Wednesday, December 31, 2008

பாதாளத்தின் கண்கள்

நண்பர்களே, மீண்டும் ஒர் புதிய பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்சி
அடைகிறேன்.
முதலில் நண்பர்கள்,வலைப்பூவை தொடர்பவர்கள்,எட்டிப்பார்ப்பவர்கள் , இந்நியாமற்ற உலகின் எந்தவொரு மூலையிலும் அன்பிற்காக,அமைதிக்காக,நீதிக்காக காத்து நிற்கும் அனைத்து உள்ளங்களிற்கும் என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


நலமும், வளமும், அன்பும், மகிழ்சியும் நிறைந்த ஆண்டாக இது உலக
மனித குலத்திற்கு அமைந்திட வேண்டுகிறேன். முன்னைய பதிவுகளிற்கான
உங்கள் கருத்துக்களிற்குரிய என் பதில்களை, அப் பதிவிற்குரிய கருத்துப் பெட்டிகளில் நீங்கள் படித்திடலாம், உங்கள் கருத்துக்களே என் ஊக்க மருந்து எனவே தயக்கமின்றி பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

இப்பதிவில் WATCHMEN எனும் சித்திர நாவலைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

உலகின் சித்திர நாவல்களில் இதற்கு ஒர் தனியிடம் உண்டு என்பதனை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன். அதனை உங்களிற்கு அறிமுகப்படுத்துவது,மழை நாள் ஒன்றில்,கண்ணாடிகளின் வியர்வைத்துளிகளை ரசித்தவாறே, ஜெனிலியாவின் கண்களில் படியும், சூடான தேனீரின் ஆவியை பருகும் பரவசத்தை எனக்கு அளிக்கிறது.

1985 நியூயார்க் நகரம்.
எட்வர்ட் பிளேக்(EDWARD BLAKE) எனும் நபர், உயரமான கட்டிடத்திலுள்ள தன் வதிவிடத்திலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைகிறான். புலன் விசாரணையை ஆரம்பிக்கும் பொலிசார், புகழ் இழந்து, ஒதுக்கப்பட்டு, மக்களால் வெறுக்கப்படும் மூகமூடி நாயகனான ரோர்ஷாக் (RORSCHACH)இவ்விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைப்பான் என்று அஞ்சுகிறார்கள். மூகமூடி நாயகர்களிற்கான கட்டாய ஓய்வு சட்டத்தினை மதியாது, தன் வன்முறை வழிகளில் தீமையை தொடர்ந்து எதிர்த்து வரும், ரோர்ஷாக்கை பொலிசார் கொலைக்குற்றத்திற்காக தேடியும் வருகிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகள் ஐயமுற்றதை நியாயப்படுத்தும் விதத்தில், அன்றிரவே எட்வர்ட் பிளேக்கின் வதிவிடத்திற்குள் ரகசியமாக நுழைகிறான் ரோர்ஷாக். வதிவிடத்தில் , தன் தீவிரமான, நுணுக்கமான தேடுதலின் பலனாக, ரகசிய மறைவிடமொன்றில் எட்வர்ட் பிளேக் மறைத்து வைத்திருந்த, மூகமூடி நாயகனிற்குரிய ஆடை அணிகளை கண்டு கொள்கிறான். இறந்த எட்வர்ட் பிளேக் வேறு யாருமல்ல, கட்டாய ஓய்வின் பின், அமெரிக்க அரசிற்காக பணிபுரிந்து கொண்டிருந்த காமெடியன்(COMEDIAN)எனும் மூகமூடி நாயகன் என்பதை தெரிந்து கொள்கிறான்.

ரோர்ஷாக், தனது பாணியில் விசாரணையை ஆரம்பிக்கின்றான்.
மனிதர்களை கடுமையாக வெறுக்கும் அவன்,தன் உடல் துர்நாற்றத்தை கேலி செய்த நபரின் கைவிரல்களை உடைக்கிறான். அபாயமான நாட்களில் இம்மனித குலத்தை தான் கைவிடுவேன் என மனதில் கறுவிக்கொள்கிறான்.
அவனைக்கண்டு மக்கள் அச்சம் கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற மூகமூடி நாயகர்கள் மத்தியிலும் தன் விசாரணையை மேற்கொள்கிறான். அவர்கள் இது ஒர் அரசியல் கொலையாக இருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். இவர்களிற்கு மாறாக ரோர்ஷாக் மூகமூடி நாயகர்களை தீர்த்துக்கட்ட யாரோ கிளம்பியிருக்கிறார்கள் எனும் முடிவிற்கு வருகிறான்.

காமெடியனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் மூகமுடி நாயகர்களான,
இரவு ஆந்தை( NITE OWL),ஒஸி மண்டியாஸ்(OZYMANDIAS), சூப்பர் ஹீரோவான டாக். மன்ஹெட்டன்(Dr.MANHATTAN)
ஆகியோர் எண்ணங்களில், காமெடியனின் ஞாபகங்கள் அலையடிக்கின்றன. இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் ஒர் மர்ம ஆசாமியைப்பற்றிய தகவலை ரோர்ஷாக்கிற்கு தெரிவிக்கிறான் டாக்.மன்ஹெட்டன். அவன் வீட்டிற்கு சென்று அவனை" நல்ல" முறையில் விசாரிக்கிறான் ரோர்ஷாக். காமெடியன்,ஒர் தீவைப்பற்றியும், அதில் இடம்பெறும் நிழலான நிகழ்சிகள் பற்றியும் அச்சம் கொண்டிருந்தது அவனிற்கு தெரிய வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்கிறான் டாக். மன்ஹெட்டன். அங்கு பத்திரிகையாளர்கள் அவனுடன் பழகிய நபர்களிற்கு புற்றுநோய் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் தர வேண்டுகிறார்கள். இதனால் பதட்டமடையும் டாக்.மன்ஹெட்டன் தான் தங்கியிருக்கும் ராணுவ தளத்திற்கு திரும்புகிறான். அவன் அறையின் கதவில் கதிரியக்க எச்சரிக்கை ஒன்று ஒட்டப்படுவதை காணும் அவன் அதிர்ச்சியுறுகிறான். தன் துணைவியான லோரி தன்னை விட்டு பிரிந்த வேதனையும் இச்சம்பவங்களுடன் ஒன்று சேர பூமியை விட்டு புதன் கிரகத்திற்கு TELEPORTING மூலம் சென்று விடுகிறான்.இவ்வேளையில் ரஷ்யா, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து விட்டதாக செய்தி கிடைக்கிறது.

புதன் கிரகத்திற்கு சென்றுவிட்ட டாக்.மன்ஹெட்டன்,தன் கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒர் சாதாரண விஞ்ஞானியாக தான் பணியாற்றிய நாட்கள், அங்கு ஏற்பட்ட விபத்தொன்றினால் தனக்கு கிடைத்த புதிய உருவம்,கிடைத்த எண்ணிலடங்கா சக்திகள், தன் வருகையால் முதல் ஒதுக்கப்பட்டு பின்பு அரசால் கட்டாய ஓய்விற்கு அனுப்பப்பட்ட மூகமூடி நாயகர்கள், தனது காதல்கள் என எண்ணிப்பார்க்கும் அவன் இறுதியில் தன் சக்தியால் புதன் கிரக மணலிலிருந்து ஒர் வினோதமான அமைப்பை உருவாக்க ஆரம்பிக்கிறான்.


ஒஸிமண்டாஸ் எனப்படும் ஓய்வு பெற்ற மூகமூடி நாயகன். தற்போது மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிகிறது. இதனால் உந்தப்படும் ரோர்ஷாக் தன் விசாரணையை தீவிரமாக்குகிறான். இதனிடையில் ரோர்ஷாக் பற்றிய தகவல் ஒன்றை தொலைபேசி மூலம் பொலிசிற்கு தெரிவிக்கிறான் ஒர் மர்ம ஆசாமி. தன்னை தேடி வரும் பொலிசாருடன் மோதும் ரோர்ஷாக் இறுதியில் கைது செய்யப்படுகிறான்.

சிறையில் அடைக்கப்படும் ரோர்ஷாக் தீவிரமான உளவியல் அலசலிற்கு உட்படுத்தப்படுகிறான். குரூரமான அவன் சிறுவயது வாழ்க்கை வெளிவர ஆரம்பிக்கிறது.

இரவு ஆந்தை, தான் ரோர்ஷாக்கை சிறையிலிருந்து மீட்க விரும்புவதை தன் நண்பியும், டாக். மன்ஹெட்டனின் தோழியுமாகிய லோரியிடம் தெரிவிக்கின்றான்.லோரி, இதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள்........

ரோர்ஷாக்கை இரவு ஆந்தை மீட்க முடிந்ததா? மூகமூடி நாயகர்களை ஒழித்துக்கட்ட சதி செய்வது யார்? இச்சதியின் பின்னனியிலுள்ள உண்மை என்ன? உலக மனித குலத்தின் எதிர்காலம் யார் கைகளில் தங்கிள்ளது? இக்கேள்விகள் மட்டுமல்லாது, கதையின் பல புதிர்களிற்கு விடையளிக்கிறது 300 பக்கங்களிற்கும் அதிகம் கொண்ட இச்சித்திர நாவல்.

ஆறு மூகமூடி நாயகர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக விபரிக்கிறது நாவல். கட்டாய ஒய்வின் பின் அவர்களில் பெரும்பாலானோர்,தாங்கள் அணிந்த மூகமூடிக்கு கொடுக்கும் விலை,எதிர்பாராதது. விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம்,ஆக்‌ஷன் எனும் கலவையை சுவைபட தந்துள்ளார் கதாசிரியர் அலன் மூர். 55 வயதாகும் இவர் ஒர் ஆங்கிலேயர். பல கதைகளை உருவாக்கியுள்ளார் இவரின் பிரபலமான கதைகளில் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.





இவை மூன்றும் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன, அதில் மூன்றாவது கதையான THE LEAGUE OF EXTRAORDINARY GENTELMAN ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒர் அற்புதமான சொதப்பல். அலன் மூரைப்பற்றிய விரிவான,சுவாரஸ்யமான தகவல்களிற்கு கீழே க்ளிக்கவும்.



கதையில் சில உரையாடல்களில் தத்துவ நெடி தலையை கிறுகிறுக்க வைக்கிறது. ரோர்ஷாக்கின் வாழ்க்கை கூறப்படும் அத்தியாயம், மிகவும் இருண்ட , முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பகுதியாகும். சிறையில் சக கைதிகளை ரோர்ஷாக் தைரியத்துடன் எதிர் கொள்ளும் காட்சிகள் யாவும் அபாரம். வசனங்களின் பெரும்பகுதி அர்த்தங்கள் செறிந்தவையாகவும், சவரக்கத்தியின் கூர்மை உடையனவாகவும் உள்ளன. சில சமயங்களில் நாவலை மூடி வைத்துவிட்டு எங்களை சிந்திக்கவும் தூண்டுகின்றன. எல்லாவற்றையும் விட கதையின் முடிவில் அலன் மூர் வழங்கும் முடிவை ஏற்பது சற்று சிரமம் தான், ஆனால் இதனை விட சிறப்பான முடிவை வழங்க முடியாது என்பதுதான் உண்மை.

கதாசிரியருடன் போட்டி போட்டுக் கொண்டு, அற்புதமான சித்திரங்களை வரைந்து அதன் மூலம் கதை சொல்லியிருப்பவர் டேவ் கிப்பொன்ஸ்(DAVE GIBBONS). வயது 59. இங்கிலாந்துக்காரர். இவரைப்பற்றிய விரிவான தகவலிற்கு கீழே க்ளிக்குங்கள்.



இந்நாவலில் வரும் சித்திரங்களிற்கு கூர்மையான அவதானிப்பை அளிக்காவிடில், பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.டேவ் கிப்பொன்ஸ் இந்நாவலில்மிக சிறப்பாக தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளார். அதிலும் ரோர்ஷாக் கடத்தப்பட்ட சிறுமி ஒருத்தியை தேடிச்செல்லும் காட்சிகளில், சிறுமிக்கு ஏற்பட்டுவிட்ட கதியை எவ்வித சொற்களுமின்றி, சித்திரங்கள் மூலம் மட்டுமே சொல்லி எங்கள் கற்பனை ஜன்னல்களின் கதவை சற்று திறந்து விடுகிறார் டேவ் கிப்பொன்ஸ்.

சித்திரங்களிற்கு வண்ணமளித்தவர் JHON HIGGINS, கண்களை உறுத்தாது, கதையோட்டத்திற்கேற்ப வண்ணமளித்துள்ளார்.

இந் நாவல், 1986-1987 களில் 12 சிறு அத்தியாயங்களாக DC காமிக்ஸினரால் வெளியிடப்பட்டது, காமிக்ஸின் எல்லைகளை விரிய வைத்த நாவல் என்று இதனை கூறுகிறார்கள், அது உண்மையே. இந்நாவல் 1987ல் அலன் மூரிற்கும், டேவ் கிப்பொன்ஸ்ஸிற்கும் முறையே JACK KIRBY BEST WRITER AWARDஐயும், JACK KIRBY WRITER/ARTIST COMBINATION AWARDஐயும் பெற்றுத்தந்துள்ளது.

இக் கதை 1989ல் பிரான்சின் அங்குலெம்(ANGOULEME) கண்காட்சியில், சிறந்த பிறமொழி சித்திரநாவலிற்கான பரிசை வென்றது. TIME சஞ்சிகையின், இது வரை வெளியாகியுள்ள 100 தரமான ஆங்கில நாவல் பட்டியலில் இந்நாவல் இடம் பிடித்துள்ளது. வார்னர் பிரதர்ஸின் தயாரிப்பில், 300 எனப்படும் சூப்பர் ஹிட் படத்தினை இயக்கிய ZACK SNYDERன் இயக்கத்தில் இவ்வாண்டு இது ஒர் திரைப்படமாக வெளியாகிறது. ட்ரெயிலர் கீழே உள்ளது பார்த்து மகிழுங்கள். நான் இப்பதிவில் கூறாதுவிட்ட பல மர்மங்களும், முடிச்சுக்களும், திருப்பங்களும் கதையில் உண்டு, நாவலை படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அவற்றினை இத்திரைப்படம் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

நாவல் நான் வாழும் உலகைப்பற்றி என்னை ஒர் கேள்வியை எழுப்ப வைத்தது. எங்கள் உலகை எந்த மூகமூடி நாயகர்கள் காப்பாற்றப் போகிறார்கள்?

இறுதியாக, ரோர்ஷாக்கின் அத்தியாய முடிவில் அலன்மூர் தரும் மேற்கோள் ஒன்றுடன் பதிவினை
நிறைவு செய்கிறேன்.
"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்"
இவ்வாக்கியத்திற்கு உரிமையாளர் யாரென்பதை கண்டுபிடியுங்களேன், கண்டு பிடித்து முதலில் கருத்து எழுதுபவர்களிற்கு பாராட்டு நிச்சயம். மறந்திடாது பதிவினைப்பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

அகொதீக தலைவர், டாக்டர் செவன் மிக அற்புதமான, எனக்கு பிடித்த ஒர் கதையினைப் பற்றிய பதிவை பதிவிட்டுள்ளார் அதனைக் காண கீழே க்ளிக்குங்கள்.



ட்ரெயிலர்கள்








Monday, December 22, 2008

லார்கோ வின்ச் -விமர்சனம்








லார்கோ வின்ச்

இயக்கம்- JEROME SALLE

திரைக்கதை- JEROME SALLE,JULIEN RAPPENEAU

நடிப்பு- TOMER SISLEY(LARGO), KRISTIN
SCOTT THOMAS(ANN FERGUSON), MIKKI MANOJLOVIC(NERIO),GILBERT MELKI(FREDDY KAPLAN)


தயாரிப்பு- பிரான்ஸ்-WILD BUNCH, PAN EUROPEAN











நண்பர்களே,

அ.கொ.தீ.க தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவென், எனக்கிட்ட கட்டளை உங்களிற்கு நினைவில் இருக்கலாம். தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார் என்பதற்காக நான் திரிஷாவோடு குளிர் காய முடியாது. தலைவர் எனக்கிட்ட பணியை நான் செய்து முடிக்காவிடில் , என்

தொலைபேசியின் மீதுள்ள, ஒளிர்ந்து ஒளிர்ந்து அணையும் சிகப்பு பல்பில் ஒர் குண்டு வைத்து என் கதையை முடித்து விடுவார்,தலைவர். இது எனக்கு தேவையா. ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா. எனவே இன்று திரைப்படத்தினை ஓடிச்சென்று பார்த்தேன். விமர்சனம் இதோ.




விமர்சனத்திற்குள் செல்லு முன், லார்கோவைப் பற்றி விரிவாக அறிய விரும்பும் நண்பர்களிற்கு, பின் வரும் இரண்டு வலைப்பூக்களின் வாசத்தில் திளைக்க வேண்டுமென, தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.



லார்கோ வின்ச்சின் கதை திரைப்படமாக தயாராகிறது என்பதனை அறிந்தபோது எனக்குள் கொப்பளித்த உற்சாகம், அது ஒர் பிரான்ஸ் தாயாரிப்பு என்பதை நான் அறிந்து கொண்ட போது மிக வேகமாக வடிந்து போனது. மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&2

என்னிடம் மிஞ்சியிருந்த எதிர்பார்ப்பும் லார்கோவின்ச் திரைப்படத்தின் ட்ரெயிலரை, நான் பார்க்க நேர்ந்த போது காலியானது.பாவம்,லார்கோ வின்ச் என நினத்துக்கொண்டேன். ஆனால் இன்று திரையரங்கில் படத்தினை பார்த போது, என் முன்கூட்டிய முடிவுகள் யாவும் தவிடு பொடியாகியது.
லார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்.

HONGKONGல் தனது சொகுசுக்கப்பல் அருகில், நீரில் மூழ்கி இறந்த நிலையில் நீரியோ வின்ச்சின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. இதே சமயம் போதைப் பொருள் கையிருப்பு குற்றத்திற்காக பிரேசிலில் சிறையிலடைக்கப்படுகிறான் லார்கோ. வின்ச் குழுமத்தின் தலைமயேற்று அதனை தங்கள் உரிமையாக்கி கொள்ள, மறைமுகமாக செயற்படுகின்றன, சில சக்திகள். இச் சாவால்களை எவ்வாறு லார்கோ எதிர் கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறார்கள்.

லார்கோ வின்ச்சின் ,முதல் 4 ஆல்பங்களைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், மூலக்கதையின் முக்கியமான கருவிலிருந்து விலகாமல், புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தியும், லார்கோ வின்ச்சின் ரசிகர்களிற்கு நன்கு பழகிப்போய்விட்ட கதாபாத்திரங்களை நீக்கியும், கதை நடைபெறும் சில இடங்களை மாற்றியும், லார்கோ வின்ச்சின் DIE HARD ரசிகர்களிற்கு வித்தியாசமான விருந்து படைத்திருக்கிறார்கள் இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்.

லார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. மிக நிதானமான வேகத்துடன் , அதே சமயம் தொய்வே ஏற்பாடத வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். லார்கோவின் கடந்த காலங்கள் திரையில் வரும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. TOMER SISLEY, லார்கோவின் பாத்திரத்தில் என்னை மயக்கி விட்டார், கதையில் PHLIP FRANCQ வரைந்த சில காட்சிகளை , எங்கள் கண்முன் தன் ஒளிப்பதிவால் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்க்கு ஒர் ஸ்பெஷல் ஷொட்டு. லார்கோவின் கிண்டல் கலந்த உரையாடல்களிற்கு, அரங்கில் சிரிப்பு வெடி வெடிக்கிறார்கள். லார்கோவின் பிரத்தியேகப் பணியாளனாக வரும் GAULTIER பாத்திரம் கனகச்சிதம். ஏற்கனவே கதைகளை படித்த வாசகர்களிற்கு முதலில் ஒர் அதிர்ச்சி, பின் பிறிதொரு அதிர்ச்சி என ஆழமாகவும், அழகாகவும் சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தினை JEAN VAN HAMME பார்த்தால் நிச்சயம் மனம் நெகிழ்வார். 2010ல் வெளிவரப்போகும் 2ம் பகுதிக்கான ஆயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. படத்தில் அதிரடி ஆக்‌ஷன்கள் குறைவு தான். ஆனால் அதிரடி மட்டும் தான் லார்கோவின்ச் அல்ல. ஒர் உள்ளம் கொண்ட மனிதனாக லார்கோவை சித்தரித்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட JEROME SALLE க்கு வழங்குகிறேன் ஒர் மலர்க்கொத்து.

செல்லமாக நவாஜோ மதகுரு என்று என்னால் அழைக்கப்படும், என் துணைவியாரின் கருத்து- QOS ஜேம்ஸ்பாண்ட் படத்தைவிட நன்றாக இருந்தது

என் மதிப்பீடு *****
போட்டோக்களில் - TOMER SISLEY & KRISTIN SCOTT THOMAS

Sunday, December 21, 2008

ட்ரெயிலர்

என்னைப் பார்...

என் கண்ணைப்பார்....

என் GUNஐப் பார்....

வேறு எதையும் பார்க்காதே

வருகிறேன்...
 
விரைவில் உங்களை சந்திப்பதற்கு....

Friday, December 19, 2008

ஒன்று.. இரண்டு.. XIII- (2)


















மலை உச்சி மர்மம்-2








நண்பர்களே,

பதிவினைப் படித்து, உங்கள்

கருத்துக்களை வெளியிட்ட அனைவரிற்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.

JOSH உங்களிற்கு மட்டும் ஒர் சிறப்பான கைகுலுக்கல், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள். யார் அந்த வாக்கியத்தை அவதானிப்பார்கள் என இருந்தேன், உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.


சென்ற பதிவில் இதனை 3 பகுதிகளாக எழுதுவதாக கூறியிருந்தேன், அதில் ஒர் சிறு மாற்றம். இதுவே இறுதிப்பகுதியாகும். ஏன்? காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில்!!!!!! வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல்!!? செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன? என்று கேட்பீர்களானால் பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.


18 பாகங்களை உள்ளடக்கிய ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பிடிக்காமல் போகப் போவது 13வது ஆல்பமா அல்லது 18 வது ஆல்பமா ?
[இரண்டுமே இடம் பெறாவிடில் கூட கதைத்தொடரில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்பதே என் கருத்து.] இந்த 18 வது ஆல்பம், ஸ்பெஸலில் இடம்பிடிக்க கூடிய சாத்தியமும் இருப்பதால், கதையின் பெண் பாத்திரம் ஒன்று மீதிக்கதையை கூறுவதாக இருந்த 3ம் பகுதியை நான் நீக்கியுள்ளேன். ஸ்பெஸல் கையில் கிடைத்ததும், 18வது ஆல்பம் அதில் இல்லையெனில் 3ம் பகுதியை பற்றி யோசிக்கலாம்.[ 13 வது ஆல்பம் நீக்கப்பட்டால் தப்பில்லை என்பது என் அபிப்பிராயம்] சரி இப்போது கதையின் தொடர்ச்சிக்கு செல்வோம்.

"தொடர்ந்த நாட்கள் இருண்டவை. எனது மாமா PARNELL , எங்கள் மறைவிடத்தை பொலிசாரிற்கு காட்டிக்கொடுத்த நபரைக் கண்டுபிடித்தார். IRAன் ரகசிய மறைவிடத்திற்கு நான் அழைக்கப்பட்டேன்.
காட்டிக்கொடுத்த நபர் எங்கள் அறைக்குள் அழைத்து வரப்பட்டார். அவர் தலை ஒர் சிறிய சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நபரின் தலையிலிருந்த சாக்குப்பை நீக்கப்பட்டது. வேகமாக அடித்துக்கொண்ட என் இதயம் ஒர் கணம் ஸ்தம்பித்தது. என் எதிரில், என்னால் ஆதர்சிக்கப்பட்ட சரித்திர ஆசிரியர் O'SHEA இருந்தார். அவரின் துரோகத்திற்கு அவரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லையென நிரூபிக்க வேண்டி, என் கையில் ஒர் துப்பாக்கி என் மாமாவால் திணிக்கப்பட்டது. O'SHEA அழ ஆரம்பித்தார். தன் நிலையைக்கூறி கதறினார். கைகள் கட்டப்பட்ட நிலையில், தன் உயிரிற்காக என்னிடம் மன்றாடினார் அவர். நான் அவர் தலையில் சுட்ட போது எனக்கு வயது 17. சிதறிய குருதி வரைந்த ஒவியத்தை நான் மறக்கவேயில்லை, அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது.


இச்சம்பவத்தின் பின் IRAவினை பற்றிய என் கருத்துக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தன. அதனை விட்டு விலகி விட வேண்டுமென தீர்மானித்தேன். பல நாட்களாக காணமல் இருந்த என் தாயாரை பார்க்க விரும்பி, என் வீடு சென்ற என்னை, வீட்டைச்சுற்றி மறைந்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். என் வழக்கின் தீர்ப்பு கூறும் நாளில், எனது மாமா செய்த ஏற்பாடுகள் மூலமாக பொலிசாரிடமிருந்து தப்பினேன். அயர்லாந்தை விட்டு வெளியேறினேன். அமெரிக்காவை வந்தடைந்தேன்.

என்னை பொறுப்பேற்றுக்கொண்ட நீயுயார்க் வாழ் அயர்லாந்துக்காரர்கள், என் பாதுகாப்பிற்காக என்னை டென்வரிலுள்ள, காலராடோ எனுமிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அயர்லாந்தை சேர்ந்த தம்பதிகளின் இல்லமொன்றில் நான் தங்க ஏற்பாடாகியது. இப்போது என் பெயர், நீ அறிந்திருப்பதை போலவே KELLY BRIAN என்பதாகும். நான் உன்னை முதன் முதலாக சந்தித்த நாள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, JASON FLY. பனி விளையாட்டுத்திடல் ஒன்றில், தவறுதலாக உன்னுடன் நான் மோதி விழுந்தேன். கனிவுடன் என்னை மன்னித்த நீ, எனக்கு பனிச்சறுக்கலில் பயிற்சியும் தந்தாய். நாமிருவரும் ஒரே கல்லூரியில் தான் கல்வி கற்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டபோது எவ்வளவு மகிழ்சியடைந்தோம். நீயும் ,உன் 11 வயதில், கீரீன்பால்ஸ்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றிய உன் தந்தை, உங்கள் வீட்டில் ஏற்பட்ட ஒர் தீ விபத்தில் மரணமானதையும், அதன் பின் அனாதை விடுதியில் இருந்து வளர்ந்த நீ, உன் திறமையால் எங்கள் கல்லூரியின் உதவித்தொகையில் கல்வி கற்பதாகவும் கூறினாயே. எவ்வளவு இன்பமான நாட்கள் அவை. யாவும் நன்றாகவே இருந்தன, என்னைத் தேடி என் மாமா PARNELL இங்கு வரும்வரை. என்னை மன்னித்துவிடு JASON FLY. என் பொய்களிற்காக என்னை மன்னித்துவிடு. இரவின் மெளனமான ரகசியங்களுடன் மட்டும் உன்னால் பேசமுடியும் எனில், நான் செய்த ஒர் கொலைக்காக, என் மனம் நொருங்கி விழித்துக்கிடந்த இரவுகளின் சரிதத்தை அவை உனக்கு கூறும். என் இருண்ட வாழ்வின் ஒளியாகிய நம் நட்பின் அந்தி நேரம் இது நண்பனே...... "


KILLIAN மலை உச்சியில் காற்று,வீசியவாறே இவர்களை கேட்டுக்கொண்டிருந்தது. KELLY BRIAN, தன் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்....


பிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே. இவ்விரு இளைஞர்களில் மலையை விட்டு உயிருடன் இறங்கப்போகும் இளைஞன் ஒருவனே. அவனை FRANK GIORDINO மிரட்டி, தனக்காக பணிபுரிய வைக்கிறான். தன் முதல் பணிக்காக CUBAவிற்கு செல்கிறான் அந்த இளைஞன்.


XIII தொடரானது முதன் முதலாக SPIROU எனப்படும் பிரென்ச்சு-பெல்ஜிய காமிக்ஸ் வாராந்திரியில் 1984 ல் ஒர் தொடராக ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த J.F.KENNEDY ன் கொலைச்சதியையும், 80 களில் பிரபலமாகவிருந்த, அமெரிக்க எழுத்தாளர் ROBERT LUDLUM அவர்கள் உருவாக்கிய JASON BOURNE எனப்படும், தன் கடந்த காலத்தை மறந்த ஒர் ரகசிய ஏஜண்ட்டின் கதையையும், இத்தொடரின் ஆசிரியர் JEAN VAN HAMME, தன் கதையின் ஆரம்ப கட்டங்களில் உபயோகித்தார் என ஒர் சர்ச்சை அப்போது கிளம்பியது. தன் தொடர் வெற்றியின் மூலம் இவற்றையெல்லாம் கடந்து வந்த JEAN VAN HAMME , ஆரம்பம் முதல் இறுதி வரை தன் வெற்றிக்கூட்டணியை WILLIAM VANCE உடன் தொடர்ந்தார்.


WILLIAM VANCE, பெல்ஜியத்தை சேர்ந்தவர் , ஆரம்பத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். இவர் 1962 முதல் 1967 வரை பெல்ஜிய சஞ்சிகையான TINTIN ல் பணியாற்றியவர். அச் சமயத்தில், பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான GREG உடன் இணைந்து BRUNO BRAZIL எனும் தொடரை உருவாக்கினார். இத்தொடர் WILLIAM VANCE க்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.இவர் MARSHAL BLUEBERRY எனப்படும் ஒர் தொடரின் முதல் 2 ஆல்பங்களிற்கு, JEAN GIRAUD என்பவரின் கதைக்கான சித்திரங்களை வரைந்தார். சரி யார் இந்த JEAN GIRAUD?


THE IRISH VERSION என அழைக்கப்படும் XIIIன் 18வது ஆல்பமானது, ரகசிய ஏஜண்ட் XIIIன் உண்மை அடையாளத்தை,ரசிகர்களிற்கு விரிவாகவும், விளக்கமாகவும் தர வேண்டி வெளியான ஒன்று. 2007ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில், 19 வது ஆல்பமான THA LAST ROUND உடன் வெளியாகியது. இந்த விற்பனைத் தந்திரம் பிரதிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக என நான் எண்ணுகிறேன். XIIIன் ஆஸ்தான ஒவியரான WILLIAM VANCE இந்த 18வது ஆல்பத்திற்கான சித்திரங்களை வரையவில்லை, மாறாக பிரான்சின் மிகப் புகழ் பெற்ற, ஒர் பிரபலமாக மதிக்கப்படுகின்ற, தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிற்கு காப்டன் டைகர் எனப்படும் செல்லப்பெயரால் அறிமுகமான BLUEBERRY தொடரின், அற்புதமான ஓவியர் அவர். அவர் பெயர் தான் JEAN GIRAUD.


JEAN HENRY GASTON GIRAUD என்பது இவரின் முழுப்பெயர். பாரிஸின் புறநகரங்களில் ஒன்றான NOGENT-SUR-MARNE ல் 1938 ல் பிறந்தார். இவர் முதல் கதையான FRANK AND JEREMY யை, தன் 18 வது வயதில் FAR WEST சஞ்சிகையில் வெளியிட்டார். 1962ல் PILOTE எனப்படும் பிரெஞ்சு காமிக்ஸ் வாராந்திரியில் JEAN CHARLIER உடன் இணைந்து FORT NAVAJO எனும் தொடரில் பணியாற்றினார். இது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. MOEBIUS என்பது இவரின் புனை பெயராகும். MOEBIUS எனும் பெயருடன், எழுத்தாளர் ALEJANDRO JODOROWSKYயுட ன் இணைந்து இவர் உருவாக்கிய THE INCAL எனப்படும் விஞ்ஞான காமிக்ஸ் தொடர் மிகப்பிரபல்யமானது. GIRAUD ன், வித்தியாசமான சித்திரங்களை இத்தொடரில் காணலாம். XIIIன் 18 வது ஆல்பத்திற்கு GIRAUD சித்திரம் வரைய ஒத்துக்கொண்டதிற்கு தன் நன்றிகளை தெரிவித்திருக்கிறார் VAN HAMME.

நான் ஆல்பத்தை படித்த போது, கதையின் ஒர் முக்கிய பாத்திரம், எனக்கு BLUEBERRY போலவே தோற்றமளித்தார். WILLIAM VANCE ன் சித்திரங்களுடன் தொடரில் பழகிப்போய்விட்ட கண்களிற்கு, GIRAUD ன் சித்திரங்கள்,விழிகளை குளிர் நீரால் கழுவிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். சுருக்கமாக கூறினால், லயனின் ராட்சஸ ஸ்பெஸலில் இந்தக்கதை இடம்பெறுவதற்குரிய, முழுத்தகுதிகளும் THE IRISH VERSIONக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், எவ் ஆல்பம் ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பெறும் என்பதனை எங்களிற்கு தெரிவிக்கலாமே. இல்லாவிடின் XIIIன் மலை உச்சி மர்மத்தை விட, இது ஒர் பெரிய மர்மமாகிவிடும்.


ஆல்பத்தின் தரம் *****


நண்பர்களே, மறக்காது உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

போட்டோக்களில் இடமிருந்து வலமாக, WILLIAM VANCE, JEAN GIRAUD, JEAN VAN HAMME

Saturday, December 13, 2008

ஒன்று.. இரண்டு.. XIII

மலை உச்சி மர்மம். 1

வணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு. முதலாவது பதிவாக XIIIன் 18 வது ஆல்பத்தை பற்றி எழுதுகிறேன். சற்றுப் பெரிய பதிவு என்பதால் 3 பதிவுகளாக இட எண்ணியுள்ளேன். கணணி உலகில் எனக்கு எதுவும் தெரியாது, எதோ என்னால் இயன்றதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இத் தருணத்தில் இம்முதல் பதிவை சக காமிரேட்களான,
கிங் விஸ்வா, தலைவர் டாக்டர் செவன், ரஃபிக்ராஜா ஆகியோர்க்கு சமர்ப்பிக்கிறேன். என் துரோணர்கள் இவர்களே. சிறப்புகள் எல்லாம் அவர்களிற்கே உரியது.
கனவுகளின் காதலன்.


ன்று மாலை நான் வீடு திரும்பியபோது என் அப்பா இறந்த சேதியை எனக்கு அம்மா தெரிவித்தார். என் அப்பா BRENDAN O'NEIL , 1979ல் LORD MOUNTBATTENன் கொலையின் பின் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் எதுவுமின்றி 30 வருட கடுங்காவல் தண்டனை அவரிற்கு அளிக்கப்பட்டது. ஐரிஷ் விடுதலை ராணுவத்தின் தொண்டர் என் அப்பா, தனக்கு அரசியல் கைதி அங்கீகாரம் வேண்டி, மற்றும் பல கைதிகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். சாதரண கைதிகளிற்குரிய உடைகளை நிராகரித்து, உணவு உண்ணாது, நீரை மட்டும் ஆகாரமாக கொண்டு, கடும் குளிரில் ஒர் கிழிந்த போர்வையினோடு மெல்ல மெல்ல உறைந்தும், இறந்தும் கொண்டிருந்தார் அவர். விரதத்தின் 56ம் நாளில் அவர் இறந்து போனார்.

ல்லறையில் வீசிக்கொண்டிருந்த எலும்புகளை உறைய வைக்கும் குளிர்காற்று என் மனதில் கனன்று கொண்டிருந்த வஞ்சத்தை அணைக்க முயன்றதில் தோற்றது. என் மாமா TERRENCE PARNELL , IRAவின் ஒர் சிறிய பொறுப்பாளாராக இருந்தார். என்னை IRAவில் சேர்த்துக் கொள்ளும் படி அவரிடம் வேண்டினேன். குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை எனக்கூறி, என் கல்வியை தொடர சொன்னார் அவர்.



குளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது. BELFASTல் பள்ளியில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருந்தேன். சரித்திரப்பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. சரித்திர ஆசிரியர் EAMON O'SHEA அயர்லாந்து மக்களின் வீரமும், போராட்டமும், வலிகளும் நிறைந்த சரித்திரத்தை எங்களிற்கு கற்பித்தார். ஒர் நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தவேளையில் O'SHEA வகுப்பறையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் . அவரை பொலிசாரிடமிருந்து காப்பாற்றப்போய், நான் IRAல் இணந்துகொள்ள நேர்ந்தது. MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.



MAIREAD, BELFASTல் உள்ள காய்கறி கடையொன்றில் வேலையில் இருந்தாள். ஆனால் அவளின் உண்மையான பணி என்னவெனில் மறைவிடங்களிலிருந்து பிறிதோர் மறைவிடத்திற்கு ஆயுதங்களை கடத்துவது ஆகும். IRAவில் நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.அவள் என்னுடன் சிறிதே பேசுபவளாகவும்,சிரிப்பே இல்லாதவளாகவும் இருந்தாள். MAIREADன் அப்பா 1972ல் ஏற்பட்ட ரத்த வெள்ளி கலவரத்தில் இறந்து போனார், கடந்த வருடத்தில் அவள் தாயும் நோயுற்று இறந்தாள். அனாதையான அவளை என் கைகளில் அள்ளிக் கொள்ளவே விரும்பினேன் ஆனால் அன்று அதற்குரிய துணிச்சல் இருக்கவில்லை. இச்சமயத்தில் ஒர் புதிய நடவடிக்கைக்கான உத்தரவு, எங்களிற்கு கிடைத்தது.



IRAவின் ஆயுதப்பிரிவினர், வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றினை புரொடெஸ்டாண்ட் மத மக்கள் வாழும் குடியிருப்பிலுள்ள பல்பொருள் அங்காடிக்கருகில் நிறுத்தி வைப்பார்கள். குண்டு வெடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, MAIREAD பொலிசிற்கு போன் செய்து இதனை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் குண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வெடித்தது. என் கண்களின் முன்பாக அழுகையும், ஓலமும் உயிர்களும் சிதறிப்போயின. நாங்கள் ஓடத்தொடங்கினோம். பொலிஸ் தன் தேடல் வேட்டையை தொடங்கியது. எங்கள் மறைவிடத்தை கண்டுபிடிக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. தோட்டாக்கள் எல்லாப்பக்கங்களிலும் சீறின, நானும், என் மாமாவும், MAIREADம் ஒர் சிறிய படகில் ஏறி ஆற்றைக்கடக்கும் வேளையில், சீறி வந்த தோட்டாக்கள் MAIREADன் உடலை வெட்டிப்போட்டன. அவள் உடலை என் கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்.

[தொடரும்]