Saturday, September 7, 2013

அடிமைகளின் ஆண்டவன்

வதனமோ சந்த்ரபிம்பமோ - 13

குருவானவர் மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....

டெக்ஸ் பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.

கதையில் இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக TEX Special n° 17 ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் Marchands D'Esclaves கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

டெக்ஸின் விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.

நோகலெஸிலிருந்து மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.

உலகில் சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில் எந்த முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!

பைபிளில் எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.

கதையின் சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர் Manfred Sommer இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.


Sunday, September 1, 2013

செமினொல்



வதனமோ சந்த்ரபிம்பமோ - 12 

லூசியானாவில் அமைந்திருக்கும் ஃபோர்ட் பிளிஸில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மரணதண்டனைக் கைதியான ஓச்சாலாவை டெக்ஸாஸிற்கு மீள்விசாரணைக்கு இட்டு செல்வதற்காக கார்சன் சகிதம் அங்கு வருகை தருகிறார் டெக்ஸ். தன் பாதுகாப்பின் கீழ் அழைத்து செல்ல வேண்டிய நபரான ஓச்சாலா குறித்த தகவல்களை ஃபோர்ட் பிளிஸின் மேலதிகாரியிடம் இருந்து டெக்ஸ் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் லோங் நைஃப் எனும் தன் சகாவின் உதவியுடன் ஃபோர்ட் பிளிஸிலிருந்து தப்பி செல்கிறான் ஓச்சாலா……

பெருமேற்கின் நம்பர் 1 நாயகனான டெக்ஸ், தன் பொறுப்பான பாதுகாவலின் கீழ் ஒரு கைதியை எங்காவது இட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது எனும் தகவலிலேயே டெக்ஸின் பாசமிகு வாசக சமுத்திரமானது டெக்ஸ் செல்லப்போகும் வழியில் காத்திருக்கும் அதிரடிகளை எண்ணி ஆவல் கொள்ளும், நுரையலை கிளப்பி ஆர்ப்பரிக்கும். அப்பாசச் சமுத்திரத்தின் கனவானது ஓச்சாலா, கோட்டைக் காவலிலிருந்து தப்பியோடியிராவிடில் நிறைவேறியிருக்கவேகூடும். ஆனால் இத்தாலிய Fumetti வரலாற்றில் Storia del West எனும் பெருந்தொடர் உருவாக காரணமாக இருந்த கதாசிரியரான Gino D’Antonio இக்கதையின் சுவாரஸ்யத்திற்கு சுவையேற்றும் விதமாக ஓச்சாலாவை தேடி வேட்டையாடும் கதையாக TEX Special n°22 ன் Seminoles ஐ உருவாக்கி அதை டெக்ஸின் வாசக சமுத்திரத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.
இரு கொலைகளிற்காக மரணதண்டனை வழங்கப்பட்ட கைதியொருவனை அமெரிக்க ஜனாதிபதி வழங்கும் அழுத்தத்தின் பேரிலேயே டெக்ஸாஸ் நோக்கி அழைத்து செல்ல வருகிறார் டெக்ஸ். ஒரு சாதாரண செவ்விந்தியனிற்கு வழங்கப்பட்ட தண்டனையை டெக்ஸாஸில் மீள்விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன, இதில் அமெரிக்க சனாதிபதியின் தலையீட்டிற்கு காரணம் என்ன எனும் கேள்விகள் டெக்ஸ் மனதில் எழாமல் இல்லை. ஆனால் தனது மேலதிகாரிகளினதும், ஜனாதிபதியனதும் உத்தரவுகளை அவரால் உடனடியாக மறுத்துவிட முடிவது இல்லை. தன் பாதுகாப்பின் கீழ் டெக்ஸாஸ் செல்ல வேண்டிய ஓச்சாலா தன் கழுகுக் கண்கள் முன்பாகவே பெருநிலப்புல்வெளி முயல்போல் தப்பியோடும்போது டெக்ஸிற்கு இருப்பதும், தெரிந்ததும் ஒரே வழிதான். மனித வேட்டை. டெக்ஸ் தப்பி ஓடிய கைதியை உயிருடன் பிடித்து நீதியின் முன்பாக நிறுத்த விரும்புகிறார். ஆனால் ஓச்சாலாவின் உயிர் தன் கைகளினாலேயே போகவேண்டும் எனும் முனைப்புடன் ஓச்சாலாவை வேட்டையாடக் கிளம்புகிறான் இன்னொருவன். நாய்மனிதன் என பட்டப்பெயர் பெற்ற அம்மனிதனின் பெயர் லாபார்ஜ்.
பூர்வகுடிகளின் இனவழிப்பானது உக்கிரம் பெற்றபோது அவர்கள் தம் வாழ்நிலங்களிலிருந்து விலகி தாம் பாதுகாப்பாக வாழக்கூடிய பகுதிகளில் புகலிடம் தேடிக் கொண்டார்கள். இவ்வாறாக ஃப்ளோரிடாவின் சதுப்புநிலக்காட்டுப் பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வந்து குடியேறிய க்ரீக் பூர்வகுடிகளின் வழிவந்தவர்களே செமினோல்கள். செமினோல்கள் என்பதற்கு ஓடிச் சென்றவர்கள், கட்டுக்கடங்காதவர்கள், சுதந்திரிகள் எனும் அர்த்தங்கள் உண்டு. Everglades எனப்படும் இந்த சதுப்புவனப் பகுதியானது அடர் தாவரச் செழுமையும், நிலப்பரப்பைவிட அதிகமான நீர்ப்பரப்பையும், அபாயகரமான இரைகொல்லிகளையும், புதைமணல் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த, மனிதர்களால் இலகுவாக உள்நுழைந்துவிட முடியாத ஒரு வனமாக இருந்தது. இயற்கை தன் நுட்பத்தால் உருவாக்கிய இந்த பாதுகாப்பு வலயத்தினுள்ளே சென்று புகலிடம் தேடிக் கொண்டவர்கள் செமினோல்கள் மட்டுமல்ல அமெரிக்க தெற்கின் நிலக்கிழார்களின் கீழ் அடிமைகளாக இருந்து விடுதலை வேண்டி தப்பி சென்ற கறுப்பினத்தவர்களும் எவெர்கிலேட்ஸ் சதுப்பு வனத்தினுள் ஆழமாக சென்று மறைந்து வாழ்ந்தார்கள். இவ்வாறாக தப்பி ஓடி எவெர்கிலேட்ஸினுள் தஞ்சம் புகுந்த கறுப்பினத்தவர்களை செமினோல்கள் தம்மிடையே வரவேற்று அவர்களையும் தங்களில் ஒருவராக அங்கீகரித்தார்கள்.
semi1இவ்வாறாக ஒதுங்கி இயற்கையின் பாதுகாப்பினுள் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளையும் தேடியழிக்க ராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியபோது அவர்களின் பிரதான எதிரியாக உருப்பெற்றது எவெர்கிலேட்ஸ் எனும் இந்த சதுப்புவனமே. இவ்வனப்பகுதியில் வழியைக் கண்டுபிடிப்பது ராணுவத்திற்கு மிகச்சிரமமான ஒன்றாக இருந்தது. வனத்தின் அடர்வுக்குள் மறைந்திருந்து தாக்கி மறையும் பூர்வகுடிகள் கூடவே இரைகொல்லிகள், புதைமணல்கள், எதிர்பாராமல் வந்து தாக்கும் நோய்கள் என அச்சூழலே அவர்களை எதிர்த்து தாக்கியது. அவர்கள் எதிர்கொண்ட இவ்வகையான தடங்கல்களை தவிர்க்கும் பொருட்டு இச்சதுப்புவனத்தினூடாக தம்மை சிரமங்கள் இன்றி வழிநடாத்தி செல்லக்கூடிய வழிகாட்டிகளின் சேவைகளை நாடிச் சென்றார்கள். அவ்வகையான வழிகாட்டிகளில் திறமையும், குரூரமும் ஒருங்கே படைத்த ஒருவனே லாபார்ஜ்.
வழிகாட்டிகளில் பெரும்பாலானவர்கள் ராணுவம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி அவர்களை ஆபத்துகளை விலக்கி அழைத்து செல்பவர்களாகவே இருப்பார்கள். மோதல்கள் உருவாகும் சமயங்களிலே அவர்கள் ராணுவத்தின் பக்கமாக நின்று மோதுவார்கள். ஆனால் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கும் முன்பாகவே பூர்வகுடிகளின் தலைத்தொலிகளை வேட்டையாடி அதில் இன்பம் காண்பவனாக இருந்தவன் லாபார்ஜ். பூர்வகுடிகளை கொன்றொழிப்பதிலேயே அவன் மகிழ்ச்சி உதயமாகிறது. தன் இளமையில் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கி அவன் அழித்தொழித்த பூர்வகுடிகளின் வாழ்க்கைகள் அதிகமே. இந்த செயலிற்கு துணையாக எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தில் பூர்வகுடிகளை மோப்பம் பிடித்து கண்டறிய அவன் சில நாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகத்திறமையாக மோப்பம் பிடிக்கும் இந்நாய்கள் லாபார்ஜின் கட்டளைப்படி மனிதர்களை உயிருடன் குதறிக் கிழித்துப்போடும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இந்நாய்களுடனான நெருக்கமும், உறவும் லாபார்ஜையும் அந்நாய்களைப் போலவே மோப்பம் பிடிக்க கூடியவனாகவும், நுட்பமாக தடயங்களை தேடிச் செல்லக்கூடியவனாகவும் படிப்படியாக உருவாக்கியது. அந்நாட்களில் குரூரத்தில் சிறந்தது நாய்களா அல்லது லாபார்ஜா எனும் கேள்விக்கு விடையறிவது இலகுவான ஒன்றாக இருந்ததில்லை. கதையின் ஒரு தருணத்தில் செமினோல்களின் கிராமத்தில் நாய்களே இல்லை எனும் படிமம் முன்வைக்கப்படும்.
sem1டெக்ஸின் கதைகளின் எதிர்பாத்திரங்கள் எமகாதகர்களாக இருக்கின்ற வேளையில் கதைகளின் வேகமும், விறுவிறுப்பும் கணிசமான அளவில் அதிகரித்துவிடும். லாபார்ஜ் தன் குரூரம் வழியே டெக்ஸ் வாசகர்களின் மனதில் தன்னை நிறுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம். ஓச்சாலா மீது அவன் கொள்ளும் கொலைவெறி மிகவும் வேடிக்கையான ஒன்றாகவே கதையின் ஆரம்பத்தில் வாசகர்களிற்கு தோற்றம் தரும். ஓச்சாலா கைது செய்யப்படக் காரணமானவன் லாபார்ஜ்தான். அந்த சம்பவத்தின்போது லாபார்ஜை நோக்கி ஓச்சாலா துப்பாக்கி பிரயோகம் செய்கிறான். லாபார்ஜுடன் கூடவே சென்றிருந்த ராணுவவீரர்கள் ஓச்சாலாவின் துப்பாக்கி பிரயோகத்தை தற்பாதுகாப்பு என்பதாக கருதுகிறார்கள். ஆனால் லாபார்ஜோ அது தன்மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் என்பதாக தீர்மானித்துக் கொள்கிறான். அக்கணம்முதலே ஓச்சாலா மீதான கொலைவெறி லாபார்ஜினுள் ஒரு மூர்க்கமான விலங்குபோல நடைபயில ஆரம்பிக்கிறது. கோட்டை காவலிலிருந்து ஓச்சாலா தப்பிச் சென்று விடும்போது அவனைத் தேடி டெக்ஸிற்கு முன்பாக செல்பவர்களில் லாபார்ஜும் இருக்கிறான். ஒரு தருணத்தில் ராணுவத்தினரை உதறிவிட்டு ஓச்சாலாவை தன் தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு தனியாகவே ஓச்சாலாவை வேட்டையாடும் முயற்சிகளை ஆரம்பிக்கிறான்.
வயதில் முதுமை சற்றே வந்தேறி அமர்ந்துவிட்டாலும் கதையில் டெக்ஸிற்கு பெரும் தலைவலியாக அமைவது லாபார்ஜ்தான். ஆனால் கதையின் வில்லன் லாபார்ஜ் இல்லை. டெக்ஸ்தான். லாபார்ஜிற்கு அவர் செய்யும் செயல்களையும் அவற்றில் ஒலிக்கும் தொனிகளையும் அவதானிக்கும்போது அவரை ஒரு நாயகன் எனச் சொல்ல முடியாது. வயதான நிலையில், தனக்கு துணையாக நாய்களும் இல்லாத நிலையில், ஓச்சாலாவைவிட டெக்ஸை கொல்லும் வெறி தன்னுள் நீர்மட்டம்போல உயர உயர பெருமேற்கின் பெருநாயகனான டெக்ஸின் மிரட்டல்கள் முன் மடிந்துவிடாது மனவுறுதியுடன் தன் இலக்கு நோக்கி குரூரமிழக்காது பயணிக்கும் லாபார்ஜ் இக்கதையின் உச்ச நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல.
காவலில் இருந்து தப்பியோடிய ஓச்சாலா ஒரு செமினொல். எனவே அவன் லூசியானாவிலிருந்து எவெர்கிலேட்ஸ் நோக்கி விரைகிறான். லாபார்ஜ் அவனை பின் தொடர்வதை தடுப்பதோடு அவனை தான் பின் தொடர்வதையும் டெக்ஸ் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தின் ஆழமான பகுதியில் வாழ்ந்திருந்த ஓச்சாலா லூசியானா நோக்கி வந்ததிற்கும் அவன் அங்கு ஆற்றிய கொலைகளிற்கும் காரணம் என்ன எனும் கேள்வி டெக்ஸ் மனதில் எழுகிறது. அதற்கான காரணங்களை தன் கதையோட்டத்துடன் சலிப்பின்றி விபரிக்கிறார் கதாசிரியர் ஜினோ ட அண்டோனியோ. அது என்ன என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளும் தருணம் யார் யாரால் வேட்டையாடப்படுகிறார்கள் எனும் கேள்வியின் விடையானது மெல்ல மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும்.
டெக்ஸ் வாழ்ந்திருக்கும் மேற்கானது தான் உருவாக்கிய மேற்கிலிருந்து வேறுபட்ட ஒன்று எனச் சொன்னவர் இக்கதையின் கதாசிரியரான ட அண்டோனியோ. அவரின் Storia del West பெருமேற்கு குறித்த சித்திரக்கதை படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 1967 களில் அவர் ஆரம்பித்த மேற்கின் கதை எனும் அத்தொடர் பல சித்திரக் கலைஞர்களின் திறமையான ஒத்துழைப்புடன் 1980 வரை தொடர்ந்து நிறைவுற்றது. ஏறக்குறைய 7500 பக்கங்கள் கொண்ட தொடரிது. எனினும் பொனெலியின் வேண்டுகோளிற்கிணங்கி ட அண்டோனியொ உருவாக்கியிருக்கும் இந்தக் கதை டெக்ஸ் கதைகளின் வழமையாகிய மிகையான தர்க்க மீறல்களை தன்னில் இயன்றளவு விலக்கி கொள்ள முயன்றிருக்கிறது ஆனால் முழுமையாக அல்ல. ஓச்சாலா, லாபார்ஜ் போன்ற பாத்திரங்களை அவர் டெக்ஸை விட மிக சிறப்பானவைகளாக உருவாக்கி இருக்கிறார். டெக்ஸை ஒரு முரட்டு மனிதனாக காட்டுவதில் ட அண்டோனியா வெற்றி