மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..
பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.
புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.
ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.
சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.
சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.
சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.
திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன. [***]