நண்பரே ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ரஃபிக், நீங்கள் மலைத்தொடர்களில் "சாகசப்" பயணத்தை வெற்றிகரமாக முடித்த அனுபவங்களை ஒர் பதிவாக்கி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    கிறிஸ்துவின் கைகளை படத்தினை முழுமையாக பார்த்தபின் அரவணைக்கும் கைகளாக என்னால் காண முடியவில்லை நண்பரே.

    மொழிபெயர்ப்பு துணைத் தலைப்புக்களுடனே படத்தினை பார்த்தேன். எல்லா வேற்று மொழிப் படங்களும் பிரெஞ்சு மொழியில் டப் செய்யப்படும். ஆனால் மொழி விளங்காவிடினும் மூல மொழிகளிலேயே படத்தினை பார்க்க விரும்புகிறேன்.

    வாழ்த்துக்களிற்கு நன்றி. துணைவியார் அனுமதித்தால் நான் இசை நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகவே உள்ளேன். ஏர் பிரான்ஸில் இரு அழகிகள் வருகிறார்கள். சிங்கிள் சிங்கம் ஜோஸ் அவர்களை வரவேற்பதில் உங்களை முந்திவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு நண்பரே
    உங்களின் பதிவின் வழியாக தாக்கம் உணர முடிகிறது
    அனேகமாக French படங்கள் எல்லாம் இங்கே கிடைப்பதில்லை.
    முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  7. நண்பர் வேல்கண்ணன் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete