Saturday, January 10, 2009

மன விழிக் குருதி


நண்பர்களே,

சென்ற பதிவிற்கு நீங்கள் தந்த வரவேற்பிற்கு நன்றி. பதிவில் இறுதியில் இடம் பிடித்த வாக்கியத்திற்கு உரிமையாளர் நீட்சே என விடையளித்து மீண்டும் சிறப்புக் கைகுலுக்கல் பெறுபவர் மதிப்பிற்குரிய நண்பர் ஜோஷ்.
காமிக்ஸ் ரசிகரும் கா.கொ.க.கூ தலைவருமான அன்பரும் சரியான விடையினை கூறி பாராட்டுக்களிற்குரியவர் ஆகிறார். ஆனந்த விகடனில் இடம் பிடித்து விட்ட ரஃபிக்கிற்கும் பாராட்டுக்களும் சிறப்பு கைகுலுக்களும்,இது முதல் படியே இன்னும் அவரிற்கு வெற்றிகள் கிட்ட மனதார வாழ்த்துகிறேன். டெக்கான் கிரானிகலில் மீண்டும் இடம் பிடித்த முத்து விசிறிக்கும் என் வாழ்த்துக்கள்.
தொடருங்கள் நண்பர்களே உங்கள் அருமையான ஆக்கங்களை.



சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை நண்பர்களிற்கும்,அவர்கள் குடும்பத்தினரிற்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வரும் பொங்கலிலாவது,பொங்கல் ஸ்பெஷல் வெளியிடும் ஒர் தமிழ் காமிக்ஸ் எங்களிற்கு கிடைக்கட்டும்.நீங்கள் பதிந்த கருத்துக்களிற்கு பதில் கருத்துக்களை சென்ற பதிவின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். சரி, வாருங்கள் கதைக்குள் செல்வோம்.






1986

ஜெர்மனியின் வனப்புமிகு நகரங்களில் ஒன்றான டசல்டொர்ஃப்.
நகரத்தின் பெருமைகளில் தனக்கும் ஒர் பங்குண்டு என நிமிர்ந்து நிற்கிறது,எய்ஸ்லர் ஞாபகார்த்த மருத்துவமனை. மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றுகிறார் டாக்டர் ஹெய்ன்மான். ஹெய்ன்மான் பதவி ஆசை கொண்டவர், பிரபலங்களும், பணக்காரர்களிற்குமே சிகிச்சையில் முன்னுரிமை அளிக்க நினைப்பவர்.முன்னேறத்துடிக்கும் இளம் மருத்துவர்களை தன் லாபங்களிற்காக பயன்படுத்த தயங்காதவர்.


அவரின் சிறந்த நியூரொ சர்ஜன்களில் ஒருவனாக திகழ்கிறான், ஜப்பானை சேர்ந்த இளம் மருத்துவனான டென்மா.துடிதுடிப்பான டென்மா,தன் திறமையால் மருத்துவதுறையில் சாதனைகளை நிகழ்த்த விரும்புபவன். உண்மயாகவே மக்களிற்கு சேவை செய்ய ஆசைப்படுபவன்.டென்மா தன்னை பணியிலமர்த்திய ஹெய்ன்மான் மீது அதிக மதிப்பும்,நன்றியுணர்வும் கொண்டவனாக இருக்கிறான்.ஹெய்ன்மானின் மகளான ஏவா சொகுசு வாழ்க்கையில் நாட்டம் கொண்டவள்.தன் தந்தை பதவி உயர்வு பெறும்போது, டென்மா மருத்துவ மனையின் இயக்குனராக பதவி பெறுவான் எனும் கனவில் அவனை காதலிக்கிறாள்.

டென்மா வெற்றிகரமாக செய்து முடிக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் யாவும் மருத்துவமனையின் பெயரை மேலும் மேலும் புகழ் பெறச்செய்கிறது. டென்மாவின் தொடர் வெற்றிகளால் கிடைக்கும் புகழையும்,விளம்பரங்களையும் தனக்குரியதாக்குகிறார் ஹெய்ன்மான்.டென்மாவுடன் கூடப்பணியாற்றும் பெக்கர், டென்மாவை ஹெய்ன்மான் தன் லாபத்திற்காக உபயோகிக்கிறார் என்பதனை அவனிடம் எடுத்துரைக்கிறான். மருத்துவம் அரசியல் போன்றதே,முன்னேற விரும்பினால் சிலவற்றை விட்டுக்கொடுத்தேயாக வேண்டும் என டென்மாவிற்கு ஆலோசனை வழங்குகிறான் பெக்கர்.









ஒர் இரவு, நகரில் இடம்பெறும் கொலை முயற்சி ஒன்றில் பெற்றோர்கள் மரணமாகி விட, தலையினுள் தோட்டா பாய்ந்த நிலையில் ஒர் சிறுவனும், அதிர்ச்சியினால் நினைவிழந்துவிட்ட சிறுமியொருவளும், பொலிசாரால் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்படுகிறார்கள். டென்மா, உடனடியாக மருத்துவமனைக்கு விரைகிறான். சிறுவன் மிக ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு கொள்ளும் டென்மா, அவனை பிழைக்க வைப்பது சிரமம் என்பதனை அறிந்திருந்தபோதும் முயன்று பார்த்துவிடுவது எனும் முடிவிற்கு வருகிறான். டென்மா ஆபரேஷனிற்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில், டாக்டர் ஹெய்ன்மானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவசர சிகிச்சைக்காக, உயிரிற்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துவரப்படும் நகர மேயரை காப்பாற்றுவதையே டென்மா முன்னுரிமை செயலாக கொள்ளல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றான். ஹெய்ன்மானின் கட்டளையை மீறி, நகர மேயரை கவனியாது சிறுவனிற்கு ஆபரேஷன் செய்ய ஆரம்பிக்கின்றான் டென்மா.

பிரமிக்கதக்க வகையில் சிறுவனிற்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் டென்மா சிறுவனின் உயிரைக் காப்பாற்றி விடுகிறான். திறமையற்ற மருத்துவர்களால் கவனிக்கப்படும் நகர மேயரோ இறந்து விடுகிறார். டென்மா தங்களை இறுதி வேளையில் சிறுவனிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கைவிட்டது தவறு என மேயரிற்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்,அவன் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.












தான் வழங்கிய கட்டளையை மீறிய டென்மாவிற்கு கிடைக்க வேண்டிய தலைமை நியூரோ சர்ஜன் பதவியை திறமையற்ற சக மருத்துவரிற்கு அளிக்கிறார் ஹெய்ன்மான். டென்மா தன் வருங்கால கனவுகளை எல்லாம் ஒர் மூட்டையாக கட்டி வைக்கலாம் என கூறும் ஹெய்ன்மான், டென்மாவின் மருத்துவ சேவையின் முன்னேற்றத்திற்குரிய கதவுகள் யாவும் மூடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார். வருங்காலத்தில் ஒர் கடைநிலை மருத்துவனாகவே டென்மா கருதப்படுவான் என்பதனையும் அவனிடம் தெளிவாக்குகிறார். ஏவாவோ, டென்மா அவளிற்கு நிச்சயதார்த்த பரிசாக வழங்கிய மோதிரத்தினை அவன் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு, வேறொர் மருத்துவருடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். ஆறுதல் கூறவோ, அரவணைக்கவோ யாரும் தனக்கில்லை என்பதனை உணரும் டென்மா, தான் காப்பாற்றிய சிறுவன் இருக்கும் அறையினை நோக்கி செல்கிறான். இன்னமும் நினைவு திரும்பாத நிலையில் இருக்கும் சிறுவனின் படுக்கையருகே ஒடிந்துபோய் அமரும் டென்மா, பித்து பிடித்தவனைப் போல் சிறுவனிடம் பேசுகிறான். உன் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் யாவற்றையும் இழந்துவிட்டேன்,ஆனால் நீ உன் உயிரை இழக்காதே, உயிர்வாழ்வதற்காக போராடு என்று கூறிவிட்டு, அறையின் கதவினை மென்மையாக மூடிவிட்டு செல்கிறான். மூடிய கதவுகளின் மென்மையோடு சிறுவனின் கண்கள் திறக்கின்றன.













யாருமற்றவர்களாகி விட்ட சிறுவனினதும், சிறுமியினதும் சிகிச்சைகளை டென்மா விருப்பத்துடன் பொறுப்பெடுத்துக் கொள்கிறான்.அவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுகிறான்.
மருத்துவர் சங்க தலைமைப் பதவிக்காக ஏங்கும் ஹெய்ன்மான், இரு சிறார்களினதும் பரிதாபமான நிலையை பயன்படுத்தி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறான். இதற்கு குறுக்கே நிற்கும் டென்மாவை சிறுவர்களிற்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பிலிருந்து நீக்கி விடுமாறு உத்தரவிடுகிறான். வேதனையை தாங்க முடியாது மதுவினை அளவிற்கு மீறி அருந்தும் டென்மா,ஹெய்ன்மானும் அவர் ஜால்ராக்களும் உயிர்வாழத் தகுதியற்ற பிறவிகள் எனப் புலம்புகிறான். அதே இரவில் டாக்டர் ஹெய்ன்மானும் மேலும் இரு மருத்துவர்களும் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். மருத்துவமனையில் தங்கியிருந்த சிறுவர்கள் இருவரும் எவ்வித தடயமுமின்றி காணாமல் போய்விடுகிறார்கள்.












மூன்று மருத்துவர்களின் கொலைகளினதும், காணமால் போய்விட்ட சிறுவர்களினதும்
விவகாரத்தினை பொறுப்பேற்கிறார் சிறப்பான பொலிஸ் அதிகாரி ருஞ். மருத்துவர்கள் இறக்க
காரணம் அவர்கள் உட்கொண்ட விஷமூட்டப்பட இனிப்புகள் என்பது தெளிவாகிறது.
ஆனால் மறைந்து விட்ட சிறுவர்கள் பற்றி அவரால் எதனையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
மனதில் உடைந்து போன டென்மா ஜப்பானிற்கே திரும்பிவிடத் தீர்மானிக்கிறான்.ஆனால்
டென்மாவே எதிர்பாராத விதமாக சத்திரசிகிச்சைப்பிரிவின் தலைமைப் பொறுப்பு அவனிற்கு
வழங்கப்படுகிறது. வாழ்க்கை தன்னை திருப்பி போடும் விதத்தை எண்ணி பலமாகச் சிரிக்கிறான்
டென்மா. அவனைத் தேடி வரும் ஏவாவின் கைகளை உதறி,தூரத்தில் அமைதியாக நடந்து
செல்கிறான் அவன். அன்று,டசல்டொர்ஃப்பின் தெருக்கள் அவன் முகத்தை மெளனமாக பார்த்துக்
கொண்டிருந்தன.


9 வருடங்களின் பின்- 1995

ஜெர்மனின் சில நகரங்களில் இடம்பெற்ற தம்பதிகளின் தொடர் கொலைகளை பற்றிய விசாரணையில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறான் ருஞ். கொலை செய்யப்பட்ட தம்பதிகள் யாவரிற்குமிடயிலுள்ள பொதுவான ஒற்றுமையாக, அவர்களிற்கு பிள்ளைகள் இல்லை என்பதனை, அறிந்து கொள்கிறான். இக்கொலைகள் சம்பந்தமாக யுங்கர் என்பவனை விசாரணைக்காக தேடுகிறான். தன்னை மர்மான நபர் ஒருவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தெருக்களில் தறிகெட்டு ஓடும் யுங்கர் கார் ஒன்றுடன் மோதி அபாயமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறான். அவன் உயிரைக் காப்பாற்றுகிறான் டென்மா. யுங்கரின் பலவீனமான நிலையைக்காட்டி, ருஞ் அவனை விசாரணை செய்வதனை தடுத்தும் விடுகிறான்.
உடல் நலம் தேறி வரும் யுங்கரிற்காக பரிசொன்றினை கொண்டு வரும் டென்மா, அறையின் வாசலில் காவல் நின்ற பொலிஸ் இறந்து கிடப்பதை காண்கிறான். காவலன் அருகில் தரையில், இனிப்புக்கள் கொட்டிக் கிடப்பதைக் காணும் அவன் மனதில் மின்னலென ஒர் ஞாபகம் வெட்டுகிறது.
அறைக்குள் நுழையும் டென்மா ஜன்னல் வழியே பார்க்கும் போது தூரத்தில் யுங்கர் ஓடுவது தெரிகிறது. யுங்கரை பின் தொடர்ந்து ஓடுகிறான் டென்மா. ஆளரவமற்ற ஒர் இருண்ட கட்டிடத்தினுள் நுழையும் யுங்கரை தொடரும் டென்மாவை உள்ளே வர வேண்டாமென இரந்து வேண்டுகிறான் யுங்கர். பிடிவாதமாக உள்ளே நுழையும் டென்மா, யுங்கர் மண்டியிட்டு அமர்ந்திருப்பதையும், அவன் எதிரில், இருளில் ஒர் உருவம் துப்பாக்கியை குறி பார்த்து நிற்பதனையும் காண்கிறான். யுங்கரின் அழுகைக்கும், டென்மாவின் வேண்டுகோளிற்கும் செவிமடுக்காத அவ்வுருவம் யுங்கரை சுட்டுக் கொல்கிறது. இருளில் நின்ற உருவம் மெதுவாக முன்னேறுகிறது, 9 வருடங்களின் முன்பான 3 டாக்டர்களின் கொலைகள், சமீபகாலமாக நடந்த தம்பதிகளின் கொலைகள் இவை யாவற்றிற்கும் மூல காரணமான அந்த கொலைமிருகம் வெளிச்சத்தில் டென்மாவிற்கு தன் தேவதை முகம் காட்டுகிறது. அது யாரென அறியும் டென்மாவின் வாழ்க்கை இனி உயிர் கொண்டதாக இருக்கப்போவதில்லை.

ருஞ்ஜிடம் தன் விளக்கங்களை அளித்துவிட்டு பொலிஸ் நிலையத்தினை விட்டு வெளியேறுகிறான் டென்மா.பெய்யும் மழை அவன் மேல் பலமாக விழுகிறது. இன்றும் அவன் அமைதியாகவே நடந்து செல்கிறான். நடையின் ஒர் கணத்தில் தங்கி நிற்கும் டென்மா, மனவேதனையும்,ஆற்றாமையும் தாங்காது தெருவில் மண்டியிட்டுக் கதறுகிறான். மழைத்துளிகளுடன், பாரமான அவன் கண்ணீர் துளிகளையும் தங்கள் மேல் தாங்கியவாறு,மெளனமாக, அவனை தம் கலங்கிய விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கின்றன டசல்டொர்ஃப் தெருக்கள்...


நீங்கள் இதுவரை படித்தது, MONSTER எனப்படும் ஜப்பானிய மங்கா வகை சித்திரக்கதையின் முதல் பாகத்தின் சுருக்கமே. அட்டையில் மான்ஸ்டர் எனும் சொல்லில் உள்ள ஆங்கில எழுத்தான T ஒர் கத்தி வடிவமாக அமைந்திருப்பதை அவதானியுங்கள். தலைப்பிலேயே கதையின் தன்மையைப் பற்றி சிறிது அறிந்து கொள்ள இது உதவுகிறது. யார் இந்த தொடர் கொலையாளி என்பதை கண்டு கொள்வது இக்கதைத் தொடரின்
பிரதான மர்மம் அல்ல. நண்பர்கள் கொலையாளி யார் என்பதை ஏற்கனவே ஊகித்திருப்பீர்கள்.மாறாக கொலைகளை செய்பவனின் உண்மையான அடையாளம் எது? இக் கொலைகளை ஏன் அவன் செய்கிறான்? இவ்வாறான ஒர் கொலைமிருகமாக அவன் உருவெடுத்ததின் மூலகாரணம் என்ன?என்பவற்றை கண்டுபிடிக்கவும், கொலயாளியை தடுத்து நிறுத்தவும் வேண்டி டென்மா மேற்கொள்ளும் விசாரணைகளும், பயணங்களும் அதனால் அவனிற்கு ஏற்படும் சிக்கல்களையும்,அபாயங்களையும் விரிவாக 18 பாகங்களில் சொல்கிறது கதை.



மருத்துவ சேவைக்கு தன்னை உண்மையாகவே அர்பணிக்க விரும்பும் ஒருவன், அவனை தன் லாபங்களிற்காக உபயோகித்து கொள்ளும் ஒருவன் என ஒர் மருத்துவ மனையின் இரு துருவங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தும் கதை, சிறுவர்கள் இருவரினது வருகையால் ஒர் த்ரில்லராக உருமாற்றம் கொள்கிறது. உணர்சிகரமான தருணங்கள், இத்தருணங்களை இருளான நிழலாக தொடரும் மர்மம் என நகரும் கதை, முதலாம் பாகத்தின் இறுதிக்கட்டத்தில் கொலையாளி யார் என்பதனை வெளிப்படுத்தும் போது உறைய வைக்கிறது.



மருத்துவமனையின் அதிர்ச்சி தரும் உள் அரசியல், பதவி உயர்விற்காக தலைமைக்கு ஜால்ரா அடித்து பொதுமக்களிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணிக்கும் மருத்துவர்கள், இவற்றின் மத்தியில் முன்னேறத் துடிக்கும் டென்மா,உயிர்கள் யாவற்றின் விலையும் ஒன்றல்ல எனும் கொள்கையுடைய ஏவா,பரிதாபமான நிலையில் அனாதைகளாக நிற்கும் இரு சிறுவர்கள், தகவல்களையெல்லாம் தன் மூளையில் சேமித்து வைத்து அவற்றை என்றுமே மறந்துவிடாது, குற்றவாளிகளை விடாது துரத்தும் பொலிஸ் அதிகாரி ருஞ்,ஒர் கடிகாரத்திற்கு ஆசைப்பட்டு தன் வாழ்நாள் முழுதும் குற்றங்களிற்காக பூட்டுக்களை உடைக்கும் யுங்கர், தன் திறமையின்மையை ஒப்புக்கொண்டு வாழ்வின் மகிழ்சியான பக்கங்களை மட்டுமே படிக்க விரும்பும் பெக்கர் என முதல் பாகத்தில் பாத்திரங்கள் அருமையாக சித்தரிக்கப்படுகிறார்கள். இரண்டாம் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் டென்மாவிற்கு துப்பாக்கி பயிற்சியளிக்கும் ஹுகோவிற்கும் அவன் வளர்ப்பு மகளான மியான்மார் சிறுமிக்கும் புரிந்துணர்வு ஏற்படும் தருணங்கள் ஒர் அழகான கவிதை.

மங்கா கதைகளில் சித்திரங்களை விட கதையும், அதனை ஆசிரியர் நகர்த்தி செல்லும் விதமும் முக்கியம் பெறுகிறது. அதற்காக சித்திரங்களை இங்கு நான் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை.மான்ஸ்டர் கதையில் கதையோட்டத்திற்கு அமைய சித்திரங்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன. கதையின் அட்டைப்படங்களை பாருங்கள், கவர்ச்சி என்று கூற சிறப்பாக எதுவும் இல்லை ஆனால் ஜப்பானில் மட்டுமல்லாது பிரான்சிலும் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் இது.

இக்கதைக்கு ஆசிரியரும், சித்திரக்காரரும் ஜப்பானை சேர்ந்த NAOKI URASAWA ஆவார். 48 வயதாகும் இவர் ஒர் பொருளாதார பட்டதாரி. ஜப்பானின் மேன்மையான மங்கா விருதான SHOKAKUKAN AWARD இவரிற்கு மூன்று தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. 2001 ல் மான்ஸ்டர் கதைக்காக இவ்விருது அவரிற்கு கிடைத்தது.[1990ல் YAWARAக்காக,2003ல் 20th CENTURY BOYSக்காக] வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் கதைத்தொடர்கள் பின் தொலைக்காட்சி தொடர்களாக வெளிவருவது மங்கா உலகில் ஒர் சாதரண நிகழ்வாகும். மான்ஸ்டரும் இதற்கு விதிவிலக்கல்ல, 74 அத்தியாயங்களை கொண்ட ஒர் தொலைக்காட்சி சித்திரசலனத் தொடர், கதையை வரிக்கு வரி அல்லது கட்டத்திற்கு கட்டம் தழுவி வெளியாகியது.

இன்றைய காமிக்ஸ் உலகில் வாசகர்களிடத்திலும், சந்தையிலும் மங்கா தனக்கென ஒர் இடத்தை பிடித்துக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. 90களின் ஆரம்பத்தில் பாரிசில் தோற்றம் கண்ட மங்கா காய்ச்சல் எனக்கு இன்னமும் மறக்கவில்லை. காய்ச்சல் இப்போது மங்கா கஃபேக்களாக உரு மாறியுள்ளது. ஒர் குறிப்பிட்ட தொகையை அனுமதிக்காக செலுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒர் காபியை அருந்தியவாறோ அல்லது ஒர் கேக்கை கடித்தபடியோ உங்களால் இயன்றளவு நீங்கள் மங்காக்களை படிக்கலாம். படுத்திருந்தவாறு படிப்பதற்கு சோபாக்கள் உண்டு ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது. மதிப்பிற்குரியவரே நாங்கள் கடையை மூட வேண்டும் இன்று போய் நாளை வாருங்கள் என்று மங்கா கஃபேயின் பணியாளர்களை கூறவைக்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மங்கா இருந்து வருகிறது என்கிறார்கள் பெரியவர்கள். வலமிருந்து இடமாக வாசித்தல் என்பது தான் மங்காவை படிக்க வேண்டிய முறை ஆனால் மேற்குலக வாசகர்களிற்காக இம் முறை மாற்றப்பட்டு சாதரண வாசிப்பு முறையில் படிக்க கூடியதாகவும் அவை வெளியாகின்றன. பிரான்சில் தற்போது வெளியாகும் பெரும்பாலான மங்காக்கள் வலமிருந்து இடம் வாசிப்பிற்குரியவை. ஆரம்பத்தில் இரண்டு புத்தகங்களில் சிரமப்பட்டாலும் பின்னர் அது பழக்கமாகி விடும். முத்தமிட பழகுவதினை விட இது எளிதானது நம்புங்கள்.பல வகைகளில், பல வயதினர்க்கேற்ப, பல தலைப்புகளில் மங்காக்கள் வெளியாகின்றன. மங்காவை கதையெழுதி, சித்திரங்கள் வரைபவரை MANGAKA என்கிறார்கள். அவரிற்கு ஒர் கலைஞரிற்கு உரிய மதிப்பு கிடைக்கிறது. மங்காக்களில் வெளியாகும் அனைத்துக் கதைகளும் சிறப்பானதாக அமைந்து விடுவதில்லை ஆனால் மங்காக்களில் முத்துக்களும், மாணிக்கங்ளும் உண்டு எனவே அதனை முற்றாக ஒதுக்கி விடாதீர்கள். ஒர் காமிக்ஸ் ரசிகன் மங்காவை விலக்குதல் அவன் அனுபவத்தையும், ரசனையையும், காமிக்ஸ் மேல் அவன் கொண்டுள்ள காதலையும் முழுமையாக்குவதில் உதவிடுமா என்பதனை கேள்வியாக்கி உங்கள் முன் வைக்கிறேன்.
[ படங்களில் முறையே-டென்மா,ஹெய்ன்மான்,ஏவா,ருஞ்,யுங்கர்]

பதிவைப்பற்றிய உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்திட மறக்காதீர்கள்.



ஆர்வலர்களிற்கு.

படித்ததில் பிடித்தவை







ஒர் சில படங்களிற்கு
http://images.google.fr/images?hl=fr&q=monster+manga&btnG=Recherche+d'images&gbv=2

பாரிஸிலுள்ள மங்கா கஃபே ஒன்றின் போட்டோக்கள்

10 comments:

  1. நண்பரே நான் தான் first,
    நன்றாக எழுதிஉள்ளீர்கள்..இந்த புத்தகத்தின் பக்கங்களை சிலவற்றை internet லே பார்த்தேன், என்ன அருமையான சித்திரங்கள்...உங்கள் blogகிற்கு இந்த தடவை தேர்ந்து எடுத்தது அருமையான selection

    Manga வகை புத்தகத்தில் எனக்கு பிடித்தது Osamu Tezuka's புத்தா series, மிக மிக அருமையான புத்தகங்கள்..

    //முத்தமிட பழகுவதினை விட இது எளிதானது நம்புங்கள்// ஹ ஹ ஹ..

    ReplyDelete
  2. கனவுகளின் காதலருக்கு வாழ்த்துக்களும், வணக்கமும்!

    ‘மங்கா’ பற்றி தமிழ் காமிக்ஸ் வலையுலகில் முதன்முதலாகப் பதிவிட்டதற்குப் பிடியுங்கள் பாராட்டுக்களை!

    //முத்தமிட பழகுவதினை விட இது எளிதானது நம்புங்கள்// சிறந்த கருத்து. இதை நான் ஆமோதிக்கிறேன்.

    ‘மங்கா’ படிக்குமுன் நாம் அந்த வடிவத்தின் சிலபல தனித் தன்மைகளுக்கு இடமளிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் 5 பாட்டும் 4 ஃபைட்டும் இருப்பது அவசியம் என்பது போல. பழகி விட்டால் பின்பு சுலபம்.

    அப்புறம், நேற்று சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ‘மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் மாநாடு’ இனிதே நடைபெற்று முடிந்தது என்பதனை மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. //அப்புறம், நேற்று சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ‘மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் மாநாடு’ இனிதே நடைபெற்று முடிந்தது என்பதனை மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்// இந்த மகா மெகா சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள்:
    * கிங் விஸ்வா = தமிழ் காமிக்ஸ் உலகம்
    * ரஃபிக் ராஜா = காமிகாலஜீ
    * காமிக்ஸ் டாக்டர் = அ.கோ.தீ.க
    * அய்யம்பாளையம் வெங்கி சார் = காமிக்ஸ் பூக்கள்
    * ஜோஸ் = பங்கு வேட்டையர்
    * கவிஞ்சர் தா.பி = தமிழ் குட்டி
    இந்த மாபெரும் சந்திப்பில் கலந்து கொள்வதாக இருந்த மொக்கை காமிக்ஸ் ஒலக காமிக்ஸ் ரசிகர் மட்டும் பிரயாண களைப்பின் காரணமாக வர இயலவில்லை.

    ReplyDelete
  4. //ஆர்வலர்களிற்கு,படித்ததில் பிடித்தவை
    DEATH NOTE, GUNNM, NORI TAKA, DR.SLUMP, MONSTER.//
    அண்ணே,
    நீங்கள் இப்போது ரிவர்ஸ் ஆர்டரில் ஆரம்பித்து இருக்கிறீர்களா? அடுத்து DR.SLUMP'ஆ? தொடர்ந்து இப்படியே எழுதி எங்களை மகிழ்வியுங்கள்.

    செழியன்.

    ReplyDelete
  5. காமிக்ஸ் ரசிகரும் கா.கொ.க.கூ தலைவருமான அன்பரும் சரியான விடையினை கூறி பாராட்டுக்களிற்குரியவர் ஆகிறார்............... நன்றி உங்களுக்கு.

    இதற்க்கு மேல் இந்த பதிவில் யாருமே எதனையும் சேர்க்க இயலாது. அந்த அளவிற்கு சிறப்பாக செய்து உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அடுத்த இரண்டு தினங்களில் மேலும் ஒரு பதிவு இடலாம் என்று இருக்கிறேன். முன்பை போலவே இதுவும் ஒரு காமிக்ஸ் பற்றிய திரைப்படம் தான்.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  6. கனவுகளின் காதலரே.... அருமையான ஒரு அர்த்தம் சொரிந்த பதிவு.

    மங்கா தொடர்களில் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் போகேமொன், பிளேடு போன்ற தொடர்களை விட மிகவும் நேர்த்தியுடன் Monster, போன்ற புத்தகங்கள் இருப்பது எனயருக்கும் தெரிவது இல்லை. அதற்க்கு உங்கள் முயற்சி மேன்மை.

    மங்கா காமிக்ஸ் மேல் தாங்கள் கொண்டு உயரிய ரசிப்பு இந்த பதிவின் மூலம் மற்ற காமிக்ஸ் அன்பர்களுக்கும் பரவும் என்பதில் ஐயமில்லை. உங்கள் முந்தய பின்னூட்டத்தின் அடிப்படையில் நானும் ஒரு மங்கா தொடரை படித்து வருகிறேன்... அதை முடித்தபின் ஒரு பதிவு இட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் என்று நினைக்கிறேன் :).


    சென்னை புத்தக கண்காட்சியில் சக காமிக்ஸ் அன்பர்களை சந்தித்த மகிழ்ச்சியுடன் காலையில் எழுந்து பார்த்தால் உங்களின் இன்னுமொரு படைப்பு. வார இறுதியில் கிடைத்த ஒப்பற்ற பரிசு.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  7. You can Download All Monster Comics Manga Here From the below Links

    http://rapidshare.com/files/146095122/_5BVnsharing.net_5D_20Monster_v01.zip
    http://rapidshare.com/files/146095119/_5BVnsharing.net_5D_20Monster_v02.zip
    http://rapidshare.com/files/146095354/_5BVnsharing.net_5D_20Monster_v03.zip
    http://rapidshare.com/files/146095404/_5BVnsharing.net_5D_20Monster_v04.zip
    http://rapidshare.com/files/146096075/_5BVnsharing.net_5D_20Monster_v05.zip
    http://rapidshare.com/files/146096151/_5BVnsharing.net_5D_20Monster_v06.zip
    http://rapidshare.com/files/146095953/_5BVnsharing.net_5D_20Monster_v07.zip
    http://rapidshare.com/files/146095751/_5BVnsharing.net_5D_20Monster_v08.zip
    http://rapidshare.com/files/146095887/_5BVnsharing.net_5D_20Monster_v09.zip
    http://rapidshare.com/files/146095571/_5BVnsharing.net_5D_20Monster_v10.zip
    http://rapidshare.com/files/146095662/_5BVnsharing.net_5D_20Monster_v11.zip
    http://rapidshare.com/files/146095609/_5BVnsharing.net_5D_20Monster_v12.zip
    http://rapidshare.com/files/146095836/_5BVnsharing.net_5D_20Monster_v13.zip
    http://rapidshare.com/files/146095815/_5BVnsharing.net_5D_20Monster_v14.zip
    http://rapidshare.com/files/146095823/_5BVnsharing.net_5D_20Monster_v15.zip
    http://rapidshare.com/files/146095891/_5BVnsharing.net_5D_20Monster_v16.zip
    http://rapidshare.com/files/146095992/_5BVnsharing.net_5D_20Monster_v17.zip
    http://rapidshare.com/files/146096338/_5BVnsharing.net_5D_20Monster_v18.zip

    ReplyDelete
  8. நண்பரே,

    இணைய தொடர்பில் ஏற்பட்ட கோளாது காரணமாக என் கருத்துகளை சற்று தாமதமாகவே பதிகிறேன்.

    முதல் பகுதியை படித்து இரசித்தேன். பொதுவாக மங்கா ஒரு மொக்கை காமிக்ஸ் என்பது என்னுடைய கருத்து (மாற்ற முடியாதது அல்ல). இந்த கதையை பொறுத்தமட்டில் மிக வலுவான கதையும், படங்களும் அதற்கும் மேலான ஒரு அருமையான கதைசுருக்கமும் (உங்களால்) கொடுக்கப்பட்டிருப்பதால் மிகவும் இரசிக்க முடிந்தது.

    இருந்தாலும் உள்ளுக்குள் ஒரே உதைப்பு. தீடிரென்று இந்த கதைக்குள் போக்மென் ஏதாவது வந்து விடுமோ என்று? நல்லவேளை இதுவரை படித்த வரை வரவில்லை. முழுக்க படித்து விட்டு என்னுடைய எண்ணங்களை இங்கு மீண்டும பதிகிறேன்.

    ஒரு நல்ல சித்திர கதையின் அறிமுகத்தை கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. கனவுகளின் காதலரே,

    முதலில் உங்களுக்கு எனது பொகங்கல் வாழ்த்துகள்.
    ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுபாக இருந்தது கதையின் சுருக்கம். Suspenseல் முடித்துவிட்டீர்கள், கதையை முளுவதும் படிகத்தூண்டும் விதத்தில். தொடருங்கள் உங்கள் இச்சிறந்த பணியை.

    ‍தாரணி

    ReplyDelete
  10. மனவிழிக்குருதியினைப் படித்து,உங்கள் மேலான கருத்துக்களை இட்டுச் சென்ற நண்பர்களிற்கு என் நன்றிகள். தொடர்ந்து சளைக்காது உங்கள் ஆதரவினை வழங்கிட வேண்டுகிறேன்.

    சித்திரபுத்தக மகா ரசிகரே, நானும் புத்தா மங்காக்களை பார்த்திருக்கிறேன்,7 அல்லது 8 பாகங்களை கொண்ட ராட்சத புத்தகங்களை படிப்பதற்கு எடுக்கும் காலம் தான் அச்சம் தருகிறது. விரைவில் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    தலைவர் டாக்.செவன்,நீங்கள் கூறிய தமிழில் வெளிவந்த மங்கா கதைகளை அறிய ஆவலாக உள்ளேன்.அகில உலக காமிக்ஸ் வலைப்பதிவர் உச்சி மாநாட்டில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை ஏனெனில் நான் அப்போது ஹாஸ்பிட்டலில் இருந்தேன்.

    முதிரிளங்காளை விஸ்வா,பதிவினை மீண்டும் படித்து உங்கள் கருத்துக்களை பதிந்திட வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

    செழி, அது ரிவர்ஸ் ஆர்டரில் அல்ல,மான்ஸ்டரை நான் இன்னமும் முழுமையாக படித்து முடிக்காத படியால் அது கீழே போயிற்று.

    காகொககூ, நண்பரே உங்கள் புதுமனை வேலைகள் இனிதே நிறைவுற்றதா, உங்களின் புதிய பதிவினைக்காண ஆவலாக உள்ளேன்.

    ரஃபிக்,வார இறுதியில் கிடைத்த ஒப்பற்ற பரிசு எனவெழுதி என்னை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.போகெமொன்,யுகியோ,போன்றவை என் ரசனைக்கு சரியாக அமைவதில்லை என்பதினால் அவற்றை என் பதிவில் காண்பதற்கு வாய்ப்புக்கள் குறைவே.

    அனாமி, அன்பரே உங்களால் பல நண்பர்கள் பயனடைந்திருக்க வாய்ப்புள்ளது அவர்கள் எல்லார் சார்பிலும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    ஜோஷ், கதையின் எத்தனையாவது பாகத்தில் இருக்கிறீர்கள்.இக்கதை நீங்கள் மங்கா மேல் கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றச்செய்தால் அதுவே என் பதிவின் வெற்றி.

    டேவிட், கதையை படித்தீர்களா, படித்ததும் உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்

    ReplyDelete