Sunday, March 13, 2011

நினைவைத் தொலைத்த நெருப்பு


பெர்லினில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ், அவனது மனைவியுடன் பெர்லினிற்கு பயணமாகிறான். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கவிருக்கும் ஹோட்டலிற்கு வந்திறங்கும் தருணத்தில் தனது சூட்கேஸ் ஒன்றை விமான நிலையத்தில் தவற விட்டு வந்திருப்பதை மார்ட்டின் ஹாரிஸ் அறிந்து கொள்கிறான்.

தன் மனைவியை ஹோட்டலில் விட்டு விட்டு விமான நிலையத்தில் தான் தவற விட்ட சூட்கேஸை தேடிச் செல்லும் மார்டின் ஹாரிஸ் , ஒரு விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். நான்கு நாட்களின் பின்பாக கோமா நிலையிலிருந்து கண் விழிக்கும் மார்டின் ஹாரிஸ் தன் மனைவியை அவள் தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு தேடிச் செல்கிறான், ஆனால் அவளோ அவனை யார் என்று தெரியாது என மறுப்பதுடன், மார்ட்டின் ஹாரிஸ் எனும் பெயரில் வேறு ஒரு நபரையும் அவள் கணவனாக அவனிற்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்…..

கடந்த கால நினைவுகளை விபத்தில் தொலைத்து தன் அடையாளத்தை தேடி ஓடும் இன்னொரு மனிதனின் கதை இதோ. ஜேசன் பொர்னிற்கு பின்பாக XIII காமிக்ஸ் தொடரின் மக்லேன், அவ்வழியில் இன்று டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ். Taken திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி நடிகர் Liam Neeson அவர்களிற்கு சமீப காலமாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை அவர் விரும்பியோ விரும்பாதோ பெற்றுத் தந்திருக்கிறது. அவரும் தன் பிரத்தியேக பாணியில் நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் சிறப்பிக்க தவறுவதில்லை. இயக்குனர் Jaume Collet Serra இயக்கியிருக்கும் Unknown திரைப்படத்தில் லியம் நீசனிற்கு ஆக்‌ஷனை விட அவர் நடிப்பை காட்டவே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம்.

படத்தின் ஆரம்பக்காட்சிகள் மார்ட்டின் ஹாரிஸ் தம்பதியினரின் நெருக்கத்தையும், காதலையும் பார்வையாளர்களிடம் சிறப்பாக எடுத்து வருகின்றன. இக்காட்சிகளில் வழியாக மனதில் உறுதிப்படுத்தப்படும் கணவன் மனைவி எனும் உறவு, தொடரவிருக்கும் திரைப்படத்தின் மர்மத்தை இறுதிவரை ரசிகனிடம் கசிய விடாது காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கோமா நிலையிலிருந்து மீண்டெழுந்து வரும் மார்ட்டின் ஹாரிஸ், தன் மனைவி தன்னை யாரெனத் தெரியாது எனக்கூறி பிறிதொருவனை தனக்கு பதிலாக கணவன் எனக் காட்டும்போது உடைய ஆரம்பிக்கும் அவனில் உருவாகும் குழப்பத்திலும், வேதனையிலும் அந்த சூழ்நிலை விதைக்கும் புதிரிலும் மாட்டிக் கொள்கிறோம் நாம். உண்மையான மார்டின் ஹாரிஸ் யார் என்பதை நிரூபிப்பதற்காக நிகழும் சம்பவங்களினூடாக பார்வையாளன் மர்ம முடிச்சின் இறுக்கத்தில் மெதுவாக பிணைக்கப்படுகிறான்.

தான் யாரென்பது மிகப் பிரம்மாண்டமான ஒரு கேள்வியாக மார்ட்டின் ஹாரிஸ் முன் எழுகையில் அவனுடன் சேர்ந்து நாமும் கலங்கிப் போகிறோம். தன் மனைவியிடமும், அதிகாரிகளிடமும் தன் அடையாளத்தை உண்மையெனக் காட்ட எடுக்கும் முயற்சிகளில் மார்ட்டின் தோற்கும் போதெல்லாம் அவன் மீது நாம் பரிதாபம் கொள்ள ஆரம்பிக்கிறோம், அவன் தன் அடையாளத்தை நிரூபித்திட வேண்டுமென நாம் ரகசியமாக விரும்புகிறோம். இங்கு இயக்கமும் சரி, நடிகர் லியம் நீசனும் சரி தம் பங்கை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மார்ட்டின் ஹாரிஸ் மீது நாம் கொள்ளும் அந்த பரிதாபம்தான் உச்சக் கட்டத் திருப்பத்தின்போது எம்மை விழிகளை உயர்த்த வைக்கிறது. இப்படி எம்மை ஏமாற்றி விட்டார்களே என அந்த திருப்பத்தை வெகுவாக ரசிக்க உதவுகிறது. இருப்பினும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் உணர்ச்சிகரமான ஒரு படமாகவே Unknown உணரப்படக்கூடியதாகவிருக்கிறது. மார்ட்டின் ஹாரிஸை நிழலாக சிலர் பின் தொடர்கிறார்கள் என்பதும், அவன் மீதான கொலை முயற்சியும் திரைப்படத்திற்கு ஆறுதலாக விறுவிறுப்பை எடுத்து வருகின்றன.

sans-identite-2011-19089-449337095ஆனால் Unknown ஒரு வேகமான த்ரில்லர் அல்ல. அசர வைக்கும் அதிரடியான ஆக்‌ஷன்களையும் அது தன்னிடத்தில் கொண்டிருக்கவில்லை. மெதுவான வேகத்தை கொண்ட இத்திரைப்படம் அதன் கச்சிதமான மர்ம முடிச்சாலும், அதில் இடம் பிடிக்கும் துணைப்பாத்திரங்களாலும், அப்பாத்திரங்களில் உறைந்திருக்கும் மனித நேயத்தாலுமே பார்வையாளனிற்கு நெருக்கமாகி வருகிறது. டேக்கனும், ஜேசன் பொர்னும் டீக்கடையில் சந்திப்பு, இறுதி மூச்சை வெட்டும் த்ரில்லர் என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம் இத்திரைப்படத்தை வரையறுப்பதற்கு சற்று மிகையானவையாகவே எனக்கு தோன்றுகிறது. மார்ட்டினின் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் துப்பறிவாளன் ஜுர்கன், மார்ட்டின் நண்பனான பேராசிரியர் ராட்னி கோல் ஆகிய பாத்திரங்கள் சிறிதளவு நேரம் தோன்றினாலும் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜூர்கன் பாத்திரத்தில் தோன்றும் நடிகர் Bruno Ganz ன் நடிப்பு கதாநாயகனின் நடிப்பைவிட என்னை மிகவும் கவர்ந்தது. ஜூர்கனும், ராட்னி கோலும் சந்திக்கும் அக்காட்சி ஜான் லுகாரின் உளவு நாவல் ஒன்றை படிப்பதுபோல் ஒரு உணர்வை எனக்கு வழங்கியது. திரைப்படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த காட்சி அதுதான் என்பேன்.

வழமை போலவே நாயகனுடன் துணைக்கு ஓடும் நாயகியாக பாத்திரமேற்றிருக்கிறார் நடிகை Diane Kruger. ஆனால் தன் பரிதாபமான வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்வதற்கு 4000 யூரோக்களிற்காக பாடுபட்டு உழைக்கும் அவரின் பாத்திரப் படைப்பு மென்மையாக மனதை தொட்டு விடுகிறது. லியம் நீசனின், கம்பீரத்தையும் அட்டகாசமான நடிப்பையும் எதிர்பார்த்து சென்ற எனக்கு, குழப்பமுற்று, களைத்து, கலங்கிய நிலையில் ஓடும் லியம் நீசனையே படத்தின் பெரும் பகுதியிலும் காண முடிந்தது. நான் எதிர்பார்த்த லியம் நீசன் எழுந்து வந்து டாய்ய்ய்ய்! எல்லாத்தையும் நான் மறக்கலைடா… என்று டயலாக் சொல்லி மரண அடி அடித்த ஐந்து நிமிடத்திற்குள் திரைப்படம் நிறைவு பெற்று விடுகிறது. அவ்வகையில் இது ஒரு ஏமாற்றமே. போஸ்டரில் அசத்திக் கொண்டிருக்கும் லியம் நீசன் படத்தில் இல்லை!!! ஒளிப்பதிவாளர் கலாச்சாரக் காவலர் கழகத் தலைவரா என்று ஐயம் எழ வைக்கும் வகையில் முக்கிய காட்சிகளில் முக்கிய பகுதிகளை படம் பிடிக்காது தொண்டாற்றியிருக்கிறார். இது ஒரு பயங்கரமான ஏமாற்றமாகும். மேலும் முக்கியமான மர்மம் விடுபட்ட பின், இப்படியான ஒரு மார்ட்டின் ஹாரிஸ் பாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் தீனியின் பற்றாக்குறை குறித்த ஆதங்கமும் எழவே செய்கிறது. அதிர்ச்சியால் மறைந்த நினைவுகள் சில அதிர்ச்சியாலேயே மீண்டும் நினைவிற்கு வருவது கறுப்பு வெள்ளை தமிழ் படங்களிலேயே காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் அந்த முக்கியமான திருப்பத்தை அற்புதமாக இறுதிவரை கொண்டு வந்து சேர்த்த இயக்குனர் திறமைசாலிதான். அதேபோல் உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல், குறிப்பாக லியம் நீசனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் Unknown க்கும் இடமுண்டு. [**]

ட்ரெயிலர்

12 comments:

  1. லியம் நீசன் எனக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர்.இவரது அலட்டல் இல்லாத அதே நேரம் ஸ்டைலான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். Taken படத்தில் இவரது நடிப்பு பர பரவென பட்டாசாய் இருக்கும்.A team இல் சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பே என்றாலும் அவரது துறுதுறுப்பு தெரியவே செய்தது.ஆனால்,இந்த படத்தின் trailer இலேயே அந்த லியம் என் கண்களுக்கு தென்படவில்லை.சற்றே ஓய்ந்து போன லியம் தான் என் கண்களுக்கு தென்பட்டார்.பாத்திரத்திற்கேற்ற நடிப்பு தான் அது என்றாலும்,லியம்மின் வழக்கமான charismatic நடிப்பை காண சென்றவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே கிடைத்திருக்கும்.எது எப்படியாயினும், படத்தை நிச்சயம் பார்ப்பேன்.லியம்மிற்காகவாவது.. :)

    ReplyDelete
  2. மனைவியுடன் திரும்ப எப்படி சேர போகிறார் மற்றும் ஏன் மனைவி தன்னை தெரியாது என கூறினால் என படு ஆவலுடன் எதிர்பார்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பம் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்பது உண்மை.

    ReplyDelete
  3. ஆனால் அந்த திருப்பமே மற்ற கடந்த கால நினைவுகளை தேடும் கதைகளில் இருந்து மாறுபடுத்தி காட்டுகிறது.

    Battle: Los Angeles - வேற்றுகிரகவாசிகளுடன் போர்

    ReplyDelete
  4. நண்பர் இலுமினாட்டி, பார்த்து மகிழுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி மிமட், நீங்கள் கூறுவது உண்மை, அந்த திருப்பம் இல்லையெனில் படம் வழமையான ஒன்றாகவே தோன்றியிருக்கும். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

    ReplyDelete
  6. நாள் பூரா சாப்ட்வேர் கம்பநீல குசு விடு வேண்டியது.நைட்டானா ஹால்ப் உட்டுகிட்டு ஆளாளுக்கு உலக சினிமான்னு சாகடிக்கிரீங்கலேடா!பொட்டசிங்க அதுக்கு மேல சாப்ட்வேர் கம்பநீல குசுவுட்டுட்டு நைட்டு வே பே கூட "ஜிங் சக்க" பண்ணி ப்ரோமோஷன் வாங்கிடுல்றாளுவ.பொட்டசிஎல்லாம் வூட்ல கெடக்கணும்.

    ReplyDelete
  7. // உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். //

    பார்த்துடுவோம் :))
    .

    ReplyDelete
  8. அனானி, உங்களை திட்ட விரும்புகிறேன் ஆனால் உங்கள் அறிவு அளவிற்கு எனக்கு அறிவை தேட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் உங்கள் அறிவு வெளிப்பாட்டின் வரிகளில் என்னறிவு மயங்கி உங்களறிவு கண்டு ஏங்கி அழுகிறேன். பொட்டச்சி வீட்டில் கிடந்தபடியால்தான் நீங்கள் இவ்வளவு அறிவுடன் இருக்கிறீர்கள் இல்லையா. வாழ்க உங்கள் அறிவு, அது வளர இனி எங்கு இங்கு எல்லை. நீங்கள் அனாமி இல்லை ஒரு அறிவுச் சுனாமி. என் யாசக அறிவின் மீது வீழ்ந்த அறிவு பினாமி. தொடருங்கள் உங்கள் அறிவுப்பணியை,வையம் உய்வுறும்.

    ReplyDelete
  9. நண்பர் சிபி, காதலியுடன் உல்லாசப் பயணம் சென்று திரும்பிய உற்சாகம் உங்கள் கருத்துகளில் :)) நன்றி.

    ReplyDelete
  10. நல்ல திரைப்படம்... சரியான விமர்சனம்..... வாழ்த்துக்கள்...... ப்ளாக்கில் நாகரீகம் கருதி சில வார்த்தைகளை எழுதக்கூடாது.(மேலே ஒருவரின் பின்னூட்டம் கவலையடையச்செய்கிறது....)

    ReplyDelete
  11. நண்பர் சரியல்ல, தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete