Thursday, February 11, 2010

ஓநாய் மனிதன்


அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro].

லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள் க்வன். பிளாக்மூர் கிராமத்தில் பென் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதை கடிதத்தில் தெரிவிக்கும் க்வன் அக்கடிதத்தின் வழி லாரன்ஸின் உதவியையும் வேண்டுகிறாள்.

தன் தாயின் மரணத்தின் பின்பாக சிறு வயதிலேயே தான் பிறந்த ஊராகிய பிளாக்மூரை விட்டு கசப்பான நினைவுகளுடன் அமெரிக்கா சென்றவன் லாரன்ஸ். அவனிற்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவில் ஒரு குளிர் உறைந்திருந்தது. தன் சகோதரன் மேல் கொண்ட அன்பால் தன் பிறந்த ஊரான பிளாக்மூரிற்கு பல வருடங்களிற்கு பின் திரும்புகிறான் லாரன்ஸ்.

பிளாக்மூர் கிராமத்தில் இருக்கும் அவன் குடும்பத்தின் இருள் அடர்ந்த பிரம்மாண்டமான மாளிகையில் அவனை எந்தவித ஆரவாரமுமின்றி வரவேற்கிறார் லாரன்ஸின் தந்தை ஜான் டால்பாட் [Anthony Hopkins]. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் அம்மாளிகையின் வரவேற்பறையில் வைத்து, காணாமல் போன பென்னின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் எவ்வித உணர்சிகளையும் காட்டாது அவனிற்கு தெரிவிக்கிறார் அவர்.

இறந்து போன தன் அன்புச் சகோதரனின் உடலைப் பார்வையிடுவதற்காக அது வைக்கப்பட்டிருக்கும் கசாப்புக் கடைக்கு செல்கிறான் லாரன்ஸ். கசாப்புக் கடையில் பென்னின் உடலைப் பார்வையிடும் லாரன்ஸ் தன் சகோதரனின் உடல் மிகக் கொடூரமான முறையில் கிழித்துக் குதறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

wolfman-2010-11906-1465874295 பென்னை ஒரு கொடிய மிருகம்தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். ஸ்காட்லாண்ட்யார்டின் பொலிஸ் அதிகாரியோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் கைங்கர்யம்தான் இது என்கிறார். ஊரின் மிக முக்கியமான கேந்திரப் புள்ளியான மதுபான விடுதியில்! வம்பு பேசுபவர்கள் இது ஊரில் தற்காலிகமாக முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் இருக்கும் கரடியின் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அடித்துச் [ தண்ணியை] சொல்கிறார்கள்.

தன் வீட்டின் இருளில் தங்கியிருக்கும் லாரன்ஸை அவனது பழைய நினைவுகள் வந்து தாக்குகின்றன. வலி நிறைந்த நினைவுகள் அவை. தன் தாயின் மரணம் என்றும் அவன் மனதில் தங்கியிருக்கிறது; அவளின் அழகான முகம் போல. தன் சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் லாரன்ஸ், அக் கொடிய மரணத்தின் பின் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டறிவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.

wolfman-2010-11906-22863848 ஊர் மக்கள், முழு நிலவு வரும் இரவில் கொடிய மிருகம் தன் அட்டகாசத்தை நிகழ்த்தும் என்று திடமாக நம்புகிறார்கள். பிளாக்மூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களின் கல்லறைகள் இதற்கு மெளன சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறான முழு நிலவு வரும் ஒரு இரவில், தன் தந்தை ஜானின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாது, ஊரில் முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் தன் சகோதரன் பென் குறித்து விசாரிப்பதற்காக செல்கிறான் லாரன்ஸ்.

தீயின் பிரகாசத்தினால் சூழப்பட்ட தங்கள் வண்டில்களிலும், கூடாரங்களிலும் தங்கியிருக்கும் ஜிப்சிக் கூட்டத்தில், எதிர்காலம் உரைக்கும் பெண் ஒருத்தியுடன் தன் சகோதரனிடமிருந்த மர்மமான பதக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறான் லாரன்ஸ். இவ்வேளையில் ஜிப்சிக் கூட்டத்தை தாக்க ஆரம்பிக்கிறது ஒரு மூர்க்கமான மிருகம். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் மனிதர்களை குதற ஆரம்பிக்கிறது அந்த விலங்கு. மனித உடல்கள் துண்டு துண்டாகின்றன. தலைகள் பந்துகள் போல் குருதியைக் கொப்பளித்தவாறே உருள்கின்றன.

இக்குழப்பத்தின் மத்தியில் தரையில் கிடந்த ஒரு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொள்ளும் லாரன்ஸ், மூர்க்கமான அவ்விலங்கை குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறான். அந்த மிருகத்தின் வேகம் அதனை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முழு நிலவின் ஒளி தயங்கியவாறே எட்டிப்பார்க்கும், புகார் உலவும் மரங்களினூடு அவ்விலங்கை விரட்டிச் செல்கிறான் லாரன்ஸ். ஆனால் அம்மிருகமோ மிகத் தந்திரமாக மறைந்திருந்து லாரன்ஸை மேல் பாய்ந்து அவன் தோளைக் கடித்து கிழித்து விடுகிறது.

wolfman-2010-11906-2016278394 லாரன்ஸை பின் தொடர்ந்து வந்த ஊர்மக்களின் துப்பாக்கி பிரயோகத்தால் அந்த மிருகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான் அவன். படு காயத்திற்கு உள்ளான லாரன்ஸ் அவன் மாளிகைக்கு எடுத்து வரப்படுகிறான். அவன் கதை முடிந்தது என்று நம்பியிருந்தவர்களின் எண்ணங்களை உடைக்கும் வண்ணம் விரைவாக குணம் அடையும் லாரன்ஸ், புதுப் பலம் வந்தவன் போல் உணர்கிறான். இந்நிலையில் இன்னொரு முழு நிலவு நாள் வந்து சேர்கிறது.

கொடிய மிருகத்தினால் கடிக்கப்பட்ட லாரன்ஸ், முழு நிலவு தோன்றும் இரவில் அவனும் ஒரு விலங்காக உருமாறுவான் என்று அச்சம் கொள்ளும் கிராம மதகுருவும், மக்களும் அவனைத் தங்கள் காவலில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவன் மாளிகைக்கு வந்து அவனை பலவந்தமாக அழைத்து செல்ல முயலும் ஊரவர்களை தன் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி விரட்டுகிறார் அவன் தந்தை ஜான். ஆனால் அன்றிரவு லாரன்ஸை தந்திரமாக மாளிகையின் நிலவறையொன்றில் வைத்து பூட்டி விடுகிறார் அவர்.

இரவில் முழு நிலவு தன் பூரணமான வடிவை அடையும் வேளை, நிலவறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸின் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனது உடல் ஒரு மிருக வடிவைப் பெற ஆரம்பிக்கிறது. நடக்கும் நிகழ்வின் மீது எந்த சக்தியுமற்றவனாக அதன் வலியான ஒட்டத்தில் கரைகிறான் லாரன்ஸ். அவன் ஒரு நர ஓநாயாக உருமாறுகிறான் ஆனால் அதன் பின் அவன் அறிந்து கொள்ளும் ஒரு ரகசியம் அவனை வஞ்சத்தின் பாதையில் கொண்டு சென்று தள்ளுகிறது….

1941ல் இதே பெயரில் வெளியாகிய ஒரு திரைப்படத்தின் படு மோசமான ரீமேக்தான் The Wolfman எனும் திரைப்படம். படத்தை சலிப்பூட்டும் வகையில் திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Joe Johnston.

wolfman-2010-11906-1706137334 படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், லாரன்ஸ் நர ஓநாயிடம் கடி வாங்கிய பின்பு ரசிகர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் டிகிரியை இன்னும் கொஞ்சம் கூட்டி விடுவதாக இருக்கிறது நர ஓநாயாக மாறிய லாரன்ஸ் தெரிந்து கொள்ளும் அந்த ரகசியம்! ஆனால்!!

அதற்குப் பின் திரைக்கதை லாரன்ஸை மனநல விடுதிக்கு அனுப்பி வைத்து கொடுமையான சிகிச்சை முறைகளை அனுபவிக்க வைக்கிறது, அறிஞர்கள் முன் உளவியல் விஞ்ஞானத்தின் காட்சிப் பொருளாக்குகிறது, ஒரு பூரண நிலவில் லண்டன் நகரக் கூரைகளிலும், தெருக்களிலும் உறுமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் ஓட வைக்கிறது, ரசிகர்களை அரங்கை விட்டு எப்போது கிளம்பலாம் என்று எண்ண வைக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது Se7en புகழ் Andrew Kevin Baker என்று நம்பவே முடியவில்லை!

திரைக்கதையில் புதுமையோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ சொல்லிக் கொள்ளுமளவிற்கு கிடையாது. மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒரு போரடித்த ஓநாய் கூட கதையின் மர்மத்தை இலகுவாக கண்டுபிடித்து விடும். 2010க்கு ஏற்ப திரைக்கதையில் நல்ல மாற்றங்களை கொணர்ந்திருக்க வேண்டாமா?

