வதனமோ சந்த்ர பிம்பமோ - 21
கியோவா செவ்விந்தியர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஜெஸ் ஹாக் எனும் வயதான ரேஞ்சரை காப்பாற்றுகிறது டெக்ஸ், கார்சன் அணி. செவ்விந்தியர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட ஜெஸ் ஹாக், செர்னாவின் பண்ணை உரிமையாளர் ஒக்டாவியோவின் இரு குழந்தைகளையும் கடத்தி சென்ற ஹுவான் ரஸாவின் தடத்தை தொடர்ந்து தான் சென்று கொண்டிருப்பதாக டெக்ஸிடம் தெரிவிக்கிறார். அதிரடி ரேஞ்சர்கள் இருவரும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்கு ஜெஸ் ஹாக்குடன் தாம் துணையிருப்பதாக கூறி மெக்ஸிக்க எல்லையை கடந்து தேடலை ஆரம்பிக்கிறார்கள் ... இச்சம்பவங்களிற்கிடையே மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் எகிப்திய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது .....
ஆம் நண்பர்களே மெக்ஸிக்கோவை டெக்ஸ் விடுவதாக இல்லை. அம்மண் எம் நாயகனிற்கு அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நம் நாயகன் டெக்ஸும் அந்த அறைகூவல்களை தன் அதிரடிகளால் எதிர்கொண்டுகொண்டே இருக்கிறார். மெக்ஸிக்கோ என்பது அவர் மாமியார்வீடு என்பது போன்ற ஒரு உணர்வை டெக்ஸின் ரசிகர்கள் அனுபவிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்க காலம் ஓடிவிட்டது. மெக்ஸிக்கோவின் வடகிழக்கு எல்லை நகர்களின் தெருக்கள் எல்லாம் தாம் பிறந்த ஊரின் தெருக்கள் போல் டெக்ஸின் ரசிகர்களிற்கு தோன்றுவது அதனால்கூடவாக இருக்கலாம். அம்மண்ணின் கதிரவனின் அனற்கதிர்களை நழுவச்செய்யும் ஒரு பெருந்தொப்பி, புழுதிக்காற்றினை மேனியில் ஏந்திட ஒரு பான்ச்சோ மேலணி சகிதம் நாமும்கூட அந்த தெருக்களின் குட்டிச்சுவர்களில் சாய்ந்து நின்று டெகிலா தந்த இன்பத்தின் இழையில் கிதார்களில் சில பாடல்களை இசைக்கும் நினைவுகள் அந்த சுவர் ஓரமாக முளைத்து நிற்கும் கள்ளியின செடிகளின் விளிம்புகளில் அதிகாலையில் தொங்கி நிற்கும் நீர்த்துளிகள்போலவே மென்மையானவை ...
ஆனால் மென்மை என்பது மெக்ஸிக்கோவில் மிகவிரைவில் ஆவியாகிவிடக்கூடியது. அம்மண்ணின் ஆன்மாக்களின் உக்கிரத்தின் வெம்மை அத்தகையது. அதனாலேயே மெக்ஸிக்க மண்ணில் டெக்ஸ் நடத்தும் அதிரடிகளிலும் உக்கிரத்தின் அளவு அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் TEX #452, #453,#454 ல் தொடராக வெளியாகிய இக்கதையில் அந்த உக்கிரத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. மாறாக காதல், நட்பு, தொல் எகிப்தின் மர்மங்கள் என்பன கலந்த, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கலவையாக இக்கதை கதாசிரியர் Mauro Boselli யால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் மொரிஸ்கோ எனும் தலைப்பில் இக்கதையின் முதல்பாகம் ஆரம்பமாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் எகிப்தில் பாட்சா மெஹ்மெட் ஆண்டிருந்த காலத்தில் கதை சொல்லப்படுகிறது. பாட்சா மெஹ்மெட் எகிப்து நாட்டின் கலைப்பொக்கிஷங்கள், தேசிய சொத்துக்கள் அயல்நாடுகளிற்கு எடுத்து செல்லப்படுவதற்கு தடையை விதித்து இருந்தார் இருப்பினும் அரசு எந்திரத்தில் நிரம்பியிருந்த ஊழல் அத்தடை செவ்வனே நடைமுறைக்கு உள்ளாவதை சிரமமான ஒன்றாக்கியிருந்தது. இக்காலகட்டத்தில் ஓக்டாவ், டேவிஸ் எனும் இரு அகழ்வாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுபவனாக எல் மொரிஸ்கோ பாத்திரம் அறிமுகமாகிறது.
அக்காலத்தில் எல் மொரிஸ்கோவின் பெயர் அஹ்மெட் ஜமால் ஆகும். தன் தந்தையை போலவே மருத்துவனாக பணியாற்றினாலும் அகழ்வுகள் மற்றும் எகிப்தின் தொன்மங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுபவனாகவும், பண்டைய எகிப்தின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டவனாகவும் எல் மொரிஸ்கோ சித்தரிக்கப்படுகிறான். இயற்கை விஞ்ஞானம், மருத்துவம் போன்றவற்றில் கல்வி கற்ற எல் மொரிஸ்கோ தன்னுடன் மருத்துவம் கற்ற சக மாணவியான அழகி நெஃப்ரெட் மீது மென்மையான ஒரு காதலையும் கொண்டவனாவான். அழகி நெஃப்ரெட் எகிப்தின் தொன்மையான சாஸ்திரங்களிலும், ஞானங்களிலும் சிறப்பான பரிச்சயம் கொண்டவளாக கதையில் திகழ்கிறாள். பண்டைய எகிப்தின் காதல் கவிதைகளை எல் மொரிஸ்கோவும், நெஃப்ரெட்டும் படித்து தம் மனங்களை இணைத்துக் கொள்ளும் காட்சி டெக்ஸ் கதைகளில் அரிதாக கிடைக்ககூடிய காதல் காட்சிகளில் ஒன்றென கூறலாம்.
துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்து வந்த எகிப்தை அதன் பிடியிலிருந்து விடுவிக்க பாட்சா மெஹ்மெட் மேற்கு நாடுகளின் நட்பையும் உதவியையும் நாடினார். ஆகவே அத்தருணத்தில் எகிப்தின் மீது இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளின் செல்வாக்கு சற்று அதிகமாக இருந்தது. மொரிஸ்கோ இணைந்து பணியாற்றும் அகழ்வாய்வாளர்கள் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களே. எகிப்தின் அருங்காட்சியகங்கள் எலிகளாலும், திருடர்களாலும் நிரம்பி இருக்கிறது, பண்டைய எகிப்து நாகரீகத்தின் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக பேணப்படும் இடம் மேற்குலகின் அருங்காட்சியகங்களே எனும் கருத்து இந்த அகழ்வாய்வாளர்களின் கருத்தாக கதையில் ஒலிக்கிறது. அகழ்வாய்வாளர்கள் மொரிஸ்கோவிற்கு தெரியவந்த ஒரு ரகசியத்தின்படி ஒரு அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ரகசியம் மொரிஸ்கோவிற்கு தெரியவந்ததற்கு காரணமாக இருப்பது அழகி நெஃப்ரெட்டின் நெருக்கமே.
மொரிஸ்கோவின் மீது நல்லெண்ணம் கொண்ட நெஃப்ரெட், தான் செயல்படும் தேசியவாதக் குழுவான ஹோரஸின் மைந்தர்கள் எனும் அமைப்பில் அவனையும் சேர்த்து விடுகிறாள். அந்த அமைப்பின் நூலகத்திலேயே சுவாரஸ்யமான ஒரு தகவலை மொரிஸ்கோ அறிந்து கொள்கிறான். ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பு மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனும் தகவல் கதையில் முன்வைக்கப்படுகிறது. அமெனோபிஸ் IV அல்லது அகெனெட்டான் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பாராவோன் எகிப்தின் பண்டைய தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி தன்னை முழுமையாக சூரியக்கடவுள் வழிபாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டான். இதை கடுமையாக எதிர்த்த மாந்தீரிகனும், மதகுருவுமான அஹ்ரான் பண்டைய எகிப்தின் தெய்வ வழிபாடுகள் அழிந்து போய்விடல் ஆகாது என்பதற்காக ஆரம்பித்த மதக்குழுதான் ஹோரஸின் மைந்தர்கள். எகிப்திய மதகுருவான அஹ்ரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியையும் கொண்டவன் என்பது பண்டைய ஆவணங்களில் எழுதப்பட்டிருக்கும் தகவல் ஆகும். இந்நிலையில் அஹ்ரானின் கல்லறை இருக்கும் இடம் குறித்த தகவலை கண்டுபிடிக்கும் மொரிஸ்கோ அந்த தகவலை தன் சகாக்களுடன் பகிர்ந்துகொள்ள அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடிக்கும் அகழ்வு இயன்றளவு ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் அகழ்வுகளை மேற்கொள்பவர்கள், திருடர்கள், போட்டி அகழ்வாய்வாளர்கள், அரசின் சட்டதிட்டங்கள் போன்றவற்றால் பல வகையிலும் பாதிக்கப்பட்டார்கள். இது போதாது என்று எகிப்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அயலவர்கள் சூறையாடுகிறார்கள் எனும் எண்ணத்தை வலுவாக கொண்ட ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பும் அகழ்வாளர்களின் முயற்சிகளிற்கு தன்னாலான சிரமங்களை அளித்து வந்தது. ஆகவே ஓக்டாவ், டேவிஸ், மொரிஸ்கோ தம் அகழ்வை மிக ரகசியமாகவே நடத்த வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள். அவர்கள் அகழ்வு செய்யும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை கூட அவதானமாக கண்காணிக்க வேண்டியதொரு நிலை அவர்களிற்கு இருந்தது. இந்நிலை பதட்டத்தை அந்த அகழ்வு தளத்தில் அதிகரிக்கவே செய்தது. பதட்டங்களினதும், அச்சங்களினதும் மத்தியில் நண்பர்கள் மூவரும் அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடித்து விடுகிறார்கள். உள்ளே நுழையவும் செய்கிறார்கள்.
அஹ்ரானின் கல்லறை பொறிகள் நிரம்பியதாக இருக்கிறது. அஹ்ரானின் அமைதியை கலைப்பவர்களை அழிக்கும் உத்திகள் கல்லறைகளில் ஒளிந்த ரகசியமாக காத்திருக்கிறது. இவை போதாது என்று அஹ்ரான் தன் கல்லறையில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாபமும் உள்ளே நுழைபவர்களிற்கு அச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. என் ஓய்வை குலைக்க துணிபவர்களிற்கு அய்யோ கேடு ... ஏனெனில் என் மரணத்தை நான் அவர்களிற்கு தந்து அவர்கள் உயிரை எனதாக்கி கொள்வேன் .. இவ்வுலகில் மீண்டும் என் பாதங்கள் பதியும் மாறாக அவர்களோ என்றென்றைக்கும் இறந்தவர்களின் உலகில் அலைந்து திரிவார்கள் என்பதே அஹ்ரானின் சாபம் ஆகும். இதை எல்லாவற்றையும் மீறி ஆய்வாளர்கள் அஹ்ரனின் ஈமப்பேழையை திறக்கிறார்கள் ஆனால் அது வெறுமையாக இருக்கிறது. ஆய்வாளர்களுடன் கல்லறைக்குள் இறங்கிய பணியாளர்கள் கொல்லப்படுகிறார்கள் ... அஹ்ரனின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது எனும் அச்சம் ஆய்வாளர்களை ஆக்கிரமிக்கிறது. தம் உயிரைக் காக்க அஹ்ரனின் கல்லறையை விட்டு அவர்கள் விலகி செல்கிறார்கள். ஹோரஸின் மைந்தர்களிற்கு அஞ்சி மொரிஸ்கோ எகிப்தை விட்டு வெளியேறுகிறான்...
இந்நிகழ்வுகள் நடந்து முப்பது வருடங்களின் பின்பாகவே டெக்ஸும், கார்சனும் கடத்தப்பட்ட குழந்தைகளை தேடி ஜெஸ் ஹாக்குடன் சாகசத்தை ஆரம்பிக்கிறார்கள். இதே சமயத்தில்தான் மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் ஒரு எகிப்திய மம்மி கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த மம்மி வேறு யாருடையதும் அல்ல ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பை நிறுவிய அஹ்ரா
னின் மம்மியே அது.
டெக்ஸும் கார்சனும் கதையில் வந்து சேர்ந்து கொள்ளும் தருணம் முதல் அவர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதே. குழந்தைகளை கடத்தி செல்பவனும் திறமையில் குறைந்தவன் அல்ல. கார்சனால்கூட அவன் தடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் எனும் ஒரு எண்ணம் கதையின் ஆரம்ப பகுதியில் ஹுவான் ரஸாவின் பாத்திரத்தின் வீர்யத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்படும். இறுதிவரையில் ஹூவான் ரஸாவும் அந்த வீர்யத்தை தக்க வைத்துக் கொள்ள கதையில் வாய்ப்பு தரப்படுகிறது. டெக்ஸைவிட அதிகமாக கதாசிரியர் கருத்தில் கொண்டிருப்பது ஹுவான் ரஸாவின் பாத்திரத்தையே. அவனது நுட்பங்கள், தந்திரங்கள், தைரியம், தீய செயல்களை செய்பவனாக இருந்தாலும் அவன் மனதின் ஆழத்தில் இருக்ககூடிய ஈரம் என அவனை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் மோரோ பொசெலி.
ஒரு பக்கத்தில் குழந்தைகளை தேடிச் செல்லும் ரேஞ்சர்களின் கதை எனில் மறுபுறம் மொரிஸ்கோவும் அவன் முன்னைநாள் நண்பர்களும் எதிர்கொள்ளும் அமானுடச் சாயல் கொண்ட நிகழ்வுகள் என கதை இரு தடங்களில் பயணிக்கிறது. எகிப்தின் தொன்ம தெய்வங்களும், அவர்களின் ஏவலாட்களும் மெக்ஸிக்கோவின் இரவுகளில் உருவாக்கும் திகில் படிப்படியாக கதையில் கலக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கனவுக்கும், தொன்ம நம்பிக்கைகளுக்கும் இடையில் கதையிழை நெய்யப்பட்டு கொண்டே செல்கையில் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கவே செய்கிறது.
ஹுவான் ரஸாவின் தந்திரங்களை வென்று குழந்தைகள் கொண்டு செல்லப்படும் இடத்தை டெக்ஸ் குழுவினர் ஊகித்து கொண்டு அதை நோக்கி பல தடைகளை எதிர்கொண்டு பயணிக்கிறார்கள். முதிய ரேஞ்சராக அறிமுகமாகும் ஜெஸ் ஹாக், பார்வைத்திறன் குன்றியவராக சித்தரிக்கப்படுகிறார். அவருடனான டெக்ஸ், கார்சனின் சந்திப்பு வயதாகும் ரேஞ்சர்களின் வாழ்க்கை எவ்விதமானது எனும் ஒரு கேள்வியை அகத்தில் எழுப்பவே செய்கிறது. டெக்ஸ், கார்சன் போன்ற பாத்திரங்களை வயதானவர்களாக அல்லது வயதானவர்களாக அவர்களது வாழ்க்கை எப்படியானது என்பதை நாம் எண்ணியே பார்ப்பது இல்லை அல்லவா. ஆனால் வயதான ரேஞ்சர் ஜெஸ் ஹாக் பாத்திரம் அந்த சலனத்தை என்னில் உருவாக்கி சென்றது. வயதானபோதும், பார்வை குன்றியபோதும் ஜெஸ் ஹாக்கின் குறி மட்டும் தப்பாது உயிர்களை எடுப்பது இப்பாத்திரத்தின் மீதான ஒரு முரண். ஆனால் கதையின் ஒரு கட்டத்தில் அவர் கார்சனை நோக்கி சுட்டு விடுவது மென்மையான ஒரு நகைச்சுவையை கதையின் அந்த சமயத்தில் அள்ளித் தருகிறது.
எல் மொரிஸ்கோவின் நண்பர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பில் இருந்த எகிப்தின் பண்டைய சடங்கு பொருட்களும் திருட்டு போகின்றன. டுராங்கோவில் எல் மொரிஸ்கோவும் அவனிடம் இருக்கும் சில பொருட்களிற்காக தாக்கப்படுகிறான். இவையெல்லாம் ஹோரஸின் மைந்தர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைகளின் கடத்தல்களிற்கும், பண்டைய எகிப்தின் மதச்சடங்கு பொருட்களை ஹோரஸின் மைந்தர்கள் தேடி அபகரிப்பதற்கும், டுராங்கோவில் வந்து சேர்ந்த மம்மிக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்து விட முடியும். நரபலி சடங்கு, மம்மியை உயிர்ப்பிக்க வைத்தல் எனும் சொற்களில் அவற்றை இங்கு அடக்கி விடலாம். ஆனால் மாவீரன் டெக்ஸ் இருக்கையில் அஹ்ரனின் மம்மி விழிக்குமா என்பதுதான் கேள்வி. கதையும் அக்கேள்விக்கான விடையை வாசகர்களிற்கு சிறிது ஏமாற்றத்துடன் தந்து நிறைவடைகிறது.
கதையில் டெக்ஸ், கார்சன் பங்கு சிறிது குறைவே. ஹுவான் ரஸா, மொரிஸ்கோ எனும் பாத்திரங்கள் கதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கு கூறலாம். எகிப்திய வரலாறு கற்பனை கலந்து சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட நரபலிச்சடங்கிலும் இறந்தோர் உலகின் ஏழு கதவுகளையும் ஒரு உயிர் தாண்டி வரும் நிலை எளிதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களை உயிர்பிற்பதற்கான சடங்குகளில் பயன்படும் கருவிகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றன. எகிப்து, மற்றும் மாயா நாகரீங்கள் அட்லாண்டிஸ் நாகரீக வழிவந்தவையே எனும் நம்பிக்கை கொண்டவனாக ஒரு மதகுரு பாத்திரம் உலாவருகிறது. இந்த எல்லா தகவல்களும் வாசிப்பை சுவாரஸ்யம் ஆக்குகின்றன என்பது உண்மையே ஆனால் இறுதியில் நிகழ வேண்டிய அம்முக்கிய சம்பவம் வாசகர்களை அதிர வைப்பதற்கு பதில் அழ வைத்து விடுவதாக இருக்கிறது. கதையின் சம்பவங்களிற்கு தரப்படும் விளக்கங்கள் நம்பகத்தன்மையை கதைக்கு தருவதிலிருந்து தொலைவில் சென்று நிற்கின்றன. விறுவிறுப்புடனும், திகிலுடனும் நகர்ந்த கதை இறுதியில் வேகம் தளர்ந்து வீழ்ந்த கதையாகி விடுகிறது.
கதைக்கு சித்திரங்களை வழங்கியிருப்பவர் Guglielmo Letteri . இவர் வரையும் பாத்திரங்கள் தலைகளை சரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதையும், அவர்களின் கழுத்துப்பகுதி ஒரு ஆமையுடையதைப்போல சுருங்கிப் போய் இருப்பதையும் வாசகர்கள் நன்கு அவதானிக்க முடியும். ஆரம்ப பக்கங்களில் ஓவ்வாத ஒரு உணர்வை லெட்டெரியின் சித்திரங்கள் வழங்கினாலும் கதையின் நகர்வோடு அவை பிடித்தவையாக மாறிடும் அதிசயத்தை நீங்கள் உணரலாம். உணர்வுகளை முகங்களில் சிறப்பாக கொணரும் கலைஞர்களில் லெட்டெரி ஒருவர். நரபலித்தருணக் காட்சிகளில் குழந்தைகள் இருவரினதும் முகபாவங்கள் இதற்கு சான்றாக இருக்கும். எகிப்தின் தொன்மங்கள் சம்பந்தப்பட்ட தருணங்களில் இவர் சித்திரங்கள் வழங்ககூடிய காட்சித்தகவல்கள் சிறப்பாக இல்லை எனினும் கதையின் திகிலை இருளுடன் சிறப்பாக லெட்டெரி கொணர்ந்திருக்கிறார்,
கதையை படிக்க ஆரம்பிக்கையில் மூவாயிரம் ஆண்டுகளிற்கு பின் கண்விழிக்கும் அஹ்ரனின் மம்மி போயும் போயும் டெக்ஸின் முகத்திலா விழிக்க வேண்டும் எனும் ஒரு பாசவுணர்வு டெக்ஸின் ரசிகர்களில் அரும்பலாம். டெக்ஸும் மம்மி இன்னிக்கு இருக்குடி உனக்கு மங்காத்தா எனும் வகையில் பேய்க்குன்றை நோக்கி பயணித்திருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல சக்தி எல்லாரையும் காத்து விட்டது கதையின் இறுதியில். வாசகர்களை தவிர்த்து.
அடடே!!!
ReplyDeleteஅடடே!!!
ReplyDeleteபிரென்ச் படிக்க தெரிஞ்சதால டெக்ஸ் கதைகள் படிக்க பஞ்சமே இருக்காது. வாங்கி படிச்சி கொண்டாடுங்க..! அப்பப்ப இது மாதிரி கதை போட்டு எங்கள கடுப்பேத்துங்க..! ( கடைசி வரி 'நச்' ) என்னிக்கு இதெல்லாம் தமிழ வந்து...நாம படிச்சி...ம்...விடிஞ்சிரும்...!
ReplyDeleteநண்பரே, சென்ற வருட இறுதியுடன் இதுவரை டெக்ஸ் கதைகளை சிறப்பாக வெளியிட்டு வந்த க்லேர் டு லூன் எனும் பதிப்பகம் கடையை மூடிவிட்டது. ஆனால் அவர்கள் வெளியிட்ட கதைகளில் இன்னும் பலவற்றை நான் படிக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல் :) நீங்கள் நினைப்பதைவிட விரைவாகவே தமிழில் வந்துவிடும் .
Deleteடெக்ஸ் கதையை புத்தகமாக படித்தாலும், ஆன்லைனில் உங்களின் மயக்கும் நடையில் படித்தாலும் அழகுதான். உங்கள் வதனமே சந்திர பிம்பமோ டெக்ஸ் ஸ்பெஷல் பதிவில் கண்கவர் டெக்ஸ் ஸ்கேன் படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் .
ReplyDeleteஇத்துனை தகவல்கள் சேகரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் ஆழம் தெரிகிறது. வெகு ரசனையான விமர்சனம், செய்திகளும் கூட.மிக அற்புதமான பதிவு.நன்றிகள்..உரித்தாகுக.......
நண்பரே, இந்த யுகத்தில் இணையத்தில் ஒரு சொல்லை தட்டினால் தகவல்கள் வந்து குவிந்து விடுகிறது. அது ஒரு விடயமே அல்ல. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
Delete