வதனமோ சந்த்ர பிம்பமோ - 16
எல்லாம் வல்ல சக்தியானது மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும் திறமைகளுடன் இயங்க வைத்திருந்தாலும் அந்த திறமைகள் மீற முடியா எல்லை என ஒன்று எப்போதும் உண்டு. அந்த எல்லைகளை அசாதரணமாக மீறும் மனிதர்களை வரலாறு பெருமையுடன் நினைவுகூர்வதுண்டு. சுறா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்து கண்ணீர் விட்டு நெகிழும் ஒரு ரசிகனை வரலாறு தன் நினைவில் பொதிந்து காலம் கடந்து தூக்கி செல்லுமா எனும் கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்தால் எல்லாம் வல்ல சக்தியையே ஆட்டிவிடக்கூடிய விடை ஒன்று அங்கு உருப்பெறும். ஆனால் வரலாறு கண்டிப்பானது , கறாரானது, சில நியதிகளுக்குட்பட்டு தன் வரிகளில் மனிதர்களின் பெயர்களை பதிப்பது. ஆகவேதான் வரலாற்று ஏடுகளில் மேற்கூறப்பட்ட போன்ற மனிதர்களின் சாதனைகள் இடம்பெறுவது இல்லை. பறவைக்கு பறக்கும் உயரம் எல்லை, மனிதனுக்கு அவன் கால்கள் இறக்கும் இடம் எல்லை, ஆனால் எம் மேல் ஆழியின் பிரதிபலிப்பாய் படர்ந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் காலவெளிக்கு எதுதான் எல்லை? சொன்னவர்கள் யார்? சொல்லப்போபவர்கள் யார்? வரலாற்றில் அவர் பெயர்கள் பதியும் நாள் எது? ஆனால் சாதாரண டெக்ஸ் வாசகன் நான் பெருமேற்கின் வீரசாகசவினோத எல்லைகளை தன் ஒவ்வொரு பயணத்தின்போதும் மீறிச்சென்று வரலாற்றின் வரிகளை சுழித்து நழுவி பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தின் மர்மப்புன்னகையில் கலக்கும் அந்நாயகனின் இன்னொரு வரி எழுத வந்தேன்.
நான் இன்று எழுதப்போகும் வரி TEX Special n°9 ல் இடம்பெற்றிருக்கும் கதையான La Vallée de la Terreur என்பதன் கதையை சொல்லும். பயமும், திகிலும், மர்மமும், இருளும், வஞ்சமும் பிரம்மாண்டமான கோட்டைகளினுளும், மலைக்காடுகளிலும், வான்வாய்திறந்து பொழியும் பெருமழையினுளும், நிலவு இரவை தன் வெள்ளிரசக்கரங்களால் நனைக்கும் இரவுகளிலும் ஓயாது தொடர்ந்து மனிதர்களின் வாழ்வை அவற்றின் இருள் ஊறிய கரங்களினுள் அள்ளி அடக்க துடிக்கும் நிகழ்வை சொல்லும்.
யுபா பள்ளத்தாக்கில் கனிம அகழ்வை நடாத்தி கொண்டிருக்கும் சுரங்க உரிமையாளர்களிற்கு ஒரு மர்ம அமைப்பு எச்சரிக்கைகளை விடுக்கிறது. அந்த பிரதேசத்தை விட்டு, தம் சுரங்கங்கள் , சொத்துகள் என்பவற்றை விட்டு அந்த சுரங்க உரிமையாளர்கள் நீங்கிச் செல்லாவிடின் மர்ம அமைப்பு தந்த எச்சரிக்கையானது மரணசாசனமாக மாறிவிடுகிறது. இந்த மர்ம அமைப்பின் பெயர் அவெஞ்சர்ஸ். யுபா பள்ளத்தாக்கின் சுரங்க உரிமையாளர்களை குறி வைக்கும் இந்த அமைப்பு, அங்கு வாழும் மனிதர்களின் மனங்களிலும் திகிலை குடியேற்றி வைக்கிறது. சுரங்க உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை விற்று விட்டு விலக, சுரங்கத்தில் பணியாற்றிய மனிதர்கள் வேலைகளை இழக்கிறார்கள். வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் அவர்களும் பள்ளத்தாக்கை விட்டு தம் வாழ்வின் நீட்சிக்காக வேறு இடம் செல்ல தயாராகிறார்கள். இவ்வாறாக யுபா பள்ளத்தாக்கை மனிதர்கள் அதிகம் புழங்கிடாத ஒரு இடமாக மாற்ற அவெஞ்சர்ஸ் அமைப்பு முனைப்புடன் செயல்படுகிறது.
யுபா கிராமத்தின் ஷெரீஃபோ அவெஞ்சர்ஸின் நடவடிக்கைகளை தடுக்க முடியாதவராக இருக்கிறார். மிக கச்சிதமான திட்டங்களுடன் தம் நடவடிக்கைகளையும் கொலைகளையும் நடாத்தி செல்லும் அவெஞ்சர்ஸை முறியடிக்கும் திறமையும், ஆட்பலமும் அவரிடம் இல்லை. கவர்னர் அனுப்பி வைத்த இரு விசாரணை அதிகாரிகளும் அவெஞ்சர்ஸ் அவர்களுக்கு வழங்கிய மிரட்டல்கள் காரணமாக பள்ளத்தாக்கைவிட்டு விரைவாக வெளியேறி அப்பகுதிக்கு மீண்டும் வருவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இவ்வகையான ஒரு தருணத்தில் மினா ஷட்டர் எனும் பெண்ணிற்கு அவெஞ்சர்கள் எச்சரிக்கையை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய எச்சரிக்கையின் பின்பாகவும் மினா ஷட்டர் அப்பகுதியை விட்டு விலகி செல்ல முன்வருவது இல்லை. தன் தந்தை ஜான் ஷட்டரினை கவனிக்கும் முக்கிய பொறுப்பு தன் உயிரைவிட முதன்மையானது என்பதால் அவெஞ்சர்ஸின் எச்சரிக்கையை அவள் உதாசீனம் செய்து விடுகிறாள். ஆனால் மினாவின் கணவன் உல்ரிச் தன் நண்பனும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பொலிஸ் அதிகாரியுமான டாம் டெல்வினிடம் தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறான். டாம் டெல்வின் நேரடியாக இச்சிக்கலில் தலையிட முடியாத நிலையில் பெருமேற்கின் பெரும் சிங்கம் டெக்ஸை இவ்விவாகரத்தை பொறுப்பேற்க வேண்டுமேன வேண்டுகோள் வைக்க சிங்கம் அதை ஏற்று கொண்டு கார்சனுடன் புறப்படுகிறது.
கதை ஆரம்பிக்கும் பக்கங்களே திகிலை வாசகருக்குள் நுழைத்து விடுவதில் சுலப வெற்றி கண்டு விடுகிறது. மலைக்காட்டு பிரதேசம் ஒன்றில் அடைமழை அடித்து பெய்ய அந்த மழையின் கோடுகளோடு கலந்து வரும் அவெஞ்சர்ஸ் கொலைகாரர்களின் தோற்றங்களும், அசைவுகளும், இருளுடனும், மின்னலுடனும் கலந்து பார்வையில் அச்சத்தின் மையை கரைக்கின்றன. வானில் வெட்டும் மின்னல் போலவே வடிவம் கொண்ட அவெஞ்சர்களின் கத்தியும் மின்னல் ஒளியில் பிரகாசித்து மனிதர்களின் உடலை ஊடுருவி வெளியேறுகிறது. அவெஞ்சர்கள் துப்பாக்கிகளை உபயோகிப்பது இல்லை என்பது அவர்களின் தனித்துவமான பாங்காக கதையில் சொல்லப்படுகிறது. இக்கதையில் டெக்ஸும், கார்சனும் உயிர்பிழைப்பதற்குகூட அதுவே காரணமாகவும் இருக்கிறது என்பதை டெக்ஸின் தீவிர வாசகர்கள் கதை நகர்வில் புரிந்து கொள்வார்கள். அதாவது பெருமேற்கின் ஒதுக்குப்புற பள்ளத்தாக்கு ஒன்றில் வேலையற்று அலையும் அல்லக்கை குழு ஒன்றுடன் டெக்ஸ் இங்கு மோதுவது இல்லை. ஹவாய் பழங்குடியினரான ஹனாக்குகள், மற்றும் குடியேறிகளான சீனர்கள் இவர்களால் ஆனதே அவெஞ்சர்ஸ் அமைப்பு. இங்கு ப்ரூஸ் லீயின் மூதாதையரோடு டெக்ஸ் மோதுகிறார் என்பதை வரிகளிற்கு இடையில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். காலந்தோறும் கடலோடி வலிமைபெற்ற திடமனிதர்கள் ஹனாக்குகள். அவர்கள் உடல்கள் எல்லாம் நடமாடும் ஓவியங்கள். உடலில் பச்சை குத்துவது என்பது அவர்கள் மரபு. அந்த பச்சையே அவர்களுக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தை தந்து அச்சத்தையும் திகிலையும் கதையில் உபரியாக கலக்கிறது. இதை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இக்கதைக்கு சித்திரங்களை செதுக்கியிருக்கும் மாக்னஸ் எனும் பெயரில் பரவலாக அறியப்படும் சித்திரக் கலைஞரான Roberto Raviola.
உண்மையில் இக்கதையை காப்பாற்றுவதே அவர் சித்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இக்கதை வெளியாகியபோது அவர் உயிருடன் இல்லை என்பது வேதனையான ஒரு தகவல் [1996]. பொனெலி டெக்ஸ் கதைக்கு பணியாற்ற மாக்னஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது கெடுவாக தந்த காலம் மூன்று வருடங்கள். ஆனால் மாக்னஸ் எடுத்துக் கொண்டதோ ஏழு வருடங்கள். அவர் அர்ப்பணிப்பு அவ்வாறானது. மலைகளில் இரவும், பகலும் ஒரு போன்ற சித்திரங்களை அளிப்பது இல்லை எனக் கூறும் மாக்னஸ், தான் வாழ்ந்திருந்த வனப்பகுதியான காஸ்டெல் டெல் தியோவில் இரவு, பகல், அந்தி, புலரி என இயற்கையை அவதானித்து, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெகுவாக அது எடுக்ககூடிய காலத்தை தந்து இக்கதையை பூரணமாக்கி தந்திருக்கிறார். இக்கதையின் சித்திரங்களை நீங்கள் பார்க்கும்போது மாக்னெஸின் அர்ப்பணிப்பு உங்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும். மாக்னெஸை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டதற்காக அமோசன் காட்டிலிருந்து அவர் மரண செய்தியை அறிந்த பொனெலி எழுதிய கடிதத்தில் தன் வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார். இக்கதையில் வரும் ஒவ்வொரு இலையிலும் மாக்னெஸ் தன் அர்ப்பணிப்பை, சித்திரம் என்பதன் முழுமையைக் கலைஞன் காணும்வரை நடாத்தக்கூடிய யுத்தத்தை பதித்து சென்றிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் கார்சன் வினோதமான ஒரு தோற்றத்தை எம்மனதில் வரையலாம். வழமைக்கு மாறாக விரியும் கார்சனின் விழிகளில் வியப்பு, அலட்டல், பொருமல் என உணர்வுகளும் மிகையாகவே விரியும். கன்னங்கள் ஓட்டிய, இறுக்கமான மிடுக்கான உடல் கொண்ட டெக்ஸ், கதையில் அவர் உடல் காட்டும் மொழி, அவர் அதிரடி ஆக்சன் என அனைத்தும் வேறுபட்டு எதார்த்தத்திற்கும் கனவிற்கும் இடையிலான ஒரு தளத்தில் கதையின் பாத்திரங்கள் மிதப்பது போன்ற உணர்வை மாக்னஸின் சித்திரங்கள் உறுதியாக பதிக்கின்றன.
மாக்னஸ் தன் சித்திரங்களில், மீன்களின் சிறு செதில்கள் வலையாக விரிவது போன்ற வடிவில் பின்னணிக் காட்சிகளையும், வரையப்படும் பொருட்களின் ஒளிச்செறிவுகளையும் வரையறுக்கும் பாங்கை கொண்டவராக இருக்கிறார். அந்த சிறு செதில்கள், அல்லது வலைக்கண்ணிகள் இலைகளாக, கிளைகளாக, மரங்களாக, வனமாக, மலையாக, பள்ளத்தாக்காக, இருளாக, அதை எதிர்க்கும் ஒளியாக என மந்திர வித்தை காட்டி விளையாடுகிறது. இரவொன்றின்போது இரவையும், ஒளியையும் அவற்றின் எதிர்குணங்களையும் மாக்னஸ் பாகுபோல பக்கங்களில் வடித்திருக்கிறார். தன்னையும் ஒரு சிறு பாத்திரமாக அவர் கதையில் வரைந்திருக்கிறார். சில சமயங்களில் நாடகமொன்றின் மிகையான நடிப்புபோல உணர்வைதரும் அவர் சித்திரங்கள் மறுகணம் பச்சோந்தி ஒன்றின் மறையுடல் போல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கின்றன. ஒரே தாவலில் இலகுவாக அவர் சித்திரங்களை தாண்டி செல்ல முடியாது. கூடாது. அது முறையல்ல. அவர் உழைப்பு நேரத்தை எடுத்து கொண்டதுபோல அவர் உழைப்பை ரசிக்கவும் ஒருவர் நேரத்தை தந்தேயாகவேண்டும். அதுதான் நாம் அவருக்கு தரக்கூடிய ஒரு அஞ்சலியாகவும் இருக்ககூடும்.
உல்ரிச்சுடன் யுபா பள்ளத்தாக்கை அடையும் டெக்ஸ் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார். அவர் மோதுவது அவர் போலவே ஒரு உறுதியான மனிதனுடன் என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆகவே மேலும் உறுதியுடனும், தன் உள்ளுணர்வின் துணையுடனும் அவர் தன் விசாரணைகளை தொடர்கிறார். கதையில் மினாவின் தந்தையான ஜான் ஷட்டரின் வரலாறும் உண்டு. நிஜமாக நடந்த கதையது. சுவிஸிலிருந்து புதிய உலகிற்கு வந்து கலிபோர்னியாவின் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட ஒரு மனிதன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு கனிமத்தால் இழந்து நின்ற சோகமான கதையது. அந்தக் கனிமம் தங்கம். பல மனிதர்களை செல்வத்தின் உச்சபடிகளுக்கு உயர்த்தி சென்ற தங்கமானது ஜான் ஷட்டரை அப்படிகளின் கீழ் போட்டு மிதித்தது என்பது என்ன ஒரு முரண்நகை. மெக்ஸிக்க அதிகாரிகளின் அனுமதியுடன் அவன் உருவாக்கிய பெரும் குடியேற்ற நிலம், தங்கத்தை வேட்டையாட வந்தவர்களாலும், புதிய சட்ட மாற்றங்களாலும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, அவன் குடும்பம் அழிக்கப்பட்டு தன் ஒரே மகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி எண்ணி ஒடுங்கிப் போகும் ஜான் ஷட்டரின் உயிரின் மூச்சு நின்றிருப்பது வஞ்சம் எனும் சித்திரத்தின் முழுமையைக் காணும் நாளிற்காக.
ஆனால் தன் மகளிற்கே கொலை எச்சரிக்கை அனுப்பும் அளவிற்கு கொடியவனா ஜான் ஷட்டர்? டெக்ஸ் கேட்பதும் இதைத்தான். இதனாலேயே அவர் வேறு கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். அவர் விடைகள் இட்டு செல்லும் இடங்களும், மனிதர்களும் அவரை வேரறுக்கவே விழைகிறார்கள். ஜான் ஷட்டர் அவெஞ்சர்ஸின் தலைவனாக இருக்க முடியாது என சொல்லும் டெக்ஸின் உள்ளுணர்வு அவரை பொனெர் எனும் மனிதனுடன் எதிர்கொள்ள வைக்கிறது. டெக்ஸ் நீ கில்லி ஆனால் நான் கில்லிக்கு கில்லி என்பவனாகிறான் பொனெர். பாதாம் விழிகள் கொண்ட சீன அழகி மே லிங்கின் அழகினூடு அடங்கி அடிபணியும் ஜான் ஷட்டர் மேலும் மர்மத்தை கூட்ட அழகான பெண்ணாக இருந்தாலும் தன் கடமையிலிருந்து வழுவாத டெக்ஸ் சீன அழகியின் பின் மர்மங்களின் இருள் முடிச்சை அவிழ்க்கும் வழியை தேடுகிறார். ஆனால் அவருக்கு கிடைக்கும் பதில்கள் அவரையும், கார்சனையும் ஏன் அவர் யுவா பள்ளத்தாக்கிற்கு வரக்காரணமாக இருந்த மினா, உல்ரிச் தம்பதிகளையும் மரணத்தின் அருகாமைக்கு இட்டு செல்ல வீறாப்புடன் போராடுகிறது.
ஆனால்... ஆனால் கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி கதையின் முதற்பாதியில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்களை எல்லாம் கதையின் பிற்பாதியில் சரித்து விடுகிறார். ஆடை ஒவ்வொன்றாக அவிழ, அவிழ உள்ளே ஒருவன் எதிர்பார்த்திருந்த இளமை அழகு முதுமை தோற்றம் காட்டினால் ஏற்படும் ஏமாற்றமே கதையின் இறுதிப்பகுதி வழங்கும் அனுபவமாகும். கில்லிக்கு கில்லி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று தொண்டையின் நரம்புகள் புடைக்க, விழிக்குழியிலிருந்து விழிபிதுங்க வசனம் பேசியவர்கள் எல்லாம் மழை நின்றபின் இலையிலிருந்து விழும் நீர்த்துளிபோல மாறுவது இயல்பாக இல்லை. விறுவிறுப்பான திருப்பங்களையும், எதிர்பாரா சம்பவங்களையும் தருவதற்கு பதிலாக புளித்துபோன முற்றுகையை வாசகருக்கு பரிமாற ஆரம்பித்து அதில் படுமோசமாக வழுக்குகிறார் கதாசிரியர் நிஸ்ஸி. தீவிர டெக்ஸ் ரசிகர்கள் வேண்டும் அம்சங்களை தவிர்த்து ஒரு திகில் கலந்த மர்மத்துடன் கதையை அவர் கதையை முற்பாதியில் சொல்லியிருந்தாலும் அவை எல்லாம் மலிவான நாடகத்தனமாக கதை எடுக்கும் திருப்பத்தில் அடிபட்டு போகின்றன. மாக்னெஸின் அற்புதமான சித்திரங்களுக்காகவே பேசப்படும் கதை இது. அது உண்மை அன்றி வேறில்லை. நிஸ்ஸியின் சுமாரிற்கும் கீழான கதைகளில் இக்கதையும் ஒன்று என்பதும் உண்மையே.