Thursday, July 2, 2009

காட்டில் ஒர் பியானோ

GetAttachment.aspx எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைத்தளத்தில் சமீபத்தில் தான் படித்த மிக சுவாரஸ்யமான ஐந்து வலைப் பக்கங்களை தந்துள்ளார். அவற்றில் ஒன்றாக கனவுகளின் காதலன் வலைப்பூவும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பற்றி அறிந்த நண்பர்களிற்கு என் மகிழ்ச்சி எவ்வகையானதாகவிருக்கும் என்பதனைக் கூறத்தேவையில்லை.

நவீன தமிழ் இலக்கியம், சினிமா, நாடகம், குறும்படங்கள் என பல தளங்களில் செயற்படுபவர் அவர். தன் வசீகரிக்கும் எழுத்துக்களால் வாசகனின் அருகில் வந்து விடுபவர். சிறு வயது முதலே காமிக்ஸ் புத்தகங்களிற்கு ரசிகராகவும் அவர் இருக்கிறார். அவர் வலைத்தளத்தில் அவர் காமிக்ஸ் பற்றி எழுதியும் கூட இருக்கிறார். காமிக்ஸ் கதை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவரிடத்தில் இருக்கிறது.

கனவுகளின் காதலனை அவர் படித்திருக்கிறார் என்பதே போதும் என்ற போது, அதனை தன் வலைத்தளத்தில் சிறப்பான பக்கம் என பரிந்துரை செய்ததை நான் ஒர் அற்புதம் என்பேன்.

என் வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கும் என் அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கையில் காமிக்ஸுடன் எஸ்ரா அவர்கள் இருக்கும் இந்தப் படம் இளம் காளை விஸ்வா அவர்களினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வா ஒழுங்கு செய்திருந்த காமிக்ஸ் வாசகர்கள் ஒன்று கூடல் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருக்கிறார் எஸ்ரா அவர்கள். விஸ்வாவிற்கு என் நன்றிகள்.





தன் பாட்டியின் உடல் நலம் சீர்குலைந்ததன் காரணமாக அவள் அருகில் சிறிது காலம் தங்கியிருக்க விரும்பும் தன் தாயுடன் டோக்கியோவிலிருந்து ஒர் சிறிய நகரத்திற்கு வந்து சேர்கிறான் சிறுவன் சுகே.

நகரிலிருக்கும் சிறு பள்ளியில் மாணவனாக இணைந்து கொள்ளும் சுகே, அவன் வகுப்பு மாணவர்கள் முன் தன்னை அறிமுகம் செய்து கொள்கையில், தான் சிறு வயதிலிருந்தே பியானோ கற்பதாக கூறுகிறான்.

புதிய வரவான சுகேயை சீண்ட விரும்பும் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள காட்டில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் பியானோவினை அவனால் இசைக்க முடியுமா எனக்கேட்டு தொந்தரவு தருகிறார்கள். அப்பியானோ யார் வாசித்தாலும் இசையைத் தருவதில்லை எனவே நீ முயன்று பார் என்று அவனைத் தூண்டுகிறார்கள்.

இவ்வேளையில் அங்கு வரும் கய் எனும் சிறுவன் சுகேயை சக மாணவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். காட்டின் மத்தியிலுள்ள பியானோவை தான் வாசிப்பதாகவும், அது நன்றாக இசையை வழங்கக் கூடிய ஒர் பியானோ என்றும் அவன் தெரிவிக்கிறான்.

பள்ளியில் அன்றைய வகுப்புகள் முடிவடைந்ததும் சுகேயை அருகிலிருக்கும் காட்டினுள் அழைத்து செல்கிறான் கய். பியானோ இருக்கும் இடத்திற்கு சுகேயை இட்டுச் செல்லும் கய், காட்டின் மத்தியில், தனிமையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஒர் பியானோவை அவனிற்கு காட்டுகிறான்.

அப் பியானோவைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் ஒருங்கே கொள்ளும் சுகே, அதனை இசைக்க விரும்புகிறான். பியானோவின் முன் அமர்ந்து தன் விரல்களால் அதனை இசைக்க முற்படுகையில் பியானோ இசைக்க மறுக்கிறது.

pianoforest01 இதனால் சற்றுக் குழப்பமுறும் கய், தான் முயன்று பார்ப்பதாகக் கூறி பியானோ முன்னமர்கிறான். அவன் விரல்கள் பியானோ மீது பட்டது தான் தாமதம், அவனை ஒர் மாயசக்தி அரவணைத்தது போன்ற ஒர் மயக்கத்தில் அப் பியானோவை அவன் வாசிக்க, பியானோவும் இனிய இசையை வழங்குகிறது. தான் கேட்கும் இசையில் மயங்கி, தன் நெஞ்சில் கைகளை வைத்துக் கொள்கிறான் சுகே.

கய் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவன், பியானோவை முறையாக கற்காதவன் என்பதை சுகே அறிந்து கொள்ளும் போது அது அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது. சிறுவன் கய்யை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் சுகே.

சுகேயின் தந்தை ஒர் பிரபல பியனோக் கலைஞர். சுகேயின் தந்தையைப் போலவே அவன் ஒர் நாடு போற்றும் கலைஞனாக உருவாக வேண்டுமென்பது அவன் தாயின் அவா.

கய்யை தன் பாட்டியின் வீட்டிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லி கேட்கிறான் சுகே. ஆனால் அப் பியானோவை முறைப்படி இசைக்க முடியாது கர்ணகடூரமான இசையை ஒலிக்க செய்கிறான் கய்.

கய் முறைப்படி பியானோவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறான் சுகே. பியானோ தனக்கு ஒர் விளையாட்டு, மேலும் அதனைக் கற்றுக் கொள்ளுமளவிற்கு தான் வசதி படைத்தவன் அல்ல என்று கூறும் கய், சுகே அவனிற்கு பியானோ கற்றுத் தர முன் வந்த போதும் அதனைப் பிடிவாதமாக மறுத்து விடுகிறான்.

11-2_max சிறுவர்களின் பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிகிறான் அஜினோ. சுகேயின் தாய் மூலமாக அஜினோ ஒர் காலத்தில் ஜப்பானின் மிகவும் பிரபலமான ஒர் பியானோக் கலைஞனாக இருந்ததை சிறுவர்கள் இருவரும் அறிந்து கொள்கிறார்கள்.

அஜினோவைத் தன் மகனுடன் காணச்செல்லும் சுகேயின் தாய், சுகேவிற்கு அஜினோ பியானோ கற்பித்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறாள். தான் முன்பை போல் பியானோ வாசிக்க கூடிய நிலையில் இல்லை என்று கூறும் அஜினோ, அவள் வேண்டுகோளை மறுத்து விடுகிறான். அஜினோவிடமிருந்து விடைபெறும் முன், கய் காட்டிலுள்ள பியானோவை பிரமாதமாக வாசிக்கிறான் என்பதை அஜினோவிடம் தெரிவிக்கிறான் சுகே. அஜினோவின் புருவங்கள் உயர்கின்றன.

அஜினோவிற்கு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றினால் அவன் இடது கை முன்பு போல் இயங்க முடியாத நிலையில் அஜினோவின் பியானோக் கலைஞன் வாழ்க்கை உடைந்து போனது. அஜினோவிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பியானோவைக் கூட அவன் விற்று விடுகிறான். அப் பியானோவை வாங்கிய கபாரே மூடு விழாக் கண்டதால், அந்தப் பியானோவை கபாரேக்காரர்கள் காட்டில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

பள்ளியின் அருகிலிருக்கும் காட்டின் மத்தியில் மெளனமாக அமர்ந்திருப்பது அவனுடைய பியானோ என்பதை அஜினோ அறிவான். அவன் இசைத்தாலும் அப்பியானோ இசை தருவதில்லை. இப்போது கய் அதனை வாசிக்கிறான் என்பது அவனிற்கு பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

அன்றிரவு காட்டில் தன் பியானோவை தேடிச்செல்கிறான் அஜினோ. நிலவின் குளிர் ஒளி காட்டை நனைக்க, பியானோவினை அற்புதமாக கய் இசைப்பதை அவன் கண்டு கொள்கிறான். காடு முழுவதும் அந்த இசையை மயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இசை தரும் பரவசம் அஜினோவின் கண்களில் ஊற்றாக வழிய, இசையை ரசித்துக் கேட்கிறான் அஜினோ.

2995597524_3843f09e93 கய் வாசிப்பதை நிறுத்தியதும் அவனை நெருங்கும் அஜினோ, எவ்வாறு கய் இப்படி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டான் என வினவ, சிறு வயது முதலே இந்தப் பியானோவுடன் விளையாடுவது தான் தன் பொழுது போக்கு என்கிறான் கய். அஜினோ, கய்க்கு தான் பியானோ கற்றுத் தருவதாக கூறுகிறான். ஆனால் கய்யோ என்னால் பியானோ கற்க முடியாது எனக் கூறி ஓடி விடுகிறான்.

பள்ளியில் ஒரு நாள் கய்யிற்கு BEETHOVAN, MOZART, CHOPIN, MENDELSHON ஆகியோரின் இசை வடிவங்களை இசைத்துக் காட்டுகிறான் அஜினோ. கய்யிற்கு இது வரை தெரிந்திராத இப் புதிய இசை வடிவங்கள் ஆச்சர்யத்தையும் அவற்றை உடனே இசைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் உண்டாக்குகின்றன.

காட்டிலுள்ள பியானோவில் அன்றிரவு இவ்விசை வடிவங்களை இசைக்க முயல்கிறான் கய். CHOPINன் “PETIT CHIEN” எனும் இசை வடிவம் மட்டும் அவனிற்கு வரவே மாட்டேன் என்கிறது.

அஜினோவைக் காணச் செல்லும் கய், தனக்கு CHOPINன் இசையை வாசிக்க கற்றுத் தர சொல்கிறான். மிக மகிழ்ச்சியுடன் ஒர் சாதாரணப் பியானோவில் கய்க்கு பியானோ கற்றுத்தர ஆரம்பிக்கிறான் அஜினோ.

சிறிது கால பயிற்சியின் பின், நிலவு பொழியும் ஒர் இரவில், கூரையில் பதித்திருந்த கண்ணாடி ஜன்னல் ஊடாக வழியும் நிலவின் கதிர்களில் ஊறியவாறே மெய்மறந்து CHOPINன் இசை வடிவத்தை பியானோவில் இசைக்கிறான் கய். அவனை மெளனமாக பார்த்து ரசிக்கும் அஜினோ, அவன் CHOPINன் இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறான்.

அஜினோவிற்கு பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறான் சிறுவன் கய். ஜப்பானின் தேசிய பியானோப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக நடைபெறும் வட்டார தெரிவுப் போட்டியில் கய் கலந்து கொள்ளல் வேண்டும் என கேட்கிறான் அஜினோ. முதலில் மறுத்தாலும் பின்பு அஜினோவிற்காக போட்டியில் பங்கு கொள்ள சம்மதம் தருகிறான் கய்.

இதே போட்டிக்காக, இரவு பகல் பாராது தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் கய்யின் அன்பு நண்பன் சுகே…..

எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இன்றி, வேறுபட்ட இரு சிறுவர்களிற்கு இடையில் மலரும் நட்பை, அவர்கள் இருவரிற்கும் பொதுவாக உள்ள பியானோவைச் சுற்றி மென்மையாகப் பின்னியிருக்கிறார்கள். இரு சிறுவர்களின் நட்பும், அவர்களிற்கிடையில் தோன்றும் ஆரோக்யமான போட்டியும், தன்னை விட மற்றவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணும் அவர்கள் மனமும் பளிங்கு.

காட்சிகள் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மிருகங்களோ, மரங்களோ படத்தில் இல்லை. அசர அடிக்கும் சித்திரங்களும் கிடையாது, ஆனால் கதை எங்களை இசை போல் மயக்கி தன்னுடன் எடுத்துச் செல்கிறது. படத்தில் இடம் பெறும் பியானோ இசை செவிக்கும், உள்ளத்திற்கும் இதமாக அமைகிறது.

சுகே, கய்யிடம் பியானோ என்பது தனக்கு ஒர் சாபம், பியானோவால் தான் இழந்தது அதிகம் என மனம் திறக்கும் கட்டம் நெகிழ வைக்கும். கய்யை மொசர்டின் ஆவிகள் கோஷ்டி கலாய்ப்பது, இறுதிப் போட்டியில் கய் சிறுமி டாகாகோவை உற்சாகப்படுத்தும் காட்சிகள் என்பன கலகல. இறுதிப் போட்டிக் காட்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. இசை, காட்சியமைப்பு என நெகிழ வைத்து விடுகிறது முடிவு.

MAKATO ISSHIKI என்பவரின் மங்கா படைப்பாகிய “PIANO NO MORI” கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கி இருப்பவர் MASAYUKI KOJIMA. இசையமைத்திருப்பவர் KEISUKE SHINOHARA. பியானோ இசை வடிவங்களை பிரபல பியானோக் கலைஞர் VLADIMIR ASKHENAZY இசைத்திருக்கிறார்.

“உன்னை மட்டும் நான் சந்தித்திராவிடில் நான் பியானோவை வெறுத்திருப்பேன்” என்ற சுகேயின் வரிகளுடன் முடிவடைகிறது படம். மிகவும் அர்த்தமுள்ள வரிகள் இவை. பொறுமையுடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

பிரெஞ்சு ட்ரெய்லர்

இசையை ரசிக்க

24 comments:

  1. கனவுகளின் காதலரே,

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    வோட்டு போட்டு விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. பார்க்காத, கேள்விப் படாத ஒரு படம்.

    சிறுவயதில் நான் படித்த மதி நிலைய மந்திரக் கதைகளை நினைவு படுத்தும் ஆரம்பக் காட்சிகள் (காட்டில் தனியாக ஒரு பியானோ, யார் இசைத்தாலும் இசைக்கு, ஆனால் ஒரு சிறுவன் கையாளும்போது இசைக்கிறது), பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் கதை, இருவரின் நட்பு என்று பல தளங்களில் பயணம் செய்கிறது கதை.

    ReplyDelete
  3. முதல் டிரைலர் இணைப்பில் இருக்கும் படம் Notting Hill என்ற படத்தில் வரும் Ronan Keating பாடிய When You Say Nothing At All என்ற பாடலை நினைவு படுத்துகிறது.

    நீங்கள் அந்த அற்புத படத்தை ரசித்து இருக்கிறீர்களா? குறிப்பாக இந்த பாடல் காட்சியை?

    ReplyDelete
  4. Piano forest A.K.A piano no mori A.K.A THE PERFECT WORLD OF KAI

    Watch it here:
    http://www.crunchyroll.com/media-273784/Piano-no-Mori-Movie-Complete.html

    Download it here:
    http://www.kefi.org/piano.php

    ReplyDelete
  5. விஸ்வா,

    இத்திரைப்படம் 2007லேயே ஜப்பானில் வெளியாகி விட்டது, ஆனால் இங்கு சென்ற மாதம்தான் வெளியாகியது. Notting Hill படத்தை பார்த்திருக்கிறேன், அந்தப்பாடலும் நன்றாக இருக்கும். நல்ல வரவேற்பை பெற்ற படமது. Notting Hillல் வருடந்தோறும் ஒர் கார்னிவல் நடைபெறும், ஒரு தடவை அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Notting Hill பெயரைக் கேட்டாலே எனக்கு அந்நினைவுகள் வந்து விடுகின்றன. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ரவீந்தர் அவர்களே மிக விரைவாக சுட்டியை வழங்கியதற்கு நன்றி நண்பரே. தொடருங்கள் உங்கள் மகத்தான சேவையை.

    ReplyDelete
  6. காதலேரே இன்னொரு அனிமேஷன் படத்தின் அறிமுகமா கலக்குங்கள்... இந்த முறை நம் ஜோஷ் சானிடன் அபிமான இயக்குனரிடம் இருந்து விலகி இன்னொருவர் கைபக்குவத்தை அனுபவிக்க ஒரு முகாந்திரம்.

    நட்ட நடு காட்டில், ஒருவனை தவிர வேறு யாராலும் இசைக்க முடியாத ஒரு பியானோ, இரண்டு நண்பர்களின் பிணைப்பு என்று கதையோட்டம் மிக அருமையாக பிண்ணபட்டிருக்கிறது.

    உங்கள் விமரிசனத்தை ஆழ்ந்து படித்து கொண்டே இருந்தபோது, அடடா இவர் மொத்த கதையையும் விவரிக்க போகிறார் போல, என்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கே உரிய பாணியில் நச்சென்று முடித்து படத்தை பார்க்கும் ஆவலையும் தூண்டி விட்டீர்கள்.

    படத்தில் முழுக்க முழுக்க பியானோவை தவிர வேறு இசைகருவிகள் உபயோகபடுத்தபடவில்லை என்று நினைக்கிறேன். உண்மையா...... ஆனாலும் அந்த குறை தெரியாமல் பியானோவிலேயே பல பரிணாமங்களை நிகழ்த்தி காட்டிருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள். இரவின் நிசப்தத்தில் தனியாக கேட்டு ரசித்தேன்.

    பதிவின் இடையே வழங்கியுள்ள படங்கள் மிக அருமையாக இருக்கின்றனவே.... அவை படங்களில் இருந்து எடுக்கபட்ட Screenshot's அல்ல தளங்களில் கிடைத்தவையா..... உங்கள் பதிவிற்கு அது மேலும் அழகு கூட்டுகிறது.

    இந்த படத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் காதலரே. படத்தை பார்த்து முடித்த பின் மறு கருத்துகள் பதிகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  7. ரஃபிக், திரைப்படத்தில் பியானோ இசைதான் ஆக்கிரமிப்பு செலுத்துகிறது, இங்கு இப்படம் திரையில் வெளியான போது அத்துடன் திரைஇசை CDக்களையும் வெளியிட்டார்கள்.

    பதிவில் உள்ள படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டவை, அழகாக இருக்கிறது என்று கூறி மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள்.

    வருகைக்கும், உங்கள் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. கனவுகளின் காதலரே!

    திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகளும், ஆர்வமும் எனக்கு சற்றே குறைவுதான். ஆனாலும் உங்களது பதிவு ஓர் ஆர்வத்தை தூண்டுகிறது. பதிவின் தொடக்கத்தில் நீங்கள் இணைத்துள்ள படம் ஓர் அற்புதமான படைப்பு. பிரமாண்டமான மரங்கள்... பெரிய பியானோ... ஆர்வமும், ஆச்சரியமும் கொண்ட சிறுவன், மரங்களை ஊடுருவும் சூரிய ஒளி. இந்த காட்சியமைப்பே ஒரு கதையை சொல்கிறது.

    ReplyDelete
  9. கனவுகளின் காதலரே,

    நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள். சிறந்த திரைப் படங்களை மட்டும் பார்க்கிறீர்களா இல்லை பார்த்த படங்களில் சிறந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறீர்களா?

    எதுவாகினும், நீங்கள் இதுவரையில் பரிந்துரை செய்த எதுவுமே சோடை போனது இல்லை. அதுவும் இல்லாமல் நண்பர் ரவீந்தர் வேறு டவுன்லோட் லிங்க் தந்து இருக்கிறார். இந்த ஞாயிறு பொழுதை கழிக்க நல்ல வழி செய்தமைக்கு நன்றி, உங்கள் இருவருக்குமே.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    ஜூலை நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்?

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய நண்பர் அ.வெ அவர்களே, பதிவின் தொடக்கத்தில் இருக்கும் அந்தப்படம் என்னையும்தான் மயக்கி விட்டது, கற்பனைக் குதிரைகளை சொடக்கிவிடும் மந்திரமும், மாயமும் அப்படத்தில் உள்ளது. [நண்பர்களின் குடும்பத்தில் சிறுவர்கள் இருந்தால் இத்திரைப்படத்தை அவர்களை பார்க்கும் படி தூண்டுங்கள்] நேரம் கிடைத்தால் இப்படத்தினைப் பாருங்கள், மிக மென்மையான உணர்வுகளை தன்னகத்தே கொண்ட படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே,

    காமிக்ஸ் பிரியரே, நான் பார்க்கும் படங்களில் என் மனதிற்கு பிடித்தமானவற்றையே எழுத முயற்சிக்கிறேன், அவை சிறப்பாக இருப்பதாக கூறி என் ரசனையை தட்டிக் கொடுத்து இருக்கும் உங்களிற்கு என் மனதார்ந்த நன்றி நண்பரே, உங்களிற்கு சிரமமில்லாவிடில், நேரம் கிடைத்தால் படத்தினை பார்த்தபின் உங்கள் கருத்துக்களை பதிய முடியுமா, தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  11. பியானோJuly 4, 2009 at 7:39 AM

    டோ டைந் டோ டோ டைந்க்

    டா டா டி டைந்

    டிடிங் டா டா டி டைந்

    ReplyDelete
  12. காதலரே,

    அருமையான ஒரு படத்தை பற்றிய முன்னோட்டம் இது. நன்றி.

    உங்களின் பதிவை படித்து விட்டு பியானோவே வந்து கமெண்ட் வேறு போட்டு இருக்கிறது. அதன் மொழி வேறு எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நன்றாகவே கூறி இருக்கும் என்று நம்பிகிறேன்.

    தொடருங்கள் உங்கள் பயணத்தை.

    ReplyDelete
  13. நல்லதொரு படத்தை பற்றி பதிவிட்டதோடில்லாமல் அதன் டவுன்லோட் லிங்க் வேறா?

    சூப்பர்.

    இதைத்தான் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று சொல்வார்களோ?

    தொடருங்கள்.

    ReplyDelete
  14. காமிக்ஸ் காதலரே, உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ஜாலி ஜம்ப்பர் அவர்களே,வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. லிங்கை வழங்கியவர் நண்பர் ரவீந்தர் ஆவார்.

    ReplyDelete
  15. வணக்கம் ஷங்கர். தங்களின் தளம் திரு. எஸ்.ரா. அவர்களால் பரிந்துரைக்கபட்டுள்ளதை கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கனவுகளின் காதலரே,

    வாழ்த்துக்கள்! வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்!

    http://www.sramakrishnan.com/view.asp?id=282&PS=1

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  17. காதலரே,

    எஸ்ராவின் பதிவுகளுக்கு நீங்கள் மட்டும் வாசகர் அல்ல அவரும் உங்கள் பதிவின் வாசகர் என்று பறை சாற்றியிருக்கிறார்.

    உங்கள் எழுத்துகளுக்கு கிடைத்த உரிய அங்கீகாரம். வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  18. இந்த வலைப்பூவை ஆரம்பித்ததிலிருந்து, அதனை தொடர்ந்து அன்பாக ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களிற்கும், மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணண் அவர்கட்கும் என் மனதார்ந்த நன்றிகள்.