பெற்றிருக்கிறார். கார்சனிற்கு இக்கதையில் அதிக பங்கு கிடையாது. கதையின் ஆரம்ப பகுதியிலேயே காலில் அடிபட்டவராக ஃபோர்ட் பிளிஸில் சிகிச்சை பெற சென்று அங்கு தங்கி விடுகிறார் அவர். கார்சனின் இடத்தை இட்டு நிரப்ப யேசு எனும் வழிகாட்டியை தன் உதவிக்கு சேர்த்துக் கொள்கிறார் டெக்ஸ். அடர் சதுப்புவனமான எவெர்கிலேட்ஸில் டெக்ஸிற்கு வழிகாட்டியாக செயற்படுபவன் யேசு எனும் கறுப்பு இனத்தவனே. ப்ளோரிடாவின் சதுப்புக்காடுகளினுள் டெக்ஸ் ஏற்கனவே டிஸ்கோ டான்ஸ் ஆடியிருந்தாலும் லாபார்ஜிற்கு எதிராக தனக்கு ஒரு துணை தேவை என்பதை அவர் கதையில் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.
sem2எவெர்கிலேட்ஸின் சிட்டிசனான ஒரு ராட்சத முதலையுடன் டெக்ஸ் கட்டிப்பிடித்து போடும் சண்டை பசுபிக் ரிம் கைஜு மோதல் காட்சிகளை மிக்கி மவுஸ் கார்ட்டூன் நிலைக்கு படியிறக்கி விடுகிறது. இச்சண்டைக்காட்சியை பார்த்த ஒரு கைஜு இந்த மவராசான் கிட்ட நான் அடிபடனும், அவர் கைல நான் சாவனும் என தன் உளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆற்றில் மிதந்தபடியே ராட்சத முதலை டெக்ஸ் நீ ஆம்பளயா இருந்தா உள்ள ஒத்தைக்கு ஒத்தை வாடா என சவால்விட பதிலுக்கு டெக்ஸ் விடும் பஞ்ச் டயலாக்கில் சுனாமிகளை உருவாக்ககூடிய ஐந்து பூமியதிர்ச்சிகளின் சக்தி அடங்கி அதிர்ந்து எவெர்கிலேட்ஸையே ஆடச்செய்கிறது. அப்புறம் அந்த முதலைக்கு என்ன ஆச்சு என நீங்கள் உங்கள் மனதில் கேள்வி எழுப்பினால் இதுவரையில் தலைவர் டெக்ஸின் கதைகளை படித்திராத அபாக்கியசாலிகள் நீங்கள் என்பது இங்கு உறுதியாகிறது.
ட அண்டோனியோ எழுதியிருக்கும் கதையின் முக்கிய திருப்பங்கள் நிகழும் எவெர்கிலேட்ஸ் பகுதிகளை அப்படியே வாசகரிடம் சித்திரங்களில் வழங்கியிருப்பவர் Lucio Filippucci. மர்ம மனிதன் மார்டின் கதைகளிற்கு சித்திரங்களை வரைபவர்களில் ஒருவர் இவர். மிகத் தெளிவான கோடுகள் வழியாகவும் கறுப்பு, வெள்ளை வண்ணங்களின் செறிவு வேறுபாடு, ஒளிசேர்முறை வழியாகவும் சிறப்பான சித்திரங்களை அவர் இக்கதைக்கு வழங்கியிருக்கிறார். அதுவும் எவெர்கிலேட்ஸ் பகுதிக்குள் கதை நுழைந்துவிட்ட பின்பாக பின்னி எடுத்து இருக்கிறார் மனிதர். அடர்காட்டின் தாவரச்செழுமையை ஊடறுத்துக் கொண்டு ஒளிப்பட்டையாக நீளும் சூரியன் வாசகர் மனதில் இலகுவாக இடம் பிடிக்கிறான். சதுப்புவனச்சூழலை அவர் வரைந்து வழங்கியிருக்கும் திறமையில் ஒரு சில கணங்கள் நிலைத்து அதில் அவர் சேர்த்துக் கொண்டிருக்கும் தகவல்களையும் அதற்கு பின்பாகவுள்ள அவர் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தெளிவாக ஒருவரால் அவதானித்திட முடியும். லாபார்ஜ் எனும் பாத்திரத்திற்கு ஃபிலிபூஸ்ஸி உயிர் தந்திருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக அவனது முகம். கொலைவெறி நடனமிட, அவன் முகத்தில் ஏளனமாக நளினக்கோலமிடும் குரூரமும் அவன் முகபாவனைகளும் வாசகர்கள் நினைவில் சிறிது காலம் நிலைக்கவே செய்யும். செமினோல் பூர்வகுடிகள், அவர்கள் வாழிடங்கள் போன்றவற்றையும் நுட்பமான தகவல்களுடன் அவர் சித்திரங்களாக உருவாக்கியிருக்கிறார். சித்திரங்களும், கதையும் இணைந்து டெக்ஸின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அரிதான கதைகளில் செமினோலிற்கும் இடமுண்டு.