Underworld ல் வரும் கெத்தான ஓநாய்களைப் பார்த்து விட்டு இப்படத்தில் வரும் ஓநாய்களைக் காணும் போது கேவி அழலாம் போலிருக்கிறது. நவீன கிராபிக்ஸ் நுட்பங்களை அதிகம் நாடாது மரபு ஒப்பனை முறைகளை நாடியது எதிர்மறையான விளைவுகளை திரைப்படத்திற்கு அளித்திருக்கிறது. நர ஓநாயாக உருமாறும் காட்சிகள் காமெடி என்றால் ஓநாய்கள் காட்டும் நளினங்கள் செம காமெடி. லண்டன் நகரில் நடக்கும் நர ஓநாயின் ரவுடித்தனம் காமெடியின் உச்சம்.

அதிர வைக்கப் போகிறது என எதிர்பார்த்த அந்தனி ஹாப்கின்ஸின் பாத்திரம் பாதியில் வெடித்த பபிள் கம் குமிழ் போல் சிதறிச் சிதைகிறது. மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பெனெசியோ டெல் டொரொ ஏமாற்றத்தையே தருகிறார். இவ்விரு பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடாது ஓடுகின்றன. லாரன்ஸிற்கும், க்வனிற்குமிடையில் உருவாகும் அந்தக் காதல் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்த தவறுகிறது. இக்காதலை வைத்து முடிவில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர்தான் மனதை நெகிழ வைக்கிறார்.

wolfman-2010-11906-624747735 படத்தில் வரும் பின்னனி இசை ஒரு கொடிய தொல்லை. மரண வீட்டில் தமிழ் நாட்டு ஸ்பீல்பெர்க் டி.ராஜேந்தர் அவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடக் கேட்டுக் கொண்டதுபோல் அந்த இசை பொருத்தமற்ற ஒன்றாக ஒலித்து ஓய்கிறது.

யூனிவெர்சல் ஸ்டூடியோவிடமிருந்து இப்படி ஒரு வெளியீடா! மலிவான கிராபிக்ஸ், ஒப்பனை, அலங்காரம், இசை, திரைக்கதை, இயக்கம் என ஒரு மலிவான படைப்பாக உறுமுகிறது திரைப்படம். இதற்கு விலையாக இரு அருமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டது மகா அநியாயம்.

மொத்தத்தில் ஓநாய் மனிதன், ரசிகர்களை கடித்துக், குதறி, கடாசி விடுவதில் சிறப்பான வெற்றி கண்டு எக்காளமாக ஊளையிடுகிறது!

[க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்—இது திரையரங்கில் ஒரு புண்ணியவான் வழங்கிய குறட்டை ஒலி. இம்முறை படத்திற்கு ஸ்டாரும் இதுதான்!]

ட்ரெயிலர்

9 comments:

  1. ஏற்கனவே.. ஆஃபீஸ் வேலையால் நேரமில்லாம சுத்திகிட்டு இருக்கேன். நல்லவேளை காப்பாத்துனீங்க!! :)

    படம் இன்னைக்கு நைட்தான் இங்க ரிலீஸ் ஆகுது. உங்க ஊரில்.. ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டாங்களா...??!!

    புண்ணிவான்கள்..!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,

    விமர்சனத்தின் பல பகுதிகளை சிரிப்புடன் படித்தேன். இது போன்ற படங்களை நவீன உத்திகளை பயன்படுத்தி அட்டகாசமாக எடுக்கலாம். சொதப்பி விட்டார்கள். உங்கள் ஸ்டார் ரேட்டிங் அட்டகாசம். ப்ரதர்ஹுட் ஆப் த வுல்ப் என்ற ப்ரென்ஞ் படம் இது போன்ற கதையை ஒட்டியதுதான் என்றாலும் லோபட்ஜெட். நல்ல ஒளிப்பதிவு, இசை என அழகு சேர்த்திருப்பார்கள். நடிகர்களும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். அன்த்தவான் என்ற கதாபாத்திரத்தில் கேஸல். அதில் வரும் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் மணி.

    பௌர்ணமி வரை எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்.

    ReplyDelete
  3. காதலரே, படம் பார்த்து நொந்து போயி திரும்பி வந்திருக்கிறீர்கள் என்பது, தங்கள் எள்ளல் நடை விமர்சனத்தில தெளிவாக தெரிகிறது. படத்தின் ட்ரெயிலரை சென்ற வாரம் தியேட்டரில் பார்த்த போது, இந்த ஓநாய் மனிதன் கதையை எத்தனை முறை தான் ஹாலிவுட் படாதிபதிகள் எடுத்து கிழிப்பார்க்ள் என்று நினைத்தேன்... கடைசியில் அபத்த கலஞ்சியமாக அது உருவாக்கபட்டிருக்கிறது போல.

    நம்ம ஊரில் ஒரு காலத்தில், அம்மன், சாமி படங்கள் வரிசை கட்டி, சீப்பான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை போல, ட்ராகுலா மற்றும் ஓநாய்மனிதனும் ஆங்கில படாதிபதிகளுக்கு ஒரு அட்சய பாத்திரம் போல.

    அன்டர்வார்ல்ட் படங்கள் பார்த்த பின் இனி ஓநாய் மனிதனில் புதுமையாக புகுத்த ஒன்றும் கிடையாது என்று ரசிகர்களுக்கு தெரிந்த விடயம் இவர்களுக்கு வெளிச்சமாகாமல் போனது ஏனோ...

    உங்கள் ஸ்டார் ரேட்டிங் சரியான பதில் தான். படத்தை தியேட்டரில் பார்ப்பதில் இருந்து தவிர்ப்பது நலம் என்று புரிகிறது.

    சரி எல்லாம் இருக்கட்டும், படம் பார்த்து விட்டு வெளிவந்தவர்கள் அனைவருக்கும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாக தகவல்கள் கசிகிறதே.... எதற்கும் ஜோஷ் கூறியபடி பௌர்ணமி நாட்களில் தலைகாட்டாமல் இருந்தால், ப்ரான்ஸ் தேசத்திற்கு நல்லது....

    ReplyDelete
  4. காதலரே,
    Underworld படம் க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர் என இருக்கும் நினைத்து அதை பார்க்காமல் விட்டு பின் ஒரு நாள் அதை பார்க்க ஆரம்பித்து ஒரே மூச்சில் மூணு பார்ட்களையும் பார்த்து முடித்தேன்.

    நான் நினைத்த அந்த க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர் இந்த படத்தில் இருக்கும் போல ... டவுன்லோட் கூட பண்ண வேணாம் போல

    ReplyDelete
  5. நண்பர் ஹாலிவூட் பாலா அவர்களே, இங்கு புதன் கிழமை அன்றே வெளியாகிவிட்டது. நீங்கள் தப்பித்து விட்டீர்கள் நான் நன்றாக கடி வாங்கிக் கொண்டேன். உங்கள் ஊரில் படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    செங்கடலின் அலைகள் பார்த்து நாணும், ஒலிம்பஸ் மலை ஆகாயக் கடவுள் ஸியூஸ் பார்த்துப் பொறாமை கொள்ளும், சிறந்த வீரன் அக்கிலிஸ் அஞ்சி நடுங்கும் ஜோஸ் அவர்களே சொதப்பலோ சொதப்பல். விருதே தரலாம் அப்படியொரு சொதப்பல். இப்படத்திலும் சிங் என்ற பாத்திரம் வருகிறது நண்பரே. கேஸல் ஒரு சட்டெய்ராக நடித்திருக்கிறார் படத்தின் பெயரைத் தேடி அனுப்புகிறேன். மனைவியடம் வாங்காத அடியா, இல்லைக் கடியா ஓநாயெல்லாம் சுசூபி ஆங் :)) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    பாரிஸுடன் ஓடி வந்த ஹெலன் மனதில் நிறைந்தவரும், அப்ரோடைட்டியின் கனவுகளின் கடவுளும், பெர்செபொனியின் வசந்தமுமான ரஃபிக் அவர்களே அம்மன் படங்களில் நடித்த நடிகைகள் விரதமிருந்து நடித்ததை மறந்து விடாதீர்கள். மேலும் அம்மனின் பாவம் உங்களைச் சும்மா விடாது. ஓநாய் ஒன்று உங்களை இப்போது தேடி வந்து கொண்டிருக்கிறது. பட முதலாளிகள் இருக்கட்டும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து நீங்கள் ஒரு படம் தயாரிக்கிறீர்களாமே இது உண்மையா. அதில் கிராபிக்ஸ் காட்சிகள் உண்டா. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் லக்கி லிமட், இதனைப் பார்க்கும் வேளையில் நல்ல படம் எதையாவது பார்த்து விடுவதே சிறந்தது கருத்துக்களிற்கு நன்றி

    ReplyDelete
  6. நன்றி க.கா. நாங்கலாம் தப்பிச்சோம்

    ReplyDelete
  7. நண்பர் அண்ணாமலையான் அவர்களே, உங்களை தப்பிக்க வைப்பதற்காக நான் வாங்கிய கடி, செம கடி:)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. இன்றுதான் திரையரங்கில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.

    உங்கள் விமர்சனம் வழமை போல அருமை. விமர்சனம் வாசிக்கும் போது திரைப்படம் மீள பார்ப்பது போன்ற உணர்வு.

    நன்றி இரசிகரே

    The Wolfman

    ReplyDelete
  9. நண்பர் ஜே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete