Saturday, December 20, 2014

மரண நாடகம்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 19

கலாராடோ பகுதிக்கு விஜயம் செய்யும் டெக்ஸும் கார்சனும் அங்கிருக்கும் ரேஞ்சர்களின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு பொறுப்பில் இருக்கும் ஊழியர், அருகிலிருக்கும் ஒரு சிறுநகரில் நிகழ்ந்த ரேஞ்சரின் கொலையொன்றின் விசாரணையில் தனக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ரேஞ்சர்கள் இருவரும் ஊழியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கொலை நடந்த சிறு நகரை நோக்கி பயணிக்கிறார்கள் .....

எங்கு அநீதி தன் கொட்டத்தை மேடைபோட்டு கும்மியடித்து என்னை தட்டிக் கேட்க யாருமில்லை என உரக்க குரல் தருகிறதோ அதை தொடர்ந்த இரு பக்கங்களில் அப்பகுதியின் வழியாக டெக்ஸ் அண்ட் கோ தற்செயலாக சென்று கொண்டிருப்பதையும், கொட்டம் அடித்து உரக்க குரல் தந்த அநீதியை அடக்க விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் பொறுப்பை எடுத்து கொள்வதையும் ஆச்சர்யம் கண்களில் கண்ணீருடன் மல்க நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். எப்படி டெக்ஸ் சொல்லி வைத்தாற்போல் இப்பகுதியால் வந்தார், வென்றார், சென்றார் என்ற கேள்விகளிற்கு டெக்ஸின் அன்பு விசிறிகள் மனதிலும், சிந்தையிலும் இடமில்லை. எனவே காலாராடோ  ரேஞ்சர்களின் அலுவலகத்தில் ஒரு சிறு பீர்கூட அருந்தாது நமது பிரியரேஞ்சர்கள் இருவரும் கொலை விசாரணைக்கு புறப்படுகையில் வழமைபோலவே பழக்கப்பட்ட டெக்ஸ் வாசக உதடுகள் மனதில் ஒரு விசிலை உற்சாகமாக அடித்து அவர்கள் இருவரையும் கனிசன் எனும் அந்த சிறுநகரிற்கு வழியனுப்பி வைக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரேஞ்சர் ஜோன்ஸ், அபின் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்ததை டெக்ஸுக்கு தெளிவாக்கி இருந்தார் ரேஞ்சர் அலுவலக ஊழியர். இதை தன் மூளையில் போட்டு கெட்டி சட்னிபோல அரைத்தபடியே கனிசன் நகரை வந்து சேரும் டெக்ஸ் முதலில் தன் விசாரணைகளை ஆரம்பிப்பது நகரின் ஷெரீப் அலுவலகத்தில். கனிசன் நகர ஷெரீப் தன் இருக்கையை விட்டு அதிகம் நகர விரும்பாத ஒரு மனிதன். கொலைவிசாரணையை சுறுசுறுப்பாக எடுத்து நடாத்துவது என்பது அவன் இயல்பிலேயே இல்லை. இதை டெக்ஸ் தெளிவாக புரிந்து கொள்கிறார், பதவிக்காகவும் அது தரும் பகட்டிற்காகவும் அதிகம் சிரமப்படாது மாதந்தோறும் தவறாமல் வந்துவிடும் சம்பளத்திற்காகவும் நீதி இவ்வாறான மனிதர்கள் கையில் உதாசீனம் செய்யப்படுவது அவரிற்கு சினத்தை தருகிறது. ஆனால் டெக்ஸால் செய்யக்கூடியது ஷெரீஃப் அணிந்திருக்கும் நட்சத்திரத்திற்கு அவன் அவமானம் என்பதை அவனிடம் சொல்வது மட்டுமே. அதன்பின்னாக கொலைநடந்த இரவன்று நகரை விட்டு எந்த தகவலும் தராது கிளம்பிச் சென்ற நாடக குழு பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் நகரின் நாடகசபா உரிமையாளரை தேடிச்செல்கின்றனர்.

நாடகசபா உரிமையாளர், மோர்கன் தியேட்டர் நாடககுழு ஒப்பந்தத்தை மதிக்காது இரவோடு இரவாக நகரைவிட்டு நீங்கியது குறித்து கோபத்தில் உழழ்பவர். விற்பனைசெய்த சீட்டுக்களிற்கு எல்லாம் பணத்தை திருப்பிதர வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது கோபம் வருவது அதுவும் தன்மீது தவறு இல்லாதபோது வருவது நியாயமான ஒன்றே என்பதை தர்மத்தின் காவல்தூண்களான டெக்ஸ் ரசிக சிங்கங்கள் அறிவார்கள். ஆகவே நாடகசபா உரிமையாளரிற்காக இரு துளி கண்ணீரை பாசத்துடன் சிந்திவிட்டே கதையை தொடரக்கூடியதாக இருப்பது இங்கு டெக்ஸ் ரசிகர்களிற்கு பழகிவிட்ட ஒரு நற்பண்பாக நீடிப்பதை அவர்கள் அருகில் இருப்பவர்கள் அவதானித்திருக்கலாம். தன் கோபத்தின் மத்தியிலும் மோர்கன் நாடகக்குழு செல்லவிருக்கும் நகரங்களின் பட்டியலை டெக்ஸ் அண்ட் கார்சனிற்கு தருகிறார் நாடகசபா உரிமையாளர். ஒரு நாடகத்தின் திரைக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை பெரும்பாலும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வது இல்லை அதைப்போலவே நாடகசபா உரிமையாளரின் அலுவலக கதவிற்கு பின்பாக மறைந்து இருந்து ரேஞ்சர்களுடன் உரிமையாளர் நடத்திக் கொண்டிருந்த உரையாடலை ஓட்டுக் கேட்ட மனிதனையும் ரேஞ்சர்கள் கதையின் இறுதிவரையில் அறியப்போவதே இல்லை. நாடகக்குழுவின் அடுத்த நிறுத்தம் மொண்ட்ரோஸ் எனும் நகர் என்பதை அறிந்து கொண்ட ரேஞ்சர்கள் அங்கு செல்ல தீர்மானிக்கிறார்கள்.  அதற்கு முன் மொண்ட்ரோஸ் நகரை நோக்கி பறக்கிறது ஒரு தந்தி. ரேஞ்சர்களின் வருகையை அறிவித்து, எச்சரித்து.

இந்த அவசரத் தந்திக்கான காரணம் என்ன எனும் கேள்வி நண்பர்கள் மனதில் எழலாம். அதற்கான விடை அபின் கடத்தல் என்பதாகும். அபின் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது சட்டத்தின் கண்களிற்கு தெரியாமல் அது பயணிப்பது அவசியமாகிறது. பாவனையாளர்களை அது சென்றடையும் வழிகளும், முறைகளும், அதை எடுத்து செல்லும் மனிதர்களும் சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகிறது. வாரவாரம் நகரிற்கு நகர் பயணித்து கலைச்சேவையாற்றும் நாடகக்குழு ஒன்று அபின் கடத்தலிற்கு துணைபோகிறது என்பதை இயல்பாக யாருமே கற்பனை செய்து பார்க்கமாட்டார்கள். நகரிற்கு நகர் இடம்மாறும்போது அபின் பொதியும் அந்நகரிலிருக்கும் அபின் வினியோகியிடம் கைமாறுவது எவ்வித சிக்கலுமில்லாது நடந்துவிடும். வினியோகியிடமிருந்து அபினை கொண்டு வந்து தருபவனிற்கு பணமும் கைமாறிவிடும். கலைச்சேவை நல்ல ஒரு போர்வையாக இருக்க அதன் கீழ் போதைப்பொருள் கடத்தல் என்பது இலகுவாக அதிக பணம் சம்பாதிக்க வழி செய்து தருவதாக இருக்கிறது. இவ்வகையான வாய்புக்களை வாழ்க்கையில் எதற்கும் துணிந்து எவ்வழியிலாவது செல்வமும் வளமும் பெறவேண்டும் என எண்ணும் மனிதர்கள் தவறவிடுவது இல்லை. அவ்வகையான மனிதர்களில் ஒருவனே ரிக் டுவால்.

மோர்கன் நாடகக்குழுவின் நாடகங்களில் பெண்களை கவரும் ஆண்மகனாக வேடங்கள் தரிப்பவன் ரிக் டுவால். வேடங்களிற்கு ஏற்ப மோர்கன் நாடககுழுவின் உரிமையாளர் மோர்கனின் இரண்டாவது மனைவி ஏவாயையும் அவன் தன் காதல் வலைக்குள் வீழ்த்திவிட்டவன். வயதான கணவன், சலித்துபோன, எந்த சுகத்தையும் பகட்டையும் தராத, ஊர் ஊராக அரிதாரம் போட்டு அயர்ச்சியுறும் வாழ்க்கையிலிருந்து புதியதொரு சொகுசு வாழ்க்கையை தேடும் ஏவா, தன் ரகசியக் காதலன் ரிக் டுவாலின் அபின் கடத்தலில் அவனுடன் தயங்காது துணை நிற்பவள். அபின் கடத்தல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ரேஞ்சர் ஜோன்ஸை தன் காதலன் ரிக் கொலை செய்தபோதும்கூட அவள் தன் புதிய வாழ்வை மட்டுமே எண்ணி ரிக்குடனான தன் உறவையும், அபின் கடத்தலில் தன் பங்களிப்பையும் தொடர்கிறாள். தங்களிருவரிற்குமான உறவு ரகசியமானது என்றும், அபினை தாம் கடத்தி செல்வது தங்களிருவரையும் தவிர்த்து வேறு எவரிற்கும் தெரியாது என்றும் அவர்கள் உறுதியாக நம்பி வருகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் தன் சித்திரங்களை பொதுவெளிகளில் தீட்டுவது இல்லை. அது அதற்காக ரகசியமான மறைவுகளை வேண்டுகிறது. ரகசியமான மறைவுகளில் தற்செயலாக குறுக்கே செல்லும் மனிதர்கள் பிறரின் கனவுகளை கலைத்துப்போட்டு தம் கனவுகளிற்குரிய சாலைகளை அதில் போட்டு விடுவார்கள் என்பது இக்கதைக்கும் விதிவிலக்கல்ல.

ரிக் டுவால் அபினை சீனர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு நகரிலும் சீன ஏஜெண்டுகளிடம் அவன் அபினை தந்து பணத்தை பெற்றுக் கொள்கிறான். இந்த அபின் கடத்தலிற்கு தலைவனாக வுவாங் சிங் எனும் சீனன் இருக்கிறான். கனிசன் நகரிலிருந்து செல்லும் தந்தி வுவாங் சிங்கின் கவனத்திற்கு வருகிறது. ரிக் டுவாலை ரேஞ்சர்கள் கைது செய்தால் தன் அபின் கடத்தலும் வெளியே தெரியவரும் என்பதை உணர்ந்து கொள்ளும் வுவாங் சிங் மொண்ட்ரோஸிலேயே ரேஞ்சர்களை யாரும் அறியாது தீர்த்துக் கட்டுவது எனும் முடிவிற்கு வருகிறான். கனிசன் நகரில் மதுப்பிரியன் ஒருவனிடமிருந்து முக்கியமான தகவலை பெற்றுக்கொள்ளும் டெக்ஸும் கார்சனும் மொண்ட்ரோஸ் நகரிற்கு விரைந்து வருகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை என்பது மேடையில் நிகழும் நாடகத்தைவிட வேடிக்கையானது என்பதற்கேற்ப நிகழ்வுகள் மொண்ட்ரோஸில் அரங்கேற ஆரம்பமாகின்றன. ரிக், ஏவா இருவரினதும் ரகசியக் காதல் நாடகக்குழுவின் தலைவரும் ஏவாவின் கணவருமான மோர்கனிற்கு தெரியவருகிறது. மொண்ட்ரோஸில் நாடகத்தை அரங்கேற்றியபின் மோர்கன் ஏவாவை பிரிந்து செல்வது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இத்தருணத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ஒர் பெண்ணின் ஆசைகளை தீர்க்க முடியாத, நாடகத்தை மட்டுமே தன் வாழ்வில் அறிந்த ஒரு வயதான கலைஞனின் வேதனை சிறப்பாக சொல்லப்படும். அக்கலைஞன் எடுக்கும் அந்த எதார்த்தமான முடிவும்கூட அப்பெண்ணின் அவன்மேல் கொண்ட நிஜமான காதலே என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கும்.

மொண்ட்ரோஸில் நாடகம் மேடையேறும்போது மேடையில் ரிக் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு காட்சி வரும் ஆனால் நிஜமாகவே அவன் கொல்லப்படுவான். அவன் பயணிக்கும் வண்டியில் அவன் மறைவிடத்தில் பதுக்கி வைத்த அபினும் மாயமாக மறைந்துவிடும். ரிக் டுவாலை தன் கணவன் பொறாமையால் சுட்டுக் கொன்று விட்டான் என ஏவா குற்றம் சாட்ட அவரை நகர ஷெரீப் கைது செய்து சிறையில் அடைக்கிறார். உண்மையில் ரிக்கை கொன்றது யார்? அவனிடமிருந்த அபினை அபகரித்தது யார்? அபின் கடத்தல் தலைவன் வுவாங் சிங்கை டெக்ஸ் கும் கும் என்று குத்தி டுமீல் டுமீல் எனப் போட்டுத்தள்ளுவாரா எனும் கேள்விகளிற்கு விடையளிக்கிறது TEX #451  ன் கதையான Opium.

கதை அக்காலத்தின் மனிதர்கள் நாடிய சில போதைகள் குறித்து மேலோட்டமாக விபரிக்கிறது. தேனீரகங்கள், புகையகங்களில் ரகசியமாக பரிமாறப்பட்ட அபின் ஒரு போதை எனில் இரவுப் பொழுதுகளில் மேடைகளில் அரங்கேறும் நாடகங்கள் இன்னும் ஒரு போதையாக உருப்பெறுகின்றன. இரண்டையுமே அனுபவிக்க பணம் தந்தாக வேண்டும். ஆனால் அபின் தனக்கேயுரிய அழிவின் அழகை கொண்டிருக்கிறது. நாடகம் கலையின் கண்ணீரை தன் வேரிற்கு தந்து கொண்டேயிருக்கிறது. சீன சமூகம் முக்கியமான ஒரு அங்கமாக கதையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டாலும் பாதிக்கதையில் அது காணாமல் போய்விடுகிறது. கடும் உழைப்பும், சகிப்புத்தன்மையும் கொண்ட சீனர்கள் தம்மைவிட வளம் செழிப்பவர்களாக உருமாறுவது பிடிக்காத பொதுவான வெள்ளை மனப்பான்மையும் கதையில் சொல்லப்படுகிறது. இருப்பினும் சட்டத்தின் பிரதிநிதிகளிற்கே தண்ணீர் காட்டும் நுட்பங்களுடன் இயங்கும் சீனன் வுவாங் சிங்கின் கட்டுக்கோப்பான அபின் கடத்தல் அமைப்பு அவர்களின் திறமைக்கு சான்று.

நண்பர்கள் தயவுசெய்து இக்கதையின் அட்டைப்படத்தை பாருங்கள். தன் ட்ராகனாசனத்தில் அமர்ந்திருக்கும் வுவாங் சிங்கையும், அவரை விறைப்பான கைகளுடன் நோக்கிக் கொண்டிருக்கும் டெக்ஸையும் பாருங்கள். செமையான ஒரு மோதல் உண்டு எனும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அதில் தப்பேயில்லை ஏனெனில் எனக்கும் அதே எண்ணம் எழுந்தது. ஆனால் இந்தக் காட்சியே கதையில் இல்லை! ஏன் வுவாங் சிங்கின் முகத்தையோ அல்லது அவன் யார் என்பதையோ டெக்ஸ் இக்கதையில் அறிவது இல்லை. அபின் கடத்தலின் தலைவன் யார் என்பதை டெக்ஸ் அறியாமலேயே இக்கதை நிறைவுபெறும். வுவாங் சிங்கும் கதையின் ஒரு தருணத்தில் ரேஞ்சர்களை கொல்வதற்கு அவசியமில்லை என நழுவிவிடுவான். என்ன ஒரு பெருத்த ஏமாற்றம் இது.

டாக்டர் செவென்போல உருவச்சாயல் கொண்ட வுவாங் சிங், ஊதுபத்தி புகை அவரிருக்கும் அறையில் ட்ராகன் வால்போல நெளிந்து சுருண்டோட மங்கிய வெளிச்சத்தில் அறிவுக்களைகொண்ட வில்லத்தனமுகம் காட்டி கன்பூசியஸ் பெயரை கண்டபடி உபயோகித்து என்னில் உருவாக்கிய எதிர்பார்ப்பு எல்லாம் மணல்கனவாக சிதைந்தது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் அவர் தரும் பில்ட் அப்கள் எல்லாம் ஒரு பெரும் மோதலையே படிப்பவரின் மனதில் விதைக்கிறது. பாதியில் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக கதை திரும்புகையில் கிடைக்கும் ஏமாற்றம் டெக்ஸே எம் மூஞ்சியில் ஓங்கி குத்துவது போல இருக்கிறது. மேலும் இக்கதையில் டெக்ஸ் யாரையும் அடிப்பது இல்லை, துப்பாக்கியால் யாரையும் சுடுவதும் இல்லை என்றால் நம்புவீர்களா. நம்புங்கள்! டெக்ஸ் இக்கதையில் தன் துப்பாக்கியை ஒரு தடவைதான் உபயோகிப்பார், அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியை நிறுத்துங்கள் என எச்சரிப்பதற்காக மட்டுமே.

கதையில் டெக்ஸின் உச்சபட்ச வன்முறை என்பது நாடக அரங்கில் நாடகம் நடைபெறும் வேளையில் டெக்ஸும், கார்சனும் இங்கிதம் இல்லாது உரையாடிக் கொண்டிருக்க அது பிடிக்காத ஒரு கனவான் அவர்கள் பேசுவதை நிறுத்த சொல்வார், இதனால் அப்செட் ஆகும் டெக்ஸ் டாய்! நாடகம் முடிய வெளில வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என அந்த நோஞ்சான் கனவானை மிரட்டுவது என்பதாக இருக்கிறது. இது டெக்ஸின் மீதான மதிப்பை இழக்கசெய்யும் ஒரு காட்சி அமைப்பாகவே இருக்கிறது நகைச்சுவையை தருவதாக அல்ல. கதையின் விசாரணையில் கூட ரேஞ்சர்கள் எதையும் கண்டுபிடிப்பது இல்லை, கதையின் துணைப்பாத்திரங்கள் அவர்கள் விசாரித்து அறிய வேண்டியற்றை எல்லாம் ரேஞ்சர்களை தேடி வந்தே சொல்லி விடுகின்றனர். இப்படி ஒரு அஹி[இ]ம்சையான டெக்ஸ் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. இவ்வளவு பரபரப்புடன் ஆரம்பமாகி இப்படியான ஒரு அமெச்சூர் நாடகம்போல முடிவடையும் கதையையும் நான் படித்தது இல்லை. கதையின் ஒரே ஆறுதல் தனக்கேயுரிய தனித்த பாணியில், இருளையும் ஒளியையும் பக்கங்களில் மனித உணர்வுகளுடன் இழையவிட்டு அட்டகாசமாக Andrea Venturi உருவாக்கியிருக்கும் சித்திரங்கள். அவரின் திறமை க்ளோடியோ நிஸ்ஸியின் மொக்கை கதை ஒன்றில் இப்படியாக வீணாகிப்போனதே என்பதும் வேதனையான ஒன்றுதான். நாடகம் எல்லாம் பார்க்கிற ஆள் நானில்ல என்று உதார்விடும் கார்சன் பாதி நாடகம் முடிய கதையில் ஒன்றிப்போய் அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என இருக்கையில் உறுதியாய் உட்காரும் அத்தருணம் ரசிக்க வைக்கும் ஒரு தருணம். இனி டெக்ஸ் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், பரட்டையின் தீவிரவாத ரசிகக்கண்மணிகள் கையில் இக்கதை கிடைக்ககூடாது என பயபக்தியோடு பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தை வேண்டி நிற்பதுதான். மரண நாடகம் முடிகையில் பாடையில் இருப்பது வாசகர்கள்.

Tuesday, November 11, 2014

வெல்லப்படாதவன்



வதனமோ சந்த்ர பிம்பமோ - 18


நெவெடா மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...

தமிழ் காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.

தோழர்களை மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் Mauro Boselli, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.

ஷேன் எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்டிருப்பது சிறப்பானது.

கதையின் இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.


அயர்லாந்து குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் Carlo Raffaele Marcello அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும்  டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

தேசபற்று, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.
பிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது. 

மூன்றாம் பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட்  கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரியதொரு எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல.  டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே.  வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும்   வெல்லப்படாதவனாக.




Sunday, October 5, 2014

புரட்சியின் இறுதி வீரன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 17

ஜெனரல் டேவிஸின் தந்தியை பெற்றுக் கொள்ளும் டெக்ஸும், கார்சனும் அரிசோனாவிலிருந்து வெர்ஜினியாவின் தலைநகரான ரிச்மொண்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். தந்தியில் எந்த தகவல்களையும் வழங்காது விடும் ஜெனரல் டேவிஸ் மிகவும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் அந்த விடயம் என்ன என்பதை அறிந்திடும் ஆர்வம் ரயிலில் பயணிக்கும் இரு ரேஞ்சர்களின் மனதிலும் பசித்திருக்கும் கேள்வியாக கூடவே வருகிறது ..

TEX Special கதை வரிசையின் பதினான்காவது ஆல்பமான Le Dernier Rebelle வாசகர்களை வேகமாக தன்னுள் உள்ளிழுக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்கள் வெர்ஜினியாவின் ரப்பா ஹனோக் ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் எழிலான பகுதிகளில் ஆரம்பமாகிறது. மலைகளும், அதில் பசுமையின் விரல்களாக நீண்ட மரங்களும், அவற்றின் நலத்தை கேட்பதில் அலுத்து விடாத மலைக்காற்றும், அந்த காற்றில் ஏறிப்பயணிக்கும் அந்நிலவெளிக்குரிய வாசமும் என ஆரம்ப பக்கங்களின் சித்திரங்கள் அப்பகுதியில் வாசகனும் பயணம் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவனை இட்டு வருகின்றன ஆனால் அவன் கவனத்தை திசை திருப்புவதுபோல ஆற்றின் அருகில் நீண்டு செல்லும் ரயில்பாதையில் வருகிறது ஒரு ரயில் வண்டி. அதில் பயணித்து கொண்டிருக்கும் யூனியன் வீரர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். வானத்தை கூரைகளாக கொண்டிருக்கும் திறந்த பெட்டிகளில் பயணிக்கும் ஒருவன் மலைக்காற்றின் குளிரை வெறுத்துக் கொள்கிறான். மூடப்பட்ட பெட்டிகளினுள் சக வீரர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வீரன் ஒருவன் அவன் உட்காந்திருக்கும் ஆயுதப்பெட்டிகள் உட்காருவதற்கு வசதியாக இல்லை என குறைப்பட்டு கொள்கிறான். ரயில் பயணித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் சில மனிதர்கள் ரயில்பாதையிலிருந்து ஒரு தண்டவாளத்தை அகற்றுவதில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

ரயில் ஓட்டுனர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக, கச்சிதமான அந்த இறுதி தருணத்தில் தண்டவாளம் அகற்றப்பட வேகத்துடன் வந்த ரயில் அதே வேகத்துடன் தன் பாதைவிட்டு விலகி வீழ்கிறது. ரயிலில் பயணித்தவர்களின் வேதனை ஒலிகள் அமைதியான அந்த நிலவெளியின் கீறல்களாக ஒலிக்கின்றன. ரயிலைக் கவிழ்த்த மனிதர்கள் தம் துப்பாக்கிகளால் அந்தக் கீறல்களை இல்லாது ஆக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவர்கூட மிச்சமிராது ரயில் பயணிகள் கொல்லப்படுகிறார்கள். ரயிலில் ஏற்றி வரப்பட்ட ஆயுதங்களுக்காக ரயிலை கவிழ்த்து படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் அவற்றை ரப்பா ஹனோக் ஆற்றின் வழியாக எடுத்து செல்கிறார்கள்.

இவ்வகையான கொலை, கொள்ளை, வழிப்பறி தாக்குதல் சம்பவங்கள் புதிதானவை அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இவ்வகை நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ ஒழுங்குடன் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை செய்வது ஒரு குழுதான் என்பதை ரிச்மொண்ட் வந்து சேரும் டெக்ஸ் & கார்சனிடம் விளக்குகிறார் ஜெனரல் டேவிஸ். சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், தம் லட்சிய கொள்கைகளில் இருந்து விடுபடாத சில கான்பெடரேட் புரட்சியாளர்கள் இவ்வகையான நடவடிக்கைகளால் மீண்டும் யூனியனுக்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளே இவை என்பதையும் அவர் ரேஞ்சர்களிடம் விளக்குகிறார். யுத்த பாதிப்புக்களும், இழப்புக்களும், வலிகளும் இன்னும் ஆறியிருக்காத அந்த மண்ணில் இந்த குழுவிற்கு எதிரான ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அப்பகுதி மக்களின் ஆதரவை புரட்சியாளர் குழுவிற்கு மேலும் ஈட்டி தருவதுடன் யூனியன் மீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என்பதையும் டேவிஸ் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் விபரிக்கிறார். தாக்குதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு புரட்சியாளர்கள் குழுவின் மறைவிடம் செனண்டாவோ ஆற்றுப் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தையும் அவர் முன்வைக்கிறார். அம்மறைவிடத்தை கண்டுபிடித்து ரத்தம் சிந்தாது புரட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க பொருத்தமானவர்கள் டெக்ஸும், கார்சனுமே என்பதாலேயே அவர்களுக்கு தந்தியை அனுப்பியதாகவும் தனது நீண்ட விளக்கங்களை முடிக்கிறார் ஜெனரல் டேவிஸ்.

ஆனால் ரேஞ்சர்கள் இருவருக்கும் இந்த நிலவெளி புதிதான ஒன்று. அவர்களின் சாகசங்களில் இருந்து தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் ஒரு புரட்சிக் குழுவின் மறைவிடத்தை கண்டுபிடிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அவர்கள் உடனே ஜெனரல் டேவிஸிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு திட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜெனரல் டேவிஸ், ஜான் ஃப்ரெமொண்ட் எனும் மனிதனுடன் டெக்ஸ் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஜான் ஃப்ரெமொண்ட் முன்னாள் கான்பெடரேட் அதிகாரி. கம் ஸ்பிரிங் ஆயுதக்கிட்டங்கியை புரட்சியாளர்கள் தாக்கியபோது இடம்பெற்ற மோதலில் காயமுற்று, கைதாகி பீட்டர்ஸ்பெர்க் சிறையில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவன். இப்படியான ஒருவனுடன் பழகி, அவன் நம்பிக்கையை வென்று அவன் மூலமாக புரட்சியாளர்களின் மறைவிடத்தை அறிய டெக்ஸ் முயல வேண்டும் என்பதே டேவிஸ் முன்வைக்கும் திட்டம். ரேஞ்சர்களும், டேவிஸும் பயணிக்கும் குதிரை வண்டியும் விரைந்து கொண்டிருப்பது பீட்டர்ஸ்பெர்க் சிறைச்சாலையை நோக்கித்தான். ஆக சிறையில் இருக்கும் ஜான் ஃப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு டெக்ஸ் பாத்திரமாக வேண்டின் அந்த சிறைக்கு டெக்ஸும் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியாக செல்வதை தவிர வேறு சிறப்பான வழி உண்டோ டெக்ஸ் வாசக மன்றமே!

இந்த தருணத்தில் என் கண்களில் இருந்து ரப்பா ஹனோக் வழிந்து கொண்டிருந்தது. என் அன்பு ரேஞ்சர், நீதியின் காவலன், அநீதியின் எமன், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்குரல் ஜெயிலுக்கு கைதியாக போவதா! அய்யகோ வானமே வையமே மேற்கின் மறையுரு பிரபஞ்சமே இது என்ன சோதனை. உயிரும் ஒடுங்கி ஆன்மாவும் நடுங்கி அழுதேன் அய்யா, டெக்ஸ் நீதான் என் பசுமைக் கொய்யா என தீடிர் கவிதை என்னுள் பீரிட்டது. ஆனாலும் நான்கு பேருக்கு நல்லது என்றால் நான் நரகத்துக்கும் செல்வேன் என அன்பு தலைவர் டெக்ஸ் அரிசோனா பெரும்பீஜ எருது சலூனில் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்தது. மனதை அமைதியாக்கி கொண்டு கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு சில விஷமிகள் இப்படி எத்தனை கதை படித்திருக்கிறோம், வில்லன் குகை இருக்குமிடத்தை அறிய வில்லன்களுடன் நட்பாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று, அவர்களுடன் வில்லனின் குகைக்கு செல்வது என்பது ஆதிவாசி டெக்னிக் என கிண்டல் அடிக்கலாம். அந்த விஷமிகளுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் சொல்வது உண்மை! இது ஒரு அரதப்பழைய கிழிந்த பீத்தல் தேய்வழக்கே.

இப்படி ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருப்பவர் டெக்ஸின் ஆஸ்தான கதையாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி. நல்ல கதைகளையும் உருவாக்கும் ஆற்றல் பெற்ற கதாசிரியரான நிஸ்ஸி அந்த ஆற்றலை எல்லா கதைகளிலும் பயன்படுத்துவதில்லை என்பதை பூதவேட்டை போன்ற கதைகளை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். கதையின் ஆரம்பத்தில் மிக வேகமான ஆறாக செல்லும் கதைசொல்லல் டெக்ஸ் சிறைக்கு கைதியாக ஆக்ட் குடுக்க செல்கிறார் எனும் இடத்தில் அணைகட்டி நின்று விடுகிறது. கைதியாக வாசலில் இறங்கும் டெக்ஸ், தலைமைக் காவலன் மாக்ஸனுடன் விடும் சவால்களும், பஞ்சுகளும் எரிமலை சீறல் எனில் அதன் பின் அவர் அடங்குவதாக நடிக்கும் இடங்களும், பின்னர் ப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் பாதிவழியில் கீழே விழுந்த ராக்கெட்டுகளாக உருவெடுக்கின்றன.

புரட்சியாளன் ப்ரெமொன்டின் நம்பிக்கையை வென்று, அவனுடன் சிறையிலிருந்து தப்பிசென்று, புரட்சியாளர்களின் பாச்றையை டெக்ஸ் கண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் வரையிலான நீண்ட பகுதியில் அதிரடி என எதுவும் இல்லை. ஒரே வள வள வள. கதாகாலேட்சேபம் ஒன்றில் போய் அமர்ந்துவிட்ட உணர்வு உருவாகி பூவாகி காயாகி கனியாகி விழுந்து விதையாகி விருட்சமாகி வரும்வரை பேசுகிறார்கள். ஒரு வழியாக எதிர்பாராமைகளின் சங்கமத்தால் ஒரு முடிவை தந்து கதையை முடித்து வைக்கிறார்கள். அதுவும் அந்த இறுதி துரத்தல் காட்சி போல ஒரு சலிப்பான அனுபவத்தை எந்த டெக்ஸ் கதையும் இதுவரை தந்தது இல்லை. அந்த கட்டத்தில் மந்திரவாதிபோல தன் சட்டைப் பையிலிருந்து டைனமைட்டுகளை எடுப்பார் பாருங்கள் ... அய்யா நாம் படிப்பது டெக்ஸ் கதை என்பது எமக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா!

கதாசிரியர் நிஸ்ஸி, ஜான் ப்ரெமொண்ட் பாத்திரம் வழியாக இலட்சியங்களை தொலைத்து விட்ட, தன்னை இன்னும் சரியாக அறிந்திராத ஒரு மனிதனை தீட்டி செல்கிறார். இக்கதையின் இரு ஆறுதல்களின் ஒன்று ப்ரெமொண்ட் பாத்திரமே. இருப்பினும் அப்பாத்திரத்தை இன்னும் மெருகுடன் தந்திருக்கலாம். கதையின் முடிவில் டெக்ஸும் தன் மனதில் ப்ரெமொண்ட் என்றும் இருப்பான் என உறுதியாக சொல்வார். அப்படி ப்ரெமொண்ட் என்ன செய்தான் என்பதை கதையை படித்து அறிவதே சிறப்பானது. நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை. அவ்வகையில் ப்ரெமொண்ட் டெக்ஸைப் போலவே படிப்பவர் மனதிலும் சிறிது காலமேனும் புரட்சியின் இறுதி வீரனாக நின்றிருக்க கூடிய ஒரு சிறு பாத்திரமே.

இதைதாண்டி இந்த கதையில் எந்த சிலிர்ப்பும், மயிர்கூச்சும், சுகாபனுபவமும் இல்லை. கதைக்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் காலின் வில்சன். பரட்டையின் பால்ய கால சித்திரவதைகள் தொடரில் சித்திரங்களில் அசத்தியவர் வில்சன். கதையில் வரும் டெக்ஸ் அங்காங்கே பரட்டைபோல தோற்றம் தருகையில் புத்தகத்தை தகனமாக்கிவிடலாமா எனும் உணர்வை தடுப்பது சிரமமாக இருந்தது. மலைக்காடுகள், மலைகள் எனும் நிலவெளியில் பின்னி எடுக்கிறார் வில்சன். டெக்ஸ், கார்சன் சக பாத்திரங்கள் என அப்பாத்திரங்களை தன் தூரிகையின் தீட்டல்களால் சிறப்பாக கம்பீரப்படுத்தி இருக்கிறார் அவர். இருப்பினும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அவர் சிறப்பாக அதற்குரிய உணர்வுகளை தர திணறியிருக்கிறார். பக்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பிடிக்கும் சித்திர கட்டங்களில் பெரும்பான்மையானவை ஏமாற்றத்தையே தருகின்றன இருப்பினும் இக்கதையின் இரண்டாவது ஆறுதல் அவர் சித்திரங்களே. டெக்ஸ் ஸ்பெசல் கதைவரிசைகளில் சுமாரிற்கும் கீழான சுவாரஸ்யம் கொண்ட கதைகளில் மீண்டும் ஒன்று இது என்பதை தவிர வேறில்லை. புரட்சியின் இறுதி வீரன் ப்ரெமெண்டா இல்லை தலை டெக்ஸா என ஒரு கேள்வி கதையை படித்து முடிக்கும்போது உங்களில் எழுந்தால் ...... சபாஷ் பாராட்டுக்கள், உங்களிற்கான நவஹோ எருதுக் கம்பள விருது அதிக தூரத்தில் இல்லை!








Saturday, September 13, 2014

ஏறக்குறைய ஒரு புனிதன்


ஜானதிபதி வாலி ஷெரிடானிடம் இருந்து பதக்கமும், ராணுவத்தில் பதவி உயர்வும் பெறும் Betty  யை சிறப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றிற்காக சான் மிகுவெலுக்கு வரும்படி பணிக்கிறார் ஜெனரல் காரிங்டன். சான் மிகுவெலுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்யும் விமானம் கடத்தப்படுகிறது ... அடர் காடுகளிற்குள் SPADS விசேட அதிரடிப்படை பிரிவிலிருந்து விலகிச்சென்ற ராணுவத்தினர் கைகளில் பணயக்கைதிகள் ஆகிறார்கள் ஜெனரல் காரிங்டன் குழுவினர் ...

Betty யின் பெயரை தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி என்று எழுத வேண்டும். பெட்டி நாயகியின் பெயர் என்றால் வெட்டி என XIII - Mystery - Betty Barnowsky  ஆல்பத்திற்கு பெயரை வைக்கலாம். XIII மிஸ்டரி கதைவரிசையின் இந்த ஏழாவது ஆல்பத்தின் கதையை Joel Callède ம், சித்திரங்களை Sylvain Vallée ம் உருவாக்கியுள்ளார்கள்.

ஜனாதிபதியிடமிருந்து அசாத்திய வீரச்செயல்களிற்கான பதக்கம், அதன்பின்பாக ராணுவத்திடமிருந்து வரும் பதவியுயர்வு அதன் கூடவே வரும் அதிரடி நடவடிக்கைக்கான அழைப்பு என ஆரம்பமாகும் கதை, Betty க்கும் அவள் சகோதரிக்குமிடையில் இருக்கும் முறுகிய உறவையும் காட்டுகிறது. ஏன் அந்த இணக்கமற்ற சகோதர உறவு காட்டப்படுகிறது என்பதை வாசிப்பின் முடிவில் கேள்வியாக்கினால் Betty க்கு ஆதரவாக அன்பாக யாரும் இல்லை, அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை. அதிரடி நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக Betty தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறாள்.

கருக்கலைப்பு என்பது Betty க்கு புதிதானது அல்ல. அதன் மூலம் அவமானங்களை அவள் வாழ்வில் சந்தித்து கடந்தே வந்திருக்கிறாள். கையில் ஒரு டாலர்கூட இல்லாது வீதிவீதியாக அவள் அலையும் ந்யூயார்க்கின் பனிவிழும் ஒரு இரவிலேயே அவள் ராணுவத்தில் இணைந்து கொள்வது எனும் முடிவிற்கு வருகிறாள். தற்கொலைக்கு பதிலாக அவள் ராணுவத்தை தெரிவு செய்து கொள்கிறாள். குடும்பமும், சமூகமும் அவளுக்கு வழங்க முடியாத ஒன்றை அவள் ராணுவத்தில் பெற்று கொள்கிறாள். அல்லது அவ்வாறான ஒரு பிரமையை அவள் தன்னுள் உருவாக்கி கொள்கிறாள். பெண்ணாக வெளியுலகில் ஒரு வாழ்வை அவளால் உறுதியாக அடையாளப்படுத்த  முடியாது போனாலும் ராணுவத்தில் பதவிகளின் உச்சங்களை தொட்டு அமரும் ஒரு வாழ்க்கை அவள் முன் இருக்கவே செய்கிறது. ஆனால் ராணுவத்தின் இன்னொரு முகத்தையும் அவள் காணும் வாய்ப்பு தென்னமரிக்க அடர்காடுகளில் அவள் அதிரடி நடவடிக்கைகளில்  முன்பு இயங்கியபோதும் பின் பணயக்கைதியாக இருக்கும்போது கிடைக்கவே செய்கிறது. ஆனால் தாய்மை என்பது பெண்களிற்கு உணரச்செய்வது வேறொன்று. அதன் அர்த்தத்தை கதையில் மேஜர் ஜோன்ஸ்,  மூன்றுமுறை கருக்களை கலைத்த அனுபவம் கொண்ட Betty க்கு அடையாளம் காட்டுகிறாள். ஜோன்ஸ் தன் வயிற்றில் பட்ட காயம் ஒன்று அவள் என்றுமே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவளாக அவளை ஆக்கிவிடுகிறது என்பதை ஜோன்ஸ் தெரியப்படுத்தும்போது தன் கருவை கலைக்ககூடாது என்பதில் Betty உறுதியாகி விடுகிறாள்.

ஆகவே உணர்ச்சிகரமான இந்த சூழ்நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். கருவுற்ற ஒரு இளம்பெண், அடர்காடுகளில் தறிகெட்டு வாழும் முரட்டு மனிதர்கள் கையில் பணயக்கைதியாக! எப்படி அவள் அவர்கள் பிடியில் இருந்து தப்ப போகிறாள்? தன் கருவை அவள் எப்படி இவ்வகையான சூழலில் காப்பாற்ற போகிறாள்? இந்தக் கேள்விகளுக்கு கதாசிரியர் ஜொயெல் காலெட்டின்  கதை சொல்லும் பதில்கள் ஆழமும், அர்த்தமும் நீர்த்து போனவையாக உள்ளன. மிக உணர்ச்சிகரமாகவும், மனதை தொட்டுவிடும் வகையிலும் உருவாக்கியிருக்க வேண்டிய கதையை முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.

Betty யின் கருவுக்கு காரணமானவர் யார் என்பதை நண்பர்கள் இலகுவில் ஊகித்து விடலாம்.  XIII தொடரில் அதிக பெண்களை புணர்ந்தவர் யாரோ அவரே அக்கருவின் பிரம்மன். அதுகுறித்து கண்டிப்பாக அவருக்கு நினைவில் ஏதும் இல்லை. அவரின் அந்த நினைவாற்றல் மிகவும் பிரசித்தமானது என்பதை இங்கு சொல்லும் அவசியம் உண்டு. ஆனால் Betty ன் மனம் அவள் கருவுற்ற செய்தியை அறியுமுன் நாடும் உள்ளம் Armand de Preseau உடையதாக சொல்லப்படுகிறது. ஒரு இரவே அவன் மாளிகையில் தங்கினாலும் ஆர்மாண்ட் அவள்மீது பதித்த அந்த கனிவான பார்வையின் பின் அவள் உணர்ந்ததும், மெல்ல நடக்கும் தயக்கத்தின் மயக்கத்தில் புரிந்ததும் என்ன? எவ்வாறு அவள் தன் புகலிடத்தின் முகவரியை முன்னுணர்ந்தாள். அவள் விழிகள் இதயத்தின் ஆழங்களில் நீந்தும் உணர்வுகளை ஆழச்சென்று காணும் ஆற்றல் கொண்டவையா. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில். அதே சமயம் கதையின் சித்திரங்கள் முழுதும் அதகளம் என்றும் இங்கு எழுதிவிட முடியாது.

ஜெனரல் காரிங்டன் பெண்டகனின் முக்கிய அதிகாரி. அவரை கடத்தி பணயக்கைதியாக்கி அமெரிக்க அரசிடமிருந்து சில விடயங்களை பெற்றுக்கொள்ள விழைபவர்கள் எப்படியான புத்திசாலிகளாக இருக்க வேண்டும். ஆனால் தென்னமரிக்காவின் அடர்காடுகளில் SPADS ஐ விட்டு விலகி வந்து ஆட்சிகவிழ்ப்பில் பங்கேற்றவர்களாக காட்டப்படும் ராணுவத்தினரிடம் புத்திசாலித்தனத்தை தவிர பாக்கி எல்லாமும் இருக்க்கிறது. குரூரம், வெறி, வக்கிரம், வன்முறை என பட்டியலிட்டால் இவற்றை எல்லாம் விஞ்சி செல்லும் முட்டாள்தனமே அவர்களிடம் கதையில் வீர்யமாக எழுந்து நிற்கிறது... இப்படியான முட்டாள்களிடமிருந்து தப்பி செல்லாவிடில் காரிங்டன் ஜெனரலாக இருந்து என்ன பயன் ஆனால் தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன...

திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?! கதையில் வரும் ஒரே மனதைதொடும் மனிதர் ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே. ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன். ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே Betty தன் வாழ்வில் கண்ட அற்புதம். XIII Mystery கதை வரிசையில் மீண்டும் ஒரு மொக்கை.

Sunday, August 10, 2014

திகில் பள்ளதாக்கு

வதனமோ சந்த்ர பிம்பமோ - 16 

எல்லாம் வல்ல சக்தியானது மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும் திறமைகளுடன் இயங்க வைத்திருந்தாலும் அந்த திறமைகள் மீற முடியா எல்லை என ஒன்று எப்போதும் உண்டு. அந்த எல்லைகளை அசாதரணமாக மீறும் மனிதர்களை வரலாறு பெருமையுடன் நினைவுகூர்வதுண்டு. சுறா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்து கண்ணீர் விட்டு நெகிழும் ஒரு ரசிகனை வரலாறு தன் நினைவில் பொதிந்து காலம் கடந்து தூக்கி செல்லுமா எனும் கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்தால் எல்லாம் வல்ல சக்தியையே ஆட்டிவிடக்கூடிய விடை ஒன்று அங்கு உருப்பெறும். ஆனால் வரலாறு கண்டிப்பானது , கறாரானது, சில நியதிகளுக்குட்பட்டு தன் வரிகளில் மனிதர்களின் பெயர்களை பதிப்பது. ஆகவேதான் வரலாற்று ஏடுகளில் மேற்கூறப்பட்ட போன்ற மனிதர்களின் சாதனைகள் இடம்பெறுவது இல்லை. பறவைக்கு பறக்கும் உயரம் எல்லை, மனிதனுக்கு அவன் கால்கள் இறக்கும் இடம் எல்லை, ஆனால் எம் மேல் ஆழியின் பிரதிபலிப்பாய் படர்ந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் காலவெளிக்கு எதுதான் எல்லை? சொன்னவர்கள் யார்? சொல்லப்போபவர்கள் யார்? வரலாற்றில் அவர் பெயர்கள் பதியும் நாள் எது? ஆனால் சாதாரண டெக்ஸ் வாசகன் நான் பெருமேற்கின் வீரசாகசவினோத எல்லைகளை தன் ஒவ்வொரு பயணத்தின்போதும் மீறிச்சென்று வரலாற்றின் வரிகளை சுழித்து நழுவி பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தின் மர்மப்புன்னகையில் கலக்கும் அந்நாயகனின் இன்னொரு வரி எழுத வந்தேன்.

நான் இன்று எழுதப்போகும் வரி TEX Special n°9 ல் இடம்பெற்றிருக்கும் கதையான La Vallée de la Terreur என்பதன் கதையை சொல்லும். பயமும், திகிலும், மர்மமும், இருளும், வஞ்சமும் பிரம்மாண்டமான கோட்டைகளினுளும், மலைக்காடுகளிலும், வான்வாய்திறந்து பொழியும் பெருமழையினுளும், நிலவு இரவை தன் வெள்ளிரசக்கரங்களால் நனைக்கும் இரவுகளிலும் ஓயாது தொடர்ந்து மனிதர்களின் வாழ்வை அவற்றின் இருள் ஊறிய கரங்களினுள் அள்ளி அடக்க துடிக்கும் நிகழ்வை சொல்லும்.

யுபா பள்ளத்தாக்கில் கனிம அகழ்வை நடாத்தி கொண்டிருக்கும் சுரங்க உரிமையாளர்களிற்கு ஒரு மர்ம அமைப்பு எச்சரிக்கைகளை விடுக்கிறது. அந்த பிரதேசத்தை விட்டு, தம் சுரங்கங்கள் , சொத்துகள் என்பவற்றை விட்டு அந்த சுரங்க உரிமையாளர்கள் நீங்கிச் செல்லாவிடின் மர்ம அமைப்பு தந்த எச்சரிக்கையானது மரணசாசனமாக மாறிவிடுகிறது. இந்த மர்ம அமைப்பின் பெயர் அவெஞ்சர்ஸ். யுபா பள்ளத்தாக்கின் சுரங்க உரிமையாளர்களை குறி வைக்கும் இந்த அமைப்பு, அங்கு வாழும் மனிதர்களின் மனங்களிலும் திகிலை குடியேற்றி வைக்கிறது. சுரங்க உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை விற்று விட்டு விலக, சுரங்கத்தில் பணியாற்றிய மனிதர்கள் வேலைகளை இழக்கிறார்கள். வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் அவர்களும் பள்ளத்தாக்கை விட்டு தம் வாழ்வின் நீட்சிக்காக வேறு இடம் செல்ல தயாராகிறார்கள். இவ்வாறாக யுபா பள்ளத்தாக்கை மனிதர்கள் அதிகம் புழங்கிடாத ஒரு இடமாக மாற்ற அவெஞ்சர்ஸ் அமைப்பு முனைப்புடன் செயல்படுகிறது.

யுபா கிராமத்தின் ஷெரீஃபோ அவெஞ்சர்ஸின் நடவடிக்கைகளை தடுக்க முடியாதவராக இருக்கிறார். மிக கச்சிதமான திட்டங்களுடன் தம் நடவடிக்கைகளையும் கொலைகளையும் நடாத்தி செல்லும் அவெஞ்சர்ஸை முறியடிக்கும் திறமையும், ஆட்பலமும் அவரிடம் இல்லை. கவர்னர் அனுப்பி வைத்த இரு விசாரணை அதிகாரிகளும் அவெஞ்சர்ஸ் அவர்களுக்கு வழங்கிய மிரட்டல்கள் காரணமாக பள்ளத்தாக்கைவிட்டு விரைவாக வெளியேறி அப்பகுதிக்கு மீண்டும் வருவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இவ்வகையான ஒரு தருணத்தில் மினா ஷட்டர் எனும் பெண்ணிற்கு அவெஞ்சர்கள் எச்சரிக்கையை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய எச்சரிக்கையின் பின்பாகவும் மினா ஷட்டர் அப்பகுதியை விட்டு விலகி செல்ல முன்வருவது இல்லை. தன் தந்தை ஜான் ஷட்டரினை கவனிக்கும் முக்கிய பொறுப்பு தன் உயிரைவிட முதன்மையானது என்பதால் அவெஞ்சர்ஸின் எச்சரிக்கையை அவள் உதாசீனம் செய்து விடுகிறாள். ஆனால் மினாவின் கணவன் உல்ரிச் தன் நண்பனும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பொலிஸ் அதிகாரியுமான டாம் டெல்வினிடம் தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறான். டாம் டெல்வின் நேரடியாக இச்சிக்கலில் தலையிட முடியாத நிலையில் பெருமேற்கின் பெரும் சிங்கம் டெக்ஸை இவ்விவாகரத்தை பொறுப்பேற்க வேண்டுமேன வேண்டுகோள் வைக்க சிங்கம் அதை ஏற்று கொண்டு கார்சனுடன் புறப்படுகிறது.

கதை ஆரம்பிக்கும் பக்கங்களே திகிலை வாசகருக்குள் நுழைத்து விடுவதில் சுலப வெற்றி கண்டு விடுகிறது. மலைக்காட்டு பிரதேசம் ஒன்றில் அடைமழை அடித்து பெய்ய அந்த மழையின் கோடுகளோடு கலந்து வரும் அவெஞ்சர்ஸ் கொலைகாரர்களின் தோற்றங்களும், அசைவுகளும், இருளுடனும், மின்னலுடனும் கலந்து பார்வையில் அச்சத்தின் மையை கரைக்கின்றன. வானில் வெட்டும் மின்னல் போலவே வடிவம் கொண்ட அவெஞ்சர்களின் கத்தியும் மின்னல் ஒளியில் பிரகாசித்து மனிதர்களின் உடலை ஊடுருவி வெளியேறுகிறது. அவெஞ்சர்கள் துப்பாக்கிகளை உபயோகிப்பது இல்லை என்பது அவர்களின் தனித்துவமான பாங்காக கதையில் சொல்லப்படுகிறது. இக்கதையில் டெக்ஸும், கார்சனும் உயிர்பிழைப்பதற்குகூட அதுவே காரணமாகவும் இருக்கிறது என்பதை டெக்ஸின் தீவிர வாசகர்கள் கதை நகர்வில் புரிந்து கொள்வார்கள். அதாவது பெருமேற்கின் ஒதுக்குப்புற பள்ளத்தாக்கு ஒன்றில் வேலையற்று அலையும் அல்லக்கை குழு ஒன்றுடன் டெக்ஸ் இங்கு மோதுவது இல்லை. ஹவாய் பழங்குடியினரான ஹனாக்குகள், மற்றும் குடியேறிகளான சீனர்கள் இவர்களால் ஆனதே அவெஞ்சர்ஸ் அமைப்பு. இங்கு ப்ரூஸ் லீயின் மூதாதையரோடு டெக்ஸ் மோதுகிறார் என்பதை வரிகளிற்கு இடையில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். காலந்தோறும் கடலோடி வலிமைபெற்ற திடமனிதர்கள் ஹனாக்குகள். அவர்கள் உடல்கள் எல்லாம் நடமாடும் ஓவியங்கள். உடலில் பச்சை குத்துவது என்பது அவர்கள் மரபு. அந்த பச்சையே அவர்களுக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தை தந்து அச்சத்தையும் திகிலையும் கதையில் உபரியாக கலக்கிறது. இதை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இக்கதைக்கு சித்திரங்களை செதுக்கியிருக்கும் மாக்னஸ் எனும் பெயரில் பரவலாக அறியப்படும் சித்திரக் கலைஞரான Roberto Raviola.

உண்மையில் இக்கதையை காப்பாற்றுவதே அவர் சித்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இக்கதை வெளியாகியபோது அவர் உயிருடன் இல்லை என்பது வேதனையான ஒரு தகவல் [1996]. பொனெலி டெக்ஸ் கதைக்கு பணியாற்ற மாக்னஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது கெடுவாக தந்த காலம் மூன்று வருடங்கள். ஆனால் மாக்னஸ் எடுத்துக் கொண்டதோ ஏழு வருடங்கள். அவர் அர்ப்பணிப்பு அவ்வாறானது. மலைகளில் இரவும், பகலும் ஒரு போன்ற சித்திரங்களை அளிப்பது இல்லை எனக் கூறும் மாக்னஸ், தான் வாழ்ந்திருந்த வனப்பகுதியான காஸ்டெல் டெல் தியோவில் இரவு, பகல், அந்தி, புலரி என இயற்கையை அவதானித்து, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெகுவாக அது எடுக்ககூடிய காலத்தை தந்து இக்கதையை பூரணமாக்கி தந்திருக்கிறார். இக்கதையின் சித்திரங்களை நீங்கள் பார்க்கும்போது மாக்னெஸின் அர்ப்பணிப்பு உங்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும். மாக்னெஸை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டதற்காக அமோசன் காட்டிலிருந்து அவர் மரண செய்தியை அறிந்த பொனெலி எழுதிய கடிதத்தில் தன் வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார். இக்கதையில் வரும் ஒவ்வொரு இலையிலும் மாக்னெஸ் தன் அர்ப்பணிப்பை, சித்திரம் என்பதன் முழுமையைக் கலைஞன் காணும்வரை நடாத்தக்கூடிய யுத்தத்தை பதித்து சென்றிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் கார்சன் வினோதமான ஒரு தோற்றத்தை எம்மனதில் வரையலாம். வழமைக்கு மாறாக விரியும் கார்சனின் விழிகளில் வியப்பு, அலட்டல், பொருமல் என உணர்வுகளும் மிகையாகவே விரியும். கன்னங்கள் ஓட்டிய, இறுக்கமான மிடுக்கான உடல் கொண்ட டெக்ஸ்,  கதையில் அவர் உடல் காட்டும் மொழி, அவர் அதிரடி ஆக்சன் என அனைத்தும் வேறுபட்டு எதார்த்தத்திற்கும் கனவிற்கும் இடையிலான ஒரு தளத்தில் கதையின் பாத்திரங்கள் மிதப்பது போன்ற உணர்வை மாக்னஸின் சித்திரங்கள் உறுதியாக பதிக்கின்றன.

மாக்னஸ் தன் சித்திரங்களில், மீன்களின் சிறு செதில்கள் வலையாக விரிவது போன்ற வடிவில் பின்னணிக் காட்சிகளையும், வரையப்படும் பொருட்களின் ஒளிச்செறிவுகளையும் வரையறுக்கும் பாங்கை கொண்டவராக இருக்கிறார். அந்த சிறு செதில்கள், அல்லது வலைக்கண்ணிகள் இலைகளாக, கிளைகளாக, மரங்களாக, வனமாக, மலையாக, பள்ளத்தாக்காக, இருளாக, அதை எதிர்க்கும் ஒளியாக என மந்திர வித்தை காட்டி விளையாடுகிறது. இரவொன்றின்போது இரவையும், ஒளியையும் அவற்றின் எதிர்குணங்களையும் மாக்னஸ் பாகுபோல பக்கங்களில் வடித்திருக்கிறார். தன்னையும் ஒரு சிறு பாத்திரமாக அவர் கதையில் வரைந்திருக்கிறார். சில சமயங்களில் நாடகமொன்றின் மிகையான நடிப்புபோல உணர்வைதரும் அவர் சித்திரங்கள் மறுகணம் பச்சோந்தி ஒன்றின் மறையுடல் போல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கின்றன. ஒரே தாவலில் இலகுவாக அவர் சித்திரங்களை தாண்டி செல்ல முடியாது. கூடாது. அது முறையல்ல. அவர் உழைப்பு நேரத்தை எடுத்து கொண்டதுபோல அவர் உழைப்பை ரசிக்கவும் ஒருவர் நேரத்தை தந்தேயாகவேண்டும். அதுதான் நாம் அவருக்கு தரக்கூடிய ஒரு அஞ்சலியாகவும் இருக்ககூடும்.

உல்ரிச்சுடன் யுபா பள்ளத்தாக்கை அடையும் டெக்ஸ் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார். அவர் மோதுவது அவர் போலவே ஒரு உறுதியான மனிதனுடன் என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆகவே மேலும் உறுதியுடனும், தன் உள்ளுணர்வின் துணையுடனும் அவர் தன் விசாரணைகளை தொடர்கிறார். கதையில் மினாவின் தந்தையான ஜான் ஷட்டரின் வரலாறும் உண்டு. நிஜமாக நடந்த கதையது. சுவிஸிலிருந்து புதிய உலகிற்கு வந்து கலிபோர்னியாவின் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட ஒரு மனிதன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு கனிமத்தால் இழந்து நின்ற சோகமான கதையது. அந்தக் கனிமம் தங்கம். பல மனிதர்களை செல்வத்தின் உச்சபடிகளுக்கு உயர்த்தி சென்ற தங்கமானது ஜான் ஷட்டரை அப்படிகளின் கீழ் போட்டு மிதித்தது என்பது என்ன ஒரு முரண்நகை. மெக்ஸிக்க அதிகாரிகளின் அனுமதியுடன் அவன் உருவாக்கிய பெரும் குடியேற்ற நிலம், தங்கத்தை வேட்டையாட வந்தவர்களாலும், புதிய சட்ட மாற்றங்களாலும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, அவன் குடும்பம் அழிக்கப்பட்டு தன் ஒரே மகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி எண்ணி ஒடுங்கிப் போகும் ஜான் ஷட்டரின் உயிரின் மூச்சு நின்றிருப்பது வஞ்சம் எனும் சித்திரத்தின் முழுமையைக் காணும் நாளிற்காக.

ஆனால் தன் மகளிற்கே கொலை எச்சரிக்கை அனுப்பும் அளவிற்கு கொடியவனா ஜான் ஷட்டர்? டெக்ஸ் கேட்பதும் இதைத்தான். இதனாலேயே அவர் வேறு கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். அவர் விடைகள் இட்டு செல்லும் இடங்களும், மனிதர்களும் அவரை வேரறுக்கவே விழைகிறார்கள். ஜான் ஷட்டர் அவெஞ்சர்ஸின் தலைவனாக இருக்க முடியாது என சொல்லும் டெக்ஸின் உள்ளுணர்வு அவரை பொனெர் எனும் மனிதனுடன் எதிர்கொள்ள வைக்கிறது. டெக்ஸ் நீ கில்லி ஆனால் நான் கில்லிக்கு கில்லி என்பவனாகிறான் பொனெர். பாதாம் விழிகள் கொண்ட சீன அழகி மே லிங்கின் அழகினூடு அடங்கி அடிபணியும் ஜான் ஷட்டர் மேலும் மர்மத்தை கூட்ட அழகான பெண்ணாக இருந்தாலும் தன் கடமையிலிருந்து வழுவாத டெக்ஸ் சீன அழகியின் பின் மர்மங்களின் இருள் முடிச்சை அவிழ்க்கும் வழியை தேடுகிறார். ஆனால் அவருக்கு கிடைக்கும் பதில்கள் அவரையும், கார்சனையும் ஏன் அவர் யுவா பள்ளத்தாக்கிற்கு வரக்காரணமாக இருந்த மினா, உல்ரிச் தம்பதிகளையும் மரணத்தின் அருகாமைக்கு இட்டு செல்ல வீறாப்புடன் போராடுகிறது.

ஆனால்... ஆனால் கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி கதையின் முதற்பாதியில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்களை எல்லாம் கதையின் பிற்பாதியில் சரித்து விடுகிறார். ஆடை ஒவ்வொன்றாக அவிழ, அவிழ உள்ளே ஒருவன் எதிர்பார்த்திருந்த இளமை அழகு முதுமை தோற்றம் காட்டினால் ஏற்படும் ஏமாற்றமே கதையின் இறுதிப்பகுதி வழங்கும் அனுபவமாகும். கில்லிக்கு கில்லி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று தொண்டையின் நரம்புகள் புடைக்க, விழிக்குழியிலிருந்து விழிபிதுங்க வசனம் பேசியவர்கள் எல்லாம் மழை நின்றபின் இலையிலிருந்து விழும் நீர்த்துளிபோல மாறுவது இயல்பாக இல்லை. விறுவிறுப்பான திருப்பங்களையும், எதிர்பாரா சம்பவங்களையும் தருவதற்கு பதிலாக புளித்துபோன முற்றுகையை வாசகருக்கு பரிமாற ஆரம்பித்து அதில் படுமோசமாக வழுக்குகிறார் கதாசிரியர் நிஸ்ஸி. தீவிர டெக்ஸ் ரசிகர்கள் வேண்டும் அம்சங்களை தவிர்த்து ஒரு திகில் கலந்த மர்மத்துடன் கதையை அவர் கதையை முற்பாதியில் சொல்லியிருந்தாலும் அவை எல்லாம் மலிவான நாடகத்தனமாக கதை எடுக்கும் திருப்பத்தில் அடிபட்டு போகின்றன. மாக்னெஸின் அற்புதமான சித்திரங்களுக்காகவே பேசப்படும் கதை இது. அது உண்மை அன்றி வேறில்லை. நிஸ்ஸியின் சுமாரிற்கும் கீழான கதைகளில் இக்கதையும் ஒன்று என்பதும் உண்மையே.



Saturday, July 26, 2014

க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்திருக்கும் பனிசிஸ்தானில் தீவிரவாதிகளின் குகையொன்றில் கறுப்பு கரும்பு கட்டழகு இரும்பு  ஜோன்ஸை சிறைமீட்க வந்து சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்லேனை தம் வழிக்கு கொண்டு வருவதென்பது சிரமமான ஒன்றாகவே இருக்கும் என்பது USAFE அறியாதது அல்ல. ஆகவே அதற்காக அவர்கள் ஒரு சிறு விளையாட்டை தங்கள் ஏஜெண்ட் யூலியானா மூலம் ஆட வைப்பார்கள்.

மறதி அங்கிள் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறையறைக்கு வெளியே அமெரிக்காவின் வரைபடம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும். முகத்தில் மக்லேன் தழும்பு போட்டாலும் அழகைக் கீழே இன்னும் போடாத யூலியானா பெண்களை கவுரவிக்கும் வகையில் அவ்வரைபடத்தை நோக்கி கையால் வீசக்கூடிய ஒரு சிறு அம்பை வீசும்படியாக காலனல் ஜோன்ஸை கேட்பாள். சற்று தயங்கும் கறுப்பு கமலம் தன் வெண்டை விரல்களால் நிறுத்தப்பட்ட அமெரிக்காவை நோக்கி சிறு அம்பை வீசும். அந்த அம்பு சென்று தைக்கும் இடம் பெரும்பாலான அமெரிக்கர்களே அறியாத ஒரு தொலை நகராகவும் இருக்கும். இரு நாட்களின் பின் அந்நகரில் பள்ளி மாணாக்கர்களின் பேருந்து வண்டியில் ஏறும் ஒரு மனிதன் சராமாரியாக குழந்தைகளை நோக்கி துப்பாக்கியை இயக்க அச்சம்பவம் உலகெங்கும் காட்சி ஊடகங்கள் வழி பயணிக்கும். அப்பயணம் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் மலைக்குகையையும் வந்து தன்னை காட்சிப்படுத்தும்.

தமது உயிரை துச்சமென மதித்து தியாகம் செய்திடக்கூடியவர்கள்தான் மக் அன்ட் கம்பனி ஆனால் அப்பாவி உயிர்கள் பலியாக தாம் காரணமாக இருக்ககூடாது என்பதிலும் அவர்கள் உறுதியுடையவர்களே. வேறு வழியின்றி யூலியானாவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருகிறார் மக்லேன். இவ்வாறுதான் XIII ன் இரண்டாம் சுற்றின் மூன்றாவது ஆல்பமான Retour à Greenfalls ஆரம்பிக்கிறது. உலகமெங்கும் வெகுவாக தேடப்பட்டு வரும் நபரான மக்லேன் எவ்வாறு அமெரிக்க மண் திரும்புகிறார் என்பதற்கு நீங்கள் இப்பதிவை படிக்க வேண்டியது அவசியமில்லை பார்த்தாலே போதுமானதாகும். அவர் திரும்பும் முறையில் பல பொருட்கள் அமெரிக்க மண்ணை வந்து சேர்ந்திருக்கின்றன. USAFE அமைப்பின் செல்வாக்கு பாயும் இடங்களை கதையில் பார்க்கும்போது அவர்களிற்கு இது ஒரு சாதாரண விடயமாகவே இருக்கும். முன்னைய ஆல்பத்தை போல மக்லேன் வெகு இயல்பாக விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிரித்தபடியே தாண்டி வரவில்லை எனும் நிம்மதியுடன் கதையை தொடர இங்கு வாய்ப்பு தரப்படுகிறது.

அதே சமயத்தில் கவர்ச்சி குண்டு Betty  அமெரிக்க மண்ணில் தன் தேடலை தொடர்கிறாள். சான் பிரான்ஸிஸ்கோ சென்று சில தகவல்களையும், நிழற்படங்களையும் சேகரிக்கிறாள். சண்டா மொனிக்காவில் NO MEN NO BRA எனும் கவர்ச்சி விடுதியில் ஜோனதன் ப்ளை பயணித்த பஸ்ஸின் ட்ரைவர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்கிறாள். மக்லேனுக்கு பரிசாக கிடைக்கும் ஒரு முத்தத்தையும் தன் இதழ்களில் ஏந்திக் கொள்கிறாள். காரை வாடகைக்கு எடுத்தாலும், விமானத்தை வாடகைக்கு அமர்த்தினாலும் தன் சொந்த பெயரில் உள்ள கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்கிறாள். இது FBI ன் கணிணிகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. வழமைபோலவே உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெரும்பாலான சமயங்களில் பெட்டி தப்பி செல்கிறாள். அவளை கோட்டை விட்ட FBI ஏஜெண்டுகள் உள்ளூர் பொலிசாரின் திறமையின்மையை விமர்சித்தவாறே தங்கள் கோட் சூட் மீது கெட்ச்சப் கொட்டாதவாறு பர்கர் சாப்பிட்டு பெட்டியை தேடி ஓடி மீண்டும் அவளை கோட் சூட் கசங்காது கோட்டை விடுகிறார்கள். இக்கதை FBI மற்றும் அமெரிக்க புறநகர் பொலிசாரை கிண்டல் அடிக்கும் நோக்கம் கொண்டதா எனும் சந்தேகம் எழுவது இவ்வகையான சமயங்களில் இயல்பான ஒன்றாகி விடுகிறது.

அமெரிக்க மண் வரும் மக்லேனுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவர் நாடிச் சென்ற உளவியல் மருத்துவியான சூசான் லெவின்சன் USAFE உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டி அழுத்தம் தரப்பட்டிருப்பதை அவன் அறிகிறான். சூசானும் அவள் தந்தையும் இணைந்து நடத்தும் பரிசோதனைகளால் நினைவுக்கு கொண்டு வரமுடியாதிருந்த தன் கடந்தகாலத்தின் பகுதிகளுக்கு மீண்டும் செல்ல ஆரம்பிக்கிறான் மக்லேன். கதையின் இந்த ஆல்பத்தில் ஏன் USAFE  மக்லேனின் நினைவுகளை துழாவி மீட்க விரும்புகிறது என்பது தெளிவாக்கப்படுகிறது. மேஃப்ளவர் கப்பலில் பயணித்தவர்களிற்கிடையே ஏற்பட்ட சில விரும்பதகாத நிகழ்வுகள், அவை எவ்வாறு காலம் காலமாக ஒரு தேடலை முக்கியமானதாக ஆக்கின, இத்தேடலிற்கும் மக்லேனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்பன கதையின் ஓட்டத்தில் அம்பலமாக்கப்பட்டு விடுகின்றன. மக்லேன் இன்னும் ஓட வேண்டும் என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. அதற்கேற்ப மக்லேனும், பெட்டியும் தனித்தோ அல்லது சேர்ந்தோ ஓடுகிறார்கள். அதிரடிப்படை நுட்பங்களை உபயோகிக்கிறார்கள். ரகசியமொன்றினை அறிய க்ரீன்பால்ஸ் திரும்புகிறார்கள். ஷெல்பர்ன் குடியிருப்பு அமெரிக்க பூர்வகுடிகளை அமெரிக்க இனவாதத்திலிருந்து மீட்கிறார்கள். அவர்கள் தேடி வந்த ரகசியம் அவர்கள் கைகளுக்கு வருவதற்காக அவர்கள் சில காயங்களை தாங்கிக் கொள்கிறார்கள்.

முடிவாக மேலும் ஒரு முடிச்சுடன், மக்லேன் ஓட வேண்டி இருக்கிறது. புனித ஆண்ட்ரு அனாதைவிடுதியில் சிறுவயது மக்லேனை தேடி வந்து க்ரீன்ஃபால்ஸிற்கு அழைத்து சென்ற அம்மனிதனைத் தேடி, USAFE க்கு எதிராக இயங்கும் வேறு அமைப்புக்களை தேடி வாசகர்களும் ஓட வேண்டிய நிலைக்கு கதையின் இறுதியில் தள்ளப்படுகிறார்கள். வழமையான XIII கதை வரிசைக்குரிய ஆழமற்ற கதைசொல்லல், தர்க்கமற்ற சம்பவ கோர்வைகள் எனும் பராம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டாலும் கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. சித்திரங்களில் ஜிகுனோவ் சந்தேகமேயில்லாமல் அடி பின்னி இருக்கிறார். அழகுகளின் மார்பழகுகளை காட்சியாக்கும் வழக்கம் இரண்டாம் சுற்றில் இல்லை என்பதும் கதையில் தெளிவாகிறது. XIII ல் புதுமையான ஆச்சர்யங்களை அறிமுகம் செய்யமாட்டார்களா எனும் கேள்விக்கு இந்த ஆல்பமும் பிடிவாதமாக எதிர்மறை பதிலொன்றையே தந்து நிற்கிறது.

Saturday, June 21, 2014

சட்டம் ஸ்டார்க்கர் கையில்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 15

நிக் லூயிஸ் எனும் கேடியை தேடி தெற்கு கொலராடோவிற்கு வரும் டெக்ஸ் வில்லர் வழியில் தறிகெட்டு ஓடிச்செல்லும் ஒரு கோச்சு வண்டியை தற்செயலாக காண நேரிடுகிறது. குதிரைகள் ஓடும் ஓட்டத்திலிருந்தே கோச்சு வண்டியில் ஏடாகூடமாக ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கும் பெருமேற்கின் இளஞ்சிங்கம் கோச்சு வண்டியை விரட்டி செல்கிறது. சிங்கத்தின் ஊகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோலவே கோச்சு வண்டியின் ஓட்டுநர் தன் இருக்கையிலேயே பரமபதம் சென்று இருக்கிறார். பலத்த போராட்டத்தின் பின்பாக வண்டியை நிறுத்தி ஆராயும் டெக்ஸ் வில்லர் வண்டியினுள் பயணிகள் எவரும் இல்லை என்பதை காண்கிறார். ஆனால் பெருமேற்கின் துடிதுடிப்பான ஷெர்லாக்கான டெக்ஸின் மனம் பரபரக்கிறது. கோச்சு வண்டியின் கூரையில் இருக்கும் பயண லக்கேஜ்களுக்கு சொந்தமானவர்கள் எங்கோ இருந்தே ஆக வேண்டும் என டெக்ஸிடம் அது முன்வேனில் செங்குருவிபோல டிவிட் சொல்கிறது. வண்டி வந்த பாதையின் தடத்தில் செல்லும் தல டெக்ஸ் அவ்வண்டியில் பயணித்த பயணிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கொள்கிறார். படுகொலை நடாத்தப்பட்டிருக்கும் பாணி அவர் தேடிவந்த கேடியான நிக் லூயிஸின் கைவண்ணத்தை ஒத்திருப்பதையும் அவதானித்து கொள்கிறார். அந்த தருணத்தில் சட்டம் மூன்று குதிரைகளில் டெக்ஸை நோக்கி விரைந்து வருகிறது.... வந்து கொண்டிருக்கும் சட்டத்திற்கு பெருமேற்கின் நீதிதேவனான டெக்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாசக யூவர் ஆனர்கள் குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அழகான முன்வேனிலின் இதமான காற்றில் சுருளிச் சூறாவளியாக பறக்கும் கோச்சு வண்டியில் சடலமாக அதன் ஒட்டுனர். TEX MAXI N° 16  ன் கதையான Le Loi de Starker  ன் திகிலான, சூடான, பரபரப்பான, இளமையான அறிமுகத்திற்கு மேலும் சூடேற்றவது போல அமைகிறது டெக்ஸ் வில்லர் அந்த கோச்சு வண்டியை துரத்தி செல்லும் காட்சி. ஆறு குதிரைகள். காற்றிற்கு வேகத்தை கற்பிக்கும் பேராசிரியர்கள் போல விரைந்து கொண்டிருக்கின்றன. அவ்வண்டியை எப்படியாவது நிறுத்த அதன் பின் விரையும் டெக்ஸ். வாசக அன்பர்கள் தம் மனத்திரையில் இந்த ஆக்சேன் சேஸிங்கை ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். தன் குதிரையிலிருந்து கோச்சு வண்டிக்கு பாய்வார் பாருங்கள் [ இதை அதே மனத்திரையில் ஸ்லோமோசனில் ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன்]. பார்க்க இரு கண்கள் போதாது என்றால் அது பொய். அங்கு ஆரம்பிக்கும் அதகளம் இக்கதை நடக்கும் ப்ளாக் ஃபால்ஸ் பகுதியைவிட்டு டெக்ஸ் புறப்பட்டு செல்லும்வரை நீடிக்கும் என்றால் அது .... மெய்.

குதிரைகளில் ஏறி வந்த சட்டங்களில் ஒருவன் ப்ளாக் ஃபால்ஸ் நகர ஷெரீஃபான கிரிகரி ஸ்டார்க்கர். தன் பாணியில் ப்ளாக் ஃபால்ஸில் சட்ட பரிபாலனம் செய்து நீதி மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுபவன். டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. சுமூகமான அறிமுகத்தின் பின்பாக டெக்ஸ் பயணிகளை கொலை செய்த கேடிகளின் தடத்தில் பயணிக்க ஸ்டார்க்கர் பயணிகளின் சடலங்களோடு ப்ளாக் ஃபால்ஸ் நகரம் நோக்கி விரைகிறான். ஆனால் விதி இவர்கள் இருவர்களின் பாதைகளையும் ஒன்றாக்கி அதில் அவர்களை ஒருவரை ஒருவர் நோக்கி பயணிக்க வைத்து விடுகிறது.

கேடிகளின் தடமானது ஒரு தருணத்தில் மறைந்துவிட ப்ளாக் ஃபால்ஸ் நகர் நோக்கி வருகிறார் டெக்ஸ். நகர மக்கள் முன்னிலையில் உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கரின் உரையை கேட்கவும் அவதானிக்கவும் செய்கிறார். அந்தக் கணத்திலேயே ஸ்டார்க்கர் ஒரு மகா நடிகன் என்பதை அவர் கணித்தும் விடுகிறார்.

நகரின் சலூனில் இலவச பீர் தந்து டெக்ஸை வரவேற்கும் காட்சியில் டெக்ஸின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை. சான்ஸே இல்லை. சாட்சாத் ஜெமினி கணேசன் புன்னகைதான். அந்தப் புன்னகை ஆவியாகாமலேயே ஸ்டார்க்கரின் உரையை கேட்கப் போய் அங்கு ப்ளாக் ஃபால்ஸ் நகர மக்கள் தம் ஷெரீஃப் மீது கொண்டிருக்கும் அபிமானத்தையும் அறிந்து கொள்கிறார். ப்ளாக் ஃபால்ஸ் நகரை அண்மித்த பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் அதை தடுக்க, ஒழிக்க, அழிக்க தீபோல செயற்படும் ஸ்டார்க்கர், இவை டெக்ஸ் மனதின் ஓரத்தில் ஐயங்களை விதைக்கின்றன. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது அந்நியன் ஒருவன் ஒரு நகரின் சூப்பர் ஷெரீஃப்பை குற்றம் சாட்ட முடியுமா? அது அந்த அந்நியனிற்கு எதிரான ஒரு அலையாக மாறி அந்த அந்நியனிற்கு சேதங்களை விளைவிக்காதா? ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு டெக்ஸ் வந்து சேரும் இரவன்றே அவரை அந்நகரிலிருந்து வெளியேற வைக்கும் நிகழ்வுகளும் ஆரம்பமாகி விடுகின்றன. டெக்ஸை நகரிலிருந்து வெளியேற வைப்பதில் ஸ்டார்க்கர் வெற்றியும் காண்கிறான். ஆனால் டெக்ஸ் நகரிலிருந்து மட்டும்தான் வெளியேறுகிறார். கோச்சு வண்டிப் பயணிகள் படுகொலையான விவகாரத்தில் இருந்து அல்ல. இந்த சமயத்தில்தான் ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டார்க்கர் எப்படியான ஒரு தருணத்தில் ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு ஷெரீஃபாக உருவாகினான் என்பதும் கதையில் நான் லினியார் பாணியில் விளக்கப்படுகிறது. ரவுடிகள் கையில் சுடுபட்டு சாகும் முன்னைய ப்ளாக் ஃபால்ஸ் ஷெரீஃப். பயத்திலும், திகிலிலும் அடங்கி ஒடுங்கும் மக்கள். அட்டகாச ஆட்சி நடத்தும் ரவுடிக் கும்பல். இந்த ரவுடிக் கும்பலை போட்டு தள்ளும் ஸ்டார்க்கர். அவனை பெரிய வீரனாக கருதி, ஏற்று தம் நகரின் மேயர், நீதிபதி, ஷெரீஃப் என அனைத்து பதவிகளையும் ஒப்படைத்து விடும் நகர மக்கள் அவன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு கேள்வி கூட எழுப்புவது இல்லை. ரவுடிக்கு நீதி ரவுடியால்தான் எனும் பெருமேற்கின் உன்னதமான தத்துவமானது உறுதிபடும் ஸ்தலம் ப்ளாக் ஃபால்ஸ். ஆனால் ரவுடிக்கெல்லாம் ரவுடி எங்கள் தலை என்பதும் உறுதிபடும் இடமும் ப்ளாக் ஃபால்ஸ் தான் டெக்ஸின் அன்பு ரசிகர்களே.

ப்ளாக் ஃபால்ஸ் நகரை விட்டு வெளியேறும் டெக்ஸ் தன் தேடல்களை தொடர்கிறார். அவரின் தேடல்கள் ஸ்டார்க்கரை மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க செய்கிறது. அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக் தோள்கள் உரசிக் கொள்வதுபோல ஸ்டார்க்கரும், டெக்ஸும் உரசிக் கொள்கிறார்கள். டெக்ஸின் தேடல்கள் எல்லாம் ஸ்டார்க்கரை நோக்கியே விரலைக் காட்டுகின்றன. ஸ்டார்க்கரின் நகர்வுகள் எல்லாம் டெக்ஸை குழிக்குள் இறக்குவதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த காய் நகர்வுகள் எல்லாம் வாசகனை டெக்ஸின் ஆக்சன் அதிரடிக்குள் உயிருடன் புதைப்பதாகவே அமைகின்றன. ஆனால் டெக்ஸ்  அடங்குவது இல்லை. வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார்.

ஸ்டார்க்கரின் டெப்யூட்டிகளை துவம்சம் செய்வது, துவம்சம் செய்த டெப்யூட்டி ஒருவனின் உயிரை காப்பாற்றுவது, இறந்த உடல்போல் ஆற்றில் மிதப்பது, ரகசிய தகவல்களை சொல்ல முன்வருபவர்கள் போட்டுத்தள்ளப்பட்ட பின்பாக அவர்களை காண செல்வது,  தாமதமாக வந்து விட்டோமே என வருத்தப்படுவது, நிக் லூயிஸை படிய வைப்பது, நிற வெறியர்கள் மீது கரி பூசுவது, பின் அவர்களிற்காக இருளில் காத்திருந்து அதிர்ச்சி தருவது, மர ஆலையின் முரட்டு நபருடனான சூடான மோதல், ஸ்டார்க்கரை ஓயாது தன் நடவடிக்கைகளால் சீண்டல் இப்படி இன்னம் பல வகையான இயக்கவோட்டங்களால் அடி பின்னி எடுக்கிறார் டெக்ஸ். ஒரு வகையில் டெக்ஸ் இங்கு ஸ்டார்க்கரை உளவியல் ரீதியாக தாக்குகிறார் என்பது மிகையல்ல. கதையில் சில பகுதிகளில் தனது நகரம், தனது சட்டம், நீதி என ஸ்டார்க்கர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டார்க்கரை குறித்து டெக்ஸ் கூறும் சில வரிகளை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். புற்றில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியேற வைக்க வேண்டுமெனில் அதை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் டெக்ஸ் சீண்டும் சீண்டலில் பாம்பு சுரங்கம் தோண்டி மெக்ஸிக்கோவிற்கு சென்றுவிடும் என்பதும் டெக்ஸின் வாசக வெள்ளம் அறியாத ஒன்றல்ல.

கதையின் சிறுகூறாக நிறவெறி கையாளப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து போராடி கறுப்பின மக்களின் நீதிக்கரமாக டெக்ஸ் செயற்படுவதாக கதை சுட்டி நிற்கிறது. கறுப்பினத்தவரின் உதவியாலேயே டெக்ஸ் கதையின் மர்மத்தின் முக்கிய தகவலை அறிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. கறுப்பின குடும்பம் ஒன்றின் நலனிற்காக டெக்ஸ் செய்யும் சில செயல்கள் பில் கேட்ஸையே வெட்கம் கொள்ள வைப்பதாக உள்ளன.

கதையில் பெரும்பகுதியில் டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்கிறார். இறுதிப்பகுதியில் கவுரவ வேடம் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போல கார்சன் வந்து சேர்கிறார். டெக்ஸை ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்குள் இழுத்து போட்டுத் தள்ள ஸ்டார்க்கர் கார்சனை உபயோகித்து கொள்கிறான். கார்சனைக் காப்பாற்ற டெக்ஸ் எவ்விதமாக நகரில் நுழைகிறார் என்பதே இக்கதையின் கதாசிரியர் Tito Faraci அவர்களின் கற்பனை வளத்தை காட்டி விடும். சமகால உத்திகளுடன் டெக்ஸ் கதைகள் புதுப்பிக்கப்படுகையிலேயே அது சுவையான புதிதான அனுபவத்தை வாசகர்களிற்கு வழங்கும் என்பதில் டிட்டோ பராசிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வழங்கியிருக்கும் கதை தெளிவாக்கி விடுகிறது. டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை எனினும் புதுமையான ஒரு அனுபவம் மறுக்கப்படும் எந்த தருணமும் டெக்ஸ் தன் குதிரையில் பின்னோக்கியே பயணிக்கிறார் மன்மதலீலை கமல்போல என்பதை சொல்லவும் வேண்டுமா. கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் ஆர்ஜெண்டின சித்திரக் கலைஞர் மிகுவெல் ஏஞ்சல் ரெப்பெட்டோ. அவரின் சித்திரங்கள் சிவாஜியின் ஓவர் ஆக்டிங் எப்படி திரைப்படங்களில் பொருந்திப் போகுமோ அப்படி கதைக்கு பொருந்தி வந்திருக்கிறது. குறிப்பாக ஸ்டார்க்கரின் முகபாவனைகள், அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் வாசகர்களின் உணர்வுகளை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. நிலவியல் அழகை தருகிறேன் எனும் போர்வையில் ஆங்காங்கே சில பறவைகள், பிராணிகளை காட்சிப்படுத்துவதை தவிர ரெப்பெட்டோ சிறப்பாக எதனையும் செய்து விடுவது இல்லை.

இப்படியாக ஆழமற்ற கதைகளும், ஓவர் ஆக்டிங் சித்திரங்களுடனும் வரும் டெக்ஸ் மேக்ஸி கதைகள் அக்கதை வரிசைகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமையப் போவது இல்லை. பொனெலி நிறுவனம் வருடம் ஒரு மேக்ஸி என்பதை ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்து விட்டதோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் டெக்ஸ் கதைகளை வெளியிடும் பதிப்பகம் இவ்வருட இறுதியுடன் பெரும்பாலும் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வகையான கதைகள் அதை விரைவில் நிறைவேற்றி வைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்தாலியர்களுக்கும் பஸ்டாவும், பிஸ்ஸாவும், நமக்கு சாதமும் அலுப்பது இல்லை. அவரவர் சுவை அவரவர்க்கு. என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்.

சமர்ப்பணம்.
நான் ஒரு போலி டெக்ஸ் விசிறி என வதந்தி பரப்புவர்களுக்கு.





Sunday, June 1, 2014

Gone Girl

திருமண நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே Gone Girl நாவலில் கதாசிரியை  Gillian Flynn ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.

நிக் டன் ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.

நிக்கும், அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள  முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.

மறுபுறம் நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.

அச்சு  ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.

புத்திசாலித்தனமும், அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். Gone Girl நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.

Sunday, May 18, 2014

கறுப்பு ட்ராகன்

எரோண்டார் எனும் ராஜ்யத்தின் தொன்மங்கள் ஏறக்குறைய 1500 வருடங்களுக்கு முன்பாக எல்ஃபுகளும், ட்ராகன்களும் இயற்கையுடன் ஒத்திசைந்து பெரும் வனப்பரப்பில் வாழ்ந்திருந்தார்கள் என்கிறது. இவர்கள் வாழ்ந்திருந்த மண், ட்ராகன்களின் பூமி என அழைக்கப்பட்டது. இருள் உலகில் இருந்து இவ்வுலகினுள் பிரவேசித்த தீயசக்திகள் ட்ராகன்களை அழிக்க ஆரம்பித்தன, எல்ஃபுகளை தம் சக்தியினால் அடிமைகளாக்கி தமக்கு துணையாக போரிடும் ஒரு புதிய இனமாக உருவாக்கின, சில நூற்றாண்டுகளாக ட்ராகன்களின் பூமி மீதும் அங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் மீதும் தம் ஆதிக்கத்தை நிறுவின. இந்த தீய சக்திகளுக்கு எதிராக மந்திரவாதிகள், அறிவியல்வாதிகள், அரசுகள், ட்ராகன்கள் ஓன்றாக இணைந்து போரிட்டன.

பெரும் யுத்தம் ஒன்றின் முடிவில் தீயசக்திகள் அவர்களின் இருள் உலகிற்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் இவ்வுலகிற்குள் பிரவேசித்த வழிகளின் மேல் ட்ராகன்கள் வீழ்ந்து மடிந்தன. அந்த ட்ராகன்களின் உடலில் இருந்து சிந்திய குருதி பெரும் கற்தூண்களாக உருமாறி தீயசக்திகள் இவ்வுலகில் நுழைவதற்கான பாதைகளை தடை செய்தன. போரின் பின்பு இவ்வுலகில் எஞ்சியிருந்த ட்ராகன்கள் தம் வாழ்ந்திருந்த பூமியைவிட்டு வேறிடங்கள் நோக்கி சென்றன. மந்திரவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உருவாகின. மந்திரவாதிகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் உருவாகின. சில மந்திரவாதிகள் நன்மையின் பக்கமிருந்து விலகிச் சென்றார்கள். இவர்கள் மந்திரவாத அமைப்புக்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

அறிவியலாளர்களோ அரசின் அதிகாரங்களை தமக்கு நெருங்கியதாக ஆக்கி கொண்டு மந்திரவாதிகளையும், அவர்கள் சக்திகளையும் தொலைவில் வைக்க எல்லா வழிகளையும் முயன்றார்கள். ட்ராகன்களின் பூமியையும் எரோண்டார் ராஜ்யத்தையும் பிரிக்கும் வண்ணம் ஒரு பெரும் சுவர் எல்லையில் எழுப்பபட்டது. இச்சுவரில் அமைந்த காவல் அரண்களில் இருந்த காவல்படையானது ட்ராகன்களின் பூமியில் வாழ்ந்திருக்ககூடிய தீயசக்திகள் எரோண்டாருக்குள் நுழைய முடியாது தடுப்பதை தன் கடமையாக கொண்டிருந்தது.

செரா, க்மோர், இயான், மிர்வா, அல்பென்
ஆனால் ட்ராகன்களின் குருதியால் உருவான கற்தூண்கள் தீடீரென நொருங்கி விழ ஆரம்பிக்கின்றன... அதன் வழியாக இருள் உலக தீய சக்திகளுக்கு இடப்பட்டிருந்த தடை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை ஆராய அறிவியலாளர்கள் சார்பாக மிர்வா எனும் இளம் பெண் வீராங்கனையும், மந்திரவாதிகள் சார்பாக முதிய மந்திரவாதியான அல்பெனும் ட்ராகன்களின் பூமியின் எல்லையிலிருக்கும் பெரும்சுவரை வந்தடைகிறார்கள். இடிந்து விழும் ட்ராகன்களின் குருதி தூண்களின் பின்பு ஒரு பெரும் தீயசக்தி விழித்து கொண்டிருக்கிறதென்பதை உணரும் மந்திரவாதி அல்பென் தன் உதவிக்கு என சிலரை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்... பெரும் அழிவை தடுக்கும் சாகசப் பயணம் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது.

மந்திரவாதி அல்பென் முதலில் தன் உதவிக்கு அழைத்து தூது அனுப்புவது இயான் எனும் வீரனிடம். கவுரமிக்க ட்ராகன் சம்ஹாரிகளின் வம்சத்தில் வந்தவன் இயான். அரசபடைகளில் பணிபுரிந்து, கடமையின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றால் தன் பதவியை துறக்கிறான் இயான். அவன் திறமைகளை முற்றிலும் உதறவிரும்பாத அரசு அவனை வேவு பார்க்கவும் வேறு பல சிறப்பு நடவடிக்கைகளிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு பதவியை வழங்குகிறது. வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான கடற்துறை நகரான சொலியானில் தன் வாழ்க்கையை கழித்து வரும் இயானிற்கு உற்ற நண்பணாக க்மோர் எனும் ஓர்க் இருக்கிறான். ட்ராகன்களின் பூமியிலிருந்து எரோண்டோரை பிரிக்கும் பெரும்சுவரிற்கு இடியும் குருதிதூண்கள் பற்றிய விவகாரத்தை ஆராய வந்த மிர்வா, இயானின் சகோதரி ஆவாள். கதையில் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிறப்பாக காட்டப்படுகிறது. தனக்கிடப்பட்ட பணியைவிட தன் சகோதரியை காப்பதே முதன்மையானது என நடப்பவன் இயான். அவனின் இந்த போக்கை எதிர்ப்பவள் மிர்வா. கோபமும், பாசமும் சேர்ந்த அந்த உறவு கதையின் இறுதிவரை பேணப்படுகிறது. இயான் எல்லா இன மக்களையும் அவர்கள் மரபுகளையும், மதங்களையும் மதிப்பவனாக கதையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். அவன் அரசசேவையிலிருந்து பதவி விலகியதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. அச்சம்பவம் குறித்து சில தகவல்கள் மட்டுமே தரப்படுகிறது. அவற்றை வைத்து தீர்க்கமாக அச்சம்பவத்தை பற்றி ஏதும் அறியமுடியாத நிலையே கதையில் இருக்கிறது. மிர்வாவும் இயானுடன் அச்சம்பவ தருணத்தில் இருந்ததால் அவளைக் காப்பாற்றுவதற்காக அவன் தன் கடமையிலிருந்து தவறியிருக்கலாம் என ஒரு ஊகத்தை உருவாக்கி கொள்ள மட்டுமே முடிகிறது. வழமையான நாயகர்களுக்குரிய அலட்டல்கள் இல்லாத அமைதியான ஒருவனாக இருக்கும் இயான் வீர வசனங்கள், வாய் சவடால்கள் விலக்கப்பட்ட ஒரு பாத்திரமாக கதையில் உலவுகிறான். அதே சமயம் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் தக்க சமயத்தில் அவனால் இயங்க முடியும் என்பதும் முரட்டு அன்னையை அவன் இருள்வனப்பகுதியில் சந்திக்கும் தருணம் தெளிவாக்குகிறது. இயானிடம் ஒரு அபூர்வ வாள் உண்டு. ஆனால் அது அபூர்வமானது என்பது கதையின் இறுதிப்பக்கங்களில்தான் காட்டப்படும்.

வழமையாக ஓர்க்குகள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவையாக சித்தரிக்கப்படுவது இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு. இக்கதையில் வரும் க்மோர்க் எனும் ஓர்க் அவற்றில் ஒன்று எனலாம். இயானுக்கும், க்மோர்கிற்குமிடையில் சிறுவயதிலேயே நட்பு உருவாவது கதையில் சித்தரிக்கப்படுகிறது இருப்பினும் க்மோர்க் இயானுடன் கூடவே வாழ்ந்து வருவது ஏன் என்பது கதையில் கூறப்படுவது இல்லை. கதையில் விரிவாக கூறப்படாத விடயங்களில் இதுவும் ஒன்று. தொடரும் கதை வரிசைகளில் இவர்களிற்கிடையிலான உறவு விரிவாக ஆராயப்படலாம். க்மோர் புத்தகங்களை விரும்புபவன், நல்ல சமையல்காரன், கோடாரி சண்டையில் தேர்ந்தவன், நகைச்சுவை உணர்வு கொண்டவன், இளகிய மனம் உடையவன் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. பெண் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கிவிடுவது க்மோர்க் எனும் ஓர்க்கிற்கு இலகுவான ஒன்றாக இருக்கிறது. கதையின் சில தருணங்கள் க்மோர்க்கை செவ்விந்தியர்களுடன் ஒப்பிடக்கூடியதாக அமைந்திருக்கின்றன. வேட்டையாடி உயிர்பறித்த விலங்கின் ஆன்மாவிற்காக பிரார்த்தித்தல், நல்ல ஓர்க்கு என்பது இறந்துபோன ஓர்க்கு மட்டுமே போன்ற வசனங்கள் எனக்கு செவ்விந்திய பூர்வகுடிகளையே நினைவிற்கு இட்டு வந்தன. வெஸ்டெர்ன்களில் பூர்வகுடிகளுக்கு எதிராக காட்டப்படும் இனவெறியானது க்மோர் எனும் ஓர்க்கின் மீது இக்கதை நெடுகிலும் காட்டப்படுகிறது.

இயானின் சகோதரியான மிர்வா அறிவியலாளர்கள் அமைப்பை சார்ந்த ஒரு வீராங்கனை. அறிவியல் தொழிநுட்பத்தின் வழியை முன்னிறுத்தி செல்பவள் அவள். அவள் மந்திரங்களை நாடுவது இல்லை. அவள் தொழில்நுட்பத்தின் விளைவுகளை உபயோகிப்பவள். அது ஆயுதங்கள் ஆனாலும் வேவுக் கருவிகள் ஆனாலும் அவள் அறிவியலின் பிரதிநிதியாகவே செயல்படுகிறாள். ஆனால் அறிவியலின் எல்லைகள் எட்டாத இடங்களுக்கு செல்ல மந்திரசக்தி தேவையாக இருக்கிறது. கதையில் அறிவியலும், மந்திரசக்தியும் ஒன்றுக்கொன்று உதவியவாறே தீமைகளை எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. மந்திரவாதி அல்பெனும், மிர்வாவும் வாதம் செய்து கொண்டே ஒருவருக்கொருவர் துணையாக நின்று தீமையை எதிர்க்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரின் திறமைகள் மட்டும் அதற்கு போதுமானதாக இருப்பது இல்லை.

இயானை தன் உதவிக்கு அழைத்த கையோடு மந்திரவாதி அல்பென் தனக்கு ஒரு மெய்பாதுகாவலனை தேடி காவல் அன்னையர் மடத்திற்கு செல்கிறார். பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இம்மடம் மிகவும் கடினமான கட்டுப்பாடுகளை கொண்டது. இவர்களால் உருவாக்கப்படும் மெய்பாதுகாவலர்கள் பெண்கள் மட்டுமே. அவர்களிடம் காணப்படும் அசாத்திய திறமைகள் வியப்பை தரும் வகையில் கதையில் பரிமாறப்பட்டு இருக்கின்றன. காவல் அன்னையர் மடத்தில் எகுபா எனும் பெண், மந்திரவாதி அல்பெனின் பாதுகாவலுக்கு பொறுப்பாக வழங்கபடுகிறாள். மந்திரவாதியின் உயிருக்கு பதிலாக அவள் தன் உயிரை தந்து போராட வேண்டும். தற்பாதுகாப்பு முறைகளிலும், தாக்குதல் முறைகளிலும் சளைக்கவியலா பாத்திரமாக சித்தரிக்கப்படும் எகுபா கதையின் முடிவில் மனதையும் கனக்க வைக்கும் ஒரு நிலைக்கு செல்லும் பாத்திரமாகி விடுகிறாள்.

மந்திரவாதி அல்பென் தன் முதல் முயற்சியில் சிறிய தோல்வியை தழுவினாலும் தீமைக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது இல்லை. அதற்கு பிறிதொரு வழியை கண்டடையும் அவன், தான் எதிர்த்து போராடப் போவது தன் பரம வைரியான ஜெரானஸ் என்பதையும் அறிந்தவனாகவே இருக்கிறான். தன் புதிய முயற்சிக்கு உதவும் ஒரு பொருளை கொண்டு வர இயானையும், க்மோர்க்கையும் அவன் ஆதிவனத்திற்குள் அனுப்பி வைக்கிறான். ஆதிவனத்தினுள் வாழ்ந்து வரும் எல்ஃபுகள் வீரர்களுக்கு உதவியாக தாவரவியல் அறிவு கொண்ட எல்ஃப் இளநங்கை செராவை அனுப்பி வைக்கிறார்கள். செரா இதன்வழியாக தன் வேர்களை துறந்து செல்லும் ஒரு எல்ஃபாக சித்தரிக்கப்படுகிறாள். ஓர்க்குகளை வனத்திலிருந்து அடித்து விரட்டிய எல்ஃபுகள் வழிவந்தவளுக்கும் ஓர்க்கான க்மோரிற்கும் இடையில் உருவாகும் நட்பு மிக மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான தருணங்களாக அவை இக்கதையில் அமைகிறது. புதிய இனங்களை நோக்கி செல்லும் செராவின் தயக்கமும், அச்சமும் கதையில் தெளிவாக கூறப்படுகிறது. படிப்படியாக அவள் துடுக்கான ஒரு வாயாடி எல்ஃபாக மாறுவதும் ரசிக்கப்படும்படியாக சொல்லப்படுகிறது. அதே போல ஆதிவனத்தில் வரும் மிக முக்கிய பாத்திரமான முரட்டு அன்னை பாத்திரமும் சிறப்பான ஒன்றே. இக்கதையில் நான் விரும்பி ரசித்த பாத்திரங்களில் அப்பாத்திரத்திற்கு தனியிடமுண்டு.

இவ்வாறாக பல நிலங்கள், மக்கள், மனிதர்கள், விசித்திர விலங்குகள், மலைவாழ் குள்ளர்கள், அவர்களின் ரகசியங்கள், வரலாறுகள் என விரியும் இக்கதை பீட்டர் ஜாக்சன் திரைப்படுத்திய டால்கியனின் நாவல்களின் பின் அனுபவமாக அதிக பிரமிப்பை உருவாக்காமல் போனாலும் குழப்பங்கள், சுழிகள் இல்லாத தெளிவான மிகைபுனை சாகசம் ஒன்றின் சுவையின் ஒரு கணிசமான பகுதியை தரவே செய்கிறது. 2007 ல் இத்தாலிய மொழியில் வெளியான Dragonero எனும் இக்கதை 2014 ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே டார்க் ஹார்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 286 பக்கங்களில் Dragonero வின் கதாசிரியர்கள் Luca Enoch, Stefano Vietti சிறப்பாகவே செயற்பட்டு இருக்கிறார்கள். சித்திரங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர் Giuseppe Matte. பல இடங்களில் அசர வைக்கும் இவர் சித்திரங்கள் சில இடங்களில் ஏதோ அவசரத்தில் வரைந்த உணர்வை ஏற்படுத்துகிறது, அதுவும் மிக முக்கியமான காட்சி ஒன்றி அவர் ஏன் அப்பாணியை கையாண்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று. காலம் அசையாமல் நிற்கும் தருணமொன்றில் சித்திரங்கள் வேறுபட்டு தெரிய வேண்டும் என ஆசிரியர் குழு முடிவெடுத்திருந்தால் அது வாசகர்களால் ரசிக்கதக்கவொரு விளைவை தரவில்லை என்றே நான் கூறுவேன்.

மேலும் சாகசத்தின் முடிவுப் பகுதியும் மிகவும் சுருங்கியது போன்ற உணர்வை தருகிறது. கதையை நீடித்து விரிவாக சொல்லியிருக்க வேண்டிய சமயத்தில் அள்ளி முடித்த கொண்டைபோல ஒரு முடிவுப்பகுதி என்பது கதை உருவாக்கிய எதிர்ப்பார்ப்பின் மீது பலமாக மோதி சாய்த்து விடுவதாக இருக்கிறது. முதல் முயற்சி என்பதால் சுருக்கமாக முடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டிருக்கலாம் என நானே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதை விட வேறு வழி இல்லை. இறுதியில் ஒரு உச்சவிலங்குடன் நடக்கும் மோதல் இப்படியான ஒரு எளிமையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பது மிகைபுனைவு சாகசமே அதைப்பார்த்து வேதனைக் கண்ணீர் விடும் ஒரு தருணமாகி விடுகிறது. பீட்டர் ஜாக்சனும் இதற்கு ஒரு காரணமே. ஆனால் சாகசம் இக்கதையுடன் நின்று விடவில்லை தொடரும் என்பதுதான் ஆறுதல். ஆம் சென்ற வருடத்திலிருந்து பொனெலி பதிப்பகம் மாத வெளியீடாக இக்கதை வரிசையை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது. பொனெலி இப்போது தமிழ் மொழியுடன் நல்ல உறவில் இருப்பதால் ஏதோ ஒரு சுபதின சுபவேளையில் கறுப்பு ட்ராகன் தமிழில் சிறகடிக்கலாம் இல்லையா !!!



Sunday, May 11, 2014

Inferno

டான் ப்ரவுனின் Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய  பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.

இவ்வகையான ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.

தீமையை செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது.  எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.

கதை நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு Inferno.