நீயு பெட்போர்ட், ஒர் துறைமுக நகரம். நகரம் குளிர் காலத்தின் பனி வீச்சில் ஆழ்ந்திருக்கிறது. பனி வீச்சைப் பொருட்படுத்தாது நகர மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து ஒர் புள்ளியாக வெளிப்படுகிறான் இஸ்மாய்ல்.
நண்டுக்கெட் எனும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் கப்பல்களை அவன் நீயு பெட்போர்ட் துறைமுகத்தில் தேடுகிறான். அத்துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டது என்பதை அறியும் அவன், நகரத்தில் தங்குவதற்கு ஒர் இடம் தேடி அலைகிறான்.
கடுமையான குளிரில் துவண்டு ஒர் தங்கும் விடுதியை அடையும் இஸ்மாய்ல், அதன் உரிமையாளன் ஜோனாஸிடம் தான் தங்குவதற்கு அங்கு இடமிருக்கிறதா என வினவுகிறான்.
தென் கடலை நோக்கி பல கப்பல்கள் புறப்படத் தயாராக இருப்பதால் அவனிற்கு நகரத்தில் தங்குவதற்கு இடம் கிடைப்பது கடினம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்லிற்கு இஷ்டம் எனில் அவன், விடுதியில் தங்கியிருக்கும் ஒர் திமிங்கல வேட்டையனுடன் அறையொன்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்ல் வேறு வழியின்றி சம்மதிக்கிறான். விடுதியில் குடித்துக் கொண்டிருக்கும் நபர்கள் திமிங்கல வேட்டையனுடன் உறங்குவதை விட ஒர் குரங்குடன் உறங்கலாம் எனவும், அவன் ஒர் மிருகம் எனவும் கிண்டல் பண்ணுகிறார்கள்.
குடிப்பவர்களின் பேச்சிற்கு காது கொடுக்காதே என இஸ்மாய்லிடம் கூறும் ஜோனாஸ் அவனிற்கு மதுவும், பின் உணவும் பரிமாறுகிறான். அதன் பின் இஸ்மாய்லை அவன் அறைக்கு அழைத்து செல்கிறான் ஜோனாஸ். கையில் ஒர் லாந்தர் விளக்குடன் படிகளில் ஏறும் ஜோனாஸிடம் நண்டுக்கெட்டில் கப்பல் ஏதாவதில் தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரிக்கும் இஸ்மாய்லிற்கு, அது முன் போல் ஒர் சுறுசுறுப்பான துறைமுகம் இல்லை எனத் தெரிவிக்கிறான் ஜோனாஸ்.
விடுதியின் ஒர் அறையில் இஸ்மாய்லை விட்டுச் செல்கிறான் ஜோனாஸ். அறையை சுற்றிப் பார்க்கும் இஸ்மாய்ல், அறையின் ஜன்னலருகே ஒர் சிறிய, கரிய சிலை இருப்பதை அவதானிக்கிறான்.ஜன்னலின் வழியாக உள்ளே வரும் தெரு விளக்குகளின் பிரகாசத்தில், அமர்ந்த நிலையில் உள்ள, ஒர் வழுக்கைத் தலை மனிதன் போன்ற தோற்றம் கொண்ட அச் சிலையை வியப்புடன் நோக்கும் இஸ்மாய்ல், உன் எஜமான் பற்றி சிறிது எனக்கு சொல்வாயா என்கிறான். பின்பு கட்டிலில் படுக்கும் அவன் உறங்கிப் போகிறான்.
இரவில் அறையில் தூக்கம் கலைந்து எழும் இஸ்மாய்ல், கரிய சிலையின் முன்பாக உயர்ந்த ஒர் மனிதன் நிற்பதைக் காண்கிறான். சிலையின் முன் சிறிய மரச்சீவல்களை எரிய விட்டு சிலையை வணங்குகிறான் முகமெல்லாம் வினோதமான பச்சை குத்தப்பட்டுள்ள அம் மனிதன். பின்பு கட்டிலை நெருங்கும் அவன் தன் ஆடைகளை களைய ஆரம்பிக்கிறான். ஒர் நீண்ட சுங்கானை வாயில் வைத்து புகைக்க தொடங்குகிறான். புகையின் நெடி தாளாது தும்மும் இஸ்மாய்லைக் கண்டு கொள்ளும் அம்மனிதன் தன் கோடாரி ஒன்றினால் இஸ்மாய்லை தாக்க வருகிறான், பயந்து போய், ஜோனாஸ் எனக் கூவுகிறான் இஸ்மாய்ல்.
அறைக்கு ஓடி வரும் ஜோனாஸ், திமிங்கல வேட்டையனை அமைதிப் படுத்தி, இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறான். அதன் பின் அமைதியாகும் வேட்டையன் இஸ்மாய்லை நிம்மதியாக உறங்கச் சொல்கிறான். சிறிது நேரத்தின் பின்பு கட்டிலில் ஏறும் வேட்டையன் இஸ்மாய்லை அணைத்த படியே தூங்கிப் போகிறான்.
காலையில் கண் விழிக்கும் இஸ்மாய்ல், திமிங்கல வேட்டையன் நிர்வாணமாக நின்றபடி, திமிங்கலம் குத்தும் ஈட்டியால் சவரம் செய்து கொள்வதைக் கண்டு கொள்கிறான். தான் வசித்த தென் பசுபிக் தீவின் இதமான காலநிலையை எண்ணி ஏங்கும் வேட்டையனிடம் அவன் பெயர் என்ன என வினவுகிறான் இஸ்மாய்ல். தன் பெயர் குவிகெக் எனக் கூறும் வேட்டையன், தன் பூட்ஸ்களை அணிவதற்காக கட்டிலின் அடியில் புகுந்து கொள்கிறான். இதனைக் கண்டு வியக்கும் இஸ்மாய்ல், தாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஒர் கப்பலை தேடலாமா என குவிகெக்கிடம் வினவுகிறான்.
ஒர் ஞாயிறு அன்று நகரத்தின் திமிங்கல வேட்டையர்களின் ஆலயத்திற்கு செல்கிறார்கள் இருவரும். செல்லும் வழியில் தங்கள் உழைப்பில் கொழுக்கும் மனிதர்கள் தங்களை மதியாத தன்மை பற்றி குவிகெக்கிடம் பேசுகிறான் இஸ்மாய்ல். ஆலயத்தை அடையும் நண்பர்கள் அதன் உள்ளே நுழைகிறார்கள். சிறு கப்பல் போன்ற தோற்றம் கொண்ட பீடத்தில் இருந்து போதித்துக் கொண்டிருக்கிறார் குரு. ஆலயத்தின் சுவர்களில் கடலில் திமிங்கல வேட்டையில் பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மத குரு, திமிங்கலம் ஒன்றால் விழுங்கப்பட்டு பின் கரை ஒன்றில் உயிருடன் உமிழப்பட்ட புனிதரின் கதையைச் சுற்றிப் போதிக்கிறார். தங்கள் தீவுகளில் மனிதன் திமிங்கிலத்தினால் விழுங்கப் பட்டால் அவன் இறந்து விடுவான் என்கிறான் குவிகெக். உங்கள் ஊரில் அற்புதங்களை நம்புவது கிடையாதா எனக் கூறிச் சிரிக்கிறான் இஸ்மாய்ல்.
குவிகெக் தன் தீவில் இருந்து எடுத்து வந்த பாடம் செய்யப்பட்ட மனிதத் தலையொன்றை நகரத்தில் விற்பதற்கு முயல்கிறான், இம் மனிதனின் தலையை ஏன் பாடம் செய்திருக்கிறாய் என அவனிடம் கேட்கிறான் இஸ்மாய்ல். அம் மனிதன் ஒர் பெரிய வீரன் என்றும், அவன் உடலை, அவன் சக்தியைப் பெற தாங்கள் உண்டு விட்டதாகவும் எஞ்சியது தலை என்றும் பதிலளிக்கும் குவிகெக்கிடம், உன் வீடு, குடும்பம் என்பதை நீ இழந்ததாக உணரவில்லையா என்கிறான் குவிகெக். ஒர் நாள் தான் தன் தீவிற்கு திரும்புவேன் எனக் கூறும் குவிகெக், அதற்கு முன் உங்களிடமிருந்து நல்ல விடயங்களை என் மக்களிற்காக தான் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்கிறான். இஸ்மாய்லோ தான் இதற்கு எதிர் மாறாக எண்ணுவதாக கூறுகிறான்.
நகரில் இருந்த சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பாடம் செய்யப் பட்ட மனிதத் தலையை, இஸ்மாய்லின் ஆலோசனையைக் கேட்டு விற்று விடுகிறான் குவிகெக். பின் நண்டுக்கெட் துறைமுகம் நோக்கி செல்லும் ஒர் கப்பலில் ஏறிக் கொள்கிறார்கள் நண்பர்கள். கப்பலில் இருந்த ஒர் நபர் குவிகெக்கை குரங்கு என்று கூறி நகைக்க அவனை அடித்துவிடுகிறான் குவிகெக். பயணத்தின் போது பாய் மரம் தலையில் மோதி கடலில் விழும் ஒருவனை தன் உயிரையும் மதியாது பாய்ந்து காப்பாற்றுகிறான் குவிகெக். அவனைக் குரங்கெனப் பழித்த நபர் அவனிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்காக உண்மையில் மனம் வருந்துவதாக தெரிவிக்கிறான். கப்பல் நண்டுக்கெட் துறைமுகத்தை அடைகிறது.
மணல் திட்டாக காட்சியளிக்கும் நண்டுக்கெட் நகரத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ என வியக்கிறான் இஸ்மாய்ல். பயணத்தினால் களைப்படைந்திருக்கும் நண்பர்கள் அன்றிரவு விடுதி ஒன்றில் தங்கிக் கொள்கிறார்கள். மறு நாள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களினை பார்வையிடும் இஸ்மாய்ல், பெக்கொட் எனப்படும் ஒர் பழைய கப்பல் ஒன்றில் வேலை கேட்க தீர்மானிக்கிறான். குவிகெக்கும், இஸ்மாய்லும் கப்பலில் ஏறுகிறார்கள். கப்பலின் மேல் தளத்தில் திமிங்கிலத் தாடை எலும்பால் ஒர் கூடாரம் அமைகப்பட்டிருக்கிறது. அதனுள் இருந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கும் பெலெக் என்பவனிடம் இக் கப்பலில் தங்கள் இருவரிற்கும் வேலை கிடைக்குமா எனக் கேட்கிறான் இஸ்மாய்ல்.
சில விசாரிப்புகளின் பின் இஸ்மாய்லை கப்பல் ஊழியனாகவும், குவிகெக்கை திமிங்கல வேட்டையனாகவும், பெக்கொட் கப்பலில் மூன்று வருடங்களிற்கு வேலையில் ஒப்பந்தம் செய்கிறான் பெலெக். பெக்கொட்டின் காப்டனான ஆஹாப்பை அவர்கள் விரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் எனவும், அவனை அவன் ஒற்றைக் காலை வைத்து அடையாளம் கண்டு பிடிப்பது சுலபம் எனவும் கூறுகிறான் மற்றுமொரு மாலுமியான வில்டாட். காப்டன் ஆஹாப் ஒர் மிகச் சிறந்த கடலோடி என்றும், ஒர் திமிங்கல வேட்டையின் போது அவன் ஒரு காலை திமிங்கலம் ஒன்று கடித்து துண்டாக்கி விட்டது என்றும் கூறுகிறான் வில்டாட்.
பெக்கொட்டில் பயணத்திற்கு தேவையான பொருட்கள் ஏற்றப்படுகின்றன, பின் கப்பலில் பணியாற்றும் ஊழியர்களின் உடமைகள் ஏற்றப்படுகின்றது. யாவும் தயார் என்ற நிலையில் திமிங்கல வேட்டைக்கு புறப்படுகிறது கப்பல். வில்டாட்டும், பெலெக்கும் கப்பலை வழியனுப்பி இன்னும் மூன்று வருடங்களில் திமிங்கில எண்ணெய் நிரம்பி வழியும் கப்பலாகக் கொண்டு வாருங்கள் எனக் கூறிப் பிரிகிறார்கள். இந்நிலையில் கூட கப்பல் காப்டன் ஆஹாப் தன் அறையை விட்டு வெளிவராது இருப்பது கப்பல் ஒட்டுபவர்களிற்கு வியப்பை அளிக்கிறது.
இஸ்மாய்ல், காப்டன் ஆஹாப்பை பார்ப்பதற்கு ஆவல் கொள்கிறான். கப்பலின் கீழ் தளத்திளுள்ள அறையொன்றில் உரையாடும் ஊழியர்கள் காப்டன் ஆஹாப்பின் திமிங்கல என்பிலான கால் அவன் அறையில் ஊண்டி ஓசை எழுப்புவதை இஸ்மாய்லிற்கு சுட்டிக் காட்டுகிறார்கள். காப்டன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கான அறிகுறி அது. ஆஹாப் குற்றவாளியைத் தேடுகிறான் என்கிறான் ஒர் ஊழியன்.
யார் அந்தக் குற்றவாளி என வினவும் இஸ்மாய்லிற்கு, கடலில் உலவும் கொடிய பற்களை உடைய ஒர் வெண் திமிங்கலமே அக் குற்றவாளி எனவும், அது காப்டன் ஆஹாப்புடனான முன்னைய ஒர் சந்திப்பில் அவன் கால் ஒன்றைக் கடித்து எடுத்தது தான் அது செய்த குற்றம் எனவும், அத் திமிங்கலத்தின் பெயர் மொபி டிக் எனவும் கூறுகிறான் அவன். ஆவல் உந்த மேல் தளத்திற்கு ஏறி காப்டன் ஆஹாப்பை மறைந்திருந்து பார்க்கிறான் இஸ்மாய்ல்.
கப்பலின் பயணம் தென் கடலை நோக்கி தொடர்கிறது. ஒர் நாள் கப்பலின் மேற்தளத்திலிருந்த மணி ஒலிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள் யாவரும் மேற்தளத்தில் ஒன்று கூடுகிறார்கள். காப்டன் ஆஹாப் அவர்கள் மத்தியில் பேச ஆரம்பிக்கின்றான். அவன் கையில் ஒர் தங்க நாணயம் இருக்கிறது. கடலில் வெண் திமிங்கலத்தைக் தனக்கு முதல் காட்டும் நபரிற்கு அத் தங்க நாணயம் சொந்தமாகும் என்கிறான் ஆஹாப். பின்பு கப்பலின் பாய் மரமொன்றில் அத் தங்க நாணயத்தை ஆணியால் பொருத்துகிறான். திமிங்கல வேட்டை ஆரம்பமாகப் போவதும், தங்க நாணயத்தின் மீதான ஆசையும் சேர்ந்து கப்பல் ஊழியர்களை உற்சாகம் ஆக்குகிறது. தன் அறைக்கு திரும்பும் ஆஹாப், மொபி டிக், நீயும் என்னை இப்போது தேடிக் கொண்டிருப்பாய் என தன் மனதினுள் கூறிக் கொள்கிறான்.
பெக்கொட் கப்பல் கடலில் வாழும் நுண்ணுயிர்க் கூட்டங்களான பிளாங்டன்கள் நிறைந்த கடல் பகுதியை அடைகிறது. திமிங்கலங்களின் பிரதான உணவு இந் நுண்ணுயிர்களே. கப்பலின் உச்சியில் கடலைக் கண்காணிக்கும் பணியில் இருக்கும் இஸ்மாய்ல், தூரத்தில் திமிங்கலக் கூட்டமொன்றைக் காண்கிறான். உரக்கக் கத்தி இதனை மற்றவர்களிற்கு தெரிவிக்கிறான் இஸ்மாய்ல். கப்பல் பரபரப்பாகிறது. சிறிய படகுகளில் ஆட்கள் ஏறிக் கொள்ள அவை கடலினுள் இறக்கப் படுகிறது தூரத்தில் நீரில் மூழ்குவதும், எழுவதுமாய், நகரும் பெரும் பாறைகள் போல் வந்து கொண்டிருக்கின்றன திமிங்கலங்கள்.
கடலில் இறக்கப்பட்ட சிறு படகுகளில் இருந்தவர்கள் தங்கள் முழுப்பலத்துடன் துடுப்பு போடுகிறார்கள், அலைகள் அவர்களை தம் கரங்களால் தள்ளுகின்றன, நெருங்கி வரும் திமிங்கலமொன்றின் முதுகில் தன் ஈட்டியால் குத்துகிறான் குவிகெக், ஆனால் படகினை நோக்கி பாயும் அத்திமிங்கலம் படகைக் கவிழ்த்து விடுகிறது. படகில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்டவர்கள் கவிழ்ந்த படைகை மிதப்பாக கொண்டு மிதக்கிறார்கள். பனிப் புகார் கடலில் சூழ்ந்திருப்பதால், பெக்கொட் கப்பல் அச் சிறிய படகின் மீது மோதி அதனை உடைக்கிறது. கடலில் வீழ்ந்தவர்கள் கயிறுகள் மூலம் பெக்கொட் கப்பலிற்கு ஏற்றப் படுகிறார்கள். சில நாட்கள் கழிகின்றன, இம்முறை கடலில் தெரியும் வெள்ளை நிற ராட்சத கணவாய் ஒன்றை மொபி டிக் என தவறாக அடையாளம் கண்டு அதனை துரத்தி ஏமாறுகிறான் ஆஹாப். அவன் வாழ்வின் லட்சியம் மொபி டிக்கின் கதையை முடிப்பது என்பதாக இருக்கிறது.
தொடரும் நாட்களில் அவர்கள் வெற்றிகரமாக திமிங்கல வேட்டையை நிகழ்த்துகிறார்கள். திமிங்கலக் கூட்டங்களை சிறுபடகுகளில் நெருங்கும் அவர்கள் , திமிங்கலங்களின் முதுகில் ஈட்டியால் குத்துகிறார்கள். காயத்தினாலும் போராட்டத்தாலும் களைப்படைந்து விட்ட திமிங்கலம், ஈட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள கயிறுகள் மூலம் கப்பலை நோக்கி இழுத்து வரப்படுகின்றது. கப்பலின் அருகில் வைத்து பிணைக்கப்படும் திமிங்கலத்தின் கொழுப்பு நிறைந்த மேல் தோல் பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது. இப்பகுதிகள் உடனடியாக கப்பலிலுள்ள பெரும் அண்டாக்களில் கொதிக்க வைக்கப்பட்டு திமிங்கல எண்ணெய் காய்ச்சப்படுகிறது. உயிரோடு வைத்து வெட்டப்படும் திமிங்கலத்தின் ரத்தம் கடலில் கலக்கிறது, அவ்வாடையினால் கவரப்படும் சுறாமீன்கள்,திமிங்கலத்தின் மீது பாய்ந்து தாக்குகின்றன. மனிதர்களுக்கும் சுறாக்களிற்குமிடையிலான மோதலில் சுறாக்கள் விரட்டி அடிக்கப்படுகின்றன.
இன்னுமொரு வேட்டையின் போது, ஆஹாப்பின் அவசரத்தை புரிந்து கொள்ளாது, கயிறுகளால் கப்பலில் பிணைக்கப் பட்டுள்ள திமிங்கலம் ஒன்றின் தலையில் உள்ள துவாரம் வழி திமிங்கலத்தின் உள்ளிறங்குகிறான் தெஸ்தாகோ எனும் வேட்டையன், அச் சமயத்தில் திமிங்கலத்தை பிணைத்திருந்த கயிறுகள் தளர்ந்து விட திமிங்கலத்துடன் கடலினுள் மூழ்குகிறான் தெஸ்தாகோ. தன் உயிரைக் கூட பொருட்படுத்தாது கடலினுள் பாய்ந்து விடுகிறான் குவிகெக். மாலுமிகள் கடலின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இறந்திருப்பார்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் எண்ணங்களை தகர்க்கும் வண்ணம் திறமையாகச் சுழி ஓடி திமிங்கலத்தின் உடலிலிருந்து தெஸ்தாகோவை மீட்கிறான் குவிகெக். ஆனால் ஆஹாப்பின் மனம் மட்டும் மொபி டிக்கை தேடிக் கொண்டிருக்கிறது. கடலில் அரிதாக குறுக்கிடும் கப்பல்களில் மொபி டிக்கை பற்றியே விசாரிகிறான் அவன்.
தொடரும் கடற்பயணத்தில் குவிகெக் சுகவீனம் அடைகிறான். தான் இறந்து விட்டால் தன்னை கடலில் மிதக்கவிட சவப்பெட்டி வடிவான சிறு தோணியொன்றை தயாரிக்க சொல்கிறான் அவன். குவிகெக் இறந்து விடுவான் என யாவரும் எதிர்பார்த்திருக்க, அவன் நோயிலிருந்து மீண்டு விடுகிறான். ஒர் நாள் கப்பலின் உச்சியில், இஸ்மாய்லும், குவிகெக்கும் இணைந்து கடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். கடலின் கரும் ஆழத்திலிருந்து, மின்னல் போல் பிரகாசமாக ஒன்று நீந்திச் சென்று கொண்டிருப்பதை இருவரும் கண்டு விடுகிறார்கள். தங்க காசு தங்களிற்கே என்ற உவகையில் மொபி டிக் எனக் கத்துகிறார்கள் இருவரும்.
படகுகள் கடலில் இறக்கப்படுகின்றன, ஆஹாப் வெறிபிடித்தவன் ஆகிறான். திரண்ட பனிமலை போன்று நகர்கிறது மொபி டிக், படகுகளை விலத்தி அது நீந்திச் செல்கிறது. அதனை நெருங்க படகுகளை விரைவாக ஓட்டச் சொல்லி கத்துகிறான் ஆஹாப். ஒர் கணத்தில் நெருங்கும் படகுகளை உணர்ந்தாற் போல் கடலில் மூழ்குகிறது மொபி டிக். அலைகள் படகை தட்டும் சத்தம், மனித இதயஙகளின் துடிப்போடு கை கோர்த்துக் கொள்கிறது.
ஆஹாப்பின் கண்கள் கடலின் ஆழத்தை கிழித்து விடுவது போல் நோக்குகின்றன, அவன் கையில் உள்ள ஈட்டிக்கு உயிர் வந்தாற் போல் தோன்றுகிறது. அவன் படகை குறிவைத்தால் போல் ஆழத்திலிருந்து அலையாய் எழுகிறது மொபி டிக். வெறி கொண்டு கத்தியவாறே தன் ஈட்டியை அதன் மீது வீசுகிறான் ஆஹாப். ஈட்டி மொபி டிக்கின் கண்களின் அருகில் பாய்கிறது, ஈட்டியுடன் விலகி நீந்தும் மொபி டிக், சிறிது தூரம் நீந்திய பின் ஆஹாப்பின் படகை நோக்கி தன் வாயைத் திறந்தவாறே பாய்கிறது. இரண்டாவது ஈட்டியை கையில் எடுத்துக் காத்திருக்கிறான் ஆஹாப், ஆனால் திமிங்கலத்தின் வேகத்தின் முன்னால் அவன் படகின் வேகம் தோற்று விட, படகை நேரே தாக்குகிறது மொபி டிக். உடைந்து நொருங்கும் படகில் இருந்து கடலில் வீழ்கிறான் ஆஹாப். அவன் திமிங்கல என்புக் காலின் பாரம், அவனை கடலின் படுக்கைக்கு மீளாத் துயிலுக்கு அழைத்து செல்கின்றது.
தன்னை சீண்டிய எவரும் உயிருடன் திரும்பல் ஆகாது என்பது போல் ஏனைய படகுகளையும் தாக்கி நொருக்குகிறது மொபி டிக், பெக்கொட் கப்பலுடன் சென்று வேகமாக மோதுகிறது அது, அந்த அதிர்ச்சியில் ஒர் கணம் மேல் தூக்கப்படும் பெக்கொட், அனைவரின் நம்பிக்கைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கடலின் ஆழம் நோக்கி இறங்குகிறது.
சில நாட்களின் பின் கடலில் ஒர் மிதப்பில் மிதந்து வரும் இஸ்மாய்ல், மாலுமிகளால் காப்பாற்றப்படுகிறான். பெக்கொட்டில் இருந்து உயிருடன் மீண்டது அவன் மட்டுமே. குவிகெக் இறந்து விட்டான். அவன் இறந்த உடலின் பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி வடிவத் தோணியே இஸ்மாய்லை உயிருடன் நரகத்திலிருந்து மீட்டு வந்தது. கப்பலில் ஏறும் இஸ்மாய்ல் வெறித்த பார்வையால் கடலில் எழும் வெண் அலைகளை நோக்குகிறான். அவன் வாய் மட்டும் மொபி டிக் எனும் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது.
ஆங்கில செவ்விலக்கிய நாவல்களில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படும் மொபி டிக் எனும் நாவல் ஹெர்மன் மெல்வில் எனும் அமெரிக்க எழுத்தாளாரால் எழுதப்பட்டது. 1851ம் ஆண்டு இந் நாவல் பிரசுரிக்கப்பட்டது. மொபி டிக், ஆஹாப், இஸ்மாய்ல், குவிகெக் எனும் பாத்திரங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. மொபி டிக், மனிதனால் ஜெயிக்கப் பட முடியாத ஒர் சக்தியாக நாவலில் உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
இச் சித்திர நாவலில் மெல்வில்லின் நாவலில் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டு, காமிக்ஸ் வாசகர்களின் வேகத்திற்கமைய தொய்வில்லாது கதை அமைக்கப் பட்டிருக்கிறது. இஸ்மாய்லிற்கும், குவிகெக்கும் இடையில் மலரும் நட்பு, குவிகெக் வழியாக இன்னொரு கலாச்சாரத்தை மதிக்க ஆரம்பிக்கும் இஸ்மாய்ல், குவிகெக்கின் வீர தீரச் செயல்கள், வேறுபட்ட மத நம்பிக்கைகள், திமிங்கல வேட்டை என நகரும் கதையில் கதையின் முக்கிய பாத்திரமான காப்டன் ஆஹாப்பினதும், மொபி டிக்கினதும் பாத்திரங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. குவிகெக்கே மனதில் நிற்பவனாகிறான். கதையின் மிக முக்கிய பகுதியான மொபி டிக்குடனான மோதலின் பக்கங்கள் உணர்ச்சிகள் குறைந்த நிலையில் காணப்படுகின்றன. கதையும் திடீரென முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. இச்சித்திர நாவலிற்கான கதையை அமைத்திருப்பவர் JEAN ROUAUD எனும் பிரெஞ்சுக்காரர். மெல்வில்லின் கதையை முழுமையான அதன் சுவையுடன் காமிக்ஸ் ஒன்றில் தர முடியாது என்பது உண்மை. 500 பக்கங்களிற்கு மேல் கொண்ட நாவல் அது. 100 பக்க சித்திர நாவலிற்குள் அதனைச் சுருக்குவது என்பது முடியாத காரியம். நாவலை ஏற்கனவே படித்த வாசகர்கள் நாவலின் முன் இக் காமிக்ஸ் தூசு எனலாம், ஆனால் இச் சித்திர நாவலை தோளில் தாங்கி நிற்கின்றன கதையில் இடம்பெறும் சித்திரங்கள்.
நீயு பெட்போர்ட் நகரில் பனி விழும் காட்சியில் ஆரம்பித்து, துறைமுக நகர்களின் வேதனையான இருளையும், குளிரையும் எம்மில் புகுத்துகின்றன சித்திரங்கள். மங்கிய ஒளியில் நகரும் பக்கங்களில், தூரிகையால் உணர்ச்சிகளை பாத்திரங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார் ஓவியர். தென் பசுபிக் கடலை நெருங்கும் போது சற்று ஒளி பெறும் பக்கங்களில் மின்னலென தோன்றி மறைவது மொபி டிக் மாத்திரமே. திமிங்கல வேட்டைத் தருணங்களில் கடல் செங்கடலாக மாறிவிடுகிறது. கதையின் ஒர் தருணத்தில் கூட மனதை மயக்கும் சூரிய உதயமோ, அஸ்தமனமோ கிடையாது. சிதைவுற்ற சித்திரங்களாக பாத்திரங்களையும், காட்சிகளையும் மனதில் நுரைக்க வைக்கிறார் ஒவியர் DENIS DEPREZ, இவர் பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஆவார். கதையில் இடம்பெறும் சித்திரங்கள் முதல் பார்வைக்கு நண்பர்களிற்கு பிடிக்காது போகலாம். ஆனால் மொபி டிக் எனும் இலக்கிய மாளிகைக்கு அழகான வாசல் வைத்து வரவேற்று இருக்கிறது இச் சித்திர நாவல். மொபி டிக் எனும் இலக்கிய நாவலை காமிக்ஸ் காதலர்களையும் படிக்க தூண்டுவதற்கான உந்துதலை தவறாமல் தந்து விடுவது தான் ஆசிரியரினதும், ஓவியரினதும் பெரிய வெற்றி. நண்பர்களும் நேரம் கிடைத்தால் மெல்வில்லின் நாவலைப் படியுங்களேன்.
ஆல்பத்தின் தரம்*****
ஆர்வலர்களிற்கு
மொபி டிக் நாவல் திரைப் படமாகவும் வெளிவந்திருக்கிறது. 1926 லிருந்து 1956 வரைக்கும் அது மூன்று தடவைகள் திரைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
அருகிலுள்ள போஸ்டர் 1956ம் ஆண்டில் JHON HUSTON என்பவரின் இயக்கத்தில் வெளியான மொபி டிக் திரைப்படத்தினுடையதாகும். இதில் காப்டன் ஆஹாப்பின் வேடத்தில், இயக்குனர் அல்பிரட் ஹிட்ச்ஹாக்கின் திரைப்படங்களில் கலக்கிய நடிகர் GREGORY PECKம், உலகப் புகழ் பெற்ற திரைப்படமான CITIZEN KANEன் நடிகரும், இயக்குனருமான ORSON WELLES திமிங்கல வேட்டையர்களின் ஆலய மத குருவாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். 1956ம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மெல்வில்லின் நாவலின் சிறப்பான தழுவல் எனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் பூம்பட்டா பதிப்பகம் பைகோ கிளாசிக்ஸ் இதழ்கள் வழியாக ஆங்கில இலக்கியத்தின் சிறந்த தெரிவுகளை வெளியிட்டு இருக்கிறது. பூந்தளிர் எனும் சிறுவர் இதழையும் அது தமிழில் வெளியிட்டு இருக்கிறது. மொபி டிக் கதை 1987ல் ஆங்கிலப் பதிப்பாக வெளியாகி இருக்கிறது. அதிலிருந்து சில பக்கங்களை கீழே தந்திருக்கிறேன்.
இந்த ஸ்கேன்களை எனக்கு தந்துதவிய இளம் காளை விஸ்வா அவர்கட்கு நன்றிகளை தெரிவிப்பது என் கடமையாகும்.
நண்பர்களே பதிவு குறித்து உங்கள் எண்ணங்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.
கனவுகளின் காதலரே,
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு!
பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
அடடே,
ReplyDeleteஎன்ன கொடுமை இது?
வழக்கம் போல மீ த பஸ்ட் இல்லையா? சரி, விடுங்கள்.
மீ த செகண்டு.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
கனவுகளின் காதலனே,
ReplyDeleteநீங்கள் ஐந்து ஸ்டார் வழங்கியுள்ள கதை இது. இந்த வாரம் தான் இதன் மூலக் கதையை நாவல் வடிவத்தில் படிக்க ஆரம்பித்து உள்ளேன்.
சிறு வயதில் காமிக்ஸ் வடிவத்தில் படித்தாலும் கூட இன்னமும் மறக்க முடியாத ஒரு கதை மொபி டிக். அதிலும் குறிப்பாக கதையின் ஆரம்ப வசனங்கள் "Call Me Ishmael", யாரால் மறக்க இயலும் அவற்றை?
காமிக்ஸ் வடிவத்தில் பஸ்ட் மேட் ஸ்டார்பக'ஐ தொலைத்து விட்டது வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் கூட குறைந்த பக்கங்களில் அனைத்தையும் நுழைக்க இயலாதே?
காமிக்ஸ் பரிணாமத்தில் கதையை சிறிது மாற்றியும் இருப்பார்கள். பைக்கோ காமிக்ஸ் கதையில் வரும் கேப்டன் அஹாப்'இன் முடிவு கதையில் இல்லை.
இந்த கதையை காமிக்ஸ் ஆக படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இதோ சில காமிக்ஸ் வடிவ புத்தகங்களின் லிங்க்குகள்:
c.i comics - Mediashare File = http://www.mediafire.com/?bzzdrnmzvzj
marvel comics classics =
http://www.esnips.com/doc/1e58a728-be40-4e4a-a008-3aae348c605e/Marvel-Classics-Comics-08---Moby-Dick
classics illustrated =
http://rapidshare.com/files/21005248/Classics_Illustrated_v1_005_-_Moby_Dick.cbz
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
கனவுகளின் காதலரே,
ReplyDeleteமீண்டும் தெள்ளு தமிழ் துள்ளி விளையாடும் ஒரு அற்புதப் பதிவு! அதுவும் கடலும், கடல் சார்ந்ததுமான கதைகளைக் கண்டால் காதலரின் மனம் அலையெனத் துள்ளுமென்பது அகிலமறிந்ததே!
மோபி டிக் போன்ற செவ்விலக்கியங்கள் (இந்த வார்த்தை எனக்குப் புதுசு! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!) காலத்தால் அழியாதவை!
அவற்றை அதன்பின் வரும் காலத்தில் எவர் வேண்டினும் எத்தனை முறை வேண்டினும் தனது பாணியில் கதையைக் கூறுகிறேன் என்று சிதைக்க முற்பட்டாலும் அவற்றின் தனித்தண்மையால் தலைநிமிர்ந்து நிற்கும்! அதனால் தான் அவை CLASSICS என்று வழங்கப்படுகின்றன!
உதாரனத்திற்கு ஆலன் மூர் எழுதிய இரு சித்திரத் தொடர்களைக் கொள்வோம்! முதலாவது விக்டோரியக் காலப் புதினக் கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட THE LEAGUE OF EXTRA-ORDINARY GENTLEMEN! இரண்டாவது நமது அபிமான காமிக்ஸ் நாயகர்களை நாசம் செய்த ALBION!
இதில் முந்தையது போற்றப்பட்டதும், பிந்தையது தூற்றப்பட்ட்தும் ஏனென்று பார்த்தால் எனது கருத்து புலப்படும்!
காப்டன் அஹாப் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம்! லாங் ஜான் சில்வர், டிராகுலா வரிசையில் இடம்பெறும் ஒரு சரித்திர எதிர்நாயகன்! அவன் மோபி டிக்கின் மீது கொண்டுள்ள வன்மம் இனம்புரியாதது! ஆனால் நம்மை பல வகைகளில் பாதித்துவிடும்!
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆர்ஸன் வெல்ஸ் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்! இவர்களது படங்கள் உங்களுக்குப் பிடிக்குமெனின் விரைவில் உங்களுக்கென விருந்தொன்று காத்துள்ளது! தயாராக இருங்கள்!
அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது,
உங்கள் அபிமான
பயங்கரவாதி டாக்டர் செவன்,
தலைவர்,
அ.கொ.தீ.க.
விஸ்வா,
ReplyDeleteஉங்களைப் போன்றே நானும் நாவலினை எடுத்து வைத்துள்ளேன் ஆனால் இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. படித்தே தீருவேன்.
ஆஹாப், அவரது மாலுமிகள், ஆஹாப்பின் பிடிவாதமும் அவன் மொபி டிக் மேல் கொண்ட கொலை வெறியின் முழு வீச்சு என பல பகுதிகள் ஆல்பத்தில் இல்லை இருப்பினும் நல்ல ஒர் வாசிப்பனுபவத்தை கதை தருகிறது.
ஐந்து நட்சத்திரங்கள் தந்ததிற்கு காரணம் கதையில் இடம் பெற்றுள்ள சித்திரங்களே, இல்லையேல் மூன்று நட்சத்திரங்கள் தான். ஆனால் சித்திரங்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் நண்பர்கள் மத்தியில் வேறு படும் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன்.
லிங்குகளை வழங்கியதிற்கும் உங்கள் கருத்துக்களிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் நண்பரே.
போன கமெண்ட் ரொம்ப சீரியஸாப் போயிட்டதால இதோ ஒரு கவுண்டரின் கடலும் கடல் சார்ந்த்துமானதொரு ‘பன்ச்’!
ReplyDeleteதரையில இருக்குற எல்லா மிருகமும் தண்ணிலயும் இருக்குங்கறது சரிதான்! கடல் குதிர கேள்விப்பட்டிருக்கேன்! கடல் யானை கேள்விப்பட்டிருக்கேன்! ஏன், கடல் சிங்கம் கூட கேள்விப்பட்டிருக்கேன்! அதென்னடா அது கடல் பன்னி?
-கவுண்டமணி (படம் - சின்னவர்)
தலைவர்,
அ.கொ.தீ.க.
மதிப்பிற்குரிய டாக்.7 அவர்களே,
ReplyDeleteஎவ்வளவு தான் வருடங்கள் ஓடினாலும் நீங்கள் சொல்வது போல் சில இலக்கியங்கள் அழியா வரம் பெற்றவை ஆகும்[ தற்போதைய உ-ம் வேதாள நகரம்]. மொபி டிக்கை நான் படிக்க வேண்டுமென்ற ஆசை இவ்வால்பத்தின் மூலம் நிறைவேறவில்லை, அதிகரித்து விட்டது. அது தான் அவ்விலக்கியத்தின் மகிமை. மொபி டிக் இன்னும் பல வருடங்கள் தாங்கும்.
லாங் ஜான் சில்வர், டிராகுயுலா பற்றிய சித்திரக்கதைகள் உள்ளன தரமானவை எனில் நிச்சயமாக பதிவிடுவேன்.
ஹிட்ச்காக் பற்றி சிறிது அறிவேன், ஆர்சன் வெல்ஸ் எல்லாம் கேள்விப்பட்டாலும் விக்கியை பார்த்தாக வேண்டி உள்ளது என்பதே உண்மை நிலை. உங்களின் அந்த விருந்தை நான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கிறேன். உங்களின் இன்னொரு பக்கம் கலை நயத்துடன் அதில் நிச்சயமாக வெளிப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி தலைவர் அவர்களே.
நன்றாக இருக்கிறது தல..,
ReplyDeleteவழக்கம் போல் இதெல்லாம் நான் பார்க்காத விஷயங்கள்
கனவுகளின் காதலரே,
ReplyDelete//ஐந்து நட்சத்திரங்கள் தந்ததிற்கு காரணம் கதையில் இடம் பெற்றுள்ள சித்திரங்களே, இல்லையேல் மூன்று நட்சத்திரங்கள் தான். ஆனால் சித்திரங்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் நண்பர்கள் மத்தியில் வேறு படும் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன்//
இதனை நான் மறுக்கிறேன். இந்த கதையின் சித்திரங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் இருந்தாலும் கூட (குறிப்பாக கேப்டன் அஹாப் மற்றும் குவிகெக்), கதைக்கு மட்டுமே ஐந்து நட்சத்திரங்கள் தரவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
நண்பர் ரமேஷ் அவர்களே நானும் மொபிடிக் பற்றி சில வருடங்களிற்கு முன்பாகவே அறிந்தேன். ஆனால் அதனைக் குறித்து ஒரு பதிவு எழுதுவேன் என்று எண்ணியதில்லை. நன்றாக இருக்கிறது கூறி இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.
ReplyDeleteவிஸ்வா, மெல்வில்லின் கதைக்கு நான் மதிப்பீடு வழங்க முடியுமா. அமெரிக்க இலக்கியத்தின் போற்றப்படும் சாதனை அல்லவா அது. இவ்வால்பத்தின் கதாசிரியர் ஜான் ரூவொட் இன்னும் முயற்சி செய்திருக்கலாம் என்பதனையே 3 நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டேன், கதையே மொபி டிக்காக இருக்க மொபி டிக் ஐந்து பக்கங்களில் கவுரவ வேடம் ஏற்றால் போலிருக்கும். மேலும் நீங்கள் அறிந்தவாறே ஸ்டார்பக்கின் பாத்திரம் போன்றவை முடக்கப்பட்டிருக்கும். கதையை 200 பக்கங்கள் எழுதினால் குறைந்தா போய் விடுவார் ஜான் ரூவொட். மாபி டிக் திரைப்படத்தினை நான் பார்க்கவில்லை என்பதனால் அதனைப் பற்றி விரிவாக எழுத முடியவில்லை என்ற குற்ற உணர்வு வேறு ஒட்டிக் கொண்டிருக்கிறது. தலைவர் அதை நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இவ்வாறான எண்ணப் பரிமாற்றங்களாக கருத்துக்களம் மாற்றம் பெறுவது உண்மையிலேயே மிக ஆரோக்கியமான ஒன்று. பாராட்டுக்கள் அன்பு நண்பரே.
கனவுகளின் காதலரே,
ReplyDelete//இவ்வால்பத்தின் கதாசிரியர் ஜான் ரூவொட் இன்னும் முயற்சி செய்திருக்கலாம் என்பதனையே 3 நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டேன்//
நீங்கள் கூறுவது சரிதான். ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? என்னதாம் பைகோவில் படங்கள் ஒழுங்குடன் (இங்கிலாந்து பாணியில்) வரையப்பட்டு இருந்தாலும் இந்த ஆல்பத்தின் படங்களே நம்மை கவர்வதாக இருக்கின்றன.
இன்னமும் என்னால் கேப்டன் அஹாப் முகத்தை மறக்க முடியவில்லை.
அந்த படத்தை பற்றி தனியே ஒரு பதிவே இடலாம். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
நல்ல ஒரு கதையை திறமையாக, எளிதாக கூறுவதே ஒரு காமிக்ஸ் கதை ஆசிரியரின் பணி ஆகும். அந்த வகையில் பார்த்தால் இந்த கதை ஆசிரியர் தன்னுடைய முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார் என்றே கூற வேண்டும்.
ReplyDeleteஏனெனில் ஒரு உலக காப்பியம் இருக்கும்போது (அதிலும் குறிப்பாக கேப்டன் ஆஹாப் - Best example for a flawed but lovable character) அதனை செம்மையாக மேம்படுத்த இயலாவிட்டாலும் கூட அதன் ஓட்டத்திலேயே சென்றாலே வென்று விடலாம். அதற்க்கு உதாரணங்கள் நம்முடைய ஷெர்லக் ஹோம்ஸ் காமிக்ஸ் கதைகள்.
நல்ல அருமையான படங்கள். ஆனால் ஏதோ ஒன்று (வண்ணக் கலவையோ?) குறையாகவே தெரிகிறது.
தொடருங்கள்.
அடுத்து என்ன? டிராகுலாவா? அல்லது லாங் ஜான் சில்வரா?
விஸ்வா, ஆஹாப் அறிமுகம் ஆகும் அந்தக் காட்சியில் அவரைப் பற்றி நான் வர்ணிக்காது அந்தப் பக்கத்தை தந்திருப்பேன், அது போன்றே அவர் கப்பலாட்களுடன் உரையாடும் கட்டத்தினையும் அவரின் முகத்தினை தனியே பிட்டாக தந்திருப்பேன். பதிவைப் படிக்கும் நண்பர்கள் மத்தியில் ஆஹாப்பின் சித்திரமே உணர்வுகளை உயிர்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அது. முதல் சாட்சியாக நீங்கள் இருக்கிறீர்கள்.
ReplyDeleteமேலும் ஓவியங்கள், குறிப்பாக ஆரம்பக் காட்சிகளில் என்னை நீயு பெட்போர்ட் மற்றும் நண்டுக்கெட் துறைமுகங்களிற்கு அழைத்துச் சென்று அந்த உப்புக் காற்றையும், குளிரையும், பனி வீச்சினையும், மென் இருளையும், விடுதிகளில் தவழும் சுங்கான் புகையினூடு ஒளிரும் விளக்குகளையும் உணர வைத்தன. இச்சித்திரங்கள் இல்லா விடில் நான் இப்பதிவை எழுதியிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
காமிக்ஸ் பிரியரே, சித்திரங்கள் சொல்லிக் கொள்ள கூடியதாக இல்லாவிட்டாலும் கூட ஒர் நல்ல கதை அது கூறப்படும் விதத்தில் வெற்றி பெறும். ஜான் ரூவொட் கதையை சொல்வதில் சமர்த்து ஆனால் மெல்வில்லின் நாவலை இப்படி சுருக்கியிருக்க வேண்டாமே என்பதே என் எண்ணம்.
ReplyDeleteசித்திரங்களில் உங்களிற்கு தெரியும் குறை என் ஸ்கேனிங்கினால் ஏற்பட்டதாக இருக்கலாம். கையில் இவ்வால்பம் கிடைத்தால் நீங்கள் நிச்சயம் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன். உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.
எல்லாரும் என்னென்னமோ பேசுகிறீர்கள் எனக்கு புரியவில்லை . அறிய தெரிய வேண்டியது நிறைய உண்டு எனக்கு காமிக்ஸ் பற்றி .
ReplyDeleteLovingly,
Lucky Limat
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னொரு விளக்கமும் இருக்கிறது. அடக்க முடியாத தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின்{மோபி டிக்}முன், வீம்பு கொண்ட முதலாளித்துவத்தின் தோல்வி.
ReplyDeletethanks for the comics download.
ReplyDeleteநண்பர் லக்கி லிமட், நானும் உங்களைப் போலவே எண்ணுகிறேன். அறிய தெரிய வேண்டியவை இன்னும் நிறைய உண்டு. அன்பான உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteமதிப்பிற்குரிய ராமலிங்கம் அவர்களே, ஆம் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். மொபி டிக்கின் போராட்டம் இன்று வரை தொடர்கிறது. மரியாதை திரைப்படத்திற்கு விமர்சனம் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். கருத்துக்களிற்கு நன்றி.
ரவீந்தர், உங்கள் நன்றிகள் விஸ்வாவையே சேர வேண்டும். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
//அடக்க முடியாத தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின்{மோபி டிக்}முன், வீம்பு கொண்ட முதலாளித்துவத்தின் தோல்வி//
ReplyDeleteவித்தியாசமான பார்வை.
வேறுபட்ட கருத்து.
மாறுபட்ட எண்ணம்.
நன்றி ராமலிங்கம் அவர்களே.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
நெருப்ப தண்ணி ஊத்தி அணைக்கலாம்.
ReplyDeleteஆனா, எரிமலையை தண்ணி ஊத்தி அணைக்க முடியுமா?
(நன்றி = மரியாதை படத்தில் கேப்டனை புகழ்ந்து வரும் ஒரு வசனம்).
இதைப்போல கேப்டன் அஹாப் மனதில் பழிவாங்கும் உணர்ச்சி எரிமலை போல எரிந்து கொண்டு இருக்கிறது. அதனை யாராலும் அணைக்க இயலாது. முடிவில் எரிமலையே அணைந்து பொய் விட்டதே?
ஜுடோ ஜோஸ்.
Once a cobra bit Judo Josh’ leg. After five days of excruciating pain, the cobra died.
அன்பு நண்பரே,
ReplyDeleteஒரு வித்தியாசமான சித்திரக் கதையை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். சித்திரங்களும் வழக்கத்தை விட சற்று மாறுப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை சித்திரக் கதை புத்தக வடிவே பார்த்தால் பிடிக்குமோ என்னமோ? வித்தியாசமான சித்திரங்கள்.
இந்த இலக்கியத்தை 100 பக்கங்களில் எல்லாம் சுருக்கி விட முடியாது. 800 பக்க நாவலை விவரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 2000 பக்கங்களுக்காவது சித்திரங்கள் வேண்டும். கடல், கடற்கரை மக்கள், வேட்டையாடுபவர்கள், பெக்குவா கப்பல், அதன் கேப்டன் என வர்ணிப்பு ஏராளம்.
அதன் நடை கடினமாக இருக்கும். சரளமான நடைக்கு பெயர் போன கதை கிடையாது. தீவிரமாக உள்புகுந்து விட்டால் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கக் கூடிய நாவல். முதல் தடவை தாண்ட முடியாமல் வைத்து விட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்தே மீண்டும் என்னால் படிக்க முடிந்தது. படித்த பிறகு இதற்கு முன்னாலேயே முயன்றிருக்க வேண்டுமென்ற வருத்தம் ஏற்பட்டது. வெகு சில புத்தகங்களே இவ்வாறான உணர்வினை உருவாக்கும்.
அதுபோல ஜுல்ஸ் வெர்ன் கதைகளும் சித்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என படித்திருக்கிறேன். 20000 லீக்ஸ் அன்டர் த சீ மற்றொரு க்ளாஸிக். அந்த நாவலில் வரும் நட்டிலியஸ் கப்பல் குறித்து சில மர்மங்கள் இன்றுவரை நீடிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான கடல் அனுபவம் சார்ந்த மற்றொரு நாவல். இது குறித்தும் ஏதேனும் புதிய சித்திரங்கள் வந்திருந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்நாவல் குறித்து நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. மோபி டிக் குறித்தும் கூட. கதையை விட நன்றாக இருக்கும். நடையும் இலகுவாகவே இருக்கும். நேரம் கிடைத்தால் அதனையும் படிக்கலாம்.
வழக்கம்போல் புதிய சித்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
விஸ்வா,உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteஜூடோ ஜோஸ், நீங்கள் மரியாதை படத்தினை பார்த்து விட்டீர்களா!! விமர்சனம் கிடையாதா. ஆஹாப்பின் பழி எரிமலை போல் என்பது நல்ல ஒப்பீடு.
நண்பர் ஜோஸ், ஆல்பத்தில் உள்ளவை மிக அருமையான சித்திரங்கள். நீங்கள் கூறுவது போல் கையில் புத்தகம் இருந்தால் இன்னம் சிறப்பு.
மொபி டிக்கை இம்முறை எப்படியும் படித்து விடுவது என்று இருக்கிறேன். உள்ளிறங்க சற்று சிரமமாகத் தான் உள்ளது. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
தோழர்,
ReplyDeleteஇந்த பதிவுதான் உங்களின் பதிவிலேயே எனக்கு பிடித்த ஒன்று. எனென்றால் எனக்கு தெரிந்த விஷயங்கள் இந்த பதிவில் அனைத்தும் உள்ளன.
நாவல் - படித்து இருக்கிறேன்.Excellent.
படம் - மும்பை திரைப்பட விழாவில் (எண்பதுகளில்) பார்த்து இருக்கிறேன்.Good.
காமிக்ஸ் - படித்து இருக்கிறேன்.(கிளாசிக்ஸ் இல்லஸ்டிரேட்ட). Average.
ஆனால் நீங்கள் பதிவிட்டுள்ள அந்த பிரென்ச் காமிக்ஸ் படிக்க வில்லை. அந்த குறையை இந்த பதிவு நீக்கி விட்டது (இதற்க்கு மேல் பதிவை யாராலும் புகழ முடியாது).Great.
அடுத்தும் கூட மற்றுமொரு கிளாசிக்ஸ் கதையா? தொடருங்கள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
தோழர்,
ReplyDeleteபடங்களை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அட்டகாசம். ஆனால் இது போன்ற படங்களை நம்ம ஊர்க்காரங்க ஒதுக்கி விடுவாங்க.
ஆனால் உண்மையில் இது போன்ற படங்கள் வித்தியாசமான ஒரு சுகானுபவத்தை கொடுக்கும்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
நண்பர் புலா சுலாகி, சித்திரங்கள் உங்களிற்கு பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் விடயம். பாராட்டுக்களிற்கு நன்றி. தற்போது கிளாசிக் ஆல்பங்கள் எதுவும் பதிவிடும் வாய்ப்புக்கள் குறைவே, பார்க்கலாம். உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteஅடடா, இரண்டு மூன்று நாளாக கொஞ்சம் வேலை நிமத்தம் சரிவர காமிக்ஸ் ப்ளாக்குகளை படிக்காமல் இருந்தேன், அதற்குள் இங்கு தடபுடலாக ஒரு விருந்தே நடந்து இருக்கிறது போலிருக்கே.... நல்ல வேளை பந்தி முடிவதற்குள் வந்து சேர்ந்து விட்டேன் :)
ReplyDeleteஇனி மொபி டிக்கை பற்றிய தங்கள் பதிவு பற்றி.... (அய்யோ அந்த பெயரை ஏன் தான் வைத்தார்களோ... சொல்லவே சங்கோஜமாக இருக்கிறது :) )
// அவர்கள் மத்தியிலிருந்து ஒர் புள்ளியாக வெளிப்படுகிறான் இஸ்மாய்ல் //
வழக்கம் போலவே அருமையான தொடக்கம். கதையின் விமரிசனத்தை அமர்க்களமாக ஆரம்பிப்பதை பற்றி உங்களிடம் நான் தனியாக ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது.
// திமிங்கல வேட்டையர்களின் ஆலயத்திற்கு //
திமிங்கல வேட்டையர்களுக்கு ஒரு ஆலயமா.... அப்போது ஜப்பானில் தடுக்கி விழுந்தால் தெருவுக்கு ஒன்று இருக்கும் போல இருக்கே.... :)
திமிங்கல வேட்டையனை இரவில் திடீரென்று இஸ்மாயில் பார்க்கும் காட்சி; காப்டன் ஆஹாப்பின் கொடூர முகத்தை, இஸ்மாயில் மறைந்து இருக்கும் பார்க்கும் கட்டம்; மொபி டிக்கை மாலுமிகள் அணுகும் காட்சி; என்று விருவிருப்புக்கு எந்த குறையும் இல்லாமல் கதாசிரியர் நகர்த்தி இருக்கிறார்.
//அலைகள் படகை தட்டும் சத்தம், மனித இதயஙகளின் துடிப்போடு கை கோர்த்துக் கொள்கிறது. //
நடுவில் உங்களுடைய இப்படி பட்ட வசனங்கள் வேறு. கடல் சார்ந்த கதைகளை பற்றி பதியும் போது உங்கள் மனதில் ஒரு தனி குதூகலம் கூடி கொள்வதை எழுத்துகளில் உணர முடிகிறது. :)
// அவன் இறந்த உடலின் பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி வடிவத் தோணியே இஸ்மாய்லை உயிருடன் நரகத்திலிருந்து மீட்டு வந்தது. //
செட்டோனும் பூனையும் கதையில் வந்த மாதிரியே கதை முடிந்து இருக்கிறது. இப்படி வாழ்க்கை சுழர்ச்சியை பற்றி சூசுகமாக சொல்வது எல்லா கதாசிரியர்களின் பெரும்பான்மை கற்பனா திறன் போல.
வெறும் கோடுகளை கொண்டு அமைக்கபடும் ஓவியங்களை, கோட்டோவியங்கள் என்று கூறி கேள்வி பட்டிருக்கிறேன். இக்கதையின் சித்திரங்களை பார்க்கையில் தூரிகை ஓவியங்கள் என்று அழைக்கலாம் என எண்ணகிறேன். சில சமயங்களில் குழந்தைதனமாக தெரிந்தாலும், கதையின் போக்கில் அவ்வோவியங்கள் கலந்தோடுவதை நன்றாக உணர முடிகிறது. நம் ஊரில் சிறுபிள்ளை காவியம் என்று இதை ஒதுக்க அனேகர் முடிவு கட்டி விடுவார். சில நேரங்களில் மேலைநாடுகளிள் காமிக்ஸ் ரசிகர்களின் ரசனைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கதையோடு பயனித்து ஐக்கியமாகி விடுகிறார்கள், ஓவியர்களும் அந்த தைரியத்தில் புதுமையாக முயன்று தனித்துவ படைப்புகளை அள்ளி தெளிக்கிறார்கள். நம் ஊரில் அந்த ரசனை மாற்றம் எப்போது வரும் என்று ஏங்க தான் வேண்டும்.
சமீபத்தில் இத்தகை துரிகை ஓவியங்கள் அடங்கிய ஒரு காமிக்ஸ், நான் சமீபத்தில் படித்த டுசாட் அம்மையாரை பற்றியது தான். ஒரே வித்தியாசம் அங்கு சித்திரங்கள் இன்னும் நேர்த்தி பாங்கு அவ்வளவே.
மொபி டிக் நாவலை நானும் படித்ததில்லை. ஆனால் சமீபத்தில் ஜெப் ஸ்மித்தின் போன் காமிக்ஸ் சித்திரத்தில், நாயகன் போனை மற்ற போன் கதாபாத்திரங்கள் கிண்டல் செய்வதற்கு அவரின் மோபி டிக் கதை ரசிகத்தனத்தை உபயோக படுத்துவதை மிகவும் நகைச்சுவையுடன் கதைபோக்கில் உபயோக படுத்தியிருப்பார். இக் கிளாசிக் கதைகள் எப்படி அன்றாட மனிதர்களின் வாழ்க்கையில் அங்கமாகி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் நினைத்து கொண்டேன்.
அப்படி ஒரு அருமையான கிளாசிக் கதையின் சித்திர உருவத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி காதலரே. பைகோ கிளாசிக்கில் இந்த கதையை நான் படித்திருந்த போதும், இவ்வகை அன்னியோன்னியம் அப்போது ஏற்படவில்லை. உங்கள் விமர்சன பாணிக்கு உண்டான தனி சிறப்பு அது. வாயப்பு கிடைக்கின் இந்த சித்திர கதையை படித்து விட்டு மீண்டும் கருத்துகளை பதிகிறேன், நாவலுக்கு பதில் சித்திரங்களுடன் ஒன்றி படிக்க ஏதுவாக இருக்கும் என்பது துணை கூறு. நீங்கள் கூறியது போல 500 பக்கங்களை 100 பக்கங்களுக்குள் சித்திரங்களில் சுருக்குவது சுலபமான காரியம் இல்லை என்றாலும், சித்திர ரசிகர்களுக்கு அது ஒருவேளை நாவலின் மேல் ஆர்வத்தை தூண்ட ஏதவாக இருக்குமே. இன்னொன்று ஒரு சித்திரம் 1000 வார்த்தைகளுக்கு சமம் என்று கூட கதாசிரியர் நினைத்து இருக்கலாம். :) உங்களின் 5 ஸ்டார்.... ரேட்டிங் வேறு, கேள்வியே கேட்காமல் தெடி பிடித்து விட வேண்டியது தான்.
தொடருங்கள் உங்கள் பதிவு அதிரடியை.
ÇómícólógÝ
ராம்போ ரஃபிக் அவர்களே, ஜப்பானிய மீனவர்களின் திமிங்கல வேட்டை மோகம் பற்றி நயமாக கூறி விட்டீர்கள். நண்பர் ஜோஸ் கூறுவது போல் கடலிற்கு செல்லும் மாலுமிகள் விந்தையான நம்பிக்கைகளினை கொண்டவர்கள், உயிர் என்பது அலை மேல் ஆடும் போது பற்றிக் கொள்ள எந்த துரும்பு அகப்பட்டாலும் அவர்கள் தயங்க மாட்டார்கள். அதே போன்று கடல் தொழில் செய்பவர்கள் கடவுள் பக்தி மிகுந்து காணப்படுவார்கள். நான் ஆழி சூழ் உலகு எனும் கதையைப் படித்திருக்கிறேன். தமிழில் கடல் தொழிலாளர் குறித்து வெளிவந்திருக்க கூடிய சிறந்த நாவல்களில் அது ஒன்று. அவர்களின் பக்தி அதில் சிறப்பாக விபரிக்கபட்டிருக்கும்.
ReplyDeleteமெல்வில்லின் நாவலில் இருந்து விறுவிறுப்பான காட்சிகளை எடுத்து கதாசிரியர் கதையை நகர்த்தியிருக்கிறார் என்பது உண்மையே.
எல்லா மனிதனின் மனதிலும் வாழ்வின் ஒரு தருணத்தில் கடலின் மேல் காதல் ஏற்படுவதுண்டு, இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல, கடலின் அருகில் இருந்து காதலிக்கும் ஜோடிகள் பாக்யசாலிகள்.
ஓவியங்கள் நேர்த்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, அவை உங்களை கதையுடன் எவ்விதம் ஒன்றச் செய்கின்றன என்பதே முக்கியம் அல்லவா. மேலை நாடுகளில் கூட பெரும்பாலான கதைகளின் ஓவியங்கள் நேர்தியாக இருக்கின்றன, ஆனால் வித்தியாசமான் ஓவியங்கள் கொண்ட கதைகளும் வெளிவந்து வரவேற்பை பெறுகின்றன. நீங்கள் எனக்குப் பரிந்துரைத்த THE HISTORY OF VIOLENCE எனும் கதை இதற்கு மிக சிறந்த உதாரணமாக அமையும் என்று எண்ணுகிறேன்.
டுசாட் அம்மையார் ஆல்பத்தின் படங்கள் சிறப்பானவை என்பதில் ஐயம் இல்லை. மொபி டிக் நாவல் ஜெஃப் ஸ்மித்திற்கு பிடித்த நாவலாக இருக்கும் வாய்ப்புள்ளது.அதனை அவர் படைப்பில் கவுரவப் படுத்தியிருப்பார் என்று நம்புகிறேன்.
ஆழமான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
கிளாசிக் கதைகளை காமிக்ஸ் வடிவத்தில் படிக்கும் சுகம் இருக்கிறதே, அதன் மகிழ்வே தனி தான். அதுவும் மொபி டிக் என்றால் கூறவே வேண்டாம்.
ReplyDeleteநல்ல அருமையான படங்கள். வேறு ஏதேனும் கிளாசிக் கதைகளை இந்த பதிப்பகம் வெளியிட்டு உள்ளதா?
ஒரு வேண்டுகோள்:H.G.WELLS கதைகளை பற்றி பதிவிடுங்களேன்? குறிப்பாக கால யந்திரம்?