கடந்த பதிவுகளிற்கான உங்கள் அன்பான ஆதரவிற்கு என் நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கான என் பதில்களை அப் பதிவுகளின் கருத்துப் பெட்டிகளில் காணலாம். வழமை போன்றே காமிக்ஸ் வலைப்பூ ரவுண்ட் அப்பை தொடங்குவோம்.
புதிய வரவு, ஆனால் இனிய வரவு. கலைமார்மணி பூங்காவனம் அம்மையாரை கட் அவுட் வைத்து வரவேற்றிருக்கிறார்கள் அவரின் ரசிக கண்மணிகள்.
சற்றுக்காலம் தலைமறைவாக இருந்து விட்டு[சூப்பர் மேன் மிரட்டியதால்] உலக காமிக்ஸ்களின் முகமூடிகளை மீண்டும் கிழித்தெறிந்திருக்கிறார் ஒலககாமிக்ஸ்ரசிகன். இம்முறை மாயாவிக்கே சவால் விட்டிருக்கிறார்.
எங்களை கலகலப்பாக கலக்கியடித்த மகா காவியம் வேதாளநகரம் நிறைவடைந்து விட்டது. ரசிகர்கள்,ஆபரேட்டர் ரீலை மாற்றிப் போட்டதாக கவலைப்பட்டாலும், ஆபரேட்டர் 300வது ரீலைப் போட்டு தேங்காய் உடைத்துவிட்டார் அவரிற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நண்பர் சிவ் அவர்கள், ரஷ்யப் புரட்சி பற்றிய ஒர் கதையின் முன்னோட்டம் இட்டுள்ளார். ஆவலைத் தூண்டி விட்ட முன்னோட்டம். பதிவை விரைவில் வெளியிடுவார் எனக் காத்திருக்கிறேன்.
காகொககூ அன்பரும் ஒர் ஸ்பைடர் கதையின் முன்னோட்டத்தை வழங்கியிருக்கிறார், போட்டியும் உண்டு. கும்மி எப்போது ஸ்டார்ட் ஆகும் என்று கூரை மேல் குந்தியிருக்கும் ஆவி கேள்வி கேட்கிறது.
இனி ஒர் அற்புதமான சித்திர நாவலின் கதைக்குள் நுழைவோம்.
"Gods and beasts, that is what our world is made of"
1.
லண்டன், ஜுலை 1884.
சிக்கர்ட்டும், ஆல்பெர்ட்டும் நல்ல தோழர்கள்.சிக்கர்ட் ஒர் சிறந்த ஓவியன்.ஆல்பெர்ட் தன் குடும்ப விவகாரங்களை கவனித்துக் கொள்கிறான். ஆனி குருக் எனப்படும் ஒர் சாதாரண குடும்பத்தினைச் சேர்ந்த, இனிப்புக்கடையில் பணியாற்றும் இளம்பெண்ணுடன் காதல் வயப்படுகிறான் ஆல்பர்ட். தன் குடும்பத்தாரிடமிருந்து இவ்விடயத்தினை ரகசியமாக காத்து வருகிறான் அவன். ஆனி கர்ப்பமுறிருக்கிறாள் என்பதனை அறியும் சிக்கர்ட் அதிர்ச்சி அடைகிறான். கர்ப்பமுற்றிருக்கும் ஆனியை திருமணம் செய்யவிரும்பும் ஆல்பர்ட்டின் மனதினை மாற்ற விரும்புகிறான் சிக்கர்ட். ஆல்பர்ட்டிடம், அவன் குடும்பம் இவ்விடயத்தினை அறிந்து கொண்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் எச்சரித்துப்பார்க்கிறான். சிக்கர்டின் எச்சரிக்கைகளை மதியாது ஆனியை மணந்து கொள்கிறான் ஆல்பர்ட். திருமணம் முடிந்து சிறிது காலத்தின்பின் ஒர் பெண்குழந்தையை பெற்றெடுக்கிறாள் ஆனி. நாட்கள் ஓடுகின்றன, தம்பதிகளின் வாழ்க்கை அமைதியாய் நகர்கின்றது. ஒர் நாள் ஆல்பர்ட்டின் வீட்டிற்குள் நுழையும் கும்பல் ஒன்று பலவந்தமாக ஆல்பர்ட்டை ஆனியிடமிருந்து பிரித்து விடுகிறது. ஆல்பர்ட் அரசகுடும்பத்தினன் என்ற உண்மை கசிகிறது. ஆனியின் குழந்தையை அவளின் ஆயாவான மரி கெலியிடம் ஒப்படைத்து மறைவாக வாழச்சொல்கிறான் சிக்கர்ட்.
2.
தோணி ஓட்டியின் மகனான வில்லியம்,தன் தந்தை காலாரா நோயினால் இறந்த பின்பு தன் தாயின் பராமரிப்பில் வாழ்கிறான்[1827]. இளவயது முதலே கடலும், இயற்கையும் அவன் மனதினைக் கவர்ந்தவையாக இருக்கின்றன. வில்லியம் சிறந்த புத்திசாலி. அவன் ஊக்கத்தினையும், ஆர்வத்தினையும், அவன் தாயின் அழகையும் காணும் பங்குக்குரு ஹாரிசன் அவன் கல்விக்கான பொறுப்பை முன்வந்து ஏற்றுக்கொள்கிறார் [1832]. வில்லியம் தன் திறமையினாலும், கடும் உழைப்பினாலும் மருத்துவத்தின் சிறப்பான பட்டங்களை வெல்கிறான். உடற்கூறு விஞ்ஞானத்தில் சிறந்த அறிவுடையவனாக திகழ்கிறான் வில்லியம். FREE MASONS எனும் ரகசிய சகோதரத்துவ அமைப்பு தானாகவே விழைந்து வில்லியமை சகோதரத்துவத்தில் ஒர் அங்கத்தினனாக இணைத்துக் கொள்கிறது. சகோதரத்துவ அமைப்பின் உந்துதல் மூலமாக நோயுற்றிருக்கும் இளவரசன் ஆல்பெர்ட்டை குணமாக்குகிறான் வில்லியம். வில்லியத்தின் திறமையினால் கவரப்படும் ராணி அவனை அரசகுடும்ப வைத்தியர்களில் ஒருவனாக நியமிக்கிறாள். இளங்கோ [BARONET] பட்டத்தினையும் வில்லியத்திற்கு அளிக்கிறாள் விக்டோரியா மகாராணி[1872]. புல்வெளியில் உலாவச்சென்ற வில்லியம் மாரடைப்பிற்கு உள்ளாகி உடல் நலம் தேறிவரும் நிலையில், அவனை தன்னை உடனடியாக சந்திக்க சொல்லி தகவல் அனுப்புகிறாள் ராணி. ராணியை சந்திக்கும் வில்லியத்திடம் தன் பேரனான ஆல்பர்ட்[பேரனிற்கும் ஆல்பர்ட் தான் பெயர்] அரசகுடும்பத்தின் கவுரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்த செயல்களை கூறுகிறாள். விவகாரம் வெளியில் கசியாது இருக்க வேண்டுமாயின் ஆனி மெளனமாக வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறாள். ஆனியின் கதியை வில்லியம்ஸின் கைகளில் ஒப்படைப்பதாக கூறி சந்திப்பை நிறைவு செய்கிறாள் ராணி. மனநிலை பிறழ்ந்தவர்களிற்கான மருத்துவமனை ஒன்றிற்கு பலவந்தமாக கொண்டு வரப்படும் ஆனியை தன் சிகிச்சையின் மூலம் பித்துப்பிடித்தவள் ஆக்குகிறான் வில்லியம்[1884].
லண்டன், ஆகஸ்ட், 1888.
சிக்கர்ட்டின் ஓவியகூடத்திற்கு வரும் சிறுமி ஆலிஸின் ஆயாவான மரி கெலி, ஆனியின் மகளை தன்னால் தொடர்ந்து
பராமரிக்க முடியாத நிலையிலுள்ளதைக் கூறி அவளை சிக்கர்டிடம் விட்டுச் செல்கிறாள். ஆனியின் பெற்றோரைத் தேடிச்செல்லும் சிக்கர்ட் அவர்கள் பொறுப்பில் சிறுமியை ஒப்படைக்கிறான். ஆனிக்கு என்ன நடந்தது என விசாரிக்கும் அவள் தாயிடம், ஆனி மனநலம் குன்றியவர்களிற்கான விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிவிக்கிறான்.
ஆலிஸின் ஆயாவாக இருந்த மரிகெலி வறுமை காரணமாக விலைமாதாக தொழில் புரிகிறாள். லண்டனின் இருண்ட ஒடுங்கிய தெருக்களில், ஆண்களின் காமத்திற்கும் சுவர்களிற்குமிடையில் உக்கிரமாக நெரிக்கப்படும் அவள், காம வடிதல்களின் பின் ஆண்கள் தெருவில் எறியும் மூன்று பென்சுக்களை இருளில் தன் வாழ்க்கையோடு பொறுக்குபவள். தெருவில் மிருகங்களை விட தாழ்ந்துபோன நிலையில் தொழில் புரியும் விலைமாதர்களிற்கு பாதுகாப்பு அளிக்கும் ரவுடிக் கும்பல் ஒன்று, விலைமாதர்கள் 4 பவுண்டுகளை அவர்களின் பாதுகாப்பிற்காக தங்களிற்கு தரவேண்டும் எனவும் தவறின் அவர்கள் குரூரமான வழியில் மரணத்தை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார்கள். எவ்வாறு பணம் திரட்டலாம் என்பதனை மதுச்சாலை ஒன்றில் கூடிக்கதைக்கிறார்கள் நான்கு விலைமாதர்கள். வழி ஏதும் தெரியாது அச்சமுறும் அவர்களிடம் தனக்கு ஒர் வழி தெரியும் என்கிறாள் மரி கெலி. அரச குழந்தையான ஆலிஸின் ரகசியத்தினை தன் மூன்று தோழிகளிடம் கூறும் மரி, சிக்கர்ட்டை மிரட்டிப் பணம் பறிப்பதே தன் நோக்கம் என்கிறாள். சிக்கர்டிடம் பணம் கேட்டு மிரட்டி ஓர் கடிதத்தையும் அனுப்பி வைக்கிறாள். அக்கடிதம் ஆரம்பித்து வைக்கப்போகும் ரத்த வெள்ளத்தை மரி அப்போது அறிந்திருக்கவில்லை.
மிரட்டல் கடிதம் கிடைக்கப்பெற்ற சிக்கர்ட் அதிர்ந்து போகிறான், காசில்லாத நிலையில் ஆல்பர்ட்டின் தாயாரான இளவரசி அலெக்ஸாண்ட்ராவை சந்தித்து பேசும் அவனை ஆறுதல் படுத்தும் இளவரசி, விடயத்தை விக்டோரியா மகாராணியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறாள். வில்லியமை உடனடியாக வரவழைக்கும் மகாராணி, இவ்விடயத்துடன் தொடர்புடைய விலைமாதர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு தான் ஒதுங்கி கொள்கிறாள். கோச் வண்டி ஒட்டுபவனும் ராணியின் ஒற்றனுமான நெட்லியிடம் மிரட்டல் கடிதத்துடன் சம்பந்தப்பட்ட விலைமாதர்களின் விபரங்களை அறிந்து வரச் சொல்கிறான் வில்லியம். விலை மாதர் கூடும் மதுச்சாலைகளில் தகவல்களை சேகரிக்க ஆரம்பிக்கிறான் நெட்லி.
செப்டெம்பர்,1888.
சேகரித்த விபரங்களை வில்லியமிற்கு தெரிவிக்கிறான் நெட்லி. ஸ்காட்லாண்ட்யார்ட்டில், அதன் இயக்குனரான சார்ல்ஸ் வாரனை சந்தித்து உரையாடுகிறான் வில்லியம். அரசகுடும்பத்தின் கவுரவம் சில விலைமாதர்களால் மிரட்டப்படுவதையும்,அதனை தான் தன் வழியில் தீர்த்து வைக்கப்போவதாகவும் தெரிவிக்கிறான். இதனை அனுமதிக்க மறுக்கும் சார்ல்ஸ் வாரனை தன் வாதத்திறனினால் அடக்கி தன் கைக்குள் கொண்டு வருகிறான் அவன். வைட்சப்பல் பகுதியில் அன்றிரவு ஆரம்பிக்கப்படும் நடவடிக்கை, சம்பந்தப்பட்ட நான்கு விலைமாதர்கள் அகற்றப்படும் வரையிலும் தொடரும் எனவும், சார்ல்ஸ் வாரன் இவ்விடயத்தில் தன் கண்களை மூடிக்கொள்ள வேண்டுமெனவும் எச்சரிக்கிறான்.
இரவில் உறங்குவதற்கான அறைக்கு செலுத்தவேண்டிய பணம் போதாமையால், தெருக்களில், வடியவேண்டிய காமங்களிற்காக காத்திருக்கிறாள் பொலி. அத்தருணம் அவளை ஒர் கோச்சு வண்டி அண்மிக்கிறது. வண்டியினுள் அமர்ந்திருக்கும் வில்லியம் அவளை உள்ளே ஏற்றிக் கொள்கிறான். மயக்கமருந்து பூசப்பட்ட திராட்சைப்பழங்களை பொலிக்கு உண்ணக் கொடுக்கிறான் அவன். தன் வாழ்வில் முதன்முறையாக திராட்சைப்பழங்களை உண்ணும் வாய்ப்பு கிடைத்த அவள் பழங்களை ஆவலுடன் உண்கிறாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலைக்குப்போகிறாள் பொலி. அவள் கழுத்தில் ஓடும் முக்கிய நாடியொன்றை அழுத்தி அவளை கொலை செய்கிறான் வில்லியம். கோச் வண்டியிலிருந்து உடலை நெட்லி இறக்கி அருகிலுள்ள தெருவொன்றிற்கு அதனை காவிச் செல்கிறான். தெருவின் மீது பொலியின் உடலைக்கிடத்தும் நெட்லியிடம் ஒர் நீண்ட கத்தியை கொடுக்கும் வில்லியம், பொலியின் கழுத்தை அறுக்க சொல்கிறான். பயத்திலும், பதட்டத்திலும் நெட்லி குறிதவறி வெட்ட, அவனிடமிருந்து கத்தியை மீளப் பெற்றுக் கொள்ளும் வில்லியம் தான் பொலியை வெட்டப் போவதை நெட்லியை பார்க்கசொல்கிறான். கத்தியை இடமிருந்து வலமாக இழுத்து பொலியின் கழுத்தினை அறுக்கிறான் வில்லியம், பீறிடும் ரத்தம் தெருவினை நனைக்கிறது. பொலியின் ஆடைகளை விலக்கும் வில்லியம் அவள் வயிற்றினைக் கத்தியால் பிளக்கிறான். பிளவின் இருபுறமும் ரத்தம் வழிய ஆரம்பிக்கிறது. தன் கைகளிரண்டையும் பிளவினூடு நுழைத்து அவள் குடல்களை அறுத்தெடுக்கிறான். மெல்லிய ஒளியில்,இருளாய்ப் பளபளக்கும் குருதி தோய்ந்த குடல்களைப் பார்த்து அதில் லயிக்கிறான். இடத்தை விட்டு உடனே கிளம்ப வேண்டும் எனத் துடிக்கும் நெட்லியால் லயிப்பிலிருந்து மீளும் வில்லியம்"பார் நெட்லி, அவள் ஒளியால் நிரம்பியிருப்பதை பார்" என்கிறான். பொலியை தெருவில் உறைய விட்டு அவ்விடத்தை விட்டு விலகுகிறார்கள் இருவரும். அவள் உடலிலுறைந்த குருதி அவள் உடையில் உறையத் தொடங்கியது.
பொலியின் கொடூரக் கொலையை விசாரிக்க ஸ்காட்லாண்ட்யார்ட் ஒர் சிறப்புக் குழுவை அமைக்கிறது. வைட்சப்பல் பகுதியில் பலவருடங்கள் பணியாற்றிய ஆபெர்லின்னை அக்குழுவுடன் இணைந்து பணியாற்றப் பணிக்கிறார் சார்ல்ஸ் வாரன். விருப்பமின்றி விசாரணையில் பங்கேற்கும் ஆபெர்லின் ஏற்கனவே இரு விலைமாதர்களை கொலை செய்த விலைமாதர் பாதுகாப்புக் குழுவினரே இக்கொலையையும் செய்திருக்கலாம் எனும் ஊகத்தை மறுக்கிறான். பொலியின் உடல் ஒர் சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட உடல் போல் சீராகவும்,நுணுக்கமாகவும் வெட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் அவன், கொலையாளி வேறு ஒர் நபராக இருக்கலாம் என எண்ணுகிறான். பாதுகாப்புக் குழு முரடர்கள் இக்கொலையை செய்யாவிடில் பொலியின் கொலைக்கான காரணம் என்ன எனும் கேள்வி விசாரணைக் குழு அதிகாரிகள் மத்தியில் எழுகிறது.
வாடிக்கையாளர்களிற்காக தெருவில் காத்து நிற்கும் ஆனி சப்மேனின் அருகில் வந்து நிற்கிறது நெட்லியின் கோச் வண்டி. வண்டியின் கதைவைத்திறந்து அவளை உள்ளே அழைக்கிறான் வில்லியம். பசியுடனும், களைப்புடனுமிருந்த ஆனிக்கு வில்லியம் வழங்கிய திராட்சைப்பழங்கள் அமிர்தமாக இருக்கின்றன. வண்டியை ஒர் இடத்தில் நிறுத்துகிறான் நெட்லி. ஆனி, வில்லியமை ஒர் கடையின் பின்முற்றத்திற்கு அழைத்துச் செல்கிறாள். தனக்கு முதுகைக்காட்டியவாறு ஆடைகளையும் பின்னழகையும் மேலுயர்த்தி ஆயத்தமாகும் ஆனியை, அவள் கழுத்தில் அணிந்திருந்த சால்வையினால் கழுத்தை நெரித்துக் கொல்கிறான் வில்லியம். தரையில் வீழ்ந்து கிடக்கும் ஆனியின் சட்டைப்பைகளிலிருந்த பொருட்களையெல்லாம் வெளியே எடுத்து அவள் காலடியில் ஒழுங்காக அடுக்குகிறான். தன்னுடன் எடுத்து வந்த பெட்டியிலிருந்து நீண்ட கத்தியொன்றை வெளியே எடுக்கும் வில்லியம், முதலில் ஆனியின் கழுத்தினை இடமிருந்து வலமாக அறுக்கிறான்.அவள் வயிற்றுப்பகுதியை ஒரே வெட்டில் கிழிக்கிறான், பெருகும் ரத்தத்தினூடு அவள் குடல் பகுதியை வெளியே இழுத்து மாலை போன்று அவள் இடது தோளின் மீது பரப்புகின்றான். வயிற்றின் அடியை நோக்கி கத்தி இறங்குகிறது. ஆனியின் கருப்பையை அறுத்தெடுக்கும் வில்லியம் அதனை ஒர் துணியில் வைத்து மூடி தன்னுடனேயே எடுத்து செல்கிறான்.
ஆனியினதும், பொலியினதும் உடல் வெட்டப்பட்ட விதத்தினைக்கொண்டு கொலைகளை செய்தது ஒரே நபர் தான் எனும் தீர்மானத்திற்கு வருகிறது வைட்சப்பல் கொலை விசாரணைக் குழு. உடல் உறுப்புகள் உடலிலிருந்து நீக்கப்பட்டுள்ள விதம், கொலையாளி மனித உடற்கூறு பற்றிய சிறந்த அறிவு கொண்டவனாக இருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வழி வகுக்கிறது. பொலிஸ் சந்தேகத்தின் பெயரில் ஜான் பைசர் என்பவனைக் கைது செய்கிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால்,பைசர் பின்பு விடுதலை செய்யப்படுகிறான். தான் பணியாற்றும் பத்திரிகையின் விற்பனையை அதிகரித்து காசு பார்க்க விரும்பும் பத்திரிகையாளன் ஒருவன், கொலையாளி எழுதியது போல் ஓர் போலிக் கடிதத்தினை தன் பத்திரிகை அலுவலகமான செண்ட்ரல் நீயுஸ் ஏஜன்சிக்கு அனுப்பி வைக்கிறான். கொலையாளியின் பெயராக அவன் தேர்ந்தெடுத்தது JACK THE RIPPER.
மதுச்சாலை ஒன்றிற்கு வில்லியமை வரவழைக்கும் சார்ல்ஸ் வாரன், வில்லியமின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தச் சொல்கிறான். அவனை ஏளனமாக இடைவெட்டும் வில்லியம் மரி கெலி எனும் விலைமாதைப்பற்றி சேதி ஏதாவது தெரிந்தால் தனக்கு உடனடியாக தகவல் தரும்படி கூறி விடை பெறுகிறான். எலிசபெத் எனும் விலைமாதை அன்றிரவு குறிவைக்கிறான் வில்லியம். நள்ளிரவின் பின் எலிசபெத்தை சந்திக்கும் அவன், அவளுடன் மறைவிடமொன்றிற்கு செல்கிறான். வில்லியம் வழங்கிய திராட்சைகளின் சுவை பிடிக்காது அவற்றை துப்பி விடுகிறாள் எலிசபெத். சந்தொன்றினுள் வைத்து அவளை தாக்க முயலும்வில்லியமை, தெளிவான நிலையிலிருந்த எலிசபெத், பலமாக தள்ளி விட்டு, வெளித்தெருவை நோக்கி ஓடுகிறாள். வெளித்தெருவில் காவலிற்கு நின்ற நெட்லி அவளை மடக்கிப் பிடித்து விடுகிறான். அவள் கைகள் இரண்டையும் பின்னால் முறுக்கி, லிஸ்ஸின் தலையை பின்னோக்கி மடக்கி அவளின் கழுத்தை, அவர்களை அண்மித்துக் கொண்டிருக்கும் வில்லியமிற்கு காணிக்கையாக்க, வில்லியமின் கத்தி அவள் கழுத்தை கிழிக்கிறது.
குடித்து விட்டு,தெருவில் அரை மயக்கத்தில் உளறிக்கொண்டிருக்கும் கேத்தி என்பவளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்கிறார்கள் கான்ஸ்டபிள்கள். மயக்கத்தில் அவள் கொடுக்கும் ஜேன் கெலி எனும் பெயரிலுள்ள கெலியை மட்டும் கவனத்தில் கொண்டு வில்லியமிற்கு தகவல் சொல்லி அனுப்புகிறார்கள் காவலர்கள். தகவல் கொண்டு சென்ற கான்ஸ்டபிள் தெருவில் தனித்து நிற்கும் வில்லியமின் கோச் வண்டியை கண்டுகொள்கிறான். அருகிலுள்ள வீதிகளில் வில்லியமைத்தேடும் அவன் ஒர் தெருவில் வில்லியமைக் கண்கிறான். வில்லியமின் கைகளில் ரத்தம் தோய்ந்த நீண்ட கத்தி, அருகில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் கழுத்துக் கிழிக்கப்பட்ட பெண். தன் தலையைக் குனியும் கான்ஸ்டபிள், லிஸ்ஸின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தினைப் பார்த்தவாறே கெலி எனும் பெண் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் கூறுகிறான். கோச் வண்டி காவல் நிலையத்தை நோக்கி விரைகிறது. காவல் நிலையத்திற்கு செல்லும் நெட்லி, கெலி என்பவளை சில நிமிடங்களின் முன்பாக பொலிஸ் விடுவித்ததை அறிகிறான், அவள் சென்ற வழியை காவலர்களிடம் விசாரித்து அறியும் அவன் விரைவாக கோச் வண்டியை ஓட்டி ஒர் தெருவில் தனியே சென்று கொண்டிருக்கும் ஓர் பெண்ணை கண்டு கொள்கிறான், அவளை தனியே அனுகி , நயமாகப் பேசி கோச் வண்டியிலிருக்கும் வில்லியமிடம் அழைத்து வருகிறான். கோச் வண்டியை அவள் நெருங்கும் சமயம் ஒர் வெறிபிடித்த மிருகம் போல் அவள் மேல் பாயும் வில்லியம் தன் கத்தியால் அவளை சிதைக்க ஆரம்பிக்கிறான். பெண்ணின் உடலில் கத்தி வெட்ட வெட்ட ஒர் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான் வில்லியம். நெட்லியின் குரல் அவன் காதுகளிற்கு கேட்க்கவில்லை. எங்கே சென்றுவிட்டான் வில்லியம்? சில கணங்களின் பின் தவம் கலைந்து நினைவிற்கு வரும் வில்லியம், நான்கு கொலைகளுடன் நிறுத்துவது முழுமையற்றது என்கிறான். இன்னும் ஓர் கொலை தன் பயணத்தை முடித்து வைக்கும் என்று புலம்புகிறான். கேதியின் உடலை விட்டு ஓடிச்செல்கிறது கோச் வண்டி.
கொலை செய்யப்பட்ட கேத்தியின் பிரேத பரிசோதனையில் பார்வையாளனாக கலந்து கொள்கிறான் ஆபெர்லின். இடமிருந்து வலமாக வெட்டப்பட்ட கழுத்து, அடிவயிற்றிலிருந்து மேல் நோக்கிப் பிளக்கப்பட்ட வயிற்றுப்பகுதி, வயிற்றின் உட்பகுதியிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டுள்ள குடல்,ஆழமாக கீறப்பட்டுள்ள கண் மடல்கள், நுனி வெட்டப்பட்ட மூக்கு, அகற்றப்பட்ட இடது சிறுநீரகம், அரைகுறையாக நீக்கப்பட்டுள்ள கருப்பை. பிரேத பரிசோதனையைச் செய்த நிபுணர்கள், சிறுநீரகம் ஓர் மென்சவ்வினால் மறைக்கப்பட்டிருக்கும் என்பதனையும், தெருவின் மங்கிய வெளிச்சத்தில், சில நிமிடங்களில் அதனை அகற்றிய கொலைகாரனிற்கு நிச்சயம் சிறப்பான அறுவைச் சிகிச்சை திறன் இருந்திருக்க வேண்டுமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். ஆபெர்லின்னிற்கு கொலைகாரன் ஒர் மருத்துவனாக இருக்ககூடுமோ எனும் எண்ணம் உதிக்கிறது.
இறுதியாகக் கொலை செய்யப்பட்டவள் மரி கெலி அல்ல என்பதை அறிந்துவிடும் நெட்லி தகவலை வில்லியமிற்கு தெரிவிக்கிறான். ஆபெர்லினை சந்திக்க விரும்பும் ராபர்ட் லீஸ் என்பவன், தான் தரிசனம் காண்பவன் என்றும்[PSYCHIC], மகாராணிக்கும் தான் ஆலோசனைகள் வழங்குவதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். கொலைகளை செய்பவன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ள ஓர் மருத்துவன் என்பதை தான் தன் தரிசனம் மூலமாக அறிந்ததாகக் கூறும் அவன் பேச்சை நம்பாது அவனைப் புறக்கணிக்கிறான் ஆபெர்லின். மரி கெலி தங்கியிருக்கும் அறையின் சாவியினைத் திருடி வில்லியமிடம் தருகிறான் நெட்லி. ஊர் உறங்கும் நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில் அவள் அறையினுள் நுழைகிறான் வில்லியம். அரவம் கேட்டு விழித்தெழும் மரியின் கழுத்தில் முதல் வெட்டை வெட்டுகிறான் வில்லியம். சீறிய ரத்தம் படுக்கையருகிலிருந்த சுவரை வண்ணம் மாற்ற, அரை உயிருடன் கட்டிலில் சாய்கிறாள் மரி. அறையிலிருந்த கதிரையொன்றினைக் கட்டிலின் அருகில் போட்டு அதில் அமரும் வில்லியம் மரியின் கைநாடியினைப்பிடித்து அவள் இறந்துவிட்டாளா எனப் பார்க்கிறான். மரியின் உடலில் உயிர் இல்லை என்பதனை அறிந்ததும் தன் சடங்கினை ஆரம்பிக்கிறான் வில்லியம். கட்டிலின் அருகில் இருந்த சிறிய மேசையில் மெழுகுவர்த்தி ஒன்றினை ஒளியூட்டுகிறான். மங்கிய வெளிச்சம் அறையினுள் கசிய ஆரம்பிக்கிறது. மரியின் போர்வையினை விலக்குகிறான் வில்லியம். அவளின் முகத்தை தன் கையில் எடுத்து, இரு கன்னங்களிலும் நெடுக்கே ஆழமாக வெட்டுகிறான்.இவ்விரு நெடுக்கு வெட்டுக்களையும் உதடுகளின் மேற்புறமாக ஒர் குறுக்கு வெட்டால் இணைக்கின்றான். பின், கழுத்துப்பகுதியிலிருந்து மேல் நோக்கி, குறுக்காக வெட்டப்பட்ட மேலுதடுப்பகுதி வரை கத்தியால் கிழிக்க, ரத்தத்தாமரை போல் திறக்கிறது மரியின் முகம். அறையில் இருக்கும் புகைக்கூண்டில் நெருப்பை பற்றவைக்கிறான் வில்லியம். அறையின் தரையில் கிடந்த ஆடைகள் சிலவற்றை நெருப்பில் போட தீ பலமாக எரிய ஆரம்பிக்கிறது. மரியை மீண்டும் அண்மிகும் அவன், அவள் இரவாடையைக் கத்தியால் கிழிக்கிறான், மரியின் இடது மார்பினை அறுத்துக் கையில் எடுக்கிறான், பின் மரியின் தலையை சற்றே தூக்கி வெட்டப்பட்ட மார்பினை ஒர் தலையணை போன்று அவள் தலையின் கீழ் வைக்கிறான். வலது மார்பகத்தினை வெட்டுகிறான், அது கட்டிலின் அருகிலிருக்கும் மேசைக்கு செல்கிறது. மோன நிலையில் உள்ளவன் போன்று இயங்குகிறான் வில்லியம். மேலும் ஆடைகளை தீயில் எறிகிறான், மரியின் வயிற்றுப்பகுதி பிளக்கப்படுகிறது, சிறுநீரகங்கள் அகற்றப்படுகின்றன, பிரம்மையில் யாருடனோ உரையாடத்தொடங்குகிறான் வில்லியம். மரியின் சிறுநீரகங்கள், மேசையிலிருந்த மார்பகத்தோடு சேர்ந்து கொள்கின்றன. மரியின் ஈரலை வெட்டியெடுக்கும் வில்லியம் அதனை மரியின் பாதங்களிற்கிடையில் வைக்கிறான். ஆடைகள் தீக்கிரையாகின்றன ,நெருப்பு அகோரமாக எரிகின்றது ,அறையின் வெப்பம் எகிறுகிறது, புகைக்கூண்டில் தீயின் மேல் தொங்கும் கேத்தல் வெம்மையால் சிவக்க ஆரம்பிக்கிறது. மரியின் கருப்பையை வெட்டியெடுக்கும் வில்லியம் அதனையும் அவள் தலையின் கீழ் வைக்கிறான். மேசையில் இருந்த மார்பகத்தினை அவளின் கால்களிற்கருகில் தூக்கி வைக்கிறான்.
மரியின் மேல் தொடைகளின் தசைகளை அறுக்க ஆரம்பிக்கிறான் வில்லியம். அறுத்தெடுத்த தசைகளை மேசையின் மீது குவிக்கிறான். மோனநிலையில் காலத்தினைக் கடந்து செல்ல ஆரம்பிக்கிறான் வில்லியம். மீண்டும் ஓர் முறை கத்தி ஆழமாக மரியின் உடலினுள் பாய்கிறது. அவள் உடலினுள்ளே சில வெட்டுகளை போடுகிறான் வில்லியம். பின் தன் கைகளினை திறந்திருக்கும் அவள் உடலினுள் நுழைத்து அவள் இதயத்தினைத் தன் இரு கைகளாலும் அறுத்தெடுக்கிறான் அவன். அறுத்தெடுத்த இதயத்தை உக்கிரமாக எரியும் நெருப்பில் வீசி எறிகிறான். தீயில் கருகுகிறது இதயம். தன் கத்தியால் அவ்விதயத்தை குத்தி தீயிலிருந்து வெளியே எடுக்கும் அவன் அதனை ஒர் துணியில் வைத்து மூடுகிறான். ரத்தம், ரத்தம், மனிதன், மிருகம்,கடவுள், நித்யம், ரத்தம், ரத்தம். எம் கண்களிற்கு கொடூரமான காட்சியாக தெரிந்த மேற்கூறிய நிகழ்வு, வில்லியத்தின் கண்களிற்கு எப்படியாக தெரிந்திருக்கும், அவன் மனதின் மொழிபெயர்ப்பு என்ன? இதற்கு என்னிடம் விடையில்லை. மரியின்,கருகிய இதயம் பொதிந்த துணியை கையில் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகிறான் வில்லியம். தெருவில் நின்று துணியை திறந்து பார்க்கிறான். அவள் இதயம் சாம்பலாகி உதிர்ந்து போய்க்கிடக்கின்றது. தன் கைகளில அச்சாம்பலைக் கொட்டும் வில்லியம், தன் கைகளை உயர்த்தி, வீசிக் கொண்டிருக்கும் காற்றில் அதனை உயரே வீசுகிறான்.நெட்லியுடன் தன் வீடு திரும்புகிறான் வில்லியம். ஒவ்வொர் கொலையின் போதும் அவன் செய்த இன்னொரு பயணம் முடிந்து விட்டது. ஆம் அவன் தான் காண விரும்பியதைக் கண்டு கொண்டான். நுண் துகள்களாக, மேலே,மேலே உயர்ந்து சென்று காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன, மரியின் இதயத்தின் துடிப்புக்கள்.
பின்பு நடந்தது என்ன? ஸ்காட்லாண்ட்யார்ட் இக்கொலைகள் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? ராபர்ட் லீஸ் தான் காண்பதாகக் கூறும் தரிசனங்களின் மர்மம் என்ன? ஆபெர்லினும், லீஸும் குற்றவாளியான வில்லியமைக் கண்டுபிடித்தார்களா? வில்லியம் என்ன ஆனான்? ஏன் இன்று வரை உண்மையான JACK THE RIPPER அடையாளம் காட்டப்படவில்லை? வரலாற்றில் JACK THE RIPPER
நித்தியத்துக்கும் நிலைத்திருப்பானா?
வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், வாழ்ந்து சென்ற மனிதர்களையும், தன் அற்புதமான கற்பனையில் கலந்து, தேடலும்,ஆராய்ச்சியும், தத்துவங்களும் நிறைந்த ஒர் உன்னதமான சித்திர நாவலை தந்திருக்கிறார் சித்திர நாவல்களின் ராட்சசனான அலன் மூர். வில்லியம் என்பவனைக் கொலைகாரனாக சித்தரிப்பதோடு மட்டும் நின்று விடாது, அவன் மனதினையும், அது தன்னுள் தேடி ஓடிக்கொண்டிருக்க கூடிய தரிசனங்களையும் கூறு போட்டிருக்கிறார் அவர். அரச குடும்ப கவுரவம் என்பதை ஒர் சாக்காக வைத்துக் கொண்டு வில்லியம் செய்தது கொலைகள் அல்ல. அது ஒர் தேடல், ஒர் ரகசிய பூஜை என்கிறார் அலன் மூர். கொலைஞனை பற்றி கூறுவதுடன் நில்லாது, விக்டோரியா இங்கிலாந்தின் கட்டிட அமைப்புகளில் ஒளிந்திருக்ககூடிய மர்மங்கள், FREE MASON எனும் அமைப்பின் ஆதிக்க கரங்களின் நீட்சி, அடித்தட்டு மக்களின் அதிர்ச்சியூட்டும் வாழ்க்கை முறை, குறிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரபலங்கள்[ஆஸ்கார் வைல்ட், வில்லியம் பிளேக் மற்றும் பலர்]
அக்காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் என ஒர் வரலாற்றையே எம் முன் உலவ விட்டிருக்கிறார் மூர். வேலை வாய்ப்புகள் ஏதுமின்றி வறுமையில், உணவிற்காகவும், தூங்குவதற்கு ஓர் இடத்திற்காகவும் தெருவில் விலைமாதாராக உலவும் பெண்களின் பாத்திரப்படைப்புகள் உள்ளத்தை உருக்குவன. பிள்ளையார் சுழி போட்டுத்தான் கதையினையே ஆரம்பிக்கிறார் மூர், அதே போன்று முதல் கொலையை வில்லியம் நிகழ்த்தும் முன், பொலியை வைட்சப்பல் மருத்துவமனை வளாகத்தில் உலவிக்கொண்டிருக்கும் யானை மனிதனான [ELEPHANT MAN] JHON MERRICKஐ வணங்க சொல்லிவிட்டு கொலைகளை ஆரம்பிப்பது வித்தியாசமான அலன் மூர் டச். இறுதி அத்தியாயத்தில் வில்லியமிற்கு அவர் தரும் முடிவும், அதில் அவர் கற்பனையின் பார்வையும் அற்புதம். பின் இணைப்பாக அவர் வழங்கியுள்ள பகுதியில், பக்கத்திற்கு பக்கம் எதன் அடிப்படையில் தன் ஊகங்களும், கற்பனைகளும் இணைந்து கதை உருவம் பெற்றன என்பதை அலன் விபரிக்கிறார். நாவலை விட ருசியான தகவல்கள் கொண்டதாக இருக்கிறது பின் இணைப்பு, அதே சமயம் எது உண்மை எது ஆசிரியனின் கற்பனை என்பதையும் உடனே அறிந்து கொள்ள முடிகிறது. அலன் மூரின் மேல் என் மதிப்பு முன்னை விட உயர இப்பகுதி காரணமாக அமைந்தது. சித்திர நாவல்களை அலன் மூர் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார் எனும் கருத்திற்கு உடன்பட்டுத்தான் ஆகவேண்டும். நாவலின் தலைப்பான" நரகத்திலிருந்து" என்பது கொலைஞன் எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
கருப்பு, வெள்ளை சித்திரங்கள் மூலம், விக்டோரியா கால லண்டனைப் பக்கங்களில் கொண்டு வந்திருக்கிறார் எடி காம்ப்வெல். முதல் பார்வையில் சித்திரங்கள் புருவங்களை உயரவைத்தாலும், கதை ஓட்டத்தோடும், அதில் கலந்திருக்கும் இருளோடும், வாசகனைப் பக்குவமாக ஒட்டச் செய்கின்றன காம்ப்வெல்லின் சித்திரங்கள். சித்திரங்கள் மீது ஓடும், நுண்ணிய குறுக்கு, நெடுக்குக் கோடுகள் அவற்றிற்கு ஒர் தனித்தன்மையை அளிக்கின்றன. 10வது அத்தியாயத்தில் மரியின் கொலைச்சடங்கிற்கு அவர் வரைந்துள்ள சித்திரங்கள், உள்ளங்கைகளில் வியர்வையை வரவழைக்கும் ரகம். காம்ப்வெல் 1955ல் பிறந்த ஸ்காட்லாண்ட்காரர், கதாசிரியருமாக செயல்படுபவர், இந்நாவலை முதலில் ஒர் தொகுப்பாக வெளியிட்டவர் இவரே. தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
இக்கதை முதலில் 1989ல், Taboo எனும் இதழில் வெளியாகியது, இதழ் வெளிவருவது நிறுத்தப்பட்ட பின் TUNDRA மற்றும் KITCHEN SINK PRESS எனுமிதழ்களில் 1998 வரை சிறு அத்தியாயங்களாக கதை வெளிவந்தது. 2001ல் பிரான்சின் அங்குலெம் விழாவில் சிறப்புப்பார்வைக்கான பரிசை இந் நாவல் வென்றது. TOP SHELF PRODUCTIONS, KNOCKABOUT COMICS இந்நூலை ஆங்கிலப்பதிப்பாகவும், DELCOURT,இதனைப் பிரென்ஞ்சு பதிப்பாகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளன. காமிக்ஸ் ரசிகர்கள் யாவரும் வாய்ப்புகிடைத்தால் தவறவிடாது படிக்கவேண்டிய நாவல் இதுவாகும். ஓர் காமிக்ஸ் எவ்வாறான பரிமாணங்களை அடைய முடியும் என்பதற்கும், அது கொண்டுள்ள உள்ளடக்குகள் ஒர் வாசகனிற்கு தரக்கூடிய வித்தியாசமான வாசிப்பனுபவம் அடையக்கூடிய சாத்தியங்களின் உச்சங்களையும் இந்நாவல் தன்னுள் கொண்டு உங்களிற்காக காத்திருக்கிறது.
FROM HELL எனும் திரைப்படத்தினைப்பற்றி இங்கு நான் எழுதாததிற்குக் காரணம் அப்படத்தினை நான் பார்க்கவில்லை என்பதும், மூரின் கதையிலிருந்து படத்தின் கதை வெகுதூரம் விலக்கியிருக்கிறது என நான் படித்த கருத்துக்களும் ஆகும். இத்திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் தயங்காது உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்கள் பதிந்து செல்ல மறக்காதீர்கள்.
ஆர்வலர்களிற்கு.
சில பக்கங்கள்.
அருமை நண்பர் கனவுகளின் காதலனே,
ReplyDeleteநாந்தான் முதலில் கமெண்ட் இடும் பெருமையை பெறுகிறேன். இப்போது சில விஷயங்கள்:
நான் எப்போதுமே ஆலன் மூர் ரசிகன் அல்ல. அதனால் அவரின் கதைகள் என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது.அதற்காக நான் வருத்தப்பட்டதும் கிடையாது.
ஆனால் எடி கம்பெல் அவரின் சித்திர கலை மிகவும் அருமை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
இந்த கதையின் திரைப் படம் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பது என் கருத்து (என் அபிமான ஜானி டெப் நடித்து இருந்தாலும் கூட)
நீங்கள் திகில் காமிக்ஸ் இதழின் இரண்டாவது இதழை படித்து இருகிறீர்களா? அதில் டிராகுலா மற்றும் ஜாக் த ரிப்பர் ஆகியோரை மைய்யமாக கொண்டு ஒரு சிறுகதையும் வந்தது.
கிங் விஸ்வா.
கனவுகளின் காதலனே,
ReplyDeleteஉங்கள் எழுத்திலேயே இவ்வளவு வன்மம் தெளிக்கிறதே, கதையில் எவ்வளவு இருக்கும்?
இந்த கதை யுத்தியை (கதையுடன் வரலாற்று சம்பவங்களை இணைப்பது) டாவின்சி கோட் தொடரிலும் அமைந்து இருப்பதை கவனித்தீரா?
சமீப காலங்களில் இப்படி வரலாற்று உண்மைகளுடன் இணைக்கப் பட்ட கதைகள் பெரும் வெற்றியை பெற்று உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.(Martin Mystery Also)
எனக்கு பிடித்த சில சீரிஸ்:
டார்க் ஸ்கைஸ்: பிரபல தொலைக் காட்சி தொடராக வந்த இதன் புத்தக வடிவமும் என்னை கவர்ந்தது. கடந்த பத்து வருடங்களில் நான் தேடி வாங்கிய ஒரே ஆங்கில நாவல் இது தான். கென்னடி மரணத்தை ஏலியன் வருகையுடன் இணைத்து எழுதப்பட்ட கதை இது. பின்னர் AXN'ல் பதினெட்டு வாரங்கள் தொடராக வந்தது. என்னுடைய கல்லூரி நாட்களில் பார்த்த தொடர். இப்போதும் கூட H.B.O .வில் முதல் இரண்டு பாகத்தை ஒலி பரப்பும்போது தவறாமல் பார்கிறேன்.
இதன் சுட்டி இதோ:http://en.wikipedia.org/wiki/Dark_Skies
பார்ஸ்ட் வேவ்: நாஸ்ட்ரேடெமஸ் கூறிய கருத்துக்களில் உள்ள உண்மைகளை தற்கால நிலைமைக்கு பிரித்து அதன் மூலம் ஏலியன் வருகையை தடுக்க நினைக்கும் ஒரு மனிதனின் போராட்டம் தான் இந்த கதை. இதன் சுட்டி இதோ: http://en.wikipedia.org/wiki/First_Wave_(TV_series)
நீங்கள் இந்த தொடரை பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா?
முடிந்தால் இந்த தொடர்களை படியுங்கள்.
கிங் விஸ்வா.
இளைய தளபதி கிங் விஸ்வா அவர்கட்கு,
ReplyDeleteமுதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி, மரியினதும், கேத்தியினதும் சுட்டிகள் மேல் க்ளிக்கினால் அவர்களிற்கு நடந்த கொடுமையின் போட்டோக்கள் இருக்கின்றன, பார்க்க விரும்பினால் பாருங்கள். அதனுடன் ஒப்பிடுகையில் என் பதிவின் வன்முறையின் அலகு குறைவானதே. தயங்கி தயங்கியே இப் பதிவினைத் தயார் செய்தேன்.நண்பர்களின் வரவேற்பை பற்றி எண்ணினாலும், இக்கதையை நான் பதிவிடா விட்டால் அது என் மனசாட்சிக்கு செய்த துரோகம் ஆகிவிடும். நண்பர்களிற்கு இயன்ற வரை தரமான காமிக்ஸ்களை அறிமுகம் செய்தலே என் நோக்கம். இப்பதிவின் மூலம் அதனை மீள வலியுறுத்தி இருக்கின்றேன். அலன் மூரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மாறும், ஏனெனில் வாட்ச்மேனைப் படிக்கும் வரையில் என் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் இடையேயிருந்த வித்தியாசம் மிகச்சிறிதே. வன்முறையை நீங்கள் உணர்ந்தால் அது எடி காம்ப்வெல்லினதும், மூரினதும் வெற்றி. கதையிலிருந்து விடுபட எனக்கு உதவியது லக்கிலூக்கின் கழுத்திற்கு ஒர் கயிறு.
நீங்கள் கூறிய தொடர்கள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நிச்சயமாக நேர அவகாசங்களின் படி அவற்றை பற்றியும் படித்தால் போயிற்று.
வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு உண்மையை கூறி இருக்கும் கனவுகளின் காதலனே (இளைய தளபதி கிங் விஸ்வா),
ReplyDeleteநீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் படித்த ஆலன் மூர் கதைகள் (சிலவே ஆகினும்) மொக்கையாக இருந்ததுவே காரணம்.
ஆனால், நீங்களும் நண்பி ஸ்டீவ் ஹாலந்தும் ஆலன் மூறை பற்றி உயர்வாகவ்ரி கூறுகிறீர்கள். எனவே அடுத்த முறை முயற்சி செய்கிறேன்.
பல தளங்களில் இருந்து சிறப்பான காமிக்ஸ் கதைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் உங்கள் பணி அரியது. தொடருங்கள்.
கிங் விஸ்வா.
நண்பர் ஸ்டீவ் ஹாலந்து என்று மாறறி படிக்கவும்.
ReplyDeleteஹ்ம்ம்... மிக பெரிய பதிவு தான்.... வேலை பளுவின் வூடே முழுக்க படிக்க முடியவில்லை.... மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வார கடைசியில் நீண்ட பின்னூட்டம் இடுகிறேன்.
ReplyDeleteÇómícólógÝ
என்னுடைய அழைப்பை ஏற்று உங்களின் வருகைக்கு நன்றி திரு கனவுகளின் காதலனே,
ReplyDeleteபார்த்திபன் நடித்த தமிழ் படம் "இவன்". அதில் திரு டி.பீ கஜேந்திரன் அவர்கள் மிகவும் குள்ளமாக இருப்பார்.அதற்காக அவர் மற்ற படங்களில் எல்லாம் உயரமாக இருப்பாரா என்று வினவ வேண்டாம். குடி போதையில் அவரை பார்த்து பார்த்திபன் "நீ எழுந்து நின்னு பேசு" என்பார்.
அதற்க்கு அவர் "டேய், நான் நின்னுகிட்டு தாண்டா இருக்கேன்" என்பார். அப்போது அவரை பார்த்து காமெடியாக பார்த்திபன் சொல்லும் வார்த்தை தான் புலா சுலாகி. இதனை நையாண்டியாகவும் கொள்ளலாம். டபுள் மீனிங் ஆகவும் கொள்ளலாம்.
வணக்கம், மிகவும் திகிலான கதை. உண்மைச்சம்பவம் எனும்போது மனதை உலுக்குஹின்றது. காமிக்ஸ்சினூடே வரலாறைச் சொல்லும் போது வாசிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கின்றது.சந்தற்பம் கிடைத்தால் நிச்சயமாக முளுக்கதையையும் படிக்க ஆசைப்படுகின்றேன். தொடருங்கள் உங்கள் எளுதுப் பயணத்தை.
ReplyDeleteகனவுகளின் காதலனே,
ReplyDeleteஇது உமக்கே நன்றாக இருக்கிறதா? இந்த பதிவை படித்ததில் இருந்த ஊரில் உள்ள அனைத்து திராட்சை பழங்களையும் நண்பர் ஜோஸ் வாங்கி குவித்து விட்டாராம்.
கடந்த ஒரு வாரமாக கையில் திராட்சையுடன் அவர் மார்கட்'ல் நின்று கொண்டு பல இளம் மங்கையரை பயமுருத்துகின்ராராம். என்ன கொடுமை சார் இது?
நண்பர் ஜோஸ்'ஆல் பயனடைந்த திராட்சை தோட்ட அதிபர்.
கிரேப்ஸ் தோட்ட முதலாளி,
ReplyDeleteஜோஸ் தாத்தாவையாவது விட்டுத்தள்ளிரலாம், ஆனா அந்த வயக்கரா தாத்தா என்ன செய்ஞ்சான் தெரியுமா, 3 பென்சுக்களை இளம் பெண்கள் முன்னால் குலுக்கிக் காட்டுகிறாராம், கலிகாலம் தான், வேறு என்ன சொல்ல
கனவுகளின் காதலரே, ஜாக் த ரிப்பர் கதையை நீங்கள் முண்ணோட்டமாக போட்ட போது கூட, நான் அது இவ்வளவு குரூர வர்ணைகளுடன் இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.
ReplyDeleteகாப்பகங்களிள் வளரும் மிருகங்களுக்கு முடிந்த வரை ரத்த வாடை தெரியாத உணவுகளையே படைப்பர் என்றும், அதன் காரணம் அவற்றின் மிருக குணம் வெளி பட்டு விட கூடாது என்பது தான் என்றும் படித்திருக்கிறேன். மனிதனும் மிருகம் தானே, அவனுடைய மூர்க்க குணங்களுக்கு ஒரு அடைப்பு தாள் தான் நம் வாழும் சமூகம் என்று கூறுவர். ஆனால், ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவனின் கூரூர எண்ணங்கள் எவ்வகை பிரதிபலிப்பாக வெளியாகும் என்பதற்கு உதாரணம், ஜாக் த ரிப்பர் தொடரில் வரும் கொளைஞனே.
அரச குடும்பத்துகாக கொலை செய்ய ஆரம்பிக்கும் வில்லியம், பிற்பாடு அந்த கொலைகளில் ஒரு அமைதியை தேடி வெறியுடன் காரியமாற்றுவதை படித்த போது நெஞ்சம் பாரம் ஆனது உண்மையே. ரத்தம், ரத்தம், மனிதன், மிருகம்,கடவுள், நித்யம், ரத்தம், ரத்தம் அவனுக்கு பொருந்தும் வாக்கியம்.
பிரிட்டிஸ் நாயகர்களை விரும்பிய கூட்டம், ஆலன் மூரை ஒதுக்கி தள்ளலாம். ஆனால், காமிக்ஸ் காவியங்களை, கிராபிக் நாவல் என்ற ஒரு அடைமொழிக்கு பதவி உயர்வு செய்து வைத்ததில் இவர் பங்கு இன்றியமையாதது. வான்டட், 300 போன்ற காவியங்கள் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு. நமது அபிமான கதாபாத்திரங்களை அவர் தவறாக கையாண்டு விட்டார் என்று ஆல்பியன் தொடரை நாம் வெறுத்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, கதை கருவுடன் பயனித்தால் அந்த கதையும் ஒரு சிறந்த முயற்சி என்று நான் எண்ணுகிறேன்.
த ஹெல் கதை தொடரில், சரித்திரத்தில் வாழ்ந்த மேல் தட்டு மக்கள், மற்றும் வருமை கோட்டு வாசிகளை அவர் உபயோக படுத்தி இருப்பது, உயர்ந்த சமுதாயம் என்று தன்னை தானே கூறி கொள்ளும் மக்களின் மனசாட்சிக்க ஒரு சவுக்கடி. நிஜ மனிதர்களை கதாபாத்திரங்களாக உலவ விட்டிருப்பது இன்னும் சிறப்பு. அந்த மனிதரின் வாரிசுகள் யாரும் இந்த காமிக்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்து இருப்பார்களா ?
நான் பொதுவாக எழுத்துகள் அதிகம் இருக்கும் எந்த புத்தகத்தையோ, அல்ல பதிவுகளையோ அதிகம் படிப்பதில்லை. நாவல்கள் மேல் என் அபிப்ராயத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் உங்கள் மொழி நடை, முக்கியமாக இது ஒரு காமிக்ஸ் பற்றிய பதிவு என்பதால் ஆர்வத்துடன் படித்து முடித்தேன், முடிவில், உங்கள் எழுத்துகள் மூலம் ஆலன் மூரின் இந்த காமிக்ஸ் காவியத்தை எனக்கு அறிமுகம் படுத்தியதற்கு நன்றிகள்.
ஆனால் இந்த கொலை கதையை பற்றி படித்ததில் இருந்து மீள இன்று ஒரு லக்கி லுக் சாகசத்தை வீட்டில் படித்தே தீர வேண்டும் :)
எடி காம்ப்வெல் திறமையில் முழுக்க கோடுகளின் மூலம் வெளியான சித்திரங்கள் கிளாசிக் டச்சுடன் இருந்தாலும், ஓவியங்கள் மூலம் ஒரு காமிக்ஸில் ஐக்கியமாகும் எனக்கு இந்த சித்திரங்கள் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
காதலரே, காமிக்ஸ் பதிவர்களிள் கதையோடு பயணித்து விமர்சிபதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை. தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் எழுத்துலக பணியை
கூடவே பிட் தகவலுக்கு, மற்றும் குஜாலுக்கு ==
// விவகாரம் வெளியில் கசியாது இருக்க வேண்டுமாயின் ஆனி மெளனமாக வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறாள் விக்டோரியா மகாராணி //
ராணிக்கு காதல் பறவைகள் மேல் இருக்கும் கோபம் அடையில்லாதது என்று தோன்றுகிறது. சார்லஸ் டயானா கதையில் நடந்ததும் அது தானே
// கொண்டு வரப்படும் ஆனியை தன் சிகிச்சையின் மூலம் பித்துப்பிடித்தவள் ஆக்குகிறான் வில்லியம் //
இப்படி ஒரு கதையை பிரபு நடித்த ஒரு படத்தில் அவரை நல்லவரில் இருந்த பைத்தியமாக்குவது போல சித்தரித்திருப்பார்கள். அந்த படம் பெயர் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? கதாநாயகியாக சரண்யா மற்றும் டாக்டராக சரத்பாபு தோன்றுவார்கள் அதில்.
// ஆண்களின் காமத்திற்கும் சுவர்களிற்குமிடையில் உக்கிரமாக நெரிக்கப்படும் அவள் //
அருமையான வரிகள். இவை புத்தகத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யபட்டதா ? இல்லை காதலரின் சாகஸ சிதறலா ? :) ;)
// கத்தியை இடமிருந்து வலமாக இழுத்து பொலியின் கழுத்தினை அறுக்கிறான் வில்லியம் //
கமலஹாசன் சமீபத்தில் நடித்து வெளி வந்த வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ டாக்டர்கள் கொலை செய்யும் விதம் இதற்கு கொஞ்சமும் மாற்றம் இல்லை. ஒரு வேளை அந்த படத்திற்கு த ஹெல் தான் மூலமோ?
பி.கு. உங்கள் மின்னஞ்சலுகளுக்காக நான் இன்னும் பதில் அளிக்காமல் இருப்பதற்கு காரணம் வேலை பளுதான். சீக்கிரத்தில் ஒரு பெரிய பதிலை நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் எதிர்பார்ககலாம்.
அப்பா, இந்த பிண்ணூட்டத்தை தட்டச்சு செய்ய உழைத்த உழைப்பிற்கு நான் ஒரு பதிவே இட்டு இருப்பேன். :)
ÇómícólógÝ & ராகா
ரஃபிக்,
ReplyDeleteகுரூரங்கள் வாழ்வில் ஒர் அங்கமாகி விட்ட காலங்களில் வசிக்கிறோம். நிஜ வாழ்வின் குரூரங்கள் கதைகளில் நாம் காண்பதை விட வேதனைகள் தருபவை.
காப்பகங்களில் உள்ள மிருகங்களைப் போலவே நாமும் எங்களினுள் உள்ள மிருகங்களைக் பிறரிற்கு காட்டாது வாழப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். என்ன, சில பேர் காட்டி விடுகிறார்கள்.
வில்லியம் கடவுள் ஆக விரும்புகிறான். கொலை அவனிற்கு ஒர் தியானம்,அவன் கடவுள் ஆனானா என்பதை விவாதிக்க வேண்டியதில்லை.ஆனால், கடவுளின் பெயரால் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற பலிகளிற்கு மனித சமூகம் தந்த, தந்து கொண்டிருக்கின்ற விளக்கங்கள் தான் என்ன.
ஒர் நாயகன், நாயகனாவது அவரவர் பார்வையிலேயே. அதனால் தான் விஜய்க்கும், அஜிதிற்கும் தனி ரசிகர் மன்றங்கள் இங்கு உள்ளன. ஒர் கதாசிரியன் தன் கற்பனை வெளிப்பாட்டில் உருவாக்கும் நாயகர்கள் எல்லாரிற்கும் பிடித்தே ஆக வேண்டும் என்பது ஒர் கட்டாயமல்ல. அலன் மூரை ஒரு கதைக்காக புறந்தள்ளல் நல்லதல்ல.
குடும்பத்தினர் எதிர்ப்புத்தெரிவித்தால் தான் என்ன, எழுத்துச் சுதந்திரம் மகத்தானது அல்லவா.
ரஃபிக், சிறிய நாவல்கள் மூலம் நீங்கள் உங்கள் வாசிப்பை வளர்க்க வேண்டும். PERFUME- THE STORY OF A MURDERER BY PATRICK SUSKIND சிறிய நாவல் ஆனால் அற்புதமானது. படித்துப் பாருங்கள்.
கழுத்திற்கு ஒரு கயிறுவின் இன்னும் சில பக்கங்கள் விரைவில் வெளியாகும்.
அழகு, நேர்த்தியை விட அருவருப்பு தரும் திருப்தி மேலானது. எவ்வகை சித்திரங்களையும் கதையின் தரத்திற்காக நீங்கள் ஒரு நாள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நான் நம்புகிறேன்.
கதையைப் படிக்கும் போதே டயானா நினைவிற்கு வந்து விட்டார் , அரச குடும்பத்தின் மானத்திற்கு இன்றும் பங்கம் வர விடமாட்டார்கள். பதிவைப் படித்த போதே உங்களிற்கு அவர் நினைவிற்கு வந்தது பற்றி உண்மையிலேயே எனக்கு மகிழ்சி, கதையின் உள்ளடுக்குகளில் இதனையும் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.
ONE FLEW OVER THE CUKOOS NEST- BY KEN KESSY எனும் அற்புதமான நாவலைத்தழுவி MILOS FORMAN இயக்கிய, JACK NICHOLSON தன் நடிப்புத்திறமையால் என்னைக் கலங்கடித்த நாவலின் அதே பெயரைக் கொண்ட ஆங்கில திரைப்படத்தின் தழுவலே அத்தமிழ் திரைப்படம். மன்னிக்கவும் பெயர் மறந்து விட்டது. தயவு செய்து ஆங்கில திரைப்படத்தினை ஒர் முறை பாருங்கள் ரஃபிக்.
அவ்வரிகள் யாவும் என்னுடையவை, அலன் மூரிற்கு உரிமை கிடையாது.
free masonபலிச் சடங்குகளின் வழக்கப்படியே கழுத்து இடமிருந்து வலம் அறுக்கப்படுகிறது. கவுதம் மேனன் அச்சகோதரத்துவத்தை சேர்ந்தவரா என்பது தான் கேள்வி.
ஏறக்குறைய 400 பக்கங்களின் கதைச்சுருக்கமே இப்பதிவு. உங்கள் கருத்துக்கள் போன்ற கருத்துக்களிற்காக நான் 1000 பக்கங்களையும் பதிவிடலாம். உங்களின் விரிவான இக் கருத்துக்களிற்காக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ராகா என்று புதிய வலைப்பூ ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைத்து ஏமாந்ததுதான் வேடிக்கை.
தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.
Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.
ReplyDeleteA shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.
காதலரே, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் என்றுமே தனி மனிதன் துதி பாடுபவன் அல்ல. அதோடு தனி மனிதன் துவேஷம் கொள்வதும் என் பாணி கிடையாது. படைப்பாளிகளை வெறுத்து, ஒதுக்குவதை விட, அவர்கள் படைப்புகளை விமர்சிப்பதே சிறந்த காமிக்ஸ் ரசிகனுக்கு அழகு. அவ்வடிப்படையிலேயே நான் ஆலன் மூர் பற்றிய என் கருத்தை தெரிவித்தேன். சென்ற பதிவில் நான் வாண்டட் என்று கூறி இருப்பதை வாட்ச்மேன் என்றும், 300 ஐ (அது ஃப்ராங் மில்லர் காவியம் என்று இப்போது தான் உறைத்தது) விலக்கியும் படிக்கவும்.
ReplyDeleteநீங்கள் கூறிய நாவல்களை படிக்க முயற்சிக்கிறேன். ஆனால் சமீபத்தில் வாங்கிய காமிக்ஸ் கட்டே ஒரு பலகை முழுவதும் ஆக்ரமித்து கொண்டுள்ளது. ஆகவே, அவற்றுக்கே முன்னுரிமை :)
One Flew Over படத்தை தருவித்து விட்டேன். பார்த்து விட்டு பின்பு கருத்தை வெளியிடுகிறேன். உங்கள் படைப்புகள் 1000 பக்கத்தையும் ஒரு பக்கத்தில் தாரளமாக விமர்சிக்குமே, அதில் எனக்கு ஐயமே கிடையாது.
ராகா என்று அடித்ததே அதற்காக தானே. இந்த வார கடைசிக்குள் அந்த வலைப்பூ புதிய பதிவை பெறும்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராகா
டேவிட், உங்கள் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் என் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteபுலா சுலாகி, உங்கள் விளக்கத்தினால் தெளிவுற்றேன், மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
ரஃபிக், காமிக்ஸ்களிற்கு தான் நீங்கள் முன்னுரிமை தருவீர்கள் என்பதில் ஐயமில்லை. படத்தை ரசித்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். மீண்டும் வந்து கருத்துக்களைப் பதிந்து சென்றதிற்கு என் நன்றிகள்.
பதிவைப்படித்தும், கருத்துக்களை இட்டும் என்னை ஊக்குவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.