ஸ்டூ, தன் திருமணத்தை தாய்லாந்தில் ஒழுங்கு செய்கிறான், இதனையடுத்து அவன் நண்பர்களான ஃபில், டூக், ஆலன் தாய்லாந்திற்கு பயணமாகிறார்கள். லாஸ்வெகாஸின் குடிக்கும்மாள நினைவுகளை இன்னமும் பசுமையாக மனதில் வைத்து திகிலுறும் ஸ்டூ, பிரம்மச்சர்ய துறப்பு விருந்தை நிராகரித்து வருகிறான். ஆனால் தன் நண்பன் ஃபில்லின் ஓயாத வற்புறுத்தலினாலும் தன் காதலி அளித்த ஊக்குவிப்பினாலும் ஒரு பீர் குடிப்பது எனும் முடிவிற்கு நண்பர்களுடன் உடன்படுகிறான் ஸ்டூ. இவ்விருந்தில் கலந்து கொள்ள தன் காதலியின் சகோதரனான டெடியையும் அவன் உடன் அழைத்து செல்கிறான்.
கடற்கரை ஒன்றில், ஏகாந்தமான மாலைப் பொழுதில் பழங்கதைகளையும் நினைவுகளையும் ஸ்டூவின் காதலி குறித்த விமர்சனங்களையும் பகிர்ந்தபடியே பிரம்மச்சர்ய துறப்பு விருந்து ஆரம்பிக்கிறது. மறு நாள் காலையில் கண் விழிக்கும் நண்பர்கள் தாம் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பதையும், மணமகளின் சகோதரனான டெடி அறையிலிருந்து காணாமல் போயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள்…..
சிலவேளைகளில் அதிகமாக மதுவை உள்ளெடுத்துவிடும் நற்பிரஜைகள் ஒரு குறிப்பிட்ட கணத்தின் பின்பாக தம்மை சுற்றி என்ன நடந்தது என்பதை முற்றாக மறந்து விடுவது வழமையான உலக நடப்புக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்நற்பிரஜைகளின் நண்பர்களும், துரதிர்ஷ்டவசமாக அந்த நற்பிரஜைகளின் மனைவிகளும் அக்கணத்தின் பின்பாக என்ன நடந்தது என்பதை அந்த நற்பிரஜைகளிடம் படு குசாலாக விபரிப்பார்கள். அந்த நற்பிரஜைகளும் இவற்றையெல்லாம் நானா செய்தேன் என்பதுபோல் விழிகளை அகல விரித்தபடியே நம்பமுடியாத உணர்வுடன் அவற்றை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் தாம் அவ்வாறு எல்லாம் செய்யவில்லை என பலவீனமான ஒரு மறுப்பையும் அவர்கள்முன் வைப்பார்கள். இந்நிலையில் சில கைத்தொலைபேசி நிழற்படங்களோ, ஆல்லது வீடியோ பதிவுகளோ அந்நற்பிரஜைகளின் மறுப்புக்களை தவிடு பொடியாக்கி விடும் ஆதாரங்களை தம்மில் கொண்டிருக்கும். தம் வயதுக்கு குறைவான பெண்களை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தல் [ இது ஒரு குற்றமா], ஆடைகளை களைந்து விட்டு வீதிகளில் நடந்து செல்லல், மாமனாரை சட்டையை பிடித்து உலுக்கல் [ இது மப்பில் செய்ததுதானா என்பது சந்தேகத்திற்குரியது] போன்றன இவ்வகையான செயல்களிற்கு சில உதாரணங்கள் ஆகும். The Hangover திரைப்படங்களும் இவ்வகையான சம்பவங்களை கொண்டே காவாலித்தனமான நகைச்சுவையுடன் திரைக்கதைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் தந்த வெற்றி இயக்குனர் Todd Phillips ஐ இன்று எ டாட் பிலிப்ஸ் மூவி என டைட்டிலில் போடுமளவு பிரபலமாக்கி விட்டது. வெற்றி பெற்ற முதல் பாகத்தின் அதே சூத்திரம், அதே நடிகர்களுடன், சம்பவம் நடக்கும் இடத்தை மட்டும் தாய்லாந்திற்கு குறிப்பாக தென்னாசியாவின் கேளிக்கை தலைநகரமென புகழ்பெற்ற பாங்காக்கிற்கு மாற்றியிருக்கிறது திரைக்கதை.
தாம் எவ்வாறு இந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம்? டெடி எங்கே போனான் ? நேற்று இரவு என்னதான் நடந்து தொலைத்தது? என மனதில் மப்புக் கலையாமல் எழும்பும் வினாக்களிற்கு விடையறியும் தேடல்களை நகைச்சுவையுடன் திரைக்கு இட்டு வருகிறது த ஹாங் ஓவர் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி. கேளிக்கை நகரமான பாங்காக்கின் ஜல்சா விடுதிகள், ஆடை அவிழ்ப்பு நடன நங்கைகள், பச்சை குத்தும் நிலையம், துறவி மடம், பொலிஸ் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என தேடல்கள் நீள, உண்மையான மர்மம் என்ன என்பதை அறிய வழமைபோலவே பார்வையாளன் இறுதி வரை கெட்ட கெட்ட நகைசுவைக்கு சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
திரைப்படத்தின் மூன்று முக்கிய நடிகர்கள் என ஆலன் வேடம் ஏற்றிருக்கும் ஸாக் கலிபியானகிஸ், சோவ் பாத்திரத்தில் வரும் நடிகர் கென் ஜியோங், ராலிங் ஸ்டான்ஸ் மேற்கோட்டு அணிந்த ஒரு குரங்கு போன்றவர்களை குறிப்பிடலாம். ஸாக் கலிபியானகிஸ் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மனிதரிற்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதை திரையரங்கினுள் கணீர் என சிதறிய சிரிப்பொலிகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. அப்பாவித்தனத்துடன் அவர் அடிக்கும் கூத்துக்கள் ரசிக்க வைக்கின்றன ஆனால் கலிபியானாகிஸ் புதுமையாக எதையும் செய்து விடவில்லை. புற்தரையில் கொண்டு வந்து படகை நிறுத்தி விட்டு மிக இயல்பாக நங்கூரம் வீச அவரால் மட்டுமே முடியும்.
சர்வதேசக் கேடியாக வரும் கென் ஜியோங், அருமையாக செய்திருக்கிறார். அவர் கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் வெடிச்சிரிப்புத்தான். வணக்கம் கூறி வரவேற்கும் ஹோட்டல் பணிப்பெண்களை அவர் உதறித்தள்ளும் அழகு அருமை. அவரின் உடல் அங்கங்களில் ஒன்று திரையரங்கை வெடித்து சிதற வைக்கும் சிரிப்பலைகளை உருவாக்கியது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரினச்சேர்க்கை ஈர்ப்பு கொண்ட குரங்காக வரும் அந்த குரங்கு பல காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறது. அக்குரங்கின் கில்லாடித் தனங்களை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமாக இருக்கும். குரங்கு கூட முகபாவனைகளை உணர்ச்சியுடன் எடுத்து வரும்போது ஏன் ஒத்தக்கண் ரவியால் இது முடியவில்லை எனும் சோகமான கேள்வி ஒரு போத்தல் பீர் அடிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு என்னை இட்டுச் செல்கிறது.
முலைகள், பிருஷ்டங்கள், ஆண்குறி, பெண்குறி என அனைத்து ரசிகர்களினதும் ஆவலை இறுதியில் தீர்த்து வைக்கிறார் இயக்குனர் டாட் பிலிப்ஸ், ஆனால் இப்பாகத்தில் புதிதாக ஏதும் சிறப்பாக உண்டா என்றால் அதற்கு விடை, இல்லை என்பதுதான். வேண்டுமானால் ஜாலியாக வாழக்கூடிய தருணங்களை திருமணத்தின் பின்பாக இழக்க வேண்டுமா எனும் கேள்வியை பார்வையாளார்கள் தம்மில் எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம். முதல்பாகத்தைவிட நகைச்சுவையும் கற்பனையும் இப்பாகத்தில் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைக் கேட்டால் டாட் பிலிப்ஸ் இப்பாகத்துடன் ஹாங் ஓவர்களிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது சிறப்பானது. Bud பீரை லாஸ் வேகாஸில் குடித்தாலும், பாங்காக்கில் குடித்தாலும் சுவை அதிகம் மாறுபடப்போவதில்லை. இத்திரைப்படமும் அப்படியே. அதே மப்பு ஆனால் ஜாலி கம்மி. [**]
ட்ரெய்லர்