தனது பரம வைரியான புரபசர் மொரியார்டியுடனான மோதலில், சுவிஸிலிருக்கும் ரெய்க்கான்பாக் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உயிரிழந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்திகளை தருகின்றன. இந்த செய்திகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஷெர்லாக், பாரிஸில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.
உலகைச் சுற்றி பயணம் செய்ய வேண்டும் என்பது ஷெர்லாக்கின் நீண்ட நாள் கனவு. இக்கனவை நிறைவேற்றிட இதனைவிட தகுந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறியும் ஷெர்லாக், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறான்.
ஆனால் ஷெர்லாக்கின் தலை மறைவு வாழ்க்கையை கண்டுபிடித்து விடுகிறார்கள் அவனை தேடி அலைந்து கொண்டிருக்கும் லண்டனைச் சேர்ந்த ரத்தக் காட்டேரிகள். ஷெர்லாக்கை அணுகும் ரத்தக் காட்டேரிகள், தங்கள் தலைவர், ஷெர்லாக்கை சந்திக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறார்கள். வேறு வழிகள் அற்ற நிலையில் ரத்தக் காட்டேரிகளுடன் லண்டனிற்கு பயணமாகிறான் ஷெர்லாக்….
லண்டனில், ஈஸ்ட் எண்ட் பகுதியில் நிகழும் ஒரு ரத்தக் காட்டேரியின் தாக்குதலுடனேயே Sherlock Holmes & Les Vampires de Londres காமிக்ஸ் ஆல்பத்தின் கதை ஆரம்பிக்கிறது. ஆரம்ப பக்கங்களில், சக மனிதர்களை துன்புறுத்தும் நோக்குடைய இரு மனிதர்களை ஒரு காட்டேரி ரத்தப்பலி எடுப்பது இந்தக் காட்டேரியானது ராபின்கூட் பரம்பரையை சேர்ந்ததாக இருக்குமோ என எண்ணத் தூண்டுகிறது.
நல்ல வேளையாக அடுத்த பக்கங்களில் கதை 1891களின் பாரிஸிற்கு நகர்ந்து அங்கு ரகசிய வாழ்க்கை வாழும் ஷெர்லாக்கை அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஓவியரான Laci, தன் சித்திரங்களில் அந்தக்காலத்திற்குரிய பாரிஸ் நகரையும், இங்கிலாந்தையும் அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். தெருக்கள், உணவகங்கள், மாளிகைகள் என சிறப்பான ஓவியங்களை அவர் வழங்கியிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் பக்கங்களில் ஒளி விளையாட்டு அருமையாகவிருக்கிறது.
காட்சிகளின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க அவர் கதை நெடுகிலும் நீள்சதுரக் கட்டங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்து தெருக்களில் வறுமையின் அடையாளத்தை சிறிதளவேனும் காட்டிய சித்திரக் கலைஞர், பாரிஸ் தெருக்களில் அதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தன் தந்தையின் சாயல் ஷெர்லாக்கில் தெரியும் வண்ணமாகவே அவர் ஷெர்லாக் பாத்திரத்தை வரைந்திருக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
லண்டனிற்கு ரத்தக் காட்டேரிகளுடன் பயணமாகும் ஷெர்லாக், அதன் முன்பாக ரத்தக் காட்டேரிகள் குறித்த புத்தகங்களை தேடிப் படித்து அவர்களைப் பற்றியும் அவர்களை எதிர்க்கும் வழிகள் குறித்தும் நன்கு அறிந்து கொள்கிறான். ரத்தக் காட்டேரிகள் அவனைப் பாரிஸில் சந்திக்கும் வேளைகளில் சில ரத்தக்காட்டேரிகள், ஷெர்லாக்கின் ஜு- ஜிட்சு திறமைகளை சுவை பார்க்கின்றன. சில அவன் உடலில் கலந்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட நீரினால் கருகிப் பொசுங்குகின்றன. ஷெர்லாக்கின் துப்பறியும் திறமைக்கு பெருமை சேர்ப்பதான கதையோட்டம் இந்த ஆல்பத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
ஷெர்லாக்கை தன் மாளிகையில் சந்திக்கும் ரத்தக் காட்டேரிகளின் தலைவன் செலிம்ஸ், தன் கூட்டத்தைவிட்டு பிரிந்து சென்று, இங்கிலாந்து மகாராணிக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர்களை போட்டுத் தள்ளும் ஓவன் எனும் காட்டேரியை ஷெர்லாக் விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மிரட்டுகிறான். தன் நண்பன் வாட்சனிற்கும் அவன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏதும் வந்துவிடக்கூடாதே எனும் அச்சத்தில் அந்த காட்டேரியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான் ஷெர்லாக்.
ஓவன் ஏன் தன் கூட்டத்திற்கு எதிராக செயல்படுகிறான்? ஓவன் எனும் காட்டேரியின் கொட்டத்தை ஷெர்லாக் அடக்கினாரா? கொடிய ரத்தக் காட்டேரிகளின் பிடியிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா? ஒவனிற்கும், செர்லாக்கிற்கும் இடையில் நிகழும் ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் சஸ்பென்ஸ் திருப்பத்துடன் நிறைவு பெறுகிறது ஆல்பத்தின் முதல்பாகம்.
இந்த ஆல்பத்தின் கதையை எழுதியிருப்பவர் Sylvian Cordurié ஆவார். ஆல்பத்தின் கதையின் தரம் ஹாலிவூட்டின் மட்டரக பேய்ப்படங்களை நினைவூட்டினாலும் கூட, கதை மிக வேகமாக நகர்கிறது. ஷெர்லாக்கின் வலது கரமான வாட்சன் இந்த ஆல்பத்தில் ஷெர்லாக்கின் விசாரணைகளில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மாறாக அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காட்டேரிக் கூட்டம் உலா வருகிறது. வழமையாக ஷெர்லாக்கின் கதைகளை வாட்சன் விபரிப்பதாக கதையோட்டம் இருக்கும் இங்கு ஷெர்லாக்கே நல்ல கதை சொல்லியாக கதையைக் கூறிச் செல்கிறார். நல்ல சித்திரங்களிற்காகவும், வேகமான கதை சொல்லலிற்காகவும் படிக்கக்கூடிய இந்த ஆல்பம் Soleil பதிப்பக வெளியீடாகும். [**]
காமிக்ஸ் பதிவுகளை இங்கு தொடர்ந்து படித்து வரும் அன்பர்களிற்கு சில காலத்திற்கு முன்பு நாம் இங்கு பார்த்த இறக்காதவர்களின் ஏடுகள் எனும் பதிவு சிலவேளைகளில் நினைவிலிருக்கலாம். La Chronique des Immortels எனும் அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 5 வருட இடைவெளியின் பின் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியானது. சென்றவாரம் அதனை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தான் வாழ்ந்த ஊரிற்கு திரும்பி வந்த அண்ட்ரெஜ் டுலேனி, தன் கிராமம் அழிக்கப்பட்டுவிட அக்கிராம ஆலயத்தில் தன் மகன் குற்றுயிரான நிலையில் இருப்பதை அறிந்து தன் மகனை தன் வாளாலேயே அவன் வேதனைகளிலிருந்து விடுவிக்கிறான். ஊரில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருந்த சிறுவன் ப்ரெட்ரிக்கை தன்னுடன் கூடவே அழைத்துச் செல்லும் அண்ட்ரெஜ் டுலேனி, கடத்திச் செல்லப்பட்ட கிராம மக்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். இதில் அவன் எதிர் கொள்ளும் ஆபத்துக்களை முதல் பாகம் விபரித்தது. சித்திரங்களும், கதை சொல்லலும் அட்டகாசமாக இருந்த ஆல்பமது.
இரண்டாம் பாகத்தின் கதையானது, அண்ட்ரெஜ்ஜின் கிராம மக்கள், சிறை வைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரமான கான்ஸ்டாண்டாவில் ஆரம்பமாகிறது. மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை ஒன்றின் ஊடாக அண்ட்ரெஜ்ஜும் சிறுவன் ப்ரெட்ரிக்கும் ஒரு முக்கிய சந்திப்பிற்காக குருட்டுக் கரடி மதுவகத்தை தேடிச் செல்கிறார்கள். ஆபத்து அவர்களை பல ரூபங்களிலும் நெருக்க ஆரம்பிக்கிறது.
சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும் அண்ட்ரெஜ்ஜிற்குமிடையில் உருவாகும் உறவின் சிக்கலான பக்கங்கள், அண்ட்ரெஜ்ஜின் கடந்த காலத்தின் சில நினைவூட்டல்கள், சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும், தனக்கும் காயங்கள் உடனடியாக ஆறிவிடுவதன் மர்மம் குறித்த அண்ட்ரெஜ்ஜின் புரியாத்தன்மை என விரியும் கதை, மரியா எனும் பெண்பாத்திரத்தை கதையோட்டத்தினூடு அறிமுகம் செய்து வைக்கிறது. மரியாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவள்மேல் காதல் வயப்படுகிறான் அண்ட்ரெஜ். கதையில் திருப்பமும் மரியாவினாலேயே உருவாகிறது…
முதல் அதிர்ச்சி வருவது சித்திரங்கள் வழியாக. முதல் ஆல்பத்திலிருந்த சித்திரத்தின் சாயல் இருந்தாலும் அதை வழங்கும் பாணியை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் ஓவியக் கலைஞர் தாமஸ் வான் குமாண்ட். இந்த மாற்றத்தை இலகுவாக மனம் ஏற்க மறுப்புத் தெரிவிக்கிறது. பனி வீழ்ந்து கொண்டிருக்கும் கான்ஸ்டாண்டாவின் ஒடுங்கிய தெருக்களிலும், சதுக்கங்களிலும் இருளையும் ஒளியையும் கலந்து தெளித்திருக்கிறார் ஓவியர். எங்கிருந்தோ வந்த இனம் புரியாத ஒரு இருள் கதையை சூழ்ந்து நிற்கும் தன்மையை தாமஸின் ஓவியங்கள் கதைக்கு வழங்குகின்றன. ஆனால் அவரது பாணி தனித்துவமானது என்பதை அவர் மீண்டும் நிரூபிக்கிறார். உண்மையைக் கூறினால் அவரது ஓவியங்கள் மட்டுமே இந்த ஆல்பத்தை காப்பாற்றியிருக்கின்றன.
ஐந்து வருட காலமாக சிறப்பான விருந்து ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த வாசகனிற்கு 32 பக்கங்களில் [ ஆம், 32 பக்கங்கள் மட்டுமே கதை இடம்பெறுகிறது. மிகுதிப் பக்கங்களில் பொம்மை காட்டுகிறார்கள் ] ஒரு பிடி சோளப்பொரி அள்ளித் தந்திருக்கிறார் கதாசிரியர் பெஞ்சமன் வான் எக்கார்ட்ஸ்பர்க். விறுவிறுப்பான கதை நகர்வு காணாமல் போயிருக்க மென்சோகம் அதன் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் குறைந்த நிலையில் இறுதியில் கதையில் வரும் திருப்பம் சப்பென்று இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவரவிருக்கும் மூன்றாவது பாகத்தின் முன்பாக அதிகம் காத்திருந்த வாசகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்த மலிவான ஒரு வணிக உத்தி எனவே இந்த ஆல்பத்தை கணிக்கக்கூடியதாகவிருக்கிறது. அடுத்த பாகத்திலாவது ரசிகர்களை படைப்பாளிகள் திருப்திப்படுத்தாவிடில் இத்தொடர் அதன் வீழ்ச்சியின் சரிவை நோக்கிப் பயணிப்பதை தடுக்க எந்த வழியுமேயிருக்காது. [**]
ஒரே பதிவில் இரட்டை விருந்தா? காதலர் பின்னுகிறார்.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteதுப்பறியும் கதையா அல்லது வேட்டையாடும் கதையா? எனக்கென்னமோ சமீப கால கதைகளில் வேகத்திற்கும், சண்டைகளிர்க்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கதைக்கும் மற்ற விஷயங்களிர்க்கும் தரப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
லண்டன் நகரிற்கும், பாரிஸ் நகரிற்கும் வித்தியாசம் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கதே. ஆயினும், இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அழகான மர்ம முடிச்சுகளை தங்களின் புத்தி கூர்மையால் அவிழ்ப்பதே அவர்களின் பாத்திரங்களுக்கு அழகூட்டுகிறது.
காதலருக்கு ஒரு கேள்வி: ஷேர்கள் ஹோம்ஸ் போல சத்தியஜித் ரேவின் பெலுடாவின் கதைகளை படித்ததுண்டா?
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDeleteமிகவும் பிரமாதமான படங்களை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். மரணமில்லாதவர்களின் சரிதம் கதைத்தொடரின் ங்களின் வர்ணக்கலமை மிகவும் புதுமையாக, வித்தியாசமாக இருக்கிறது. புத்தகத்தில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்தை வைத்து எத்தனை விதமான கதையுக்திகள் பின்னப்பட்டுள்ளன. ப்ரென்ஞ் காரர்கள் ழான் டூய்ழர்டேன்-ஐ ஷெர்லக் ஹோம்ஸாகவும், ழாரர்ட் டெப்ர்டே-ஐ வாட்சனாகவும வைத்து படமெடுத்தால் அது எப்படி இருக்கும்?
சிறப்பான விமர்சனம்.
விஸ்வா, சுருக்கமாக பதிவுகளை எழுதுவதால் இரு கதைகள் குறித்துகூட எழுதிட முடிகிறது. ஷெர்லாக்கின் கதை துப்பறியும் கதைதான் ஆனால் முதலாம் பாகத்தில் அவரின் துப்பறியும் திறமைக்கு அதிகம் வாய்ப்பில்லை. நீங்கள் கூறியதுபோல் புத்திக்கூர்மையால் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படலே-இறுதியில்- ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளின் மரபாகும். இல்லை அந்த துப்பறிவாளரின் கதைகளை நான் படித்ததில்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteஜோஸ், இதனை விடவும் சிறப்பான பக்கங்கள் ஆல்பங்களில் இருக்கிறது என்பதுதான் உண்மை. வாட்சனாக டுப்பார்டுவா அய்யகோ தாங்க முடியவில்லையே என்று என் மனம் அழுதாலும் மனிதர் பின்னி எடுத்து விடுவார். டுஜார்டன் ஷெர்லாக் பாத்திரத்திற்கு அற்புதமான தேர்வு. தங்களின் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
காதலரே,
ReplyDeleteதமிழில் இளையதளபதி டாக்டர் விஜய் அவர்களை ஷெர்லக் ஹோல்ம்ஸ் ஆகவும், வினு சக்கரவர்த்தி அவர்களை வாட்சனாகவும் வைத்து படமெடுக்கப்போவதாக கேள்வி. முதல் காட்சிக்கு வருவீர்களா?
//ழான் டூய்ழர்டேன், ழாரர்ட் டெப்ர்//
ReplyDeleteஏன் இப்படி குழறுகிறது?!! மப்பா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
விஸ்வா, வினுச்சக்கரவர்த்திக்காக முதல் காட்சி பார்த்து விடலாம் :)
ReplyDeleteதலைவர் அவர்களே, ழா என்று ஆரம்பிப்பதை ஜா என்று உச்சரித்தால் போதுமானது. அப்படியாகத்தான் பெயர்கள், சொற்கள்- ழான் பால் சார்த்தர்- எழுதப்படுகின்றன. பாண்டி மைனராவது பாத்தலை கையால் தொடுவதாவது :)
காதலரே...
ReplyDelete//தலைவர் அவர்களே, ழா என்று ஆரம்பிப்பதை ஜா என்று உச்சரித்தால் போதுமானது. அப்படியாகத்தான் பெயர்கள், சொற்கள்- ழான் பால் சார்த்தர்- எழுதப்படுகின்றன. பாண்டி மைனராவது பாத்தலை கையால் தொடுவதாவது :)//
விஷயம் புரியாமலில்லை! சும்மா நம்ம பாண்டி மைனரை கலாய்த்து ரொம்ப நாளாச்சே என்றுதான்!
பாண்டியிலிருந்து கொண்டு பாட்டிலைத் தொடாமலிருக்கிற ஒரே பத்தரை மாற்றுத் தங்கம் அல்லவோ நமது பாண்டி மைனர்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவர் அவர்களே, கலாயுங்கள்... தொடர்ந்து கலாயுங்கள். ஆனால் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் சற்று சிரமமிருக்கிறது :)
ReplyDelete//ஆனால் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் சற்று சிரமமிருக்கிறது :)//
ReplyDeleteஅது அவர் கழுத்தில் தொங்கும் மைனர் செயினிலுள்ள தங்கத்தை குறிக்கிறது! என்னது?!! கவரிங்கா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவர் அவர்களே,
ReplyDeleteகவரிங்கா?!.... 24 கேரட் கவரிங் :)
இந்த படத்தை பார்த்தால் , இரவு நித்திரை கொண்ட மாதிரி தான். ஒரே ரத்த காட்டேரியா இருக்குது போல.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteஇரண்டாவது புத்தகத்தின் ஓவியங்கள் மிகவும் சிறப்பு. தமிழில் இவற்றை காண கண்கோடி வேண்டும்.
காதலரே,
ReplyDeleteஇந்த ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதை தொடர்கதையா என்ன?
வழக்கமாக முத்து காமிக்ஸில் படிக்கும் ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதைகளில் இருந்து மாறுபடும் கதை போல் தெரிகிறது.
ReplyDeleteகாதலரே இரத்தப்படலம் படித்து விட்டீர்களா? தங்களின் மொழிநடயில் இரத்தப்படலம் விமர்சனம் படிக்க ஆர்வமாக உள்ளேன்
காதலரே - எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு கதாபாத்திரம், ஷெர்லாக் ஹோம்ஸ். அவரது அத்தனை கதைகளையும், பல தடவைகள் படித்திருக்கிறேன். அவரது கதைகளில், ஒவ்வொரு முடிச்சையும், ஏற்கெனவே சொல்லப்பட்ட க்ளூக்களிலிருந்து கண்டுபிடிப்பது, பரம ஆனந்தமாக இருக்கும்.. அதற்கே ஆர்தர் கானன் டாயலுக்கு ஒரு ஜே..
ReplyDeleteநிற்க.. அதற்குப் பின், மற்ற எழுத்தாளர்கள் எழுதும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில், பழைய ‘பெப்’ இல்லவே இல்லை. எனவே, அவைகளைப் படிப்பதை நிறுத்தி விட்டேன்..
இருந்தாலும், இந்தக் காமிக்ஸை நெட்டில் தேடிப் பிடித்து விடுகிறேன்..
இறந்தவர்களின் ஏடுகள், புஸ்ஸ்ஸ்ஸ்.... :-( பரவாயில்லை விடுங்கள்..
கிங் விஸ்வாவுக்கு ஒரு கேள்வி - ஷெர்லாக் கமல்குமார் என்ன ஆனார்? இன்னமும் அட்வென்சர்கள் புரிந்துகொண்டு தான் இருக்கிறாரா?
ஷெர்லாக் ஹோம்ஸ் காமிக்ஸை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! நன்றாக உள்ளது!
ReplyDeleteகாதலரே நீண்ட நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் பற்றிய பதிவு அதுவும் இரண்டு புத்தகங்களைப் பற்றி
ReplyDeleteகலக்குங்கள் காதலரே கலக்குங்கள்
உங்களிடமிருந்து இதுபோல நிறைய எதிர் பார்க்கிறோம் :)
.
// காதலரே இரத்தப்படலம் படித்து விட்டீர்களா? தங்களின் மொழிநடயில் இரத்தப்படலம் விமர்சனம் படிக்க ஆர்வமாக உள்ளேன் //
ReplyDeleteMe also repettuuuu...
.
This comment has been removed by the author.
ReplyDeleteஷெர்லாக் ஹோம்ஸ் எப்பவும் ரசிக்க வைக்க கூடிய ஒரு கதாபாத்திரம்.. தங்கள் எழுத்துக்களும் ரசிக்க வைக்கின்றன..
ReplyDeleteநண்பர் nis, இவ்வகையான கதைகள் திகில் என்பதைவிட சில சமயங்கள் வேடிக்கையாக இருக்கும். பயமில்லாது தூங்கலாம், மொனிக்கா பெலூச்சி கனவில் வருவார் :) கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் புலாசுலாகி, இக்கதை இரு பாகங்களுடன் நிறைவு பெறுகிறது. 1800 எனும் தலைப்பில் வெளியாகும் கதைகளில் இதுவும் அடங்குகிறது. கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சிபி, ரத்தப்படலம் கதையைதான் ஏற்கனவே பிரெஞ்சு மொழியில் படித்து, குறிப்பிட்ட சில ஆல்பங்களிற்கும் பதிவை இட்டிருக்கிறேன். தமிழ் பதிப்பு குறித்து எழுதும் எண்ணம் இல்லை- தற்போதைக்கு- ஷெர்லாக் பாத்திரமானது பல கதாசிரியர்களால் பல விதமான சுவை தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னைக் கேட்டால் ஷெர்லாக், மற்றும் காட்டேரி பெயரைப் போட்டு ஆல்பத்தை விற்கும் வணிக உத்தி இதுவென்பேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் கருந்தேள், Baker Street எனும் காமிக்ஸ் இணையத்தில் கிடைத்தால் தவறாது படியுங்கள். நகைச்சுவை கலந்து அட்டகாசமான துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் கலக்குவார். இறந்தவர்களின் ஏடுகள் கூட நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு ஆல்பம்தான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் எஸ்.கே., தமிழில் வெளியான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகள் குறித்து கிங்விஸ்வா அவர்கள் விரிவான பதிவை எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி கீழே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
http://tamilcomicsulagam.blogspot.com/search?q=edgar+alan+poe
நண்பர் சிபி, காமிக்ஸ் பதிவுகள் வரும். ஆனால் சீரான இடைவெளியில் என்பதை உறுதிப்படுத்த முடியாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் கவிதை காதலன் அவர்களின் கருத்துக்களிற்கு நன்றி.
ரேப் டிராகன் மீண்டும் வரும் வரை உங்கள் பதிவுகளை புறக்கணிப்பு செய்கிறேன்.
ReplyDeleteநண்பர் கொழந்த, புரட்சி ஹீரோ ரஃபிக் அவர்களின் ஒய்வு காலம் முடிந்ததும் ஆரம்பித்துவிடலாம் :) கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநல்லா இருக்கு!
ReplyDeleteஅன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
நண்பர் ஆர். ராமமூர்த்தி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete