அறுந்த நரம்புகள் எனும் ஒர் மென்மையான, மனதை நெகிழ வைக்கும் கதையினை முழுமையான காமிக்ஸ் வடிவத்தில் வழங்கியிருக்கிறார் நண்பர் புலா சுலாகி. தமிழில் காமிக்ஸ்கள் சரியான கால இடைவேளையில் வருவதில்லை எனும் குறையை நீக்கியவர். புலா சுலாகி காமிக்ஸ் என்றுதான் அவர் வலைப்பூவை நான் அழைக்க விரும்புகிறேன்.
சுஸ்கி-விஸ்கி எனப்படும் மினிலயன் நாயகர்களைப் பற்றிய ஒர் திரைப்படத்தினை பதிவாக்கியுள்ளார் காகொககூ அன்பர். தன் வழமையான பாணிக்கு திரும்பி, பதிவின் லே அவுட்டையும் சிறப்பாக கவனமெடுத்து செய்திருக்கிறார்.
பூங்காவனம் தன் பிரம்மாக்களைப் பற்றி ஒர் பதிவை இட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒர் டாக்டரின் புதிய டூ வீலரில் சுற்றுவதாக ஒர் வதந்தி உலவுகிறது.
இளைய தளபதி விஸ்வா பரபரப்பான காமிக்ஸ் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் ராட்சத ஸ்பெசல் செப்டெம்பர் மாதம் வெளிவரும் எனும் தகவல் நம்பிக்கை அளிக்கிறது.
மெழுகு பொம்மைச் சிற்பியான தூஸாட் அம்மணியைப் பற்றி வெளிவந்துள்ள இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை, சிறப்பான பாணியில் பதிவாக தந்திருக்கிறார் ரகசிய உளவாளி ரஃபிக். அவர் வலைப்பூவில், மாற்றம் என்பதே நிரந்தரம். நாளிற்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே போகிறது.
கடந்த இரு வாரங்களிற்கு முன்பாக வாட்ச்மேன் படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Zack Snyder நாவலிற்கு விசுவாசமாக ஒர் படத்தினை தந்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அலன் மூரின் நாவல் தந்த அந்த பரவச அனுபவத்தை, திரைப்படம் எனக்கு வழங்கவில்லை. வன்முறைக் காட்சிகளில் மிகையான செறிவு எனக்கு அனாவசியாமாகப் பட்டது. ரோர்ஷாக் பாத்திரம் அதற்குரிய முக்கியத்துவம் நீக்கப்பட்டு, இரவு ஆந்தையும், டாக்.மான்ஹாட்டனும் படத்தினை ஆக்கிரமித்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக காணாமல் போன சிறுமியை ரோர்ஷாக் தேடிச்செல்லும் தருணத்தை மூரும், கிப்பொன்ஸும் ஒர் வன்முறைக் கவிதையாக தந்திருப்பார்கள், ஏன் ரோர்ஷாக் வாழ்க்கையையே அவர்கள் அப்படித்தான் உருவாக்கியிருப்பார்கள். திரையில் அது வெறும் வன்முறைச் சக்கையாகவே எனக்குப் பட்டது. நாவலைப் படிக்காதவர்கள் Snyderஐ பாராட்டினால் அது அவரின் வெற்றி. நாவலைப் படித்தவர்கள் படத்தினை சிலாகிக்காவிடில் அது அவரின் தோல்வியல்ல, மூரின் நாவல் அவரிற்கு தந்த பெருமை அது. இனி ஸ்கார்பியனின் கதைக்குள் நுழைவோம்.
18ம் நூற்றாண்டு ரோம் நகரம். தன் துறவி வீரர்களுடன் மத குரு ஒருவனை தேடி வருகிறான் கர்தினால் (CARDINAL) TREBALDI.விசுவாசிகள், தங்கள் பாவமன்னிப்பின் போது கூறிய ஒர் விடயத்தை பற்றி குருவிடம்வினவுகிறான் கர்தினால் TREBALDI. முதலில் ரகசியத்தை கூற மறுக்கும் குருவானவர், வற்புறுத்தல்களின் பின் தான் பாவ மன்னிப்பில் கேட்டதை கூறி விடுகிறார்.
சூன்யக்காரி ஒருவள், இறவனிற்கு தன்னை அர்ப்பணித்து, விசுவாசத்தில் வாழ்ந்த துறவி ஒருவனை மயக்கி அவனுடன் உறவு கொண்டாள், இக் கொடுமையான பாவத்தின்!! வழியாக அவளிற்கு ஒர் குழந்தை பிறந்தது. அச் சிசுவின் வலது பக்க தோளில் தேள் போன்ற ஒர் அடையாளம் அது ஜனிக்கும் போதே இருந்தது. தேள், உலகத்தின் பாவங்களின் தலைவனான சாத்தான் வதியும் நரகத்தின் அடையாளம். அக்குழந்தை இப்போது வளர்ந்து இளைஞனாக வலம் வருகிறான் என கூறி முடிக்கிறான் துறவி. அன்று அந்த ஆலயத்தை, அம்மத குருவின் குருதி கழுவியது.
SCORPIONஐ கண்டுபிடித்து அவனைக் கொன்று விடும்படி, MEJAI என அழைக்கப்படும் எகிப்து நாட்டு ஜித்தான் ஒருத்திக்கு உத்தரவிடுகிறான் TREBALDI. MEJAI, விஷத்திரவியங்களையும், விஷம் ஊறிய ஆயுதங்களை கொண்டும் ஆட்களின் கதைகளை முடிப்பதில் கைதேர்ந்தவள். அவளை நன்கு கூர்ந்து கவனித்தால், அவள் கண்களைவிட கொடிய விஷம் உலகத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். அவள் SCORPIONஐ தேடும் வேட்டையை தொடங்குகிறாள்.
SCORPIONன் தாயார், திருச்சபையால் சூனியக்காரி எனக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டு மரணமானவள். SCORPION கடவுளையோ, ரோமன் திருச்சபையையோ நம்பாதவன், வாள் சண்டைக்கலையில் வித்தகன், கலை நயம் மிக்க பொருட்களின் காதலன், புனிதர்களின் சமாதிகளை உடைத்து, அவர்களின் எலும்புகளை கவர்ந்து, கவர்ந்த எலும்புகளை செல்வந்தக் குடும்பங்களிடம் விற்று பணம் சம்பாதிக்கிறான். வாழ்வை எவ்வித கட்டுப்பாடுமின்றி, மதத்தின் சட்டங்களிற்கு அடிபணியாது கேளிக்கையும், கும்மாளமுமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கையை வாழ கடவுள் சில நேரங்களில் இஷ்டப்படலாம்.மதுச்சாலைப் பெண்கள் அவனுடன் ஒர் இரவினைக் கழித்திட தங்களிற்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் இரவில், பெண் ஒருத்தியுடன் இரவினை விடியாமல் தடுக்க செல்லும் SCORPIONஐ மறைந்திருந்து தாக்குகிறாள் MEJAI. ஆனால் அவள் வைத்த குறி தப்பி விட, அவளுடன் மோதி தன்னைக் கொல்ல ஏவிய நபர் யார் என்பதை அறிந்து கொள்கிறான் SCORPION.
இதற்கிடையில், ஒன்பது பிரபலமான குடும்பங்களை சேர்ந்த நபர்களை, ஒர் ரசியக்கூட்டத்திற்கு வரும்படி சொல்லி, தன் துறவி வீரர்கள் மூலம் அக் குடும்பங்களிற்கு தகவல் அனுப்பி விட்டு, தன் துறவி வீரர்கள் புடைசூழ, அந்த ரகசிய இடத்திற்கு பயணமாகிறான் TREBALDI.
TREBALDIஐ தேடி பாப்பாண்டவரின் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள காவல் வீரர்களோடு மோதும் SCORPION, இறுதியில் TREBALDIன் காரியதரிசி மூலமாக அவன் சென்ற இடத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த ரகசிய இடத்தை நோக்கி தானும் செல்கிறான்.
TREBALDIயும், அவன் தகவல்சொல்லி அனுப்பிய 9 குடும்பத்தினரும் அந்த ரகசிய இடத்தில் கூடுகிறார்கள். இவ்விடத்தை மறைவாக அணுகும் SCORPIONஐ விஷக்கத்தியால் தாக்கி அவனை மரணத்தினை நோக்கி வழிய விட்டு விட்டு, தன் சன்மானத்தினைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறாள் MEJAI. ஒன்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், தனது திட்டத்தினையும், பயங்கரமான சதி ஒன்றைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறான் கர்தினால் TREBALDI.
SCORPIONஐ, TREBALDI கொல்லத் துடித்தது ஏன்? உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று? TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன? போன்ற கேள்விகளிற்கு விறுவிறுப்பாக பதில் தருகிறது LE SCORPION எனும் இக்காமிக்ஸ் தொடர்.
தங்கள் சுயலாபத்திற்காகவும், அதிகாரங்களிற்காகவும் மதத்தை தங்கள் கையில் எடுத்து அதனை தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த துடிக்கும் மனிதர்களின் கதை இது. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், விடுதலை வேட்கை என்பவை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிகாரத்தை தம் கையில் இருத்தி, மதத்தின் மூலமாக மக்களை அடக்கி, ஒடுக்கி அடிமைகளாக்க விரும்பும் இவர்கள் பாதையில் குறுக்கிடும் ஒருவனின் பயணமே இத்தொடராகும்.
குதிரைகள், ரதங்கள், கண்ணைக் கவரும் மேலங்கிகள், சூடான வாள் சண்டைகள், வத்திக்கன் ரகசியங்கள், SCORPIONன் பிறப்பு மர்மம், TREBALDIன் சதி என தூண்டில் போடுகிறது கதை. இரண்டாவது ஆல்பத்தில் கதை இன்னும் விறுவிறுப்பாகிறது, மர்மங்களின் முடிச்சுகள் விடுபடுவது போல் தோன்றினாலும், அவை மேலும் இறுகவே செய்கின்றன.
LE scorpion எனும் இக்காமிக்ஸ் தொடர் 2000 ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தது. இது வரை 9 ஆல்பங்கள் வெளியாகி இருக்கிறது, இதில் SCORPION- LE PROCES( SCORPION- THE TRIAL.) எனும் ஆல்பம் பிரதான தொடருடன் சம்பந்தப்படாத ஒர் ஆல்பமாகும்.
இத்தொடரின் கதாசிரியர் STEPHEN DESBERG ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்தவர், பிறந்த வருடம்1954. ஆரம்பத்தில் TINTIN எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வாராந்திரியில் சிறிய கதைகளை எழுத ஆரம்பித்தார், 1980 களில் முழுமயான கதைகளை படைக்கத் தொடங்கினார். இது வரையில் 30 வித்தியாசமான தலைப்புகளில் காமிக்ஸ் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவரது இன்னொரு பிரபலமான தொடரான IR$ ஐப்பற்றி நண்பர் ரஃபிக் ராஜா பதிவிட்டுள்ளார், தவறாது அப்பதிவினைப் படியுங்கள்.
DESBERG தன் பணியை சிறப்பாக செய்திருந்தாலும், அவரைத் தாண்டி பல படிகள் பாய்ந்திருக்கிறார் சித்திரங்களிற்கு பொறுப்பான ENRICO MARINI. 1969ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் ஒர் இத்தாலியர். DESBERG உடன் இணைந்து ஏற்கனவே பாலைநிலத் தாரகை [L 'ETOILE DU DESERT] எனும், இரண்டு ஆல்பங்களை கொண்ட ஒர் வெஸ்டர்ன் காமிக்ஸ் தொடரை வெளியிட்டுள்ளார். ஆனால் SCORPIONல் MARINIன் ஒவியங்கள், ஆம் ஓவியங்கள், சித்திரங்களல்ல மிக உச்சமான தரம் கொண்டவையாக இருக்கின்றன. முதலாவது ஆல்பத்தில் ஒவியங்களினாலேயே கதை சொல்கிறார் அவர். ஆல்பத்தின் ஆரம்பக் காட்சிகள், எரியும் தணல் கங்குகள் போல் ஒளிர்கின்றன. நண்பர்கள் DARGAUD தளத்திற்கு சென்று , அந்த அற்புதமான ஒவியங்களை கண்டு களியுங்கள்.
இக்காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு MARINI ன் ஓவியங்கள் ஒர் முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. சுருங்கக் கூறின் இத்தொடரினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சினிபுக் ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளது, தமிழகத்தில் இக்காமிக்ஸ் தொடர் வெளிவந்து விட்டது மேலதிக விபரங்களிற்கு காமிக்காலஜியில் சினிபுக் புதிய வரவுகள் பதிவினைப் படியுங்கள்.
நண்பர்களே, வழமை போன்று, பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.
ஆர்வலர்களிற்கு