Saturday, May 23, 2009

இரவுப் பறவையின் கானம்


Intro வணக்கம் அன்பு நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவிற்கான உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில் கருத்துக்களை அப்பதிவின் கருத்துப் பெட்டியில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

இம்முறை நாம் பார்க்கப் போகும் கதைத்தொடர் ஒர் அற்புதமான த்ரில்லர் ஆகும். விறு விறுப்பான நடையும், திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் கொண்ட இக்கதை தொடரின் முதல் ஆல்பமான OMBRES (நிழல்கள்) என்பதை பற்றிய பதிவு இது.

cds2 அரிஸோனாவின் எல்லையிலுள்ள மொஜாவ் பாலைவனத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள ராணுவ கட்டமைப்பு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. புதிய கட்டமைப்பை திறந்து வைப்பதற்காக மேன்மை தங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருக்கிறார். கட்டிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான், ஜனாதிபதியின் மெய்க்காவலர் படையை சேர்ந்த கெவின் நிவெக். ஜனாதிபதி வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ராணுவக் கட்டிடத்தை அண்மிக்கிறது.cds4

கட்டிடத்தினுள், கண்ட்ரோல் அறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள், நான்கு ஆயுததாரிகள். அவர்கள் முகம் மூகமூடிகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. கண்ட்ரோல் அறையின் கதவை நெருங்கும் அவர்கள், குரல் சோதனை, மின்காந்த சோதனையை வெற்றிகரமாக கடந்து கண்ட்ரோல் அறையினுள் நுழைகிறார்கள்.

ஜனாதிபதியை சுமந்து வரும் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறது, ராணுவக் கட்டமைப்பின் தலைமை அதிகாரி ஜெனரல் கோரே எவர்சன், ஜனாதிபதியை பெருமிதத்துடன் வரவேற்கிறார். தளத்திலிருந்து ராணுவக் கட்டிடத்தினை நோக்கி நகர ஆரம்பிகிறார் ஜனாதிபதி. பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதிக்க கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொள்கிறான் கெவின்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை தீர்த்துக்கட்டி விட்ட ஆயுததாரிகளில் ஒருவன், கெவினிற்கு ஜனாதிபதி உள்ளே நுழைவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன எனப் பதிலளித்து விட்டு, கணணி மூலமாக அவசரகாலத்தில் தப்பிக்கும் வழிமுறைகளை முடக்க ஆரம்பிக்கிறான்.

கட்டிடத்தினுள் நுழையும் ஜனாதிபதி அங்கு பணிபுரிபவர்களுடன் அளவளாவியபடியே கட்டிடத்தின் வசதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பிக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் கணணியில் முன் அமர்ந்திருக்கும் ஆயுததாரி இட்ட கட்டளையொன்றை கணணி மறுத்து விடுகிறது. வியப்பினால் ஆயுததாரியின் முகம் கோண ஆரம்பிக்… நான் இவ் வாக்கியத்தை முடிக்கும் முன் அவன் கழுத்து வெட்டப்பட்டு, ரத்தம் சீறியடிக்க கீழே சாய்கிறான்.

ராணுவக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் காவலில் நிற்கும் ராணுவ வீரர்களில் ஒருவன் சங்கேத எண் சாவி மூலம் கதவை திறக்க முயற்சிக்கையில் அது திறக்கவில்லை என்பதால், அதனைக் கையால் திறக்க முயற்சிக்கிறான். அதுவும் பலன் தரவில்லை என்றவுடன் அவன் சந்தேகம் வலுக்கவே, கெவினை தொடர்பு கொண்டு அபாய எச்சரிக்கையை தந்து விடுகிறான். ராணுவ அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்த ஜனாதிபதியை நோக்கி ஓடும் கெவின், அவரை இழுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் ஓட ஆரம்பிக்கிறான்.

cds3 கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆயுததாரிகளை ஒருவர் பின் ஒருவராக தன் கத்தியால் கதையை முடிக்கிறாள் அந்தப் பெண்.கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன. அவள் ஒரு அழகான ஆபத்து அல்லது விஷ அமிர்தம். அவள் தொட்டாள் மலர்வது மரணம். அவள் கூந்தல், மோதலிலும் அலை பாய்கிறது, அலை போல் அசையும் அவள் நகர்வுகள் கொலையாகிறது.

கட்டிடத்தினுள் கெவின் ஜனாதிபதியுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது கட்டிடத்தினுள் குண்டுகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன, வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வலையாலும், அனல் காற்றாலும் தூக்கி எறியப்படுகிறார்கள் இருவரும். தீ, உக்கிரமாக பற்றி எரிய ஆரம்பிக்க, தீயணைப்பு படை வீரர்கள் தீயுடன் போராட ஆரம்பிக்கிறார்கள். கெவின் சாதாரன சிராய்ப்புக்களுடன் தப்பி விட, கடும் காயங்களிற்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார் ஜனாதிபதி.

கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில், எரியும் நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். அந்த உக்கிரமான நெருப்பின் மத்தியில் பறந்து செல்லும் அந்தக் கரிய உருவம் தான் என்ன?!

cds5 ஜனாதிபதியின் மீதான தாக்குதலிற்கு மறுநாள், பெண்டகனில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது. ஜெனரல் கோரேயும், சிஐஎயின் அதிகாரி டவுனியும், கெவினை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களை இடைவெட்டும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி குரொம்பி, ஜனாதிபதியின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது மர்மமான ஒர் வெளியாள் இடையீட்டால் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறான். சிஐஎ அமைப்பு தீவிரவாதிகளின் ஊடுருவல் ஏற்படலாம் என எச்சரிக்கவில்லை, அதே சமயம் மிக ரகசியமான இடம் எனக் கூறப்பட ராணுவக் கட்டமைப்பு பற்றி சிலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், ஆகவே கோரேக்கும், டவுனிக்கும் கூட தவறில் பங்குண்டு என்கிறான் குரொம்பி.

கெவின் இதனைப்பற்றி தங்களிற்கு விளக்க முடியுமா என அவனிடம் வினவுகிறான் குரொம்பி. கெவின் இதனைப் பற்றி நடந்து கொண்டிருக்கும் விசாரணை தான் எதையாவது விளக்க கூடும் என்கிறான். மேலும் உண்மையான குற்றவாளிகளிற்கு தான் ஒர் இலக்காக அமைந்து விட்டதே இவ்விவகாரத்தில் தன்னுடைய ஒரே தவறு எனக்கூகிறான். இதனைக் கேட்ட டவுனியும், கோரேயும் கொதிக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் குரொம்பி, பரிசோதனை கூடத்திலிருந்து ஒளிபரப்பாகும்,ராணுவக் கட்டிட தாக்குதலின் பின் கண்டெடுக்கப்பட்ட ஒர் உடலின், பிரேத பரிசோதனையின் ஒளிபரப்பை மிக உன்னிப்பாகப் பார்வையிடப் பணிக்கிறான்.

ஒளிரும் திரையில் பிரேத பரிசோதனைக்கு தயாராகி கொண்டிருக்கும் பெண் மருத்துவரைக் காணும் கெவின், மெலிண்டா எனும் பெயரை மனதில் உச்சரித்துக் கொள்கிறான். மெலிண்டா பரிசோதனைக்கு தயாரகவுள்ள உடல் குறித்த தகவல்களினைக் கூறியவாறே இறந்த உடலை அண்மிக்கிறாள். ஒளிபரப்பு ஆரம்பித்த சில நிமிடங்களின் பின் கெவினின் திரை அணைக்கப் படுகிறது. தன் திரையில் படம் வரவில்லை எனும் கெவினிடம், அவன் தன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள அறிவிப்பு தனக்கு தற்போது தான் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறான் குரொம்பி.

மெக்ஸிக்கன் உணவு விடுதி ஒன்றில், தன் முன்னாள் காதலியான டாக்டர் மெலிண்டாவைச் சந்திக்கிறான் கெவின். நீண்ட காலமாக தன்னை பார்க்க விரும்பாத கெவினுடன் கடுமையாகப் பேசுகிறாள் மெலிண்டா. தன் தற்போதைய நிலையை அவளிற்கு விளக்கி, தனக்கு அவள் பரிசோதனை செய்த உடல் பற்றிய தகவல்களை தந்து உதவும் படி கெவின் அவளிடம் வேண்டுகிறான். அதனை செய்ய தனக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள் மெலிண்டா.

numérisation0007 மெலிண்டாவுடன் உரையாடியவாறே, உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் இரு நபர்கள் தம்மைக் கண்காணிப்பதை அவதானித்து விடும் கெவின், மெலிண்டாவை தனக்காக அங்கேயே காத்திருக்க கூறி விட்டு, உணவு விடுதிக்கு வெளியே புகை பிடிப்பதற்காக செல்வது போல் வாயில் ஒர் சிகரட்டை கொளுத்தி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த இரு ஆசாமிகளும் அவனைப் பின் தொடர்கிறார்கள்.

ஒடுங்கிய தெரு ஒன்றில் திரும்பி மறைந்து கொள்ளும் கெவின் தன்னை பின் தொடரும் மனிதர்களை எதிர்பார்த்து நிற்கிறான். தெருவில் ஒருவன் நுழைய அவன் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கெவின் அவனுடனிருந்த மற்றவன் எங்கே என்றும் ஏன் அவர்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள் எனவும் கேட்கிறான். கெவின் எதிர்பாராத விதமாக பின்னாலிருந்து அவன் தலையில் துப்பாக்கியினால் அடித்து அவனை நினைவிழக்க செய்து விடுகிறான் அந்த மற்றவன்.

தெருவில் நினைவிழந்து கிடந்த கெவினின் தலையிலிருந்து சிந்திய குருதியை நக்கிக் குடிக்கிறது ஒர் பூனை. மெதுவாக நினைவு திரும்பும் கெவின் தன் தலையைத் தடவிப் பார்க்கிறான். அவன் தலைக் காயத்திலிருந்த குருதி அவன் விரல்களில் ஒட்டிக் கொள்ள, தன் முன்னாலிருக்கும் பூனையிடம் தன் விரல்களை நக்கி சுத்தம் செய்யத் தருகிறான். பின் அப் பூனையையும் தன் கையில் தூக்கிக் கொண்டு உணவு விடுதியை நோக்கி செல்கிறான். உணவு விடுதியிலிருந்த மெலிண்டா தனக்காக காத்திராது கிளம்பிச் சென்று விட்டதைக் காணும் அவன் சிறிது வேதனை கொள்கிறான். பின்பு அங்கேயிருந்த தொலைபேசி ஒன்றின் மூலம் ஜோஷ் என்பவனைத் தொடர்பு கொள்கிறான்.

வாஷிங்கடனின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கும் செவ்விந்தியர்கள் அங்காடி ஒன்றின் கீழ்தளத்தில் ரகசியமான அலுவலகம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் புரொடியை காண வருகிறாள் அவள். உன் கடைசி ஆபரேஷன் பாதி தான் வெற்றியடைந்ததாகக் கூறி அவளை வரவேற்கிறான் புரொடி. ஜனாதிபதி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார் எனப் பதிலளிக்கிறாள் அவள். இருவரிற்கும் சிறிய வோட்கா கிண்ணங்களில் வோட்காவை நிரப்புகிறான் புரொடி. அவனிடமிருந்து ஒர் கிண்ணத்தை பெற்றுக் கொள்ளும் அவள், தான் ராணுவக் கட்டிடத்தின் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு திரைகளில் கண்ட விசித்திர உருவத்தைப் பற்றி தெரிவிக்கிறாள். அவளின் மனப்பிரமையாக அது இருக்கும் எனக் கூறும் புரொடியிடம் கோபம் கொள்கிறாள் அவள். அவள் கோபத்தை கண்டு கொள்ளாத புரொடி அடுத்த நடவடிக்கையாக கெவின் மற்றும் மெலிண்டா என்பவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அவளிடம் வழங்குகிறான்.

தன் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் மெலிண்டா அவள் அலுவலகம் உச்ச பாதுகாப்பு மாடி ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதையும், ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலின் மீதான ஆய்வுகள் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்த விவகாரம் மூடப்பட்டு விட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். மெலிண்டாவின் மேலதிகாரி பின்ச்சர், இந்த விவகாரத்தில் மேலும் ஈடுபட ஆவல் காட்ட வேண்டாம் என அவளிற்கு ஆலோசனை தருகிறார்.

cds6 ஜோஷின் வீட்டிற்கு அவனைத் தேடிச் செல்கிறான் கெவின். தன் பூந்தோட்டத்தில் அழகிய ரோஜாச் செடிகளை பராமரித்தவாறே அவனுடன் உரையாடுகிறான் ஜோஷ். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அவனிடம் தெரிவிக்கிறான் கெவின். அவனை தன் வீட்டினுள் அழைத்து சென்று விபரங்களை விரிவாகக் கேட்டறியும் ஜோஷ், கெவின் இவ்விவகாரத்தில் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக தான் கருதுவதாக கூறுகிறான். இவ்வேளையில் அறையிலிருந்த தொலைபேசி ஒலிக்க அதனை எடுக்கிறான் கெவின்.

cds7 தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் மெலிண்டா, தன் அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள் கண்காணிக்கப்படுவதனையும் கெவினிற்கு தெரிவிக்கிறாள். பிரேத பரிசோதனை ஒளிப்பதிவை இணையம் மூலம் ஜோஷின் கணணிக்கு அனுப்புவதாக கூறுகிறாள் அவள். கணணித் திரையில் மெலிண்டா அனுப்பி வைத்த ஒளிப்பதிவினைக் காணும் ஜோஷ், உடலின் சிறு திசுத் துணுக்குகள் சிலவற்றை அவனிற்கு அனுப்பி வைக்க முடியுமா என வினவுகிறான். இதே வேளையில் திடீரென திரையில் ஒடிக் கொண்டிருந்த பிரேத பரிசோதனையின் காட்சி மறைந்து விடுகிறது.

தன் வீட்டின் தொலைபேசி இணைப்பு செயலிழந்து விட்டதை உணர்ந்து கொள்ளும் மெலின்டா, அவசரமாக தன் அலுவலகத்திற்கு ஓடுகிறாள். மெலிண்டாவிற்கு ஏதாகிலும் அபாயம் ஏற்பட்டிருக்கிலாம் எனும் ஐயத்தில் ஜோஷின் வீட்டை விட்டு கிளம்புகிறான் கெவின். கெவின் கிளம்பிச்செல்லும் காரைப் பார்த்தவாறே தன் மனதில், கெவின் உனக்கு உண்மையைச் சொல்லும் நேரம் இன்னமும் வரவில்லை எனக்கூறிக் கொள்கிறான் ஜோஷ்.





cds8 அலுவலகத்திற்கு விரையும் மெலிண்டா அங்கு பணிபுரியும் நண்பனின் உதவியுடன் பலத்த காவல் போடப்பட்டுள்ள பிரேத கிடங்கினுள் நுழைகிறாள். ராணுவக் கட்டிடத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் இருந்த அறையை திறந்து அதனுள் நுழைகிறாள் அவள். உடல் கிடத்தப்பட்டுள்ள மேஜையை நெருங்கும் அவள் தன் கைப்பையிலிருந்து சிறு கத்தியையும், ஒர் போத்தலையும் வெளியே எடுக்கிறாள். அவ் உடலின் ஒர் சிறு திசுப் பகுதியை வெட்ட விரும்பி அதனை அண்மிக்கும் அவள் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவள் கையிலிருந்த போத்தலும், கத்தியும் கீழே விழுகின்றன. வெளியே காவலிற்கு நின்ற வீரர்கள் அறையினுள் இருந்து ஒலிக்கும் கத்தலினால் திடுக்கிட்டு அறையினுள் நுழைகிறார்கள். அறையில் யாருமில்லை. கருகிய உடலும், மெலிண்டாவும் அவ்வறையில் இருந்து மறைந்து போயிருந்தார்கள்.

cds9 மெலிண்டாவின் வீட்டை அடையும் கெவின் அவள் வீட்டை யாரோ கலைத்துப் போட்டிருப்பதைக் காண்கிறான், என்ன நடந்திருக்கலாம் என்பதனை அவன் மனம் ஊகிக்க ஆரம்பிக்க, அவன் கண்கள், ஜன்னல் அருகே மறைந்து நிற்கும் உருவம் ஒன்றைக் கண்டு விடுகின்றன. தன் துப்பாக்கியால் உருவத்தை நோக்கி அவன் சுட, உருவம் லாகவமாக கீழே குதித்து ஓடுகிறது. அவ்வுருவத்தினை பின் தொடர்ந்து ஓடுகிறான் கெவின். கைவிடப்பட்ட தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றினுள் உருவத்தை தொடர்ந்து நுழையும் கெவின் அங்கு உருவம் மறைந்து விட்டதைக் காண்கிறான். தன் தேடலை அவன் தொடரும் ஒர் தருணத்தில் அசையாதே, நீ சாகப் போகிறாய் என்று கூறியவாறே மறைவிடமொன்றிலிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளியே வருகிறாள் அவள்.

பெண்டகனில் கூட்டப்படும் அவசரக் கூட்டத்தின் பின் சிஐஎயின் டவுனியை ரகசியமாக சந்திக்கும் குரொம்பி, கெவின், மெலிண்டா, கருகிய உடல் மூன்றும் இல்லாமல் போகவேண்டும் எனக் கட்டளையிடுகிறான்…

பிரேத கிடங்கில் மெலிண்டாவிற்கு நடந்தது என்ன? கருகிய உடல் மாயமாக மறைந்தது எவ்வாறு? ஜோஷ் கெவினிடமிருந்து மறைக்கும் விடயம் என்ன? ஜனாதிபதியின் கொலை நடவடிக்கையின் பின் புதைந்து கிடக்கும் மர்மம் என்ன? குரொம்பி ஏன் கெவின் மற்றும் மெலிண்டாவை தீர்த்துக் கட்ட விரும்புகிறான்? யார் அந்த அழகிய அவள்? புரொடி நிழலாக செயற்படுவது எக்காரணத்திற்காக?

மர்மம், மர்மம், மர்மம், இக்கேள்விகள் எவற்றிற்கும் முதல் ஆல்பத்தில் விடை இல்லவே இல்லை. எனவே வாசகர்கள் இரண்டாவது ஆல்பத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அங்கும் அந்தக் கருகிய உடல் ராணுவக்கட்டிடத்திற்கு எவ்வாறு வந்து சேர்ந்தது என்பதை தவிர வேறு மர்மங்கள் விடுபடாது. ஆனால் கதையில் மர்மங்கள் அதிகரிக்கும்.இவ்வாறாக பிரென்ச்சு வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஒர் மர்மத் தொடராக வெற்றி நடை போடுகிறது LE CHANT DES STRYGES எனும் இக் காமிக்ஸ் தொடர்.

chant-stryges-2 STRYGE (STRYX) எனப்படுபவை பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் கொண்ட புராண துர்தேவதைகள் ஆகும். இவை ரத்தம் உறிஞ்சுபவை என நம்பப்படுகிறது. பண்டைய ரோம வரலாற்றுக் காலத்திலிருந்தே இத் தேவதைகள் பற்றிய வர்ணனைகள் காணக்கிடக்கின்றன. கிரேக்க சொல்லான STRIGX என்பதற்கு இரவுப் பறவை என அர்த்தம் கொள்ளலாம். மானுட வரலாற்றில் இவை ஆடும் ஆட்டம் என்ன? இக் கற்பனைக்கு விடை தருவதாக கதையை அமைத்திருக்கிறார் கதாசிரியர் ERIC CORBEYRAN.

கொர்பிரான் பிரான்சின் புகழ் பெற்ற துறைமுக நகரான மார்செய்யில் 1967ல் பிறந்தவர். புகைப்படக் கலை, சிறுவர் இலக்கியம், விளம்பரத்துறை என்பவற்றில் பணியாற்றி, சித்திரக்கதை துறையில் 1990ல் நுழைந்தவர். சரித்திரம், கற்பனை, த்ரில்லர் என எவ்வகைக் கதையாயினும் சவாலை திடமாக எதிர் கொள்பவர். 30க்கும் மேற்பட்ட ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார்.

காமிக்ஸ் தொடரிற்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் RICHARD GUERINEAU எனும் பிரெஞ்சுக்காரர். 1969ல் பிறந்தவர். சிறு வயது முதலே அவரை காமிக்ஸ் பேய் பிடித்துக் கொண்டது. 1991ல் கதாசிரியர் கொர்பிரானுடனான சந்திப்பு சிறப்பான ஒர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது. LE CHANT DES STRYGES தொடரில் சித்திரக்கட்டங்களை நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைத்திருப்பார். இது வேகமான கதை சொல்லலிற்கு உதவும். சித்திரங்களில் காணப்படும் பதட்டம் வாசகர்களையும் தொற்றிக் கொள்ளும்.

debrah-x2-22 stryge5 இக்கதையின் இரு பிரதான பாத்திரங்களான, STRYGE, DEBRA FAITH ஆகியோரின் சிறிய உருவச்சிலைகள் DOMINIQUE MUFRAGGI என்பவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1997 முதல் 2008 வரையில் மொத்தம் 12 ஆல்பங்கள் வெளியாகி இருக்கின்றன. 6 ஆல்பங்கள் ஒரு பருவம் என அழைக்கப்படுகிறது. 3ம் பருவம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது. நண்பர்கள் பதிவு குறித்த உங்கள் மேன்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்.

ஆல்பத்தின் தரம் ****

ஆர்வலர்களிற்கு

LE CHANT DES STRYGES

34 comments:

  1. காதலரே, இன்னொரு அருமையான கதைதொடர் அறிமுகமா... பேஷ் பேஷ்

    மேலை நாடுகளில் கட்டிடங்களுக்கு வெளியே திருஷ்டிக்காக வைக்கபடும் கர்கோயில் என்ற உருவங்களுக்கு உயிர் இருப்பதாகவும் இரவில் அவைகள் ஒரு வாழ்க்கையை வாழ்வதாகவும் கதைகளில் படித்து இருக்கிறேன். அதை போன்றே உருவங்கள் கொண்ட ஒரு புதிய இனத்தை பற்றிய கற்பனை கதை தொடர் போல செல்கிறது. மேலோட்டமாக பார்க்கையில் பூனை ரத்தத்தை ருசி பார்க்கும் கட்டம் என வெளுத்து வாங்கி இருப்பார் போல கதாசிரியர். முழுவதும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

    ÇómícólógÝ

    ReplyDelete
  2. i got scanlation for this comics...

    check this link....


    http://www.mediafire.com/file/mn3ejmuzjvy/The Song Of The Vampires season 1 - T01 Shadows (2008) (Daedalus) (DarthScanner-Vigilante).cbr

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம். முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்!
    அப்படியே, நம்ம பக்கமும் வாங்க!

    ReplyDelete
  5. கனவுகளின் காதலரே,

    நல்ல அருமையான தொடர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? வேகமாக நகர்கிறது கதை. படங்களும் அற்புதமாக உள்ளன.

    //STRYGE (STRYX) எனப்படுபவை பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் கொண்ட புராண துர்தேவதைகள் ஆகும்// நீங்கள் வெளியிட்டுள்ள படத்தில் இருக்கும் உருவம், நான் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஜீபர்ஸ் கிரீப்பர்ஸ் என்ற படத்தில் வரும் கிரீப்பர் என்னும் ஒரு வகை உயிரினத்தை நினைவுபடுத்தியது. (முதல் பாகம் நன்றாக இருக்கும், இரண்டாவது பாகம் படு சுமார். மூன்றாவது பாகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது).

    படத்தை பாருங்கள் - அந்த கிரீப்பர் பற்றிய தகவல்கள் சுவையாக இருக்கும். இரண்டாம் பாகம் - முடிந்தால் தவிர்த்து விடுங்கள். ஆனால் முதல் பாகம் நன்றாக இருக்கும்.

    ஒரு கேள்வி: இந்த கதையில் வரும் உயிரினம் பேசுகிறதா என்ன? எனென்றால் படத்தில் (அச்சு அசலாக இதைப் போலவே இருக்கும்) கிரீப்பர் இரண்டு படங்களிலும் பேசுவதே இல்லை.

    //இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது// நல்ல வேலை. நம் காமிக்ஸ் பதிவர்களில் ஒருவராவது X- FILES பற்றி கதைகளில் குறிப்பிட்டோமே? இந்த கதை X- FILES தொடரில் பாதி அளவிற்கு சிறப்பாக இருந்தாலே வெற்றி அடைந்து விடும்.

    X- FILES ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்:AXN என்ற சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை X- FILES இப்போது ஆரம்பத்தில் இருந்து மறு ஒலிபரப்பு செய்யப் படுகிறது (Afternoon 12 - 01 PM).

    படத்தை பற்றிய சுட்டி: http://en.wikipedia.org/wiki/Jeepers_Creepers_(2001_film)

    ReplyDelete
  6. இப்போதுதான் ஒரு விஷயம் தோன்றுகிறது. இந்த படத்தின் இயக்குனர் விக்டர் சல்வா'வை மாற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். இவர் இந்த கதையை தன்னுடைய படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்து இருக்கலாம். குறிப்பாக அந்த கிரீப்பர் பாத்திரத்தை மட்டும்.

    கிரீப்பர் பற்றிய சுட்டி: http://en.wikipedia.org/wiki/The_Creeper_(Jeepers_Creepers)

    ReplyDelete
  7. ராம்போ ரஃபிக் அவர்களே, நீங்கள் கூறிய கார்கொய்ல் விலங்குகள் பற்றிய ஒர் கார்ட்டூன் தொடரை முன்பு பார்த்திருக்கிறேன், பாரிஸில் உள்ள NOTRE DAME எனும் கோவிலின் கோபுரங்களில் அவை சிலைகளாக குந்திக் கொண்டு இருக்கும். மழை பெய்யும் போது அவற்றின் வாய்கள் வழி மழை நீர் வெளிப்பாயும். இரவில் அச்சிலைகள் ஒர் சில்லிடும் உணர்வை ஏற்படுத்தும். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ரமேஷ், நீங்கள் வழங்கிய சுட்டிக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

    கலையரசன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

    விஸ்வா, நீங்கள் கூறிய அந்த ஆங்கிலப்படத்தின் முதல் பகுதியை பார்த்திருக்கிறேன். அந்தக்காலத்தில் வாரத்திற்கு 3 படங்களாவது பார்த்து விடுவேன்.குறித்த ஒர் காலத்தில் கண்விழிக்கும் அந்த ப் பறவை போன்ற உருவம், மாணவர்கள் செல்லும் பஸ்ஸை அது தாக்கும் கட்டம் என்பவை நினைவிற்கு வருகின்றது.

    நான் முதல் 2 ஆல்பங்களை மட்டுமே பதிவினை எழுதுவதற்காகப் படித்தேன். அவ்வால்பங்களில் இம்மிருகம் பேசுவது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் இவை மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நிச்சயமாக ஒர் வழி வேண்டும் அல்லவா. முதல் பருவத்தின் மிகுதி 4 ஆல்பங்களையும் படித்து விட்டு உங்களிற்கு அறியத்தருகிறேன்.

    X- files மிகவும் வெற்றி பெற்ற தொலைக்காட்சி தொடரல்லவா, நான் அத்தொடரினை முழுமையாக பார்க்கவில்லை ஆனால் அதற்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். யார் கண்டது, அந்த தொடரின் ரசிகர்கள் கூட இத்தொடர் வெற்றி பெற ஒர் காரணமாக அமைந்திருக்கலாம். சுட்டிகளிற்கு நன்றி.


    உங்கள் தொடர் ஆதரவிற்கும், சிறப்பான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. கனவுகளின் காதலரே,

    இப்போதுதான் கதையின் இரண்டு புத்தகங்களை படித்து முடித்தேன். நன்றாக இருந்தது. விறு விருப்பான தொடர்தான். ஆனால் புத்தகத்தின் சில இடங்களில் எழுத்துப் பிழை உள்ளது உறுத்தியது.(ஆங்கில மொழியாக்கத்தில் தான்)

    //விஸ்வா, நீங்கள் கூறிய அந்த ஆங்கிலப்படத்தின் முதல் பகுதியை பார்த்திருக்கிறேன். அந்தக்காலத்தில் வாரத்திற்கு 3 படங்களாவது பார்த்து விடுவேன்.குறித்த ஒர் காலத்தில் கண்விழிக்கும் அந்த ப் பறவை போன்ற உருவம், மாணவர்கள் செல்லும் பஸ்ஸை அது தாக்கும் கட்டம் என்பவை நினைவிற்கு வருகின்ற// சில மாதங்களுக்கு முன்பு வரை நான் தினமும் ஒரு படம் என்று இருந்தேன்.

    //X- files மிகவும் வெற்றி பெற்ற தொலைக்காட்சி தொடரல்லவா, நான் அத்தொடரினை முழுமையாக பார்க்கவில்லை ஆனால் அதற்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். யார் கண்டது, அந்த தொடரின் ரசிகர்கள் கூட இத்தொடர் வெற்றி பெற ஒர் காரணமாக அமைந்திருக்கலாம். சுட்டிகளிற்கு நன்றி.// நானும் கூட அந்த தொடரை சீசன் ஐந்து முதல் தான் பார்த்தேன். இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் முதல் பாகங்களை மறு ஒலிபரப்பு மூலம் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  10. விஸ்வா, உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது. அதற்குள் 2 ஆல்பங்களையும் படித்து முடித்து விட்டீர்கள். நீங்கள் சாப்பிடும் லேகியத்தில் எனக்கும் சில போத்தல்கள் அனுப்பி வையுங்கள்.

    ஆங்கில மொழியாக்கத்தில் எழுத்துப்பிழைகள் என்று நீங்கள் சுட்டிக் காட்டினால் அதில் இரண்டாம் கருத்திற்கு இடமேது. எனது மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று கூறுங்களேன்.

    கருத்துக்களை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  11. Dreams Loverரே ,
    அடுத்த காமிக்ஸ் கண்டுபுடிப்பா? அருமை தொடருங்கள் உங்கள் சேவையை . உங்கள் மொழி நடை அருமை . படங்களை பார்த்ததும் 'MAX PAYNE' படத்தில் வரும்
    பாதி மனித, பாதி பறவைத் தோற்றம் போல் இருந்தது .

    /* கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன. அவள் ஒரு அழகான ஆபத்து அல்லது விஷ அமிர்தம். அவள் தொட்டாள் மலர்வது மரணம். */
    !!!!!!!!!!அடடே அருமையான கற்ப்பனை உமக்கு காதலரே !!!!!!

    கெவினின் தலையிலிருந்து சிந்திய குருதியை நக்கி குடிக்கும் பூனை - நன்றாக இருந்தது இந்த காட்சி அமைப்பு மற்றும் சித்திரம்


    Lovingly,
    Lucky Limat
    ........: Browse Comics :.......

    ReplyDelete
  12. நண்பர் லக்கி லிமட் அவர்களே, நீங்கள் கூறுவது போன்று MAX PAYNE திரைப்படத்தில் வரும் அப்பறவை உருவமும் பொருந்திப் போவது உண்மையே. அப்படத்திற்கு எங்கள் அன்பு அண்ணன் ஜே.கே ரித்திஷை ஹீரோவாக போட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்.

    வருகைக்கும், தொடரும் உங்கள் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. நண்பருக்கு,

    நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்தி வரும் காமிக்ஸ் கதைகள் அனைத்தும் அருமை. ஆனால் இந்த கதையை முழுதும் படித்தால் தான் எதுவும் சொல்ல முடியும போல இருக்கிறதே?

    சில கதைகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்கும் - எனென்றால் நமக்கு அந்த எதிராளி யார் அல்லது எது என்பது தெரியாது. ஆனால் அது தெரிந்து விட்டால், அந்த விறு விருப்பு குறைந்து விடும். இந்த தொடரை நீங்கள் முழுவதும் படித்து விட்டீர்களா? இந்த தொடரில் எப்படி?

    உதாரணமாக, அந்த கிரீப்பர் படத்தில் முதல் பாகம் வெற்றி அடைய காரணம் அந்த யார் அல்லது எது என்ற எதிர்பார்ப்பே. அது தெரிந்த உடன் வந்த இரண்டாவது பாகம் அதனால் தான் ஓட வில்லை. (மூன்றாம் பாகம் வருகிறதா என்ன?)

    சமீப காலங்களில் பல நண்பர்கள் உடனுக்குடன் டவுன்லோட் லிங்க் வழங்கி வருங்காலத்தில் எனக்கு வேலையே இல்லாமல் செய்து விடுவார்கள் போல இருக்கிறதே?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  14. நண்பர் புலா சுலாகி அவர்களே, இக்கதையின் முதல் 2 ஆல்பங்களையும் மட்டுமே படித்துள்ளேன் விறுவிறுப்பாக இருந்தது. மேலும் வாசகர்களின் ஆதரவு இல்லாமல் 12 வருடங்களாக ஒர் தொடர் தொடர்வது என்பது சுலபமல்ல, எனவே உங்களிற்கு கிடைக்க கூடிய ஆல்பங்களை நீங்கள் படித்து பார்த்து விடுங்கள். ஏமாற மாட்டீர்கள்.

    கீரிப்பர் படத்தின் 3ம் பாகம் பற்றி என்னிடம் தற்போது எந்த தகவல்களும் இல்லை. தேடிப் பார்க்கிறேன்.

    வருகைக்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  15. புலா சுலாகி,

    //இரண்டாவது பாகம் அதனால் தான் ஓட வில்லை// இதை விட முதல் பாகம் அளவுக்கு அது மாபெரும் வெற்றி அடைய வில்லை என்று சொல்லலாம். விக்டர் சல்வா படங்கள் ஹாலிவுட்டில் ஒரு Safe Bet என்று கூறுவார்கள்

    //மூன்றாம் பாகம் வருகிறதா என்ன?//

    நண்பரே, மூன்றாம் பாகம் மட்டுமல்ல, நான்காம் பாகமும் இந்த வருடத்தின் முடிவில் வர இருக்கிறது. விக்டர் சல்வா தனி வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், அவரது படங்களில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது.அவர் ஒரு ஹாலிவுட் பேரரசு.

    ReplyDelete
  16. விஸ்வா, நண்பர் சுலாகியின் கேள்விகளிற்கு விடை தந்ததிற்கு நன்றி நண்பரே. ஹாலிவுட்டிலும் ஒர் பேரரசா!!!! ஒன்று போதாதா.

    ReplyDelete
  17. காதலரே, பதிவை பொருமையாக படித்து முடித்தேன்.

    // கறுப்பு ஆடைகள் அவள் அழகை கவ்வி நிற்கின்றன.அலை போல் அசையும் அவள் நகர்வுகள் கொலையாகிறது. //

    அதானே பார்த்தேன்... என்னடா கோட் நேம் மின்னல் போல் உடல்வாகை கொண்ட கதாநாயகி அறிமுகமாயியும், காதலரின் வர்ணணைய காணோமே என்று.... :)

    அடடா! ஹெட்போன் என்று இன்றும் சகஜமாக பயன்படுத்தும் வார்த்தைக்கு ஒலிவாங்கி என்று அற்புதமாக தமிழ்படுத்தியதற்கு நன்றி காதலரே,

    சாதாரணமாக கதைகளில் தன் ரத்தத்தை சுவை பார்க்கும் மிருகங்களை எட்டி உதைத்து தன் கோபத்தை தீர்த்து கொள்வதாக தான் கதாசிரியர் வடிவமைத்திருப்பார். இங்கே கெவின் அந்த பூனையை அரவணைத்து எடுத்து செல்வது போல சித்தரித்தரித்திருப்பதிலேயே கதாசிரியர் வித்தியாசத்தை புகுத்தி விட்டார்.

    // தொலைபேசி ஒன்றின் மூலம் ஜோஷ் என்பவனைத் தொடர்பு கொள்கிறான் //
    இது காதலரின் சித்து விளையாட்டா, இல்லை அந்த நபரின் உண்மை பெயர் ஜோஷ் தானா ?:)

    // புரொடியை காண வருகிறாள் அவள் //
    மெலிண்டாவை பற்றி படித்து கொண்டிருக்கும்போது, அவள் என்று குறிபிட்டிருந்ததால் இது கருப்பு உடை மங்கையா அல்லது மெலிண்டாவா என்று குழம்பி பின்பு புரிந்து கொண்டேன். அங்கு சற்று விளக்கி விடுங்களேன், மற்றவர்களுக்கு பயண்படலாம்.

    // இக்கதையினைப் படித்த போதும் பதிவினை எழுதிய போதும் X- FILES தொடரின் நினைவு மனதில் எழுந்தது //
    எக்ஸ் பைல்ஸ் மட்டுமா, நீங்கள் குறிப்பிட்ட அந்த கர்கொயில்ஸ் கார்டூன் தொலைக்கொட்சி தொடர், மாக்ஸ் பெயின் கதையில் வரும் கண்ணுக்கு தெரியாத உருவம், என்று எல்லாமே நியாபகம் வருகிறது. அனேகமாக நீங்கள் கூறிய படி கிரேக்க புராணங்களில் வந்த இந்த கதாபார்த்திரத்தை கொண்டே மற்ற கதைகள் ஜோடிக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    அருமையான கதைபாங்கு, கூடவே அசத்தலான சித்திரங்கள் என்று அருமையாக செல்கிறது இந்த காமிக்ஸ் தொடர். 10 வருடங்களில் 12 ஆல்பங்கள் தான் என்பது இந்த கதையம்சத்துக்கு கதாசிரியர் மற்றும் ஓவியர் எப்படி உழைத்திருப்பார்கள் என்பதற்கு சான்று. காலம் தாழ்த்தி தொடரை பிரசுரித்தாலே அத்ன் ரசிகர்கள் மத்தியில் அது அழியா புகழ் பெரும் என்ற ரகசியத்தை உணர்ந்தவர்கள் பிரான்கோ பெல்ஜியன் காமிக்ஸ் வட்டத்தினர். இதே அமெரிக்க கதாசிரியர்களாக இருந்தால் இவ்வளவு வருடத்தில் 70,80 ஆல்பங்களை கதை தொடரில் வெளியிட்டு, ரசிகர்களை வெறுத்து ஒதுங்க வைத்து பின்பு கதை தொடருக்கும் சுபம் போட்டிருப்பார்கள்.

    அருமையான இன்னொரு கதை தொடருக்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி காதலரே..... தொடருங்கள் உங்கள் அறிய சேவையை. கதையின் சுட்டியை ரமேஷ் வழங்கியுள்ளபடியால் பொருமையாக படித்து ரசிக்கலாம். என்ன ஸ்கான்லேஷன் பிரதி என்பதால் அபத்தமான மொழியாக்கத்தை சகித்து கொண்டு தான் படிக்க வேண்டும். முழு தொடரும் முடிவுற்றால் நமது சினிபுக் அமைப்பினர் இதை வெளியிட வாய்ப்புகள் அனைத்தும் கொண்ட தரமான தொடர் போலதான் தெரிகிறது.

    ÇómícólógÝ

    ReplyDelete
  18. ராம்போ ரஃபிக் அவர்களே,

    கதையில் அப்பாத்திரத்தின் உண்மையான பெயரே ஜோஷ் தான் சந்தேகம் வேண்டாம்.

    ஹெட்போன் எனும் சொல்லிற்கு தமிழ் சொல்லை போட்டே தீருவது என்று முடிவு செய்ததால் ஒலிவாங்கி இடம்பிடித்தது.

    கதையின் இரண்டு ஆல்பங்களிலும் அவள் பெயர் இருக்காது, எனவேதான் அவள் என்பதை மட்டும் உபயோகப்படுத்தினேன். அவள் என்பதை தடித்த எழுத்துக்களில் போட்டு விடுகிறேன்.

    சினிபுக்கில் இக்கதை வெளிவந்து உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டுமென்பதே என் அவா.

    பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ்களின் தரம், அதற்கு ஆசிரியர்கள் வழங்கும் உழைப்பு என்பதற்கு வெற்றி வாகை சூடும் கதைகளே சான்று.

    கனிவான உங்கள் கருத்துக்களிற்கும், வருகைக்கும் நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  19. நண்பர்களே,

    என்னுடைய புதிய அலுவலகத்தில் பிளாக்கர் தடை செய்யப் பட்டு இருந்ததால் இவ்வளவு நாட்களாக பின்னுஉட்டம் இட இயலவில்லை. தமிலிஷ்'இல என்ன பதிவுகள் வந்து உள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்வேன். இப்போது பிரவுசிங் சென்டரில் இருந்து இந்த பின்னுட்டம் இடுகிறேன்.

    நல்ல கதை. English டவுன்லோட் லிங்க் வேறு இருப்பதால் அதனையும் படித்து விட்டு கமெண்ட் இடுகிறேன்.

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    ReplyDelete
  20. அந்த பூனை சம்பவத்தை பார்த்தவுடன் எனக்கு திகில் காமிக்ஸ் பயங்கரப் பூனைகள் தான் நினைவுக்கு வருகிறது.

    அட்டகாசமான கதை. அதைப் பற்றி யாரேனும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  21. இந்த கதையின் எதிர் நாயகி பார்ப்பதற்கு கோட் நேம் மின்னல் அழகியை நினைவு படுத்துகிறாள். அவள் உண்மையில் நாயகனை கொல்லவே அனுப்பப் பட்டாள் அல்லவா?

    ReplyDelete
  22. காமிக்ஸ் பிரியரே, ஆர்வத்துடன் பதிவுகளில் உங்களின் கருத்துக்களை படிந்தமைக்கு நன்றி.

    யூல் வெர்னின் கால யந்திரம் காமிக்ஸ் வடிவில் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக பதிவிடுகிறேன்.

    அவளை நாயகனை கண்காணிக்க மட்டுமே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது ஆனால் கதையில் ஏற்படும் திருப்பங்கள் அவளால் நாயகன் கொல்லப்படுவானா என்ற சந்தேகத்தை தந்து விடுகிறது. படித்துப் பாருங்களேன்.

    உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  23. கனவுகளின் காதலரே,

    மன்னிக்கவும்.

    //யூல் வெர்னின் கால யந்திரம் காமிக்ஸ் வடிவில் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக பதிவிடுகிறேன்.// இந்த காலயந்திரம் தொடரை எழுதியவர் H.G WELLS தானே?

    ReplyDelete
  24. கனவுகளின் காதலரே,

    //அவளை நாயகனை கண்காணிக்க மட்டுமே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது// நன்றி. இப்போது மறுபடியும் படித்து பார்த்தேன்.

    ReplyDelete
  25. காமிக்ஸ் பிரியரே, நீங்கள் கனிவாக சுட்டிக் காட்டியது போன்று அந்நாவல் H.G. WELLS எழுதியது தான். பிழை பொறுத்தருள்க.

    ReplyDelete
  26. தோழர்,

    இந்த சமீப கால காமிக்ஸ் கதைகளில் உள்ள சிறப்பு அம்சமே வசனங்களை நம்பாமல் சித்திரங்களை மட்டுமே நம்பி கதையை நகர்த்துவது. ஆரம்ப கால பிராங்கோ-பெல்கிய கோமிக்குகளில் சித்திரங்களை விட வசனங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வசனங்களால் நிரம்பி வழியும்.

    உதாரணம் - டின் டின், பிளேக் மாடிமர் போன்றவை. ஆனால் தற்போது வரும் காமிக்குகளில் இது போல இல்லாமல் சித்திரங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பது மகிழ்வை அளிக்கிறது.

    நல்ல அருமையான கதை. இதனை திரைப்படமாக எடுத்தாலும் கூட நல்ல வசூலை தரும்.

    பதிவுக்கு நன்றி.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  27. நண்பர் புலா சுலாகி அவர்களே, முன்னைய கால கதைகளில் அதிக வசனங்கள் இருந்தாலும் ரசிகர்கள் அதனை ரசித்தார்கள். தற்போது தேவையற்ற வசனங்களை நீக்கி, சித்திரங்களும் இணைந்து கதை சொல்ல வைத்து விடுகிறார்கள் ஆசிரியர்கள்+ ஓவியர்கள்.

    இக்கதை உங்களிற்கு பிடித்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் மேன்மையான கருத்துக்களிற்கு நன்றி தோழரே.

    ReplyDelete
  28. kk,

    here is the download link for the 2nd part of the story. kindly continue the series review for the 2nd part also.

    hopefully you don't mind giving the download links here.

    The Song of the Vampires season 1 - T02 = http://www.mediafire.com/file/knnjgtwqn4n/

    ReplyDelete
  29. நண்பர் ரவீந்தர் அவர்களே, நீங்கள் சுட்டிகளை தாராளமாக வழங்குங்கள் தயக்கம் வேண்டாம்.

    தொடர்களின் முதாலாவது ஆல்பத்துடன் அவை பற்றிய என் பார்வையை தொடர்வது இல்லை என்றுதான் தீர்மானித்திருக்கிறேன் காரணம், புதிய கதைகளை அறிமுகம் செய்தல் என்ற என் விருப்பமே.

    மேலும் முதல் பாகத்தில் வரும் மர்மங்களை வெளியிடாது இரண்டாம் பாகத்தின் கதையை பதிவாக தரல் என்பதும் சாத்தியமற்றதாக உள்ளது. எனவே நண்பர்கள் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன்.

    தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  30. காதலரே,

    இதோ இந்த தொடரின் மூன்றாவது பகுதி - ஆங்கிலத்தில்:


    http://www.mediafire.com/file/myjzzetdwt2/Song of the Vampires Season 1 - T03 Influences (2009) (Daedalus) (DarthScanner_MadVillain).cbr

    Hope you don't mind. And i know you will not.

    thanks for introducing such a nice story.

    ReplyDelete
  31. நண்பர் ரவீந்தர், மீண்டும் உங்களிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நண்பர்கள் பலரிற்கு உங்கள் சுட்டிகள் பயனுள்ளதாக அமையும். நீங்கள் சுட்டிகளை வழங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது, தாரளாமாக வழங்குங்கள்.

    ReplyDelete
  32. அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் என் வீட்டுக்குள் வந்து சென்றவர் நீங்கள் தானே? இரவுப்பறவை என்ற ஒரு வார்த்தையை வைத்து துலாவி வந்துள்ளேன். முதன் முதலாக எங்கள் வீட்டு தேவியர்கள் அணைவரும் விரும்பி பார்த்த தளம். இப்படியும் ஒரு தளமா? இத்தனை உழைப்பா? இனி கணிணி என்னுடையது அல்ல. அவர்கள் விருப்பங்கள் முடிந்து வேண்டுமானால் பரிதாபப்பட்டு தந்து விடலாம். ஜோதிஜி. http://texlords.wordpress.com

    ReplyDelete
  33. அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் என் வீட்டுக்குள் வந்து சென்றவர் நீங்கள் தானே? இரவுப்பறவை என்ற ஒரு வார்த்தையை வைத்து துலாவி வந்துள்ளேன். முதன் முதலாக எங்கள் வீட்டு தேவியர்கள் அணைவரும் விரும்பி பார்த்த தளம். இப்படியும் ஒரு தளமா? இத்தனை உழைப்பா? இனி கணிணி என்னுடையது அல்ல. அவர்கள் விருப்பங்கள் முடிந்து வேண்டுமானால் பரிதாபப்பட்டு தந்து விடலாம். ஜோதிஜி. http://texlords.wordpress.com

    ReplyDelete
  34. நண்பர் jothig அவர்களே, உங்கள் தேவதைகளின் முகங்களில் என் பதிவுகள் ஒர் புன்னகையையேனும் முகிழச் செய்திருந்தால் அது என் பாக்கியம். அவர்களை காட்டில் ஒர் பியானோ, பனியுகம் போன்ற பதிவுகளை படிக்கத் தூண்டுங்கள். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete