Wednesday, December 31, 2008

பாதாளத்தின் கண்கள்

நண்பர்களே, மீண்டும் ஒர் புதிய பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்சி
அடைகிறேன்.
முதலில் நண்பர்கள்,வலைப்பூவை தொடர்பவர்கள்,எட்டிப்பார்ப்பவர்கள் , இந்நியாமற்ற உலகின் எந்தவொரு மூலையிலும் அன்பிற்காக,அமைதிக்காக,நீதிக்காக காத்து நிற்கும் அனைத்து உள்ளங்களிற்கும் என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


நலமும், வளமும், அன்பும், மகிழ்சியும் நிறைந்த ஆண்டாக இது உலக
மனித குலத்திற்கு அமைந்திட வேண்டுகிறேன். முன்னைய பதிவுகளிற்கான
உங்கள் கருத்துக்களிற்குரிய என் பதில்களை, அப் பதிவிற்குரிய கருத்துப் பெட்டிகளில் நீங்கள் படித்திடலாம், உங்கள் கருத்துக்களே என் ஊக்க மருந்து எனவே தயக்கமின்றி பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

இப்பதிவில் WATCHMEN எனும் சித்திர நாவலைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

உலகின் சித்திர நாவல்களில் இதற்கு ஒர் தனியிடம் உண்டு என்பதனை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன். அதனை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது,மழை நாள் ஒன்றில்,கண்ணாடிகளின் வியர்வைத்துளிகளை ரசித்தவாறே, ஜெனிலியாவின் கண்களில் படியும், சூடான தேனீரின் ஆவியை பருகும் பரவசத்தை எனக்கு அளிக்கிறது.

1985 நியூயார்க் நகரம்.
எட்வர்ட் பிளேக்(EDWARD BLAKE) எனும் நபர், உயரமான கட்டிடத்திலுள்ள தன் வதிவிடத்திலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைகிறான். புலன் விசாரணையை ஆரம்பிக்கும் பொலிசார், புகழ் இழந்து, ஒதுக்கப்பட்டு, மக்களால் வெறுக்கப்படும் மூகமூடி நாயகனான ரோர்ஷாக் (RORSCHACH)இவ்விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைப்பான் என்று அஞ்சுகிறார்கள். மூகமூடி நாயகர்களிற்கான கட்டாய ஓய்வு சட்டத்தினை மதியாது, தன் வன்முறை வழிகளில் தீமையை தொடர்ந்து எதிர்த்து வரும், ரோர்ஷாக்கை பொலிசார் கொலைக்குற்றத்திற்காக தேடியும் வருகிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகள் ஐயமுற்றதை நியாயப்படுத்தும் விதத்தில், அன்றிரவே எட்வர்ட் பிளேக்கின் வதிவிடத்திற்குள் ரகசியமாக நுழைகிறான் ரோர்ஷாக். வதிவிடத்தில் , தன் தீவிரமான, நுணுக்கமான தேடுதலின் பலனாக, ரகசிய மறைவிடமொன்றில் எட்வர்ட் பிளேக் மறைத்து வைத்திருந்த, மூகமூடி நாயகனிற்குரிய ஆடை அணிகளை கண்டு கொள்கிறான். இறந்த எட்வர்ட் பிளேக் வேறு யாருமல்ல, கட்டாய ஓய்வின் பின், அமெரிக்க அரசிற்காக பணிபுரிந்து கொண்டிருந்த காமெடியன்(COMEDIAN)எனும் மூகமூடி நாயகன் என்பதை தெரிந்து கொள்கிறான்.

