Chuk Auleன் விரல்களின் பிடியிலிருந்து நழுவிய சிகரெட் புகை, Teddy Danielsன் முகத்தை உரசியவாறே கடந்து கடலில் வீழ்ந்தது. சிறுகப்பலின் மேற்தளத்தில் சாய்ந்தவாறே கடற்காற்றில் உப்பு பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களிருவரும் Federal Marsahalகள் [ நீதித்துறைக் காவல் அதிகாரிகள்].
கப்பலிற்கு மேலாக படர்ந்திருந்த வானம் கருமை கொண்டிருந்தது. வரவிருக்கும் புயலொன்றின் முன்னறிவிப்பாக அதன் படர்வில் ஓர் வன்மம் ஒளிந்திருந்தது.
சக்கும், டெடியும் கப்பலில் ஷட்டர் தீவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் கடும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனையில் அவர்களிற்காக ஓர் விசாரணை காத்துக் கொண்டிருக்கிறது.
அலைகளின் தழுவலை அலட்சியப்படுத்தியவாறே சிறுகப்பல் ஷட்டர் தீவை வந்தடைகிறது. மார்ஷல்கள் இருவரையும் தீவில் இறக்கியபின், புயல் அபாயம் காரணமாக தீவில் நங்கூரமிடாது பிரதான நகரின் கரையை நோக்கி கிளம்பிச் செல்கிறது கப்பல்.
ஷட்டர் தீவில் வந்திறங்கிய இரு மார்ஷல்களையும் வரவேற்கிறார் மனநல மருத்துவமனையின் உதவி இயக்குனரான McPherson.
மனநல மருத்துவமனையின் அமைப்பு, அதன் செயற்பாடுகள் குறித்து மார்ஷல்களிடம் சுருக்கமாக விபரிக்கும் மக்பேர்சன், மருத்துவமனை வளாகத்தினுள் மார்ஷல்களிருவரும் நுழையும் முன், மருத்துவ மனையின் விதிகளிற்கமைய அவர்கள் வசமிருந்த கைத்துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறான்.
மார்ஷல்களிருவரும் நோயாளிகளிள் மத்தியில் விசாரணைகளை நடத்தும்போது அவர்களுடன் மனநல மருத்துவமனையை சேர்ந்த ஒரு அதிகாரி எப்போதும் இருப்பார் என்பதையும் மக்பேர்சன் மார்ஷல்களிற்கு அறியத்தருகிறான். மனநல மருத்துவமனையாக இருந்த போதும் அந்த அமைப்பானது பலத்த காவலிற்குட்படுத்தப்பட்டிருப்பதை மார்ஷல்கள் இருவரும் அவதானிக்கிறார்கள்.
இரு மார்ஷல்களுடனும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும் மக்பேர்சன், அவர்களை டாக்டர் Cawley யிடம் அழைத்துச் செல்கிறான். வளாகத்தின் ஈரமான புற்தரைகளில் நோயாளிகள் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து குறுகிய, நிழலான, வராந்தாக்களைத் தாண்டி டாக்டர் கோளியின் அலுவலகத்தை அடைகிறார்கள் அவர்கள்.
டாக்டர் கோளி, மனநலத் துறையில் பிரபலமானவர். ஸ்காட்லாண்ட் யார்ட், OSS, MI5, போன்ற அமைப்புக்களில் தன் திறமையின் பங்களிப்பை நல்கியவர். அனுபவமும், அறிவும் தலை முடிக்கு அவ்வளவாகப் பிடிக்காத அம்சங்கள் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.டாக்டர் கோளியின் அலுவலகத்திற்குள் நுழையும் மக்பேர்சன் மார்ஷல்களிருவரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.
டாக்டரின் அலுவலகத்தை விட்டு மக்பேர்சன் நீங்கிச் சென்றுவிட மார்ஷல்களுடன் உரையாட ஆரம்பிக்கின்றார் டாக்டர் கோளி. மன நோயால் பாதிக்கப்பட்ட Rachel Soldano எனும் பெண் கொலைகாரி, அவளை அடைத்து வைத்திருந்த அறையிலிருந்து காணாமல் போய்விட்ட விபரத்தை மார்ஷல்களிற்கு தெரிவிக்கும் டாக்டர், காணாமல் போன பெண் கொலைகாரி ரேச்சல் குறித்து மார்ஷல்களிற்கு சில விபரங்களைத் தருகிறார்.
ரேச்சல் ஒரு விதவை. தன் மூன்று குழந்தைகளையும் அவள் வீட்டிற்கு பின்பாக ஓடிச்செல்லும் ஏரிக்குள் அமிழ்த்திக் கொன்றபின், அக்குழந்தைகளின் உயிரற்ற உடல்களை தன் வீட்டு நாற்காலிகளில் பொம்மைகள்போல் இருத்தி வைத்திருந்தவள். தானே உருவாக்கி கொண்ட கற்பனை உலகொன்றில் வாழும் அவள், தன் குழந்தைகள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறாள். தன் உலகிற்கு வெளியே இருக்கும் எவரும் அவளிற்கு பொய்யர்களாகவே தெரிகிறார்கள்.
இவ்விபரங்களை கூறியவாறே மார்ஷல்களை ரேச்சல் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு இட்டுச் செல்கிறார் டாக்டர் கோளி. அறையைப் பார்வையிடும் மார்ஷல்கள் மருத்துவமனையில் நோயாளிகளிற்கு வழங்கப்படும் இரு ஜோடிக் காலணிகளும் ரேச்சலின் அறையில் அப்படியே இருப்பதை அவதானிக்கிறார்கள், ஆகவே ரேச்சல் காலணிகள் அணியாத நிலையிலேயே அந்த அறையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஊகிக்கிறார்கள்.
ரேச்சலின் அறையைக் கண்களால் கிளறிக் கொண்டிருக்கும் மார்ஷல்களிடம், ரேச்சல் காணாமல் போன பின்பாக அந்த அறையில் தான் கண்டெடுத்த ஒரு சிறு தாளைத் தருகிறார் டாக்டர் கோளி. அந்தத் தாளில் ரேச்சல் எழுதியிருப்பது மன நிலை பிறழ்ந்த ஓர் கொலைகாரியின் கிறுக்கல்களா அல்லது சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஒரு ரகசியச் செய்தியா?
மார்ஷல் டெடிக்கு, ரேச்சலின் மறைவில் மனநல மருத்துவமனையில் பணியாற்றும் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் எனும் சந்தேகம் எழுந்து வலுக்கிறது. மருத்துவமனையில் தங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கிறார்கள் இரு மார்ஷல்களும்….
புயலால், பிரதான நகருடன் எல்லாவகையான தொடர்புகளையும் இழந்து நிற்கும் அந்த சிறுதீவில், தங்கள் கைவசம் இருந்த துப்பாக்கிகள் பறிக்கப்பட்ட நிலையில், மார்ஷல்கள் இருவரும் மேற்கொள்ளும் விசாரணைகள் அவர்களை இட்டுச் செல்லும் ஆழங்கள் எதிர்பாராதது. மனநல மருத்துவமனையில் நிகழும் சில இருளான நடவடிக்கைள் குறித்து அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் அவர்களிருவரும்….
ஆரம்பம் முதல், இறுதிப் பக்கம் வரை படிப்பவர்களை தன் மர்மப் பிடிக்குள் பற்றிக்கொளும் Shutter Island எனும் இக்கதை முதலில்[2003] நாவல் வடிவில் வெளியாகியது. நாவலை எழுதியவர் பிரபல அமெரிக்க நாவலாசிரியரான Dennis Lehane ஆவார். 1950களில் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் மனநோய் மருத்துவமனையில் நிகழும் மர்மமான சம்பவங்களை கதை விபரிக்கிறது.
குற்றவாளிகளின் மனங்களின் ஆழத்தில் வாசகனை படிப்படியாக ஆழ்த்தும் படு தந்திரமான கதை சொல்லல், மனித மனம் வெளிப்படுத்த விரும்பாத இருள் படிந்த பகுதிகளிற்குள் படிப்பவர்களை இழுத்துச் செல்கிறது.
கதையினதும், பாத்திரங்களினதும் நிழல்களோடு ஒன்றித்துப் பயணிக்கும் வாசகர்களிற்கு கதையின் எதிர்பாராத முடிவு தரும் அதிர்ச்சியும், சோகமும் ஷட்டர் தீவின் கரைகளை தொட்டுப்பார்க்கும் அலைகள் போல் மனங்களை ஈரமாக்கி விடும் தன்மை கொண்டவையாகவிருக்கின்றன.
டெனிஸ் லுஹேனின் இந்த அற்புதமான உளவியல் த்ரில்லரை, பிரெஞ்சு மொழியில் சித்திர நாவல் வடிவில், சவர அலகுக் கூர்மையுடன் தழுவியிருக்கிறார் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் Christian De Metter.
பாசிப்பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களை மட்டும் தெரிவு செய்து, தூரிகைச் சித்திரங்கள் மூலம் லுஹேனின் கதையின் இருளையும், மர்மத்தையும், விறுவிறுப்பையும், எதிர்பாரா திருப்பங்களையும் வாசகனின் மனதில் ஒட்ட வைக்கிறார் திறமை மிகு கலைஞனான கிறிஸ்டியான் டு மேத்தே.
சித்திர நாவலின் பாதிப்பகுதியை படித்தபின், முழுநாவலையும் படித்து முடிக்காது புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி இருக்கிறது கிறிஸ்டியான் டு மேத்தேயின் இந்த அற்புதமான தழுவல்.
இருளில் எரியும் சிகரெட்டின் முனையையும், புயல் இரவொன்றில் ஒளிரும் சிகரெட் லைட்டரின் தத்தளிக்கும் சுவாலையையும், மருத்துவமனையின் இருள் சூழ்ந்த பகுதிகளையும் அவர் சித்திரமாக தந்திருக்கும் விதம், அந்தந்தத் தருணங்களையும், இடங்களையும் உணரச் செய்வதாக இருக்கிறது. நான் படித்த சிறந்த சித்திர நாவல்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன்.
டெனிஸ் லுஹேனின் வேறு இரு நாவல்கள் ஏற்கனவே வெள்ளித் திரைக்கு எடுத்து வரப்பட்டிருக்கின்றன. Mystic River எனும் நாவல் பிரபல நடிகர் க்ளிண்ட் இஸ்ட்வூட் அவர்களின் அற்புதமான இயக்கத்தில் உருவாகி அதே பெயரில் திரைப்படமாக 2003ல் வெளியாகியது. இத்திரைப்படத்தில் தங்கள் திறமையான நடிப்பால் மிளிர்ந்த நடிகர்களான Sean penn, மற்றும் Tim Robbins ஆகியோரிற்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது.
Gone Baby Gone எனும் நாவலும் நடிகர் Ben Affleck ன் இயக்கத்தில் 2007ல் வெளியாகி பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்துக் கொண்டது.
இம்முறை Shutter Island நாவலிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. நாவலை வெள்ளித்திரைக்கு எடுத்து வருகிறார் கிழப்புலி Martin Scorsese. டெடி டேனியல்ஸ் வேடத்தில் ஸ்கோர்செஸியுடன் ஏற்கனவே மூன்று தடவைகள் பணியாற்றிய Leonardo Dicaprio, சக் பாத்திரத்தில் நடிகர் Mark Ruffalo, டாக்டர் கோளி எனும் அட்டகாசமான பாத்திரத்தில் காந்தி புகழ் Ben Kingsley என நடிகர் தெரிவு அசரடிக்கிறது.
இத்திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெடி டானியேல்ஸ் எனும் கனமான பாத்திரத்தில் நடிகர் டிகாப்ரியோவின் நடிப்பைக் காண மனதில் ஆவல் எகிறுகிறது.
திறமை வாய்ந்த இயக்குனர் ஸ்கோர்செஸி, லுஹேனின் நாவலின் இருளையும், ரகசியங்களையும், மர்மத்தையும் அவற்றின் சுவை கெடாது வெள்ளித் திரையில் தன் பாணியில் வழங்குவாரெனில், பிப்ரவரியில் எமக்குக் கிடைக்கப் போவது ஒரு அற்புதமான உளவியல் த்ரில்லர் என்பது உறுதி.
என் ஆழ் மனம் ஒரு நதி எனில், அதில் தெரியும் என் பிம்பம்தான் நிஜமா? இல்லை பிம்பத்தைக் பார்க்காது கண்களை மூடியிருக்கும் நான் நிஜமா?! [****]
ட்ரெயிலர்
அன்பு நண்பரே
ReplyDeleteமார்ட்டின் ஸ்கோர்ஸஸி-யின் இயக்கத்தில் டிகப்ரியோ மிக தேர்ந்த நடிகராக ஆகிவிட்டார். கூட இருக்கும் மார்க் ரபலோவும் அதுபோலவே ரொமான்டிக் உப நாயகனாக இதுவரை அறியப்படுகிறார். பார்ப்போம். இப்படம் அதை மாற்றிவிடுமா என?
மிஸ்டிக் ரிவர் எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. ஷன் பென் பிரமாதப்படுத்தியிருப்பார். இது சித்திரக் கதையாக வந்தது புதிய செய்தி. அதிலும் உங்களிடம் நான்கு ஸ்டார்கள் வாங்கியது....
இரவு, மழை, மனநோயாளிகள். ஒரு அபாரமான த்ரில்லர் அமைவதற்கு அற்புதமான சூழ்நிலைதான் இல்லையா? தேர்ந்த கதாசிரியரும், ஒவியரும் தங்கள் திறமைகளை முழு வீச்சில் காண்பிக்க ஏற்ற களம். என்னுடைய தேடல் பட்டியலில் இச்சித்திர புத்தகம் இடம் பெற்றுவிட்டது.
பென் அப்லக் ஹாலிவூட் அபிஷேக் பச்சன் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
நண்பரே,
ReplyDeleteடிகப்ரியோ நடிப்பில் முன்னேற்றமும் நேர்த்தியும் தெரிகிறது. பார்ப்போம் உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். இம்மாதிரியான சித்திர கதைகள் சிக்கிரம் கிடைத்து விடுவதில்லை. எனது தேடல் வேட்டை ஆரம்பித்துவிட்டேன். விரைவில் பு(ப)டித்து விடுவேன்.பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ஜோஸ், இக்கதையைப் பொறுத்தவரை டெடி டேனியல்ஸுக்கே அருமையான வாய்ப்பு இருக்கிறது. மார்க் ரபலோ இப்படத்தில் மிளிர்வதற்கு வாய்ப்புக்கள் குறைவே. திரைக்கதையில் இடம் பெறும் மாற்றங்களைப் பொறுத்தே ரபலோவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஹாலிவூட் இளைய தளபதி யார் என்று கூறிவிடுங்களேன். டெனிஸ் லுஹென் நாவல்களை இது வரை நான் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன் இனி அவரது நாவல் ஒன்றையாவது படித்தாக வேண்டும் எனும் தீர்மானத்திலிருக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன் அவர்களே, சித்திர நாவலைவிட லுஹெனின் நாவல் உங்களிற்கு இலகுவில் கிடைக்க கூடியதாகவிருக்கும் என்றே எண்ணுகிறேன். கதையைப் படியுங்கள் ஏமாற மாட்டீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
காதலரே - அட்டகாசமான விமர்சனம். இக்கதையைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. இங்கே இந்தியாவில் இம்மாதிரி சித்திர நாவல்கள் கிடைப்பதில்லை. பேட்மேன் வகையறா தான் இங்கு ஜாஸ்தி. அதுவும் நன்றாக இருக்கும் என்றாலும், இதுபோல நல்ல சித்திர நாவல்களைப் படிப்பதில் உள்ள இன்பமே தனி. இப்படத்தி மிகத் தீவிரமாக எதிர்நோக்குகிறேன்.
ReplyDeleteநண்பர் கருந்தேள், இயலுமானால் டெனிஸ் லுஹெனின் நாவலைப் படித்துப் பாருங்கள். படத்தைப் பார்த்து விட்டு விமர்சனத்தை போட்டு விடுங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteHi,
ReplyDeleteThanks for the upcoming films comic review....
i got link for this comics..
http://www.tokyopop.com/product/2857/ShutterIsland/1
நண்பர் ரமேஷ் அவர்களே கருத்திற்கும் சுட்டிக்கும் நன்றிகள்.
ReplyDeletegood post about a thrillercomics, well, what you think about AVATAR? any plan about to review?
ReplyDeleteநண்பர் காப். டைகர் அவர்களே, Pocahontas, Dances With Wolves, Jurrasic park ஆகிய திரைப்படங்களில் கொஞ்சம் எடுத்து, அதில் டெக்னாலாஜி எனும் நவீனம் கலந்து, நீலக்குவளையில் போட்டு குலுக்கி, விண்வெளிக்கு அனுப்பி வைத்தால் அதன் பெயர் அவதார். அரங்கை விட்டு வெளியே வந்த பின் பண்டோராக் கிரகத்தின் காட்டைத்தவிர வேறு எதுவுமே என் மனதில் நிற்கவில்லை. ஜேம்ஸ் கமரொனின் உழைப்பு பாராட்டத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அதற்கேற்ற முதலீடும் படத்தில் உண்டே. அவதார் ஓர் கேளிக்கைப்படம், ஓர் வணிகப்படம் எனும்வகையில் அது ஓர் வெற்றிப்படம். ஆனால் மனதின் உணர்வுகளிற்கு உயிர் அளிக்குமா எனக் கேட்டால் இக்கேள்விக்கு டைட்டானிக் அமிழ்ந்த ஆழத்திலோ அல்லது பண்டோராக் காடுகளிலோ தேடிப்பார்த்தால் கிடைக்கும் விடை இல்லை என்பதே. இயற்கையில் எல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன என்ற செய்தி கூட கதையின் முக்கிய திருப்பத்தை வலியுறுத்த வேண்டியே இடம்பெற்றிருக்கிறது என்பது என் கருத்து. விமர்சனம் எழுதும் எண்ணமில்லை, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteகனவுகளின் காதலரே... மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கேளிக்கைகள் களைகட்டட்டும்.
ReplyDeleteநிரம்ப நாள் கழித்து ஒரு நெடிய விடுமுறை கைபற்றி இருக்கிறேன்... பொறுமையாக உங்கள் பதிவுகளை படிக்க வேண்டியது தான் பாக்கி... மீண்டும் வருவேன்.
ரஃபிக், விடுமுறையை இன்பமாக அனுபவியுங்கள். வாழ்த்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நாண்பர்கள் யாவரிற்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்படி ஒரு தளம் இது வரை இருப்பதே தெரியாமல் இருந்து விட்டதே....முற்றிலும் வித்தியாசம் உங்களின் தளங்களில் எல்லாம்..நிறைய ரசிக்கும் படியான விஷயங்கள்...உங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்..இந்த பதிவும் அருமை...
ReplyDeleteநண்பர் கமலேஷ் அவர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி.
ReplyDeleteஇதன் தமிழ் பகுதி காமிக் புத்தகம் எங்கு கிடைக்கும்...
ReplyDeleteநண்பா
நண்பர் கணேஷ், இங்கு நீங்கள் காணும் பக்கங்கள் நான் மொழிபெயர்த்தது. இச்சித்திர நாவல் பிரெஞ்சு மொழியில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. நாவல் இதேபெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது அதனை முயன்று பாருங்களேன்.
ReplyDelete