Sunday, January 6, 2013

என்பு வேட்டையர்

வதனமோ சந்த்ரபிம்பமோ-7

நவஹோக்களின் T REX டெக்ஸ் அதகளம் 

வையோமிங் பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் Buffalo எனும் சிறுகிராமத்திற்கு குதிரை திருட்டு சம்பந்தமான விசாரணை ஒன்றிற்காக டெக்ஸும், கார்சனும் வருகை தருகிறார்கள். வஃபலோ கிராமத்தின் ஷெரீப்பான டாம் பாக்ஸ்டருன் உரையாடும் டெக்ஸ், விசாரணையை தொடர்வதற்காக Four Bears எனும் செவ்விந்திய இளைஞனை சந்திக்க விரும்புகிறார்…..
Tex Maxi  n°2ன் கதையாகிய Le Chasseur de Fossiles ஐ கதையின் கதாசிரியராகிய அண்டோனியோ செகுரா, லண்டனில் அமைந்திருக்கும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தொல்லுயிர் படிமப் பிரிவிலேயே ஆரம்பிக்கிறார். கதையில் டெக்ஸ் வாசகர்களிடம் அறிமுகமாகும் முன்பாக டைனோசார் போன்ற தொல்விலங்குகளின் என்புருக்கள் வாசகர்களிடம் தம்மை அறிமுகமாக்கி கொள்கின்றன. அமெரிக்க மண்ணிலிருந்து லண்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பை வளமாக்க வந்து சேர்ந்திருக்கும் முற்சரித்திர விலங்குகளின் படிமவுருக்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருக்கும் மாசசூசெட்ஸின் செனெட்டரான தாமஸ் கரேயின் மனதிற்கு மகிழ்சி தருவதாக அமைந்திடவில்லை, மாறாக தன் தேசத்தின் படிமப் பொக்கிஷங்கள் அன்னியர் பெருமைக்கு துணைபோவதைத் தடுக்க அவர் எண்ணம் இழைகொள்கிறது. அமெரிக்காவிலும் சிறப்பானதொரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை உருவாக்கிட வேண்டுமெனவும் அவர் மனதில் ஒரு திட்டம் பிறக்கிறது.
தொடரும் கதையின் பக்கங்களில் செனெட்டர் தாமஸ் கரே அவர்களின் பணிப்பின் கீழ் தொல்லுயிர் எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்காக பயணிக்கும் தொல்லுயிரியலாளரான ED Cope கதையில் அறிமுகமாகிறார். அமெரிக்க தொல்லுயிர் எச்ச அகழ்வு வரலாற்றில் Edward Drinker Cope முக்கியம் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். எட் கோப்பிற்கும் அவரது போட்டியாளரான Othniel Charles Marsh க்கும் இடையிலான என்பு வேட்டை வரலாறு, டெக்ஸ் கதையைப் போன்றே சுவாரஸ்யமானது. ஆரம்ப நாட்களில் நண்பர்களாக இருந்து பின்பு பெயரிற்காகவும், புகழிற்காகவும் எதிரிகளாக மாறிய இந்த இருவரின் வரலாற்றில் ஒரு சிறு பகுதியை அண்டோனியா செகுரா தனது கதைக்கு கற்பனைமிகை சேர்த்து சாதகமாக்கி கொண்டிருக்கிறார். எட் கோப்பிற்கு போட்டியாளராக அவர் ஒரு கற்பனை பாத்திரத்தை கதையில் உருவாக்கி நடமாடச் செய்திருக்கிறார். எட் கோப்பின் பாத்திரப் படைப்பும் செகுராவின் கற்பனையை சார்ந்ததாக இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது.
எட் கோப் குழுவின் அறிமுகம் தாண்டிய பின்பாக கதை Raton எனும் சிறுகிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மதுவிடுதிக்கு நகர்கிறது. இங்கு அமெரிக்க மேற்கின் பல பகுதிகளிலும் அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட மனிதனான Red Barnum, தன்னை வேட்டையாட வரும் இரு வெகுமதி வேட்டையர்களின் கதைகளை முடிப்பதுடன் தன் கதையை ஆரம்பித்து வைக்கிறான். மேற்கூறிய அறிமுகங்கள் கதையின் பிரதான இழையுடன் இப்பாத்திரங்கள் நெய்யக்கூடிய சித்திரம் என்னவாகவிருக்கும் எனும் ஆர்வத்தை கதையை படிப்பவர்கள் மனதில் எளிதாக விதைத்து விடுகிறது. அந்த ஆர்வத்தின் துணையுடன் எஞ்சியிருக்கும் பக்கங்களை நகர்த்துவது சுகமான ஒன்று அல்லவா.
கதையில் வரும் எட் கோப், செவ்விந்தியர்களை ஆதிவாசிகளாக அல்லது கூர்ப்பில் பின்தங்கிய இனமாக அடையாளம் காணும் மனப்பான்மை கொண்ட ஒரு ஆய்வாளராகவே சித்தரிக்கப்படுகிறார். தன்கீழ் பணிபுரியும் கறுப்பனான Iron Cody, இரு பூர்வகுடிகளிற்கிடையிலான அங்கீகார ஏற்பை அவர்களிற்குரிய மரபு முறையில் செவ்விந்தியக் குழு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது அந்த மரபை எட் கோப்பால் காட்டுமிராண்டித்தனம் எனும் பண்பாகவே வரையறை செய்ய முடிகிறது. அறிவியலின் முன்னகர்விற்காக ஒரு இனம் போற்றும் பாரம்பரியங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் குறித்து எந்த அக்கறையுமற்ற நிலையில் தன் ஆய்வுகளையும், தேடல்களையும் அவர் மும்முரமாக நிகழ்த்துகிறார். முற்சரித்திர விலங்குகளின் எச்சங்களை தேடி அவர் அமெரிக்க பூர்வகுடிகளின் நிலங்களினூடாக பயணிக்கிறார், அந்த நிலம் குறித்தும், முற்சரித்திர விலங்குகளினது எச்சம் குறித்தும் பூர்வகுடிகள் கொண்டிருக்கும் பார்வை என்ன என்பது குறித்த கரிசனங்கள் அற்ற ஒரு அறிவியலாளராகவே அவர் காணப்படுகிறார்.
cf1செவ்விந்திய இளைஞனான ஃபோர் பியர்ஸின் தாய் வெள்ளை இனத்தவன் ஒருவனுடன் வாழ்பவள். தனது மகன் வெள்ளை இனத்தவர்கள்போல கல்வியறிவு பெற்று தன் கரும்பாத செவ்விந்தியக் குடிகளின் நலனிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது அவளது கனவு. ஆனால் வெள்ளையினத்தவர்களின் குடியிருப்புக்களிலும், கல்விக்கூடங்களிலும் ஃபோர் பியர்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் அவனைப் பித்துக் கொள்ள வைக்கின்றன. எட் கோப் அமெரிக்க பூர்வகுடிகள் மீது கொண்டிருந்த மதிப்பீட்டிற்கும், ஃபோர் பியர்ஸ் வாழ்ந்திருந்த வெள்ளையின சமூகத்தின் நடவடிக்கைகளிற்கும் இடையே அதிக வேறுபாடுகளை ஒருவர் நிறுவிட முடியாது. நன்கு கல்வியறிவு பெற்ற ஒரு வெள்ளையனைப்போல தான் உருவாக வேண்டும் எனும் அவன் தாயின் அடையாளத்திணிப்பை ஃபோர் பியர்ஸால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இந்த இயலாமையும் தான் ஒரு பூர்வகுடி இந்தியன் எனும் உணர்வும் அவனை வெள்ளை இனத்தவர்கள் மீதான எதிர்மறை எண்ணங்கள் கொண்ட ஒரு இளைஞனாக மாற்றியடிக்கிறது. வன்முறைகளால் மட்டுமே செவ்விந்திய இனம் தன் உரிமைகளையும், இழந்தவற்றையும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனும் சித்தாந்தம் அவன் மனதில் ஆழ்நில வேர்களாக படர்ந்து உறுதி பெறுகிறது. அவன் வாழ்க்கை, அவன் தாய் அவனிற்காக உருவாக்க நினைத்த வாழ்வின் எதிர்முகம் கொள்கிறது. தந்திரமும், குரூரமும் நிறைந்த ஒரு செவ்விந்திய இளைஞனாக அவன் வடிவெடுக்கிறான்.

வஃபலோ கிராமத்தில் ஃபோர் பியர்ஸை தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கு டெக்ஸ் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சடார் என துப்பாக்கியை உருவி படார் என வெடிக்க வைத்து மடேர் என அவனை வீழ்த்த டெக்ஸால் இயலவில்லை என்பதாகவே கதையின் முன்பாதி நகர்கிறது. பள்ளத்தாக்குகள், மலைகள், கணவாய்கள் என டெக்ஸையும், கார்சனையும் அலைய வைக்கிறான் ஃபோர் பியர்ஸ். இருப்பினும் டெக்ஸ் அவனை மடக்குகிறார். ஆனால் அவன் கூண்டில் முடங்கி அடைபட்டுக் கிடக்கும் ஒரு இலகுவான பறவையல்ல. கதாசிரியர் செகுரா கதையின் பிரதான எதிர்நாயகனகாக ஃபோர் பியர்ஸை படிப்படியாக உருவாக்கும் விதம் சிறப்பானது. கதையின் முதற்பாதியில் ஃபோர் பியர்ஸ் மீது வாசகர்களை எதிரான எண்ணங்கள் கொள்ள வைக்கும் கதைப்போக்கை கையாளும் செகுரா, முக்கியமான ஒரு தருணத்தில் தரும் இருபக்கங்கள் மூலம் அந்த எதிர்மறை எண்ணங்களை எல்லாம் வாசகர்களை நீக்கி கொள்ள செய்துவிடுகிறார். பெருவெளி எருமைகளை அவற்றின் தோலிற்காக கொன்றுபோடும் மனிதர்களை ஃபோர் பியர்ஸ் தன் வன்குரூரத்தால் பலிகொள்ளும்போது அவன் பேசிடும் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவன் செயலின் குரூரத்திற்கு சார்பான வாதங்களை பெருவெளிப்புற்களின் நுண்வேர்நாக்குகள் குருதிச்சுவையுடன் அருந்தத் தருகிறது. இரு உயிரிகளின் தோல்கள் உரிக்கப்படுகின்றன. இந்த சொற்கள் சாதராணமானவையாக தோன்றும். இரு உயிரிகளில் ஒன்று எருமை மற்றயது மனிதன் என்பது தெரியும்போதுதான் அச்செயலில் இருக்ககூடிய பாதகத்தன்மையை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும் அல்லவா! ஆனால் ஃபோர் பியர்ஸிற்கு எருமை, அதன் தோலை உரிப்பவர்களை விட ஆதாரமானது. தோலை உரிப்பவர்களிற்கோ எல்லாவற்றையும் விட தோலை உரிப்பது முக்கியமானதாக இருந்தது. இரு இனங்களின் அழிவுக்கு தோலும் ஒரு காரணமாக அமைந்தது என்பது ஆச்சர்யம்தான். தொடரும் கதையில் வெள்ளை இனத்திற்கு எதிரான தனது வெறியை அடக்கமாட்டாது, அர்த்தமிழந்த பெருங்கோபத்துடன் மனிதர்களை கொன்றுபோடும் ஒரு தந்திரனாக அவன் சித்தரிக்கப்பட்டாலும் வழமையான கதைகளில் செவ்விந்திய எதிர்நாயகர்கள் சித்தரிக்கப்படும் இழிவான பாணியிலிருந்து ஃபோர் பியர்ஸிற்கு விலக்கு அளித்த வகையில் செகுவராவின் கதைகூறல் சிறப்பான ஒன்றாக அமைகிறது எனலாம்.

ஃபோர் பியர்ஸை, வஃபலோவிலிருந்து மொண்டானாவில் அமைந்திருக்கும் கரும்பாத செவ்விந்திய பூர்வகுடிகளின் குடியிருப்புவரை டெக்ஸ் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பாதையில் நிகழ்ந்த இரு கொலைகள் குறித்த விசாரணைகளை நிகழ்த்தி அக்கொலைகளை ஆற்றிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையும் டெக்ஸ் இறகுத்தொப்பிபோல அணிந்து பயணிக்கிறார். தனது கால்களில் ஒன்று மரத்தாலான ஒரு மனிதனை ஃபோர் பியர்ஸின் தடத்தோடு அவர் தேடிச் செல்கிறார். வியப்பளிக்கும் விதமாக ஃபோர் பியர்ஸ், எட் கோப், மரத்தாலான கால் ஒன்றைக் கொண்ட சார்ல்ஸ் சட்டர் ஆகியோர் பயணிக்கும் தடங்கள் ஒன்றாகவே அமைகிறது. இந்த தடங்கள் யாவும் Crow Agency எனப்படும் காவல் கோட்டையை கடந்தே செல்கின்றன.

வஃபலோவில் ஃபோர் பியர்ஸ் நிகழ்த்தும் வன்செயல்களால் அவன் தலைக்கு 3000 டாலர்கள் வெகுமதி விதிக்கப்படுகிறது. இந்த தொகை ரெட் பார்னமை ஈர்க்கிறது. ரட்டோனின் மதுவிடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி மோதலில் ரெட் பார்னமின் இதயத்திற்கு அருகே புதைந்த தோட்டா காலத்துடன் காலனை அவன் உயிரிற்கு அருகே சிறிதுசிறிதாக அடிகொள்ள வைக்கிறது. வறள் நிலத்தின் காற்று ஊட்டும் புழுதிச்சோற்றையுண்ணும் வாழ்விலிருந்து தன் உயிர்போகும் முன்பாக ஒரு சிறு கணமேனும் விலகிட விரும்புகிறான் ரெட் பார்னம். எனவே அவனும் ஃபோர் பியர்ஸை வெகுமதிக்காகத் தேடிச் செல்கிறான். அவன் தலைக்கு வெகுமதி விதிக்கப்பட்ட ஒருவன் வெகுமதிக்காக பிறிதொருவன் தலையைத் தேடிச் செல்லும் வாழ்வின் விசித்திரமான ஆட்டம் அது. ரெட் பார்னம் எதார்த்தம் தெரிந்தவன். டெக்ஸை துப்பாக்கியால் எதிர்கொள்வதை அவன் தவிர்த்தே செல்கிறான். தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மரணத்தின் நெருக்கத்துடன் அவனிடம் அதிகரித்து விடுகிறது. ரெட் பார்னம் தன்னைப் பின் தொடர்வதை தடுக்க டெக்ஸ் முயற்சிகள் எடுத்தாலும் டெக்ஸை தொடர்வதை பார்னம் நிறுத்துவது இல்லை. தன் உயிர்போகும் முன்பாக ஒரு மனிதனாவது தன்னைப்பற்றிய நல்லபிப்பிராயம் கொண்டவராகிட வேண்டும் என ரெட் பார்னம் தன் இயல்புகளை மாற்றிக் கொள்வது போல நடிக்கவாவது முயல்கிறான். ஆனால் டெக்ஸ் இறுதிவரை பார்னம் ஒரு கேடி என அவர் கொண்ட எண்ணத்திலிருந்து விடுபடுவது இல்லை. ரெட் பார்னமும் டெக்ஸிடம் போலியாக நடந்து கொள்வது இல்லை. ஒரு மனிதனை அயோக்கியனாக பார்த்தாலும் மனிதநேயம் என்பதிலிருந்து அவனிற்கு தான் விலக்களிப்பது இல்லை என்பதாக டெக்ஸ் கதையின் இறுதிக் காட்சி ஒன்றில் நடந்து கொள்வார். ரெட் பார்னம் இக்கதையின் மிக முக்கியமான துணைப்பாத்திரம் என்பதை கதையை ஒருவர் படிக்கையில் உணரமுடியும்.

cf2க்ரோ ஏஜென்சியில் இருந்து எட் கோப் குழு, ரெட் பார்னம் அணி, டெக்ஸ், கார்சன் ஆகியோர் ஒரே குழுவாக கரும்பாத செவ்விந்தியர்கள் குடியிருப்பை நோக்கி பயணிப்பார்கள். அக்குழுவில் பயணிப்பவர்களின் நோக்கங்கள் ஒன்றல்ல. அந்நோக்கங்கள் யாவும் நிறைவேறி விடுவதுமில்லை, பயணித்தவர்கள் யாவரும் மீள வருவதுமில்லை. பல வாழ்க்கைகளின் தடங்களை கதாசிரியர் தன் கதை சொல்லலால் எதார்த்தமான நெகிழவைக்கும் முடிவுகள் நோக்கி நடாத்தி செல்கிறார். இதனாலேயே டெக்ஸ் கதைகளின் கதாசிரியர்களில் தன்னை தனித்த ஒருவராக அண்டோனியா செகுராவால் காட்டிக் கொள்ள முடிகிறது. இதுவரை நான் படித்த செகுராவின் கதைகளில் விறுவிறுப்பு குறைந்த கதை இது. டெக்ஸின் கதைகளில் சுமாரிற்கும் சிறிது மேல் என வகைப்படுத்தக்கூடிய கதை இது. ஆனால் கதையின் எதார்த்தமான போக்கு கதையைக் காப்பாற்றி விடுகிறது. அதற்காக டெக்ஸ்ஸின் வழமையான மசாலா இல்லை என அர்த்தம் செய்து கொள்ளத் தேவையே இல்லை. அடி தடி ரசிகர்களிற்கு விருந்து கதையில் விதம் விதமாக உண்டு.

கதையின் பிறிதொரு எதிர் நாயகனான சார்லஸ் சட்டர் ஒரு சாடிஸ்ட்டாகவே கதையில் காட்டப்படுகிறார். ஃபோர் பியர்ஸையும், சார்ல்ஸ் சட்டரையும் ஒரு தராசில் நிறுத்தினால் அவர்கள் தம்முள் கொண்டிருக்கும் குரூரத்தின் எடை சமமாக இருக்கும். சார்லஸ் சட்டரிற்கு கதையில் சவால்விடும் பாத்திரமாக அமைவது டெக்ஸ் அல்ல மாறாக ஒரு சிறுகுப்பி மதுவிற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் வித்தைகளையும் இயற்றக்கூடிய சாலமோன் எனும் முதிய தங்க வேட்டையனே. எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும்கூட தன் மனவுறுதியால் சார்ல்ஸ் சட்டரை எள்ளி நகையாடும் சாலமோனும், மதுவகைகளை ஆவலுடன் சுவைக்கும் சாலமோனின் கழுதை மதுசெலமும் செகுரா வழங்கும் நிறைவுப்பகுதி ஆச்சர்யங்கள். சாலமோன், கார்சன், மதுசெலம் ஆகியோர்க்கு இடையில் கதையில் உருப்பெறும் காட்சிகள் மனதை இலகுவாக்கிவிடும் சுவை கொண்டவை. டெக்ஸைவிட சாலமோனின் செல்லக் கழுதையாகிய மதுசெலம் இங்கிதம் தெரிந்த ஒன்று என கார்சன் புலம்பும் தருணம் அலாதியானது.

இறுதியில் டெக்ஸ், தொல்லுயிரியலாளர் எட் கோப்பிற்கு நடைமுறை எதார்த்தங்களை புரிய வைக்கும் இடத்தில் செவ்விந்திய சார்பு குணம் கொண்டவராக காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு இனத்திற்கும் இருக்ககூடிய நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து டெக்ஸ் ஆற்றும் விரிவுரை அது எனலாம். கதையின் சித்திரக் கலைஞர் ஹோசே ஒர்டிஸ் குறித்து முன்னைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஒட்டிஸ் பார்க்க சலிக்காத சித்திரங்களின் தந்தை என்பேன். முற்சரித்திர விலங்குளின் படிம எச்சங்களை தேடிச் சென்ற முன்னோடிகளின் ஆய்வில் டெக்ஸும் கலந்து கொண்ட பெருமையை செகுரா இக்கதையின் வழி டெக்ஸிற்கு அளித்திருக்கிறார். கதையின் ஒரு தருணத்தில் டெக்ஸ் கூறும் வரிகளுடன் இப்பதிவை முடித்தல் பொருத்தமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன் “எதிர்வரும் காலங்களில் டைனோசார்களும் சரி செவ்விந்தியர்களும் சரி ஒரே விதமாக வரையறை செய்யப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்………………………. அழிந்துபோன இனம். ”

15 comments:

  1. கதை சுவாரிஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. அதுவும் கடைசி வரிகள் அருமை. நீங்கள் தயவு செய்து லயன் மொழிபெயர்ப்பு 'போட்டி' யில் கலந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சிவ், விரைவில் நடக்கவிருக்கும் மங்களநிகழ்விற்கு என் வாழ்த்துக்கள் :) மொழிபெயர்ப்பு போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லை நண்பரே :)

      Delete
  2. நண்பர் SIV சொன்ன மேற்கூரிய கருத்தை நானும் திடமாக ஆமோதிக்கிறேன்.

    கலக்குங்கள் காதலரே!

    ReplyDelete
  3. உஸ்ஸ் அப்பா படிக்கறதுக்கே கண்ண கட்டுதே இதுல நீங்க என்னடான்னா PHd பண்ற அளவுக்கு எழுதி தள்ளி இருக்கீங்க
    வழக்கம் போல கலக்கிடீங்க காதலரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. இஸ்கூல்லதான் எழுதல இங்கினாச்சும் எழுதலாம்னா கிண்டல் அடிக்கிறீங்களே சிபி :)

      Delete
  4. அற்புதமான பதிவு K.K.!!ஒரு நாவலுக்கு இணையான கதையோட்டம் !

    //கதையின் சித்திரக் கலைஞர் ஹோசே ஒர்டிஸ் குறித்து முன்னைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஒட்டிஸ் பார்க்க சலிக்காத சித்திரங்களின் தந்தை என்பேன்.//

    நூறு சதம் உண்மை! ஓவியரின் DEDICATED உழைப்பு ஓவியங்களில் மிளிர்கிறது! மற்ற கலைஞர்களை காட்டிலும் ஓவியர்களுக்கு அங்கீகாரம்
    சற்று குறைவே என்பது வருத்தம் அளிக்கும் உண்மை !

    GR8 UN UNIQUE WORK MR.K.K! கலக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி- சுஸ்கி,டெக்ஸ் மேக்ஸி கதைகள் நாவலைப்போலத்தான் இருக்கும். டெக்ஸ் கதைகள் சில மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்படுகின்றன என்பதால் அதில் பணியாற்றும் பல சித்திரக் கலைஞர்களின் திறமை பலரைச் சென்றடைவது இல்லை என்பது துரதிர்ஷ்டமானது. எம் பங்கிற்கு சாணித்தரத்தில் அச்சிட்டு அவர்கள் உழைப்பை பாழாக்குவது இன்னொருவகை என்றால் அது மிகையல்ல... இனியாவது அப்படி நிகழாது இருந்தால் போதும் :)

      Delete
  5. படங்களை பார்க்கும்போது கலைகனின் கைவண்ணம் தெரிகின்றது. மீண்டும் ஒரு அட்டகாசமான டெக்ஸ் கதையுடன். டெக்ஸ் மேக்ஸ் சீரீஸ் தமிழ் வந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம், இந்த கதை அந்த ஆறில் ஒன்றா என்று...

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ்.... கலைகனின் கைவண்ணம்.... நீங்க ஒரு புது அகராதி நண்பரே. டெக்ஸ் மேக்ஸ் தமிழில் வருவதற்கு என்ன தடை, விலைதான் சற்று அதிகமாகலாம்.... கடுதாசி எழுதிடுங்க அட்டகசமாமா :)

      Delete
  6. Super post thala... but I would prefer reading it as comics as much as possible... I love comics reviews more than story reviews... pls post some action packed pages from the book..

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி ப்ளைஸி, 360 பக்கம் கொண்ட புத்தகத்திலிருந்து பதிவிலிருக்கும் நகல்களை எடுக்கவே புத்தகம் பிளவுறும் நிலைக்கு வந்துவிட்டது..... மேலும் அதிக நகல்களை எடுக்க தடுக்கும் என் சோம்பலும் ஒரு காரணம்... :)

      Delete
  7. முழு பதிவையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்..

    ஆனால், பார்த்ததில் பிடித்தது, அந்த மந்தை இரண்டாக பிரிந்து கொள்ளும் காட்சி... பிரமிக்கதக்க ஒன்று.... டெக்ஸ் Maxi தொடர் வகையில் இது ஐக்கியமா, காதலரே ??

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே.... உங்கள் முதல் வரி எனக்கு இன்னொரு நண்பரை நினைவிற்கு இட்டு வருகிறது. அவர் வழமையாக இடும் நிழற்பட பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்.... கண்காட்சிக்கு போனோம் காமிரேட்ஸை போட்டோ பிடித்தோம் என்பதுடன் நின்று விடாமல் அங்கு பறந்து திரியும் புள்ளினங்களையும் படம் பிடித்து பதிவிட்டு புள்ளார்வலர்கள் இதயங்களை வசந்த மழையால் நனைவிப்பீர்கள் என எதிர்பார்க்கும் ஒரு சபல நெஞ்சம் :)

      Delete
  8. Adult Comics this is for entertainment comix site you can read many stories. if you want enjoy with this comex (http://comixxxstore.com/) site please visit this site and you may go to contact page. Heroines in Peril

    ReplyDelete