பிரபல தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ரம் தொடுத்த வழக்கில் தனக்கெதிரான தீர்ப்புகளை சந்திக்கும் பொருளியல் பத்தியாளன் மிக்கேல் ப்ளொம்க்விஸ்ட் அவன் பணியாற்றிவரும் பத்திரிகையான மில்லேனியத்தில் இருந்து விலகிச்செல்கிறான். இந்நிலையில் அவனைத் தொடர்பு கொள்ளும் சூவிடனின் பெரும் வியாபார புள்ளியான ஹென்ரிக் வேன்ஞ்சரின் வக்கீல் ஃப்ரோட், அவனை வேன்ஞ்சர் மாளிகைக்கு வரும்படி அழைப்பை விடுக்கிறான். அழைப்பை ஏற்று அங்கு செல்லும் ப்ளொம்க்விஸ்டிடம் நாற்பது வருடங்களிற்கு முன்பாக மர்மமான முறையில் காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான ஹாரியட்டின் மறைவின் பின்பாக இருக்ககூடிய மர்மங்களை ஆராய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார் ஹென்ரிக் வேன்ஞ்சர்……
உலகின் 46 நாடுகளில் 65 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்த மில்லேனியம் வரிசை நாவல்களின் பிறப்பிடம் சூவீடன். 2009 களில் சூவீடிய மொழியில் நாவலை தழுவி திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. நாவலை எழுதிய Stieg Larsson தன் படைப்புகளின் வெற்றியை ருசிக்காமலே இந்த இன்னுலகை விட்டு நீங்கி விட்டார். நவலின் சிறப்பான வெற்றி ஹாலிவூட் நவாப்கள் மனதில் குத்தாட்டம் போடாமல் இல்லை. The Girl with the Dragon Tattoo எனும் பெயரில் வெளியான நாவலின் ஹாலிவூட் வடிவம் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. குரங்கு கைகளில் பூ மாலையை தராதீர்கள் என்று சொன்ன பெரியவர்கள் பூமாலையை யாரிடம் தரவேண்டும் என்பதை சொல்லவில்லை. ஆனால் ஹாலிவூட் நவாப்கள் இத்திரைப்படைத்தை இயக்க தேர்ந்தெடுத்த நபர் குறித்த கணிப்பில் தப்பே செய்யவில்லை.
உலகளாவிய வெற்றி பெற்ற திகில் நாவல் ஒன்றின் திரைவடிவைக் காணச்செல்கையில் மனதில் வரும் முதல் எண்ணம் நாவலைவிடத் திரைப்படம் நன்றாக உருவாக்கப்பட்டிருக்குமா அல்லது பெரும்பான்மையான தழுவல்கள் போல் சொதப்பலாக இருக்குமா என்பதேயாகும். இயக்குனர் தேர்ந்த ஆசாமியாக இருந்தாலும் கூட நாவல்களின் திரைவடிவங்கள் ஏமாற்றத் தவறுவதில்லை. இயக்குனர் Brian De Palma இயக்கிய The Black Dahlia வை இதற்கு சிறப்பான ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஜேம்ஸ் எல்ராய் எனும் மகத்தான எழுத்தாளன் எழுதிய மகத்தான படைப்பு திரையில் தன் மகத்தை எல்லாம் தொலைத்து விட்ட ஒரு படைப்பாய் உயிர் கொண்டிருக்கும். இயக்குனர் டேவிட் ஃபின்ஞ்சர் இயக்கிய Zodiac திரைப்படமானது நல்ல வசூலை சம்பாதிக்கவில்லை எனிலும் நல்லதொரு படைப்பாய் அமைந்திருந்தது. ஒரு தொடர்கொலைஞனைப் பற்றிய இரு நபர்களின் விசாரணை மீது நகரும் அத்திரைப்படம் ஏமாற்றம் தந்திடாத ஒரு திரையனுபவம். ஃபின்ஞ்சர் இயக்கியுள்ள மில்லேனியத்தின் முதல் நாவலின் திரைவடிவம் ரசிகர்களை ஃபின்ஞ்சரிற்கே உரித்தான பாணியுடனான குற்றசூழ்நிலைக்குள் அதன் வண்ணங்களுடன் தவறாமல் எடுத்து செல்கிறது.
படம் ஆரம்பித்து எழுத்துக்கள் திரையில் உருக்கொள்ளும் தருணத்தில் எழுத்துக்களுடன் தோன்றும் செயற்கைவரைதோற்றங்களும், Led Zeppelin பாடலான Immigrant song ஆனது சமகாலத்தின் Trent Reznor & Atticus Ross & karen o திறமைகளில் விளைந்து ஒலிக்கும் பாடலும் இசையும் அட்டகாசமாக இருக்கின்றன. நாவலின் ஆன்மாவை தொலைத்து விடாது அதன் கதைக்களம் நடமாடும் ஸ்வீடன் நாட்டிலேயே இயக்குனர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கதை இடம்பெறும் ஒரு வருட காலத்தின் ஓட்டம் பருவகால ஓட்டங்களாக பாத்திரங்களுடன் உருக்கொள்கிறது திரையில். உறைந்து விறைத்த பனியும், பச்சை வண்ண வசந்தமும் அவற்றிற்கேயுரிய வனப்புடன் காட்சிகளினூடு கண்காட்டுகின்றன. சிறப்பான படத்தொகுப்பும், சூழ்நிலையின் உணர்வுகளை பார்வையாளனிற்கு கடத்திடக்கூடியதான ஒளிப்பதிவும் திரைப்படத்துடன் ஒன்றச்செய்கின்றன.
நாவலில் ப்ளொம்க்விஸ்ட் தன் விசாரணைகளை மேற்கொள்ளும் பகுதி சற்று வேகம் குறைந்த ஒன்றாக இருக்கும். திரைப்படத்தில் திரைக்கதை அதற்கு வேகத்தை கூட்டி தந்திருக்கிறது. சூவீடிய சமூகத்தின் மேற்பூச்சு அழகின் அடியில் ஒளிந்திருக்கக்கூடிய அவலங்கள் சிலவற்றை கதை கூறிச்செல்கிறது. கதையின் மிக முக்கியமான அம்சம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. திரையில் ஃபின்ச்சர் அதை உயிருடன் எடுத்து வந்திருக்கிறார். பலியாளாகவும் பழிவாங்குபவளாகவும், சமூகத்தின் நெறிகள் மீது காறி உமிழ்பவளாகவும், அதன் கணிப்புக்களை சாக்கடைக்குள் வழியச் செய்பவளாகவும் அசத்தலாக உருமாறி நிற்கிறாள் தோளில் ட்ராகன் பச்சை அணிந்த இளநங்கை லிஸ்பெத் ஸ்லாண்டர். திரைப்படம் எங்கும் அழிக்கமுடியா பச்சையாக நிறைகிறது ஸ்லாண்டர் பாத்திரம். பெண்கள் மீதான வன்முறையில் ஒட்டுமொத்த எதிர்குரலாக, பதிலடியாக அது வேகம் கொண்ட காற்றாக எதிர்படும் தடைகளை தூக்கி வீசுகிறது. நாவலில் இருந்ததைவிட அபாரமான முறையில் இப்பாத்திரத்தை உருவாக்கியிருகிறார் இயக்குனர் ஃபின்சர். இப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்பட்ட நடிகை Rooney Mara சமூகத்தால் விளிம்புநிலை ஆளுமை என தீர்க்கப்பட்ட ஒரு பெண்ணை சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வளவு சுதந்திரமானவள், எவ்வளவு உறுதியானவள், அவளுள் சூல் கொண்டு வாழ்ந்திருக்கும் காட்டுத்தனம் வெளிப்படும்போது அவள் எவ்வளவு அழகானவள் என்பவற்றை தன் பாத்திரம் மூலம் அவர் பிரதிபலித்து செல்கிறார். இந்தப் பாத்திரத்துடன் ஒப்பிடுகையில் நடிகர் க்ரெக் டேனியல் ஏற்றிருக்கும் ப்ளொம்க்விஸ்ட் பாத்திரம் திரையில் அடிபட்டு ஒதுங்கி சென்றுவிடுகிறது. முகத்தில் நுன்னுணர்வுகளை அவற்றின் அழகுடன் வெளிப்படுத்த இயலாத நடிகராக இருக்கிறார் க்ரெக் டேனியல்.
திரைப்படம் ஆரம்பித்து சரியாக ஒருமணி நேர அளவில், ஸ்லாண்டரிற்கும், ப்ளொம்க்விஸ்டிற்குமான அறிமுகம் ஏற்படுகிறது. அதுவரையில் ப்ளொம்க்விஸ்டின் கதை ஒரு பக்கமாகவும், ஸ்லாண்டரின் கதை ஒரு பக்கமாகவும் பக்குவமான வேகத்தில் திரையில் எழுதிச்செல்லப்படுகிறது. இந்தக் காலநேரத்தில் இரு ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் பார்வையாளனை சிறப்பாக வந்தடைந்து விடுகின்றன. இருவரிற்குமிடையில் இருக்கக்கூடிய வயது, தொழிற்படு, செயல்முறை, தொழிநுட்ப அனுகு வேற்றுமைகள் எதிர் எதிர் முனைகளாக இந்த இரு ஆளுமைகளையும் சிறப்பாக ஒட்ட வைக்கின்றன. அவர்கள் இணைந்து செயலாற்றும் தருணங்களில் வேகம் கதையில் சிறகு கட்டிக்கொள்கிறது. படிப்படியான விசாரணைகளும் அவை தரும் ஏமாற்றங்களும் பின்னர் பலன் தரக்கூடிய தரவுகளாக மாறி மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க விரைகின்றன. அந்த முக்கிய உண்மையை ஸ்லாண்டரும், ப்ளொம்க்விஸ்டும் கண்டுகொள்ளும் தருணமும் அதற்கு பின்வரும் காட்சிகளும் இதயதுடிப்பை மூச்சுவிட அனுமதிப்பதில்ல. முக்கியமான குற்றவாளிக்கும் ப்ளொம்க்விஸ்டிற்குமிடையில் அந்நிலையில் வரும் உரையாடல் எவ்வளவு குளிரையும் விஞ்சிவிடும். அத்தருணத்தில் அக்குற்றவாளி பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரின் நடிப்பை அவதானியுங்கள். சில நிமிடங்கள் ஆனாலும் தன் நடிப்பால் அள்ளிக்கொள்கிறார் அந்த நடிகர்.
இயக்குனர் ஃபின்ச்சர் மீளத் தம்மை இத்திரைப்படம் மூலம் குற்றசினிமாவில் புதுப்பித்திருக்கிறார். இரண்டரை மணி நேரத்தில் சிறிய ஏமாற்றம் என்பது படத்தின் இறுதி தருணங்களே. அவை தொழிலதிபர் வென்னெர்ஸ்ட்ராம் மீதான எதிர் நடவடிக்கையாக இருக்கின்றன. ஹாரியட்டின் தந்தை மீதான பிரேத பரிசோதனையில் அவர் தலையில் வீழ்ந்த அடி பற்றி ஏதும் இல்லையா என்ன!!!!! இறுதியில் அன்பளிப்பு பரிசாக வாங்கிய தோல் ஜெர்க்கினை குப்பை தொட்டியில் விசி எறிந்து விட்டு சென்றாலும் கூட ட்ராகன் பச்சை அணிந்தவள் ஆழமாக பதிகிறாள் மனதில். [***]
பி.கு...அடைப்புக்குள் உள்ள தலைப்புக்கள் தம்மை மீளமாற்றும் தன்மை கொண்டவை...
ட்ரெய்லர்