    இந்த மகிழ்ச்சியான, மந்திரத் தருணம் எங்கள் எல்லாரிற்குமுரியது. ஒவ்வொரு காமிக்ஸ் பதிவரிற்குமுரியது. காமிக்ஸ் எனும் காதலில் கட்டுண்ட அனைவரிற்கும் களிப்பூட்டும் கணமிது.

    நம்பவே முடியவில்லை. எப்படித்தான் நம்ப முடியும். ஆனால் நடந்து விட்டது. இது தான் அற்புதம்.

    தமிழ் இலக்கியத்தின் ஒர் முக்கிய அடையாளமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள், இன்று காமிக்ஸ் வாசக அன்பர்கள் எல்லாரையும் மனம் குளிர செய்து விட்டார். அவர் எழுத்துகளிற்கு நான் ரசிகன். ஆனால் அவர் என் கிறுக்கல்களைப் படிப்பார் என்று என்னால் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியவில்லை. என்னிடம் நன்றியைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

    குறுஞ்செய்தி மூலமாக, ஒர் மந்திரக்காலையை பிறக்கவைத்த விஸ்வாவிற்கு என் கனிவான நன்றிகள்.


    நண்பர் சிதம்பரம் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி.

    மதிப்பிற்குரிய தலைவரே, நன்றி. எல்லாம் நீங்கள் சுழி போட்டது தானே. ஆனால் நான் பிரம்ம ரிஷி அல்ல, சாதாரண ஒர் காமிக்ஸ் வாசகனே.

    ரஃபிக், நன்றி நண்பரே நன்றி. உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு தானே இதற்கு வழி செய்துள்ளது. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நண்பரே.

    நீங்கள் பிரான்ஸ்-லிருந்து பதிவுகளை எழுதிறீர்களா? உங்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியுமா?

    ReplyDelete
  20. நண்பர் ஜோ அவர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. உங்கள் கேள்விகளிற்கான பதில் ஆம் என்பதே.

    ReplyDelete
  21. கழக்கழான எஸ்ரா புகைப்படம் அதுவும் கையில் ஒரு அரிய காமிக்ஸான மாலைமதி AFI காமிக்ஸ், அதுவும் ரிப்கிர்பி கதை என்று அட்டகாச போஸ் கொடுத்திருக்கிறார்...

    உங்கள் பதிவை படித்து அதில் தூண்டப்பட்டு விரைவில் அவரும் அவருடைய காமிக்ஸ் கனவை நனவாக்க பிரார்த்திக்கிறேன்... பொன்னி காமிக்ஸ் ஓவியர் எவரிடமும் அண்டாமல் இருந்தாலே பாதி வெற்றி தான் :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  22. நண்பர் ரஃபிக் அவர்களே, பொன்னி காமிக்ஸ் ஓவியர்கள் வெகுவிரைவில் நண்பர் ஜோஸ் எழுதும் ஒர் கதைக்கு ஓவியம் வரைய சம்மதித்திருக்கிறார்கள்.கதையின் பெயர், விடிஞ்சா கல்யாணம், ஆனா மாப்ளயக் காணோம்:))) எனவே எஸ்ரா அவர்கள் தப்பித்துக் கொண்டார். நிச்சயமாக எஸ்ரா அவர்களின் கற்பனை உலகை உயிருடன் வடிக்கக் கூடிய ஓவியருடனே அவர் இணைந்து பணியாற்றுவார் என எண்ணுகிறேன். மீண்டும் வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  23. Hi, First of all many congratulation to you. I'm really happy that Mr.S.R has recommended your Blog to comics’ fans. You deserve for it.
    This blog is very nice. After I read this I watched whole film. It was really interesting enjoyed it. Thx for introducing good books and movies. Keep it up.

    ReplyDelete
  24. டேவிட், உங்கள் வாழ்த்துக்களிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் என் மனதார்ந்த நன்றி.

    ReplyDelete