Friday, February 19, 2010

பிலிப் மொரிஸின் காதலன்


ஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது.

பிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கெதிராக இழைத்த அநீதிக்கு எதிராகப் போராடுவதையும், அந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மீது சமூகம் கொண்டுள்ள பார்வையையும் நெகிழ வைக்கும் விதத்தில் கூறுகிறது.

The Birdcage, ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் மகன் ஒருவனின் திருண ஏற்பாடுகளின்போது நிகழும் கலாட்டாக்களை சிறந்த நகைச்சுவையுடன் திரையில் கொணர்ந்தது.

இவ்விரு திரைப்படங்களும் வெகுஜனப் பார்வையில் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்ட திரைப்படங்களாகும். இருப்பினும் ஒரினச்சேர்க்கையாளன் வாழ்வு குறித்து இவை மேலோட்டமாகவே பேசுகின்றன. அவ்வகையில் I Love You Phillip Morris திரைப்படம் நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்து ஒரினச் சேர்க்கையாளன் ஒருவனின் காதலிற்கான போராட்டத்தை வெகுஜனரசனை சினிமாவில் சற்று ஆழமாக காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது.

தன் அன்பு மனைவி, செல்ல மகள் என நல்லதொரு குடும்பத்திற்கு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் ஸ்டீவன் ரஸ்ஸல். கார் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொள்ளும் ஸ்டீவன், தன் பொய் முகத்தைக் கிழித்து விட்டு தான் மனதில் விரும்பும் வாழ்வை வாழ தீர்மானம் எடுக்கிறான்.

i-love-you-phillip-morris-2010-15302-18733554 தன் குடும்பத்தைப் பிரியும் ஸ்டீவன். இதுவரை தான் ரகசியமாக மறைத்து வாழ்ந்த ஒரினச்சேர்க்கையாளன் எனும் தன் நிஜ அடையாளத்தை வெளி உலகிற்கு வெளிப்படையாக்குகிறான். எந்தக் கவலையுமின்றி ஒரினச்சேர்க்கையாளனாக தன் வாழ்வை வாழ ஆரம்பிக்கிறான்.

ஒரினச் சேர்கையாளனின் வாழ்க்கை மிகையான செலவுகள் நிறைந்தது. சொகுசான கடலோர விடுமுறைகள், விலையுயர்ந்தப் பரிசுப் பொருட்கள், பகட்டான ஆடைகள், ராஜ போக வாழ்க்கை முறை என்பவற்றை தயக்கமின்றி நாடும் ஸ்டீவனிற்கு அவன் செய்யும் வேலை மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை தீர்ப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே ஸ்டீவன் வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில் பணத்திற்காக மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.

காப்புறுதி மோசடி, கடன் அட்டை மோசடி என மோசடிகளில் அவன் ஒர் கைதேர்ந்த கில்லாடியாகிறான். தொடரும் மோசடிகள் அவனைச் சிறையின் கதவுகளிற்குப் பின் பூட்டி வைக்கின்றன.

சிறையில் தன் வாழ்வைக் கழிக்கும் ஸ்டீவன், தற்செயலாக பிலிப் மொரிஸ் எனும் சக கைதியைக் காண நேரிடுகிறது. பிலிப் மொரிஸ் மேல் அவன் கண்கள் விழுந்த முதல் கணமே பிலிப் மொரிஸால் கவரப்படுகிறான் ஸ்டீவன். பிலிப் மொரிஸை அணுகும் ஸ்டீவன் அவனுடன் உரையாட ஆரம்பிக்கிறான்.

தன்னை ஒரு வக்கீல் என பிலிப் மொரிஸிற்கு அறிமுகம் செய்யும் ஸ்டீவன், தன் தகிடு தித்த நடவடிக்கைகளால் மொரிஸிற்கு உதவிகள் புரிந்து மொரிஸின் மனதை வெல்ல ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் காதல் பற்றிக் கொள்கிறது.

i-love-you-phillip-morris-2010-15302-1842613726 தன் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேறும் ஸ்டீவன், வக்கீல் போல் பல மோசடிகள் செய்து பிலிப் மொரிஸை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறான். இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார்கள்.

ஸ்டீவன், போலி ஆவணங்களை வழங்கி ஒரு புதிய வேலையில் இணைந்து கொள்கிறான். புதிய பணியில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அங்கும் ஒரு நிதி மோசடியில் ஈடுபட ஆரம்பிக்கிறான் ஸ்டீவன். பணம் மழையாகக் கொட்டுகிறது. பங்களா, கார், என பிலிப் மொரிஸிற்கு ஒரு கனவு வாழ்க்கையை வழங்குகிறான் ஸ்டீவன்.

ஸ்டீவனிற்கு கிடைக்கும் பணம் குறித்து அவனிடம் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறான் பிலிப் மொரிஸ். பணம் தனக்குப் பிரதானமில்லை, ஸ்டீவனின் காதல்தான் முக்கியம் என்று கூறும் மொரிஸ், ஸ்டீவன் தவறாக ஏதும் செய்தால் அதனை நிறுத்தச் சொல்கிறான். ஆனால் ஸ்டீவன் அப்பாவியான பிலிப் மொரிஸை தன் புத்திசாலித்தனமான பதில்களால் சமாளித்து விடுகிறான்.

துரதிர்ஷ்டவசமாக ஸ்டீவன் செய்யும் மோசடி அம்பலப்படுத்தப்படுகிறது, இதனை அறிந்து பிலிப் மொரிஸுடன் தப்பி ஓட விரும்புகிறான் ஸ்டீவன், ஆனால் பிலிப் மொரிஸோ தன்னை ஸ்டீவன் ஏமாற்றி விட்ட ஆத்திரத்தில் அவனை விட்டு சென்று விடுகிறான். தப்பி ஓடும் ஸ்டீவனை மடக்கிப் பிடித்து சிறையில் அடைக்கிறது காவல் துறை.

i-love-you-phillip-morris-2010-15302-441727459 ஸ்டீவன் தன்னிடம் பொய்களைக் கூறி ஏமாற்றினான் எனும் காரணத்திற்காக பிலிப் மொரிஸ் அவனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஸ்டீவனோ பிலிப் மொரிஸ் மேல் கொண்ட காதலால் சிறையிலிருந்து தப்பி வந்து அவனைக் காண, அவன் கரங்களில் கரைய ஓடி வருகிறான். தன் மனதை பிடிவாதமாக இறுக்கிக் கொள்ளும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனை திருப்பி அனுப்புகிறான். மீண்டும், மீண்டும் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறான் ஸ்டீவன்.

இந்நிலையில் ஸ்டீவன், பிலிப் மொரிஸின் பெயரில் ஆரம்பித்த ஒரு வங்கிக் கணக்கு காரணமாக ஸ்டீவனின் மோசடியில் பிலிப் மொரிஸையும் உடந்தையாகக் கருதி அவனை மீண்டும் சிறையில் அடைக்கிறது அதிகாரம். சிறைக்கு தான் திரும்பிச் செல்வதற்கு ஸ்டீவனே காரணம் என்பதை எண்ணி மனம் உடைந்து போகும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனுடன் உள்ள எந்த உறவுகளையும், தொடர்புகளையும் தூக்கி எறிகிறான். ஸ்டீவன் அன்புடனும், ஏக்கத்துடனும் பிலிப் மொரிஸை தொடர்பு கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் மடிந்து போகின்றன.

நாட்கள் நகர்கின்றன, தனது சிறையறையில் தனியாக இருக்கும் பிலிப் மொரிஸை அணுகும் சக கைதி ஒருவன் ஸ்டீவன் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, உயிரை விடுவதற்காக தன் வேதனையான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் எனும் தகவலை மொரிஸிடம் சொல்லிச் செல்கிறான். பின்பு நடந்தது என்ன…..

சிறு வயதில் பெற்ற தாயே தன்னை தத்துக் கொடுத்தாள் எனும் பாதிப்பில், தன்னை நெருங்கியிருக்கும் அன்பான உறவுகள் தன்னை விட்டு பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காக தன்னைச் சுற்றி பொய்களை விதைத்து, பொய்களாலான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அவ்வாழ்க்கையில் தான் யார் என்பதையே தொலைத்து விடும் ஒருவன், காதலினால் மீட்சி அடைய முயல்வதை காமெடி, உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் சிறப்பாக I Love You Phillip Morrisல் திரைப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Glenn Ficarra & John Requa ஆகியோர்.

Steven Jay Russell எனும் நபரின் வாழ்வைத் தழுவி Steve McViker எழுதிய நூலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் மோசடிகளில் கில்லாடி. சிறையிலிருந்து தப்பித்தல் இவரின் சிறப்பம்சம் என்பதால் இவரிற்கு கூடினி எனும் பட்டப் பெயர் வந்து சேர்ந்தது.

i-love-you-phillip-morris-2010-15302-1312940598 வெகுஜனரசனையைக் குறிவைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரினச் சேர்க்கையாளரின் அந்தரங்கங்களை தயங்காது எவ்வித வக்கிரமுமின்றி அதன் அன்புடனும் காதலுடனும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையவே வைக்கின்றன.

படத்தில் ஒரினச் சேர்கையாளர் ஸ்டீவன் பாத்திரத்தை Jim Carrey யும், பிலிப் மொரிஸ் பாத்திரத்தை Ewan McGregor ம் ஏற்றிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் அந்தந்த வேடங்களில் அசத்தியிருக்கிறார்கள் இரு பண்பட்ட நடிகர்களும்.

நீண்ட நாட்களிற்குப் பின் ஜிம் கேரி, தன் முழு சக்தியுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார். பொலிஸ் துறையில் பணியாற்றுகையில் தன் நிஜமான தாயின் அடையாளத்தைக் கண்டுபிடித்து, அவரின் வீடு தேடிச் சென்று, வீட்டு வாசலில் வைத்து ஜிம் கேரி செய்யும் கூத்து அட்டகாசம்.

போலி ஆவணங்களைத் தந்து, நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியைக் கொத்திக்கொண்டு, அப்பதவியில் தன் குறுக்குப் புத்தியால் அவர் உயர்வு பெற்றுச் சென்று தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை வாய் பிளக்க வைப்பது செம ஸ்டைல்.

ஒவ்வொரு முறை சிறையிலிருந்து அவர் தப்பிப்பதும், பின் மாட்டிக் கொள்வதும் காமெடிக் கதம்பம். காதல் காட்சிகளில் எவ்வித தயக்கமுமின்றி விளாசியிருக்கிறார் ஜிம். இறுதிக் காட்சிகளில் எயிட்ஸ் நோயாளியாக அவர் நடிக்கும் அமைதியான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் தான் வரும் ஒவ்வொரு தருணத்திலும் ஓய்வெடுக்காது பின்னுகிறார் ஜிம் கேரி.

i-love-you-phillip-morris-2010-15302-1591902415 ஆனால் ஜிம் கேரிக்கி, பெண்மையின் மறு உருவாய் எதிர் பின்னல் பின்னுகிறார் நடிகர் இவான் மக்கிரெகோர். பெண்களிலேயே இவ்வளவு நளினங்களைக் காணமுடியாது. தன் பெண்மை நிறைந்த உடல் மொழியால் பிரம்மிக்க வைக்கிறார் மக்கிரெகோர். ஜிம் கேரியை சீண்டும் காதலியாக, அக்கறையுடன் கடிந்து கொள்ளும் மனைவியாக! தன்னை ஸ்டீவனே ஏமாற்றி விட்டானே என கதறும் இடங்களிலும், எயிட்ஸ் நோயாளியான தன் காதலனை பார்ப்பதற்கு துடியாய், துடிக்கும் கணங்களிலும் அசத்துகிறார் மக்கிரெகோர்.

திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறார்கள் இயக்குனர்கள். கதை சில வேளைகளில் காலத்தில் முன்னிற்கும், பின்னிற்குமாகப் பயணிக்கிறது. அதன் வழியே பார்வையாளர்களிற்கு ஆச்சர்யங்களைத் திறக்கும் உத்தியை திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் அவர்கள். இறுதிக் காட்சியிலும் புத்திசாலித்தனமாக இந்த உத்தியை உபயோகித்து ரசிகர்களை அசரடிக்கிறார்கள்.

ஒரினச் சேர்கையாளனை பரிதாபத்திற்குரியவனாகவோ, காமெடிக் கோமாளியாகவோ காட்டாது, அன்பிற்காகவும், காதலிற்காகவும், உறவுகளிற்காகவும் ஓடுபவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதிகாரத்தினதும், சட்டங்களினதும் நிர்வாக ஓட்டைகள் வழி பலன் தேடிக் கொள்ளும் புத்திசாலியான சட்ட விரோதியாக காட்டியிருக்கிறார்கள். இந்த நேர்மையான பார்வையே இத்திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதன் முழுச் சுவையோடும் ரசிக்கவும் வைக்கிறது.

காதலானது எதிர் பால்களிற்கிடையில் முகிழ்ந்தாலும், ஒத்த பாலைச் சேர்ந்தவர்களிற்கிடையில் மலர்ந்தாலும் அதற்கான தேடலும், ஓட்டமும், அன்பும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் வேறுபடுவதில்லை. [***]

ட்ரெயிலர்

10 comments:

  1. காதலரே,

    மீ த பர்ஸ்ட்.

    சமீபத்தில் கோவா படத்தில் கூட ஓரின சேர்க்கையை மையமாக கொண்டு கதை புனையப்பட்டது. நளினமாகவே கையாளப்பட்ட ஓரிரு கதைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  2. காதலரே,

    நம்ம ஊரில் ரசனை கற்று குறைவுதான் காதலரே. கோவா படத்தில் நடித்த அந்த நடிகரை இப்போது பொது இடங்களில் அதிகம் காணமுடியவில்லை. காரணம் விசாரித்தால், மக்கள் அவர் வரும்போதெல்லாம் " உஸ், உஸ்" என்று சப்தம் எழுப்பி அவரை கிண்டல் செய்கிறார்கள்.

    இதனை நடிப்பிற்கு ஒரு சிறந்த பாராட்டாக எடுத்துக் கொண்டாலும்கூட நிஜ வாழ்வில் இதுபோன்ற கிண்டல்களை ஜீரணிப்பது கடினமே.

    கோவா படத்தை பற்றி விவாதிக்கும்போது தான் இந்த படத்தின் ட்ரைலரை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். படம் இன்னமும் இங்கே ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் வழமை போல இரண்டு நாட்களில் டி.வி.டி வந்து விடும். அதனால் திங்கள் அல்லது செவ்வைக் கிழமை அன்று இதனை பார்த்து விடலாம்.

    ReplyDelete
  3. நண்பா மில்க் படத்தை விட்டுவிட்டீர்களே?
    மிக அழகாய் விமர்சித்துளீர்கள்.ஃபார்மாலிட்டி டன்

    ReplyDelete
  4. நண்பரே அருமையான படத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் உங்கள் நேர்மையான விமர்சனத்தால். நன்றி.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம். படத்தை பார்க்க வேண்டும்

    ReplyDelete
  6. விஸ்வா, கிண்டல்களைத் தாண்டி அந்த நடிகர் தைரியமாக உலா வர வேண்டும். கிண்டல் அடிப்பவர்கள்தான் தங்கள் நிலையை எண்ணி கவலைப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பது என் கருத்து. ஒரினச் சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பு இங்கும் உண்டு. ஆனால் அதனை அவர்கள் தாண்டி வந்திருக்கிறார்கள். வருடம் தோறும் பாரிஸ் தெருக்களில் டெக்னோ இசையுடன் கூடிய பெருமை ஊர்வலம் ஒன்றை அவர்கள் நடாத்தி வருகிறார்கள். செம கொண்டாட்டமாக இருக்கும். முதன்மைக் கருத்துகளிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கார்த்திகேயன், நீங்கள் கூறியது மிக்கச் சரியே. மில்க் படத்தை நான் குறிப்பிடாததிற்கு என் வலிமையற்ற நினைவாற்றலும், அந்த சிறப்பான படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை என்பதுமே காரணங்கள். அதனை சுட்டிக் காட்டியமைக்கும், கருத்துக்களிற்கும், உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் என் நன்றிகள் நண்பரே.

    நண்பர் மயில்ராவணன் அவர்களே தங்களின் கனிவான கருத்துக்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி நேர வசதிப்படி வந்து நிச்சயம் படித்து விடுகிறேன்.

    நண்பர் சிவ், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  7. அன்பு நண்பரே,

    முகத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை தசைகளை ஜிம் கேரி வைத்திருந்த போதிலும், மெல்லிய சோக நடிப்பில் அவர் காட்டும் உடல் மொழி அற்புதமாக இருக்கும். ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரமாக உள்ள நடிகர்களில் அவரும் ஒருவர்.

    சிறப்பான விமர்சனம். இவான் மெக்ரஹர் இந்த வேடத்தில் எவ்வாறு பொருந்துகிறார் என்பதை திரைப்படத்தில் பார்க்க ஆவல்.

    ReplyDelete
  8. காதலரே . இப்பொழுது தான் ஒரு பயணத்திலிருந்து வந்து, உங்கள் விமர்சனத்தைப் படித்தேன் . . படித்தவுடனே தெரிந்து விட்டது, இப்படம் நிச்சமாய் பட்டையைக் கிளப்பப் போகிறது என்று . . ஓரினச் சேர்க்கையில் எந்தத் தவறும் இல்லை . .அதுவும் ஒரு வாழ்வு முறை தான் .. கோவாவிற்கு தினத்தந்தியில் வெளிவந்த விமர்சனத்தில், ஓரினச் சேர்க்கையை வக்கிரம் என்றும் இன்னமும் அசிங்கமான வேறு வார்த்தைகளையும் போட்டு, தாக்கி எழுதியிருந்தனர். இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துகள் இங்கு நிறைய உள்ளது (காரணம்:கலாச்சாரக் காவலர்கள் என்னும் தாலிபான்கள்) . . . சீக்கிரமே இந்தியாவிலும் ஒரு மிகப்பெரிய பேரணியை நமது நண்பர்கள் நடத்த எனது வாழ்த்துகள் மற்றும் கனவுகள் . . அருமையான விமர்சனம் . .

    ReplyDelete
  9. நண்பரே
    கோவா ஓரின சேர்க்கை பற்றிய காட்சிகளில் வெகுசனஇதழ் ஒன்றில் விமர்சனம் எழுதும் போது கூட மக்களை நெளிய வைப்பதாக எழுதியிருந்தார்கள். இந்த மனநிலை மாறவேண்டும். படம் இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் பார்பதற்கு உங்களின் இந்த பதிவு உதவும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. ஜோஸ், ஜிம் கேரி சிறப்பான ஒரு நடிகர், கொடுக்கும் பாத்திரங்களை தன்னால் இயன்றவரை அருமையாகச் செய்வார். குணச்சித்திர நடிப்பிலும் கலக்குவார். இவான் மக்கிரஹோரின் அற்புதமான நடிப்பை நல்ல டிவிடியில் கண்டு மகிழுங்கள் அன்பு நண்பரே. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், உங்கள் கனவு நனவாகட்டும். சம உரிமை என்பது யாவர்க்கும் கிடைக்கும் ஒன்றாகட்டும். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete