வணக்கம் அன்பு நண்பர்களே,
சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை அப்பதிவிற்குரிய கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.
இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.
நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா? என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் [ ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது ]. எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு.
ELIZABETH KOSTOVA என்பவரின் அற்புதமான முதல் நாவல் தான் THE HISTORIAN. ஒர் சிறுமியின் தேடல், எவ்வாறு தன் குடும்பத்துடன் இருளாக இணைந்திருக்கும் ஒர் பயங்கரமான ரகசியத்தை வெளிக்கொணர்கிறது என்பதே கதை.
15ம் நூற்றாண்டில் இருளாட்சியை வழங்கிய VLAD THE IMPALER- செல்லப் பெயர் ட்ராகுயூலா- அவர்களின் வரலாற்றை, உலகம் முழுதும் பரவியிருக்கும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், துறவி மடங்கள் என சுற்றி சுற்றி வந்து தன் மயக்கும் சொற்களால் வாசகர்களிற்கு தந்திருக்கிறார் நாவலாசிரியை.
நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது. நீங்கள் அவரைப்பற்றி கொண்டிருந்த பார்வையை இந்நாவல் நிச்சயம் மாற்றும். நாவலைப் படிக்க சொல்லி ஆலோசனை தந்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு நன்றி.
நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா சிரஞ்சீவிகளும் தம் வாழ்வை ரோஜாப் படுக்கைகளாகக் காண்பதில்லை, சிலருடைய வாழ்க்கை நித்திய போராட்டாமாகவும் அமைந்து விடுவதுண்டு.
கதைக்குள் செல்லும் தருணம் இதோ…
மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது. அவனை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டு மக்கள். குறிப்பாக தன் கண்களினால் அவன் நோக்கி கொண்டிருக்கும் இக்கிராமத்தின் மக்கள். தன் புதல்வனான மரியுஸை மட்டும் இக்கிராமத்தின் ஆலய மதகுருவிடம் அவன் விட்டு செல்லாமலிருந்தால்,இக்கிராமத்திற்கு அவன் தன் சுவாசக் காற்று வருவதைக் கூட அனுமதித்திருக்க மாட்டான்.
குதிரை கிராமத்தை அண்மிக்கும் போதே பனிப்புகாருடன் மூச்செனக் கலந்திருந்த ஒர் அன்னியத்தன்மை அவனைச் சூழ்கிறது. எங்கே இக்கிராம மக்கள்? அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள்? ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது. குதிரை, தேங்கி நிற்கும் நீர்க்கண்ணாடிகளில் தன் உடல் பார்த்து நகர்கிறது. அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான்.
மரியுஸ்... என தன் மகனின் பெயரை உரக்க கூறும் அவனை சுற்றி ஆலயத்தின் இருள் மென்மையாக படர்கிறது. ஒர் வலி கலந்த முனகல் ஒலி அந்த மென்மையான இருளினூடாக தடுமாறியவாறே அவன் காதுகளில் வந்து விழுகிறது. ஒலி வந்த அந்த திசை நோக்கி நகர்கிறான் அவன்.
"நீ தான் மரணமா.." கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.சுவரில் தொங்கும் சிலுவையின் முன்பாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் பீடத்தில் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான் மரியுஸ்.
மரியுஸின் விலாவை ஊடுருவிய கூரான வாள், அவன் முதுகைத்துளைத்து வெளியேறி சிலுவையை நோக்குகிறது. அது பிரார்த்திக்கிறதா அல்லது பிராயச்சித்தம் வேண்டுகிறதா. தன் மகனை கைகளில் ஏந்தும் அவனின் இதயத்தில் அவன் மகனின் வலி பரவுகிறது. அன்பு மகனின் வேதனையை தன் வாளினால் முடித்து வைக்கிறான் அவன்.
ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா.
ஆலயத்தின் இருள் வதியும் மூலை ஒன்றிலிருந்து முன்னால் வருகிறான் சிறுவன் பிரெட்ரிக். தன் மகனை கரங்களில் ஏந்தியபடி ஒடிந்து போய் இருக்கும் அவனிடம் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணில் படிந்துள்ள பயங்கரங்களுடன் விபரிக்கிறான் பிரெடரிக்.
கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்.
சாத்தானுடன், ஒர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட சூனியக்காரனை தேடி வந்த அவர்களிற்கு அவன் கிடைக்கவில்லை. கிடைத்த கிராம மக்களை தூக்கிலிடுகிறார்கள், வாட்களின் பசி தீரும் வரையில் சில மக்களை கூறு போடுகிறார்கள். எஞ்சியவர்களை மிருகங்கள் போன்று சிறைப்பிடித்து சென்று விட்டார்கள். கிராமத்தில் எஞ்சி நிற்பது மரணத்தின் நிழலே.
இதனைக்கூறி முடிக்கும் பிரெடரிக்கின் கண்களில் உயிர் இல்லை.மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது.
இறந்தவர்களின் உடலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக் குவித்து எரிக்கிறான் அவன். தன் மகனை மாலைச், சூரியக் கதிர்களின் தழுவலில் உள்ள ஒர் மரமொன்றின் அருகில் புதைக்கிறான். அவன் பெயர் அண்ட்ரெஜ் டுலனி. எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.
அண்ட்ரெஜ் தன் மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க விரும்பவில்லை. சிறைப் பிடிக்கப்பட்ட கிராம மக்களை விடுவிக்க விரும்பும் அவன், அவர்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கின்றான். பிரெட்ரிக்கையும் தன்னுடன் அழைத்து செல்கிறான். செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.
பிரயாண அசதியில் ஒய்வெடுக்க ஒதுங்கும் அவர்களை, ரகசியமாக பின் தொடர்ந்து வந்த மூன்று மத வெறியர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ.
இரண்டு மதப்பாதுகாவலர்கள் சொர்க்கத்தினை நோக்கி சென்றுவிட, ஒருவன் மட்டும் காயப்பட்டு வீழ்கிறான். மோதலின் நடுவே,தொலைவில் மரங்களின் எல்லையில் இருந்தவாறே மோதலை அவதானித்து கொண்டு நின்ற, தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான். தன் காயங்களைப்பற்றி சிறிதும் கவலையுறாத அண்ட்ரெஜ் , காயம்பட்ட மதவெறியனை விசாரிக்கிறான்.
அண்ட்ரெஜ்ஜின் குடும்பமான டுலனிகள் சாத்தானின் ஏவல் செய்பவர்கள். அவர்களால் தான் மொத்தக்கிராமமும் பலியானது எனக்கூறும் அவன், அண்ட்ரெஜின் வெட்டுக்காயங்கள் யாவும் அடையாளமே தெரியாது உடனடியாக குணமானதை சுட்டிக்காட்டி அலறுகிறான். அவனை உலுக்கும் அண்ட்ரெஜ், கிராமத்தை அழிக்க உத்தரவிட்டவனின் பெயரை கூறச் சொல்கிறான்.
மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது......
கிராம மக்களை அண்ட்ரெஜ் விடுவிக்க முடிந்ததா? டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன? யார் அந்த தங்க முகமூடி வீரன்? அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன? மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான்? இவ்வாறான கேள்விகளை மனதில் எழுப்ப வைத்து முடிவடைகிறது கதை. முதலாவது ஆல்பம் மட்டுமே வெளியாகியுள்ள இக்கதையின் தொடர்ச்சி வெளிவர காலதாமதம் ஏன் என்பதனை பின்பு பார்ப்போம். வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது.
CHRONICLE OF IMMORTALS என ஆங்கிலத்தில் தலைப்பிடக்கூடிய இவ்வால்பம் 2004ல் ஜெர்மன் மொழியில் வெளியாகியது. பின்பு பக்கே பிரசுரத்தால் [EDITIONS PAQUET] பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது. வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.
ஜெர்மனியின் ஸ்டீபன் கிங் என புகழப்படும் WOLFGANG HOHLBEIN உடைய நாவல் ஒன்றை தழுவி இக் காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹொல்வின் சர்வதேச அளவில் பிரபலமாகா விட்டாலும், ஜெர்மனியில் மதிக்கப்படும் மாயஜால, விஞ்ஞானக் கற்பனை, கதை எழுத்தாளர் ஆவார்.
காமிக்ஸ் தொடரின் கதை இலாகாவை பொறுப்பேற்றிருப்பவர் BENJAMIN VON ECKARTSBERG. 39 வயதை தொடும் ஜெர்மனியர். L'ARTILLERIE எனப்படும் கலைக்கூட உறுப்பினர். 1993 முதல் சினிமா, விளம்பரம், பதிப்பகங்கள் என தன் பணியை தொடர்ந்திருக்கிறார். நாவலில் இருந்து கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றும் சிரமமான பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
கதைக்கு, ரசிகர்களின் உள்ளங்களை மயக்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்திருப்பவர், THOMAS VAN KUMMANT, வயது 37, ஜெர்மன் நாட்டவர். மேலே குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இவரும் ஒர் உறுப்பினர், பதிப்பகங்களிற்கும், பத்திரிகைகளிற்கும் தன் சேவையை வழங்குகிறார்.இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது.
மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.
அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் இவ் வகை கதைகளிற்கு இருக்கிறார்கள். நிலக் கீழ் ரயில்களில் J.R.R TOLKEIN, ROBIN HOBB, TERRY GOODKIND ஆகியோரின் நாவல்களை படித்தவாறே கற்பனை உலகில் பயணம் செய்வதில் வளர்ந்தவர்களே அதிகம். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் நான் இவ்வகை நாவல்களை படிக்க தவறுவதில்லை. என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.
ஆல்பத்தின் தரம்****
நண்பர்களே பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிந்திடுங்கள்.
ஆர்வலர்களிற்கு