ரோர்ஷாக், தனது பாணியில் விசாரணையை ஆரம்பிக்கின்றான்.
மனிதர்களை கடுமையாக வெறுக்கும் அவன்,தன் உடல் துர்நாற்றத்தை கேலி செய்த நபரின் கைவிரல்களை உடைக்கிறான். அபாயமான நாட்களில் இம்மனித குலத்தை தான் கைவிடுவேன் என மனதில் கறுவிக்கொள்கிறான்.
அவனைக்கண்டு மக்கள் அச்சம் கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற மூகமூடி நாயகர்கள் மத்தியிலும் தன் விசாரணையை மேற்கொள்கிறான். அவர்கள் இது ஒர் அரசியல் கொலையாக இருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். இவர்களிற்கு மாறாக ரோர்ஷாக் மூகமூடி நாயகர்களை தீர்த்துக்கட்ட யாரோ கிளம்பியிருக்கிறார்கள் எனும் முடிவிற்கு வருகிறான்.

காமெடியனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் மூகமுடி நாயகர்களான,
இரவு ஆந்தை( NITE OWL),ஒஸி மண்டியாஸ்(OZYMANDIAS), சூப்பர் ஹீரோவான டாக். மன்ஹெட்டன்(Dr.MANHATTAN)
ஆகியோர் எண்ணங்களில், காமெடியனின் ஞாபகங்கள் அலையடிக்கின்றன. இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் ஒர் மர்ம ஆசாமியைப்பற்றிய தகவலை ரோர்ஷாக்கிற்கு தெரிவிக்கிறான் டாக்.மன்ஹெட்டன். அவன் வீட்டிற்கு சென்று அவனை" நல்ல" முறையில் விசாரிக்கிறான் ரோர்ஷாக். காமெடியன்,ஒர் தீவைப்பற்றியும், அதில் இடம்பெறும் நிழலான நிகழ்சிகள் பற்றியும் அச்சம் கொண்டிருந்தது அவனிற்கு தெரிய வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்கிறான் டாக். மன்ஹெட்டன். அங்கு பத்திரிகையாளர்கள் அவனுடன் பழகிய நபர்களிற்கு புற்றுநோய் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் தர வேண்டுகிறார்கள். இதனால் பதட்டமடையும் டாக்.மன்ஹெட்டன் தான் தங்கியிருக்கும் ராணுவ தளத்திற்கு திரும்புகிறான். அவன் அறையின் கதவில் கதிரியக்க எச்சரிக்கை ஒன்று ஒட்டப்படுவதை காணும் அவன் அதிர்ச்சியுறுகிறான். தன் துணைவியான லோரி தன்னை விட்டு பிரிந்த வேதனையும் இச்சம்பவங்களுடன் ஒன்று சேர பூமியை விட்டு புதன் கிரகத்திற்கு TELEPORTING மூலம் சென்று விடுகிறான்.இவ்வேளையில் ரஷ்யா, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விட்டதாக செய்தி கிடைக்கிறது.

புதன் கிரகத்திற்கு சென்றுவிட்ட டாக்.மன்ஹெட்டன்,தன் கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒர் சாதாரண விஞ்ஞானியாக தான் பணியாற்றிய நாட்கள், அங்கு ஏற்பட்ட விபத்தொன்றினால் தனக்கு கிடைத்த புதிய உருவம்,கிடைத்த எண்ணிலடங்கா சக்திகள், தன் வருகையால் முதல் ஒதுக்கப்பட்டு பின்பு அரசால் கட்டாய ஓய்விற்கு அனுப்பப்பட்ட மூகமூடி நாயகர்கள், தனது காதல்கள் என எண்ணிப்பார்க்கும் அவன் இறுதியில் தன் சக்தியால் புதன் கிரக மணலிலிருந்து ஒர் வினோதமான அமைப்பை உருவாக்க ஆரம்பிக்கிறான்.


ஒஸிமண்டாஸ் எனப்படும் ஓய்வு பெற்ற மூகமூடி நாயகன். தற்போது மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் உந்தப்படும் ரோர்ஷாக் தன் விசாரணையை தீவிரமாக்குகிறான். இதனிடையில் ரோர்ஷாக் பற்றிய தகவல் ஒன்றை தொலைபேசி மூலம் பொலிசிற்கு தெரிவிக்கிறான் ஒர் மர்ம ஆசாமி. தன்னை தேடி வரும் பொலிசாருடன் மோதும் ரோர்ஷாக் இறுதியில் கைது செய்யப்படுகிறான்.

சிறையில் அடைக்கப்படும் ரோர்ஷாக் தீவிரமான உளவியல் அலசலிற்கு உட்படுத்தப்படுகிறான். குரூரமான அவன் சிறுவயது வாழ்க்கை வெளிவர ஆரம்பிக்கிறது.

இரவு ஆந்தை, தான் ரோர்ஷாக்கை சிறையிலிருந்து மீட்க விரும்புவதை தன் நண்பியும், டாக். மன்ஹெட்டனின் தோழியுமாகிய லோரியிடம் தெரிவிக்கின்றான்.லோரி, இதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள்........

ரோர்ஷாக்கை இரவு ஆந்தை மீட்க முடிந்ததா? மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார்? இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன? உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது? இக்கேள்விகள் மட்டுமல்லாது, கதையின் பல புதிர்களிற்கு விடையளிக்கிறது 300 பக்கங்களிற்கும் அதிகம் கொண்ட இச்சித்திர நாவல்.

ஆறு மூகமூடி நாயகர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக விபரிக்கிறது நாவல். கட்டாய ஒய்வின் பின் அவர்களில் பெரும்பாலானோர்,தாங்கள் அணிந்த மூகமூடிக்கு கொடுக்கும் விலை,எதிர்பாராதது. விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம்,ஆக்‌ஷன் எனும் கலவையை சுவைபட தந்துள்ளார் கதாசிரியர் அலன் மூர். 55 வயதாகும் இவர் ஒர் ஆங்கிலேயர். பல கதைகளை உருவாக்கியுள்ளார் இவரின் பிரபலமான கதைகளில் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.





இவை மூன்றும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன, அதில் மூன்றாவது கதையான THE LEAGUE OF EXTRAORDINARY GENTELMAN ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒர் அற்புதமான சொதப்பல். அலன் மூரைப்பற்றிய விரிவான,சுவாரஸ்யமான தகவல்களிற்கு கீழே க்ளிக்கவும்.



கதையில் சில உரையாடல்களில் தத்துவ நெடி தலையை கிறுகிறுக்க வைக்கிறது. ரோர்ஷாக்கின் வாழ்க்கை கூறப்படும் அத்தியாயம், மிகவும் இருண்ட , முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பகுதியாகும். சிறையில் சக கைதிகளை ரோர்ஷாக் தைரியத்துடன் எதிர் கொள்ளும் காட்சிகள் யாவும் அபாரம். வசனங்களின் பெரும்பகுதி அர்த்தங்கள் செறிந்தவையாகவும், சவரக்கத்தியின் கூர்மை உடையனவாகவும் உள்ளன. சில சமயங்களில் நாவலை மூடி வைத்துவிட்டு எங்களை சிந்திக்கவும் தூண்டுகின்றன. எல்லாவற்றையும் விட கதையின் முடிவில் அலன் மூர் வழங்கும் முடிவை ஏற்பது சற்று சிரமம் தான், ஆனால் இதனை விட சிறப்பான முடிவை வழங்க முடியாது என்பதுதான் உண்மை.

கதாசிரியருடன் போட்டி போட்டுக் கொண்டு, அற்புதமான சித்திரங்களை வரைந்து அதன் மூலம் கதை சொல்லியிருப்பவர் டேவ் கிப்பொன்ஸ்(DAVE GIBBONS). வயது 59. இங்கிலாந்துக்காரர். இவரைப்பற்றிய விரிவான தகவலிற்கு கீழே க்ளிக்குங்கள்.



இந்நாவலில் வரும் சித்திரங்களிற்கு கூர்மையான அவதானிப்பை அளிக்காவிடில், பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.டேவ் கிப்பொன்ஸ் இந்நாவலில்மிக சிறப்பாக தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளார். அதிலும் ரோர்ஷாக் கடத்தப்பட்ட சிறுமி ஒருத்தியை தேடிச்செல்லும் காட்சிகளில், சிறுமிக்கு ஏற்பட்டுவிட்ட கதியை எவ்வித சொற்களுமின்றி, சித்திரங்கள் மூலம் மட்டுமே சொல்லி எங்கள் கற்பனை ஜன்னல்களின் கதவை சற்று திறந்து விடுகிறார் டேவ் கிப்பொன்ஸ்.

சித்திரங்களிற்கு வண்ணமளித்தவர் JHON HIGGINS, கண்களை உறுத்தாது, கதையோட்டத்திற்கேற்ப வண்ணமளித்துள்ளார்.

இந் நாவல், 1986-1987 களில் 12 சிறு அத்தியாயங்களாக DC காமிக்ஸினரால் வெளியிடப்பட்டது, காமிக்ஸின் எல்லைகளை விரிய வைத்த நாவல் என்று இதனை கூறுகிறார்கள், அது உண்மையே. இந்நாவல் 1987ல் அலன் மூரிற்கும், டேவ் கிப்பொன்ஸ்ஸிற்கும் முறையே JACK KIRBY BEST WRITER AWARDஐயும், JACK KIRBY WRITER/ARTIST COMBINATION AWARDஐயும் பெற்றுத்தந்துள்ளது.

இக் கதை 1989ல் பிரான்சின் அங்குலெம்(ANGOULEME) கண்காட்சியில், சிறந்த பிறமொழி சித்திரநாவலிற்கான பரிசை வென்றது. TIME சஞ்சிகையின், இது வரை வெளியாகியுள்ள 100 தரமான ஆங்கில நாவல் பட்டியலில் இந்நாவல் இடம் பிடித்துள்ளது. வார்னர் பிரதர்ஸின் தயாரிப்பில், 300 எனப்படும் சூப்பர் ஹிட் படத்தினை இயக்கிய ZACK SNYDERன் இயக்கத்தில் இவ்வாண்டு இது ஒர் திரைப்படமாக வெளியாகிறது. ட்ரெயிலர் கீழே உள்ளது பார்த்து மகிழுங்கள். நான் இப்பதிவில் கூறாதுவிட்ட பல மர்மங்களும், முடிச்சுக்களும், திருப்பங்களும் கதையில் உண்டு, நாவலை படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அவற்றினை இத்திரைப்படம் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

நாவல் நான் வாழும் உலகைப்பற்றி என்னை ஒர் கேள்வியை எழுப்ப வைத்தது. எங்கள் உலகை எந்த மூகமூடி நாயகர்கள் காப்பாற்றப் போகிறார்கள்?

இறுதியாக, ரோர்ஷாக்கின் அத்தியாய முடிவில் அலன்மூர் தரும் மேற்கோள் ஒன்றுடன் பதிவினை
நிறைவு செய்கிறேன்.
"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்"
இவ்வாக்கியத்திற்கு உரிமையாளர் யாரென்பதை கண்டுபிடியுங்களேன், கண்டு பிடித்து முதலில் கருத்து எழுதுபவர்களிற்கு பாராட்டு நிச்சயம். மறந்திடாது பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

அகொதீக தலைவர், டாக்டர் செவன் மிக அற்புதமான, எனக்கு பிடித்த ஒர் கதையினைப் பற்றிய பதிவை பதிவிட்டுள்ளார் அதனைக் காண கீழே க்ளிக்குங்கள்.



ட்ரெயிலர்கள்








13 comments:

  1. கனவுகளின் காதலரே,

    உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களின் பல பதிவுகளை படிக்க நாங்கள் ஆவலுடம் காத்து இருக்கிறோம். இந்த ஆண்டில் உங்கள் இடுகையில் முதல் பின்னுட்டமாக நான் இருக்க வேண்டும் என்பதற்க்க்காகவே இந்த பின்னுட்டம்.

    நன்றியுடன் கிங் விஸ்வா.


    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. கனவுகளின் காதலரே,
    இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போது நான் ஆவலுடன் அதனை டவுன்லோடு செய்து பார்த்தேன். பின்னர் அந்த ட்ரைலரை மைய்யமாக கொண்டே ஒரு பதிவு இடலாமா என்றும் நினைத்தேன். ஆனால் பிறகு படம் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அந்த பதிவை இட வில்லை.

    சிறப்பான விமர்சனம் இது.

    //உலகின் சித்திர நாவல்களில் இதற்கு ஒர் தனியிடம் உண்டு என்பதனை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன்// நான் இதனை வழி மொழிகிறேன்.

    //ஜெனிலியாவின் கண்களில் படியும், சூடான தேனீரின் ஆவியை பருகும் பரவசத்தை எனக்கு// பூரிக் கட்டையால் உங்கள் துணைவியாரிடம் நீங்கள் "அன்பாக" தாக்கப் பட்டதாக ஜோஸ் கூறுகிறார், அதற்க்கு பிறகுமா?

    //ரோர்ஷாக்கை இரவு ஆந்தை மீட்க முடிந்ததா? மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார்? இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன? உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது? இக்கேள்விகள் மட்டுமல்லாது, கதையின் பல புதிர்களிற்கு விடையளிக்கிறது 300 பக்கங்களிற்கும் அதிகம் கொண்ட இச்சித்திர நாவல்// அய்யா நீங்கள்இப்போதே ஆவலை தூண்டி விட்டேர்கலே?

    //தாங்கள் அணிந்த மூகமூடிக்கு கொடுக்கும் விலை,எதிர்பாராதது.// இது நம்முடைய நிஜ வாழ்க்கையிலும் உண்மைதானே?

    //எங்கள் உலகை எந்த மூகமூடி நாயகர்கள் காப்பாற்றப் போகிறார்கள்?// மிகவும் யோசிக்க வைத்தது இந்த கேள்வி. விரைவில் உங்கள் நாட்டிற்க்கு ஒரு தீர்வு வரும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

    நன்றியுடன் கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. அயல் நாட்டு அ.கொ.தீ.க. தலைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    புத்தாண்டில் புதிய பதிவுடன் இனிதே தொடங்கியிருக்கிறீர்கள்! அற்புதமாக உள்ளது!

    உமது மொழிநடையில் உள்ள வசீகரம் எம்மை மிகவும் கவர்ந்திழுக்கிறது. தொடர்ந்து இது போன்ற முத்தான இடுகைகளை இந்தப் புத்தாண்டில் இடுங்கள்!

    'வாட்ச்மென்' அமெரிக்க காமிக்ஸ் உலகை புரட்டிபோட்ட ஒரு நிகழ்வு! இதன்பின்தான் காமிக்ஸ்கள் மெகா-சீரியல் போல நீளத்தொடங்கின. ஹீரோக்கள் செத்துப் போவதும் பின்னர் உயிர்த்தேழுவதும் சகஜமாகின. மக்களுக்கு விருப்பமிருந்தால் இதைப்பற்றி விரிவாகப் பதிவிட முயற்சிக்கிறேன்!

    'வாட்ச்மென்' படித்ததில்லை, ஆனால் 'லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜென்டில்மென்' படித்திருக்கிறேன். 'ஆலன் மூர்'-ன் வித்தியாசமான சிந்தனை இக்கதையில் சிறந்து வெளிப்படும்! 'க்ளாஸிக்' கதாபாத்திரங்களை இவர் கையாளும் விதம் புதுமையும், உண்மையும் கொண்டிருக்கும்!

    ஆனால் இவர் நமக்கெல்லாம் மிகவும் பிடித்த 'இரும்புக்கை மாயாவி', 'ஸ்பைடர்', 'ரோபோட் ஆர்ச்சி', 'பலமுக மன்னன் ஜோ', 'துப்பறியும் ஜார்ஜ் நோலன்' முதலிய பல கதாபாத்திரங்களை 'ஆல்பியான்' எனும் சித்திர நாவல் தொடரின் மூலம் குதறியிருப்பார். இந்தப் புத்தகங்கள் யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து அவற்றை எரித்து விடவும்!

    ஒரு வேளை 'க்ளாஸிக்' கதாபாத்திரங்களுக்கு இருக்கும் முப்பரிமான குணாதிசயங்கள் சாதாரண 'காமிக்ஸ்' பாத்திரங்களுக்கு இல்லாது போனதால் இவ்வாறு நேர்ந்திருக்கலாம்!

    இதே போல் 'லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜென்டில்மென்' பற்றியும் தமிழ் வலையுலக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யலாமே? இது எனது அன்புக் கட்டளை!

    பி.கு.:- 'லார்கோ வின்ச்' திரைவிமர்சனம் அருமை. படத்தைப் பார்க்க டிவிடி வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறை!

    அந்த 'கோட் நேம் மின்னல்' பதிவின் கமெண்டுகள் நம் இருவரின் ஒத்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றன!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. கனவுகளின் காதலனே,

    உங்களுக்கு முதலில் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த பதிவை முதலில் படிக்கும் போது நான் இது பட விமர்சனம் என்றே நினைத்தேன். பின்னர்தான் அது ஒரு புத்தக விமர்சனம் என்பது புரிந்த்தது. அப்படியானால், படம் வெளியான பிறகு இன்னும் ஒரு பதிவு காத்து இருக்கிறது என்று சொல்லுங்கள்.

    ஆலன் மூர் புத்தகம் ஒன்றை விஸ்வா கொடுத்து இருந்தார். ஆல்பியன் என்பது அந்த புத்தகத்தின் பெயர். அதை விட ஒரு மொக்கை கதையை (வேதாள நகரம் உட்பட) நான் படித்தது இல்லை. ஸ்ப்ய்டர் வயதான கோலத்தில் மிகவும் கொடுமையாக இருப்பார். அதற்கு பிறகு ஆலன் மூர் என்ற பெயரை கேட்டாலே "பேரரசு' என்ற பெயரை கேட்டது போல ஓடி விடுவேன்.

    செழியன் - சென்னையிலிருந்து.

    ReplyDelete
  5. Hi Dreams' lover,
    Wish you very Happy New year 2009. This short description of this story is very nice. Why cant you write this story in few parts. The last sentence of roshark chapter is really super and true.

    -Tharani David

    ReplyDelete
  6. நண்பரே,

    வேறு யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன். குறிப்பாக விஸ்வா. ஏனென்றால் அவரும் அந்த புத்தகத்தை படித்திருக்கிறார்.

    ஹிட்லர் தன் குருவாக நினைத்த ப்ரெட்ரிக் நீட்ஷேவின் மிக பிரபலமான வரிகளில் இதுவும் ஒன்று. மிக அருமையான மொழிபெயர்ப்பு. Monster என்பதற்கு மிருகம் என்பதை தவிர வேறெதும் சொல் உள்ளதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

    அருமையான மொழிபெயர்ப்பை மேலும் மிக அருமையானதாக ஆக்குவதற்காக.

    ReplyDelete
  7. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மிகவும் அருமையாக இருந்தது.வெகு விரைவில் நானும் ஒரு பதிவை இட்டு விடுகிறேன்.

    நன்றியுடன்,
    க.கொ.க.கூ

    ReplyDelete
  8. கனவுகளின் காதலரே, அருமையான ஒரு பதிவு.

    Watchmen என்ற புத்தகத்தின் பெயரை "பாதாளத்தில் கண்கள்" என்று மொழிபெயர்த்து இருப்பது தங்களின் அருமையான மொழி நடைக்கு ஒரு சான்று. கலக்கிடீங்க போங்க...

    அமெரிக்கா காமிக்ஸ் வரலாற்றில் வாட்ச்மேன் கேரக்டர் எவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை தங்கள் பதிவின் மூலம் தெள்ள தெளிவாக ஆக்கி இருகிறீர்கள். விரைவில் இந்த தொடரை முழுக்க ஒரு முறை படித்து விட்டு எனது முழமையான பின்னூட்டத்தை பதிகிறேன்.

    அலன் மூர்'ஐ வடக்கில் மிகவும் மதிக்கும் ஒரு காமிக்ஸ் எழுத்தராக எல்லாரும் ஒப்பு கொண்டு இருபது உண்மையே. ஆனால், அவர் albion என்ற தொடர் மூலம் ஆங்கில காமிக்ஸ் வாசகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருப்பது நல்ல செயல் அல்ல.

    Leage of Gentleman படம் ஒரு சொதபல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதில் ஒரே சந்தோசம், Sean Connery மற்றும் Naseeruddin Shah'வய் ஒரே படத்தில் பாக்க முடிந்ததே. ஹிந்தி தெரிந்தவர்கள் சமீபத்தில் வெளி வந்த A Wednesday என்ற படத்தை கட்டாயம் பாருங்கள், Naseeruddin Shah வின் உயர்ந்த நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

    பதிவின் இடையே விட வேண்டிய முக்கியாமான இடைவெளியை நீங்கள் உணர்ததற்கு மகிழ்ச்சி. வலைபூ அன்பர்கள், வாரம் ஒரு முறை பதிவு இடுவதை விரும்பினாலும், வேலைகளின் இடையே வாரம் 5,6 பதிவுகளை படித்து பின்னோட்டம் விடுவது யாராலும் முடியாத ஒரு காரியம் என்று நிறைய பேருக்கு தெரிவது இல்லை. மாதம் 1 அல்லது 2 பதிவுகளே எல்லாருடைய கருத்துகளையும் கேட்டு பெற ஏதுவான ஒரு கோள். இதற்கு முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், முடிவில் உண்மை எல்லாருக்கும் தெரிய வரும்.

    காமிக்கியல் ஓட்டேடிப்பில் முதல்வராக ஓட்டளிததற்கு நன்றி. http://www.comicology.in/2009/01/best-of-year-2008.html

    இன்னும் ஓட்டு முடிய 13 நாட்களே உள்ளபடியால் அனைவரும் பங்கேபார்கள் என்று நம்புகிறேன்.

    // ஜெனிலியாவின் கண்களில் படியும் // போன பதிவில் இனிமேல் லீலைகளை குறைத்து கொள்வதாக கூறியும், நீங்கள் இன்னும் மாற வில்லை என்று தெளிவாக தெரிகிறது. "நவஜோ மதகுருவுக்கு" புகை படலம் மூலம் செய்திகள் அனுப்ப பட்டு விட்டது என்று உங்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஒரு செய்தியை அறிவிப்பது எனக்கு கடமையாகும். :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    பி.கு.: க.கோ.கு. அன்பர் இன்னும் மாறவில்லை. தன் பதிவை பற்றி விளம்பரம் செய்வதில் மட்டும் குறியாக இருக்கிறார். ஆனால், பின்னோட்டம் இடும் பதிவை பற்றி எதுவும் கூறாமல் சென்று விடுவது
    அவர் ஆர்வத்தை பறை சாற்றுகிறது. நான் இப்படி கூறுவது அவர் மனதை புண் படுத்தலாம்... ஆனால் உண்மையை சொல்வதில் என்ன பயம்.

    ReplyDelete
  9. நண்பரே,
    Watchmen நாவலை ஒவ்வொரு முறையும் புத்தக கடைக்கு செல்லும் போது வாங்க வேண்டும் என்று நினைப்பேன்...உங்கள் பதிவை படித்த பின்னர் மிகுந்த ஆவலை தூண்டிவிட்டீர்கள். கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்க போகிறேன்.
    The league of Extraordinary Gentle Men பற்றி சரியான விமர்சனம் இல்லை என்றாலும் அலன் மூர் அவர்களுக்கு காமிக்ஸ் உலகில் ஒரு தனி இடம் உண்டு

    நன்றாக எழுதி உள்ளீர்கள், பாராட்டுக்கள்.
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  10. திரு கனவுகளின் காதலனே,

    தொடர்ந்து அட்டகாசமாக எழுதி வருகிறீர்கள். நீங்கள் தேர்ந்து எடுக்கும் டாபிக் மிகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இந்த கதையின் படமாக்கம் விரைவில் வெளிவரும் என்று நினைக்கிறேன். அப்போது இந்த கதையை பற்றிய புரிதல் வந்த பின்னர் பதிவு இடுகிறேன்.

    நீங்கள் கூறிய இந்த வசனம் Friedrich Nietzsche அவர்கள் எழுதிய வசனம் என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழில் எழுதி இருப்பதால் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  11. மிகவும் ரசிக்க வைத்த பதிவு இது. இந்த படம் எப்போது வந்தாலும் அதை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  12. Hi
    That was a great intro to Watchmen. It was really a different experience reading it. In fact, the story is more about the fears of the heroes themselves. I was simply amazed at the philosophical depth, back-and-forth narrating style and the sketches. Definite read for a serious comics lover. Btw, was just wondering if this was ever translated in tamil? Hope to get more interesting stuff from you. Keep it coming. ;)

    ReplyDelete
  13. வலைப்பூவிற்கு வருகை தந்து, உங்கள் எண்ணங்களை பதிந்து சென்ற அனைவரிற்கும் முதற்கண் என் நன்றிகள்.தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வழங்க வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    விஸ்வா, உங்களை நான் ஏமாற்ற மாட்டேன், அடுத்த பதிவு உங்களிற்கு பதில் கூறும்.

    மதிப்பிற்குரிய தலைவர் டாக்.செவன் அவர்கட்கு,லீக் ஆஃப் ஜெண்டில்மென் பதிவினை பதிந்து விடலாம். உங்கள் சொல்லிற்கு மறுப்பேது.

    செழி, அலன் மூர் ஒர் நல்ல கதாசிரியர். எல்லாரையும் போலவே சில சொதப்பல்களை தந்திருக்கலாம் அது மனித இயல்பு தானே. அது சரி எங்கே உங்களை இப்போது எல்லாம் வேதாள நகரத்தில் காணமுடிவதில்லை.

    டேவிட் தாரிணி, நீங்கள் கூறுவது சரிதான், அவ்வாக்கியம் அர்த்தம் செறிந்தது மட்டுமல்ல கூடவே அச்சம் செறிந்த ஒன்று.

    ஜோஷ், மீண்டும் சரியான பதில், என் தமிழாக்கம் நன்றாக் இருந்தது என்று சொல்லி என்னை குஷிப்படுத்தி விட்டீர்கள். என்னை வியப்படைய வைக்க நீங்கள் தவறுவதேயில்லை.

    கா.கொ.க.கூ காமிக்ஸ் பிரியரே சரியான பதில், படத்தினைப் பாருங்கள் பின் உங்கள் கருத்துக்களை மீண்டும் தாராளாமாக பதியுங்கள்.

    ரஃபிக்,கதையினை நிதானமாக படித்து விட்டு உங்கள் எண்ணங்களை கூறிடுங்கள். நசருதீன் ஷா ஒர் அற்புதமான கலைஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    சித்திரப் புத்தக மகா ரசிகரே, புத்தகத்தை படித்தீர்களா, உங்கள் கருத்துக்களை கட்டாயமாக தெரிவியுங்கள். உங்கள் வலைப்பூவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அம்மா ஆசை இரவுகள்,படத்தினை பார்க்கும் முன் வாய்ப்பு கிடைத்தால் புத்தகத்தினையும் படித்திடுங்கள்.
    உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    S.K.,ஆடைகளை களைந்தால் நாயகர்களும் மனிதர்கள் தானே,அலன் மூரே வாட்ச்மேன் 4 அல்லது 5 தடவைகள் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தபட வேண்டிய நாவல் என்று கூறியிருக்கிறார்,ஜே ஜே சில குறிப்புக்கள் போல. தமிழில் வாட்ச்மேனை விஸ்வா தான் வெளியிட வேண்டும் முதல் பிரதி எனக்கு,இரண்டாவது உங்களிற்கு.

    ReplyDelete