வறண்டு கருகிய காற்றும், கொளுத்தும் சூரியனும் முத்தமிட்டுக் காயவைக்கும் நிலமான அமெரிக்காவின் மேற்கில் தனது விடுமுறையை, தன் குதிரையும், உற்ற துணைவனுமான ஜொலி ஜம்பருடன் ஜாலியாக கழித்துக் கொண்டிருக்கிறான் லக்கி லூக்(Jean Dujardin).
ஹீரோக்களின் விடுமுறைகளில் வழமையாக நிகழ்வதுபோல், அமெரிக்க ஜனாதிபதி அனுப்பி வைக்கும் இரு வீரர்கள் லக்கியின் விடுமுறைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பகுதியில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியை விரைந்து சென்று சந்திக்கிறான் லக்கி லூக்.
தன்னையே மீண்டும் அமெரிக்க மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. அவரும் அவரது சகாக்களும் புகைக்கும் சுருட்டுக்களின் புகை வெண்மேகம் போல் அவர்கள் மேல் நழுவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க மக்களின் அபிமானத்தையும், வோட்டுக்களையும் வெல்லும் நோக்கில் அமெரிக்காவின் கிழக்கையும், மேற்கையும் இணைக்கப்போகும் ரயில்பாதையை தேர்தல் நடைபெறுவதற்கு முன் திறந்து வைக்க விருப்பம் கொண்டவராக இருக்கிறார் ஜனாதிபதி.
நியூயார்க்கையும், சான்பிரான்சிஸ்கோவையும் இணைக்கும் ரயில்பாதையை டெய்சி டவுன் எனும் (Daisy Town)சிறிய நகரில் தங்க ஆணி அடித்து இணைத்து வைப்பதில் ஆவல் கொள்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் மிகப் பெரிய பிரச்சனை ஒன்று அங்கு அவரிற்கு முன்பாக ஆணி அடித்து குத்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது.
டெய்சி டவுன் எனப்படும் புழுதிப் பழுப்பேறிய அந்த சிறிய நகரம், ரவுடிகளினதும், சட்டவிரோதிகளினதும் பிடியில் சிக்கித்தவிக்கிறது. பதினாறு ஷெரீஃப்களின் சமாதிகள் அதற்கு சாட்சியம் பகர்கின்றன. நகரிலிருக்கும் ஒரே ஒர் பிரேதப்பெட்டிக் கடையானது அதன் கதவுகளை வாடிக்கையாளர்களிற்காக எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறது. பிரேதப் பரிசாரகர் ஓயாத வேலையால் ஓர் நடைப்பிணம்போல் உலாவுகிறார். குதிரைகளை உள்ளே வைத்து அடக்கம் செய்வதற்காக குதிரை வடிவில் குதிரைகளிற்கான பிரேதப் பெட்டி மாடல்கள் விற்பனையிலிருக்கின்றன. நகரில் குடியிருக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை நற்பிரஜைகளின் எண்ணிக்கையை பெருமளவு தாண்டி நிற்கிறது. [ ஸ்கோர்- ரவுடிகள்-156/ நற்பிரஜைகள்-28]
இவ்வகையான ரவுடிப்பூங்காவான டெய்சி டவுனில் ரவுடிகளை ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டும்படி லக்கி லூக்கைக் கேட்டுக் கொள்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ஜானாதிபதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் லக்கி 48 மணி நேரத்திற்குள் டெய்சி டவுன் சகஜ நிலைக்கு திரும்பும் என்று கூறிவிட்டுக் கிளம்புகிறான்.
எங்கள் அபிமான ஹீரோ லக்கி, டெய்சி டவுனை நோக்கிச் செல்லும் வேளையில் நாங்கள் ஒர் சிறிய ப்ளாஷ்பேக்கை பார்க்க செல்வோம். டெய்சி டவுன் லக்கி பிறந்த மண். தன் சிறு வயதை பெற்றோர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் மகிழ்ச்சியாக லக்கி கழித்த நகரம் அது.
திரிஷ்ஷர் எனும் படுபாதக கோஷ்டியால் லக்கியின் பெற்றோர் கொன்று குவிக்கப்பட, அக்கோஷ்டியிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவிடுகிறான் சிறுவன் ஜான் லூக். அந்தக் கொடிய கோஷ்டியின் கைகளில் அகப்பட்ட எவருமே உயிர் தப்பியதாக வரலாறு இல்லை. ஜான் லூக் அவர்களிடமிருந்து உயிர்தப்பி வந்ததால் அவனிற்கு லக்கி எனும் பட்டப் பெயர் சேர்ந்து கொள்ள லக்கி லூக் ஆகிறான் அவன்.
தன் பெற்றோரின் மரணத்தின் பின் டெய்சி டவுனை விட்டு நீங்கியிருந்த லக்கி, மீண்டும் தன் பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான். நகரின் எல்லையில் இது லக்கி லூக் பிறந்த ஊர் என எழுதி இருக்கும் அறிவிப்பு பலகையின் கீழ் ஒர் எலும்புக்கூட்டிற்கு ஆடை அணிவித்து அமர்த்தியிருக்கிறார்கள் ரவுடிகள்.
டெய்சி டவுனில் தான் காலடி வைத்த சில நிமிடங்களிலேயே தன் நிழலை விட வேகமாக சுடக்கூடிய ஹீரோவான லக்கி, நகரில் ரவுடிகள் மழையைப் பொழிய வைக்கிறார். சிற்றீசல்கள் போல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் கொடிய ரவுடிகள். புதிய ஷெரீஃபான லக்கியின் வரவால் நகரில் இனி என்ன நடக்குமோ என அச்சம் கொள்ளும் அப்பாவி நகர மக்கள், தங்கள் உடல்களை பீப்பாக்களிற்குள் மறைத்துக் கொண்டு நடமாடுகிறார்கள்.[வெளியில் நடப்பதை வேடிக்கை பார்க்கவும், வம்பு பேசவும் பீப்பாயில் ஒர் ஓட்டை போடப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது]
டெய்சி டவுனில் தனிக்காட்டு ரவுடியாக ஆட்சி செய்து வரும் Pat Poker ( Daniel Prévost), தன் ஆட்சியைக் கவிழ்க்க வந்திருக்கும் லக்கியை கடுமையாக எதிர்க்கிறான். அவன் எதிர்ப்புக்களை தூசி போல் தட்டும் லக்கி, பட் போக்கரை உடனடியாக நகரை விட்டு நீங்கச் சொல்லி எச்சரிக்கிறான். வேறு வழி தெரியாத பட் போக்கர், லக்கியை தீர்த்துக் கட்டுவதற்காக மேற்கின் புகழ் பெற்ற ரவுடிகளில் ஒருவனான Billy The Kid (Michael youn)ஐ டெய்சி டவுனிற்கு வரவழைக்கிறான்.
ஏழு வயதில் தன் பெற்றோர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த ஒர் அற்ப செயலிற்காக தன்னை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்து தனக்கு கிடைத்திருக்க வேண்டிய இனிமையான குழந்தைப் பருவத்தை தன்னிடமிருந்து பறித்த லக்கி லூக்கை தீர்த்துக் கட்ட பணம் வாங்காமலே தயாராக இருக்கிறான் பில்லி த கிட்.
ஆனால் பில்லி, லக்கி லூக்கை தீர்த்துக் கட்ட எடுக்கும் அதிரடி முயற்சியும் படு தோல்வியில் முடிகிறது. ரவுடிகளின் தலைமைச் செயலகமாக செயற்படும் ஹாட் டாக் சலூனை (HOT DOG SALOON) டெய்சி டவுனின் சாதாரண “குடி” மக்களின் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க விரும்பி அங்கு செல்லும் லக்கி லூக், சலூனில் கவர்சிப் பாடகியாக சேவை செய்யும் Belleன்(Alexandra Lamy) கவர்ச்சியில் மயங்க ஆரம்பிக்கிறான்.
சலூனில் சூடான ஓர் பாடலைப் பாடியபடியே லக்கியின் மீது அதிகமாக உரசுகிறாள் பெல். இதனால் கோபம் கொள்ளும் பட் போக்கர் அவளைக் கன்னத்தில் அறைகிறான். போக்கரை தடுத்து நிறுத்தும் லக்கி லூக் தன் பெற்றோர்களின் கொலைகளிற்கு காரணம் பட் போக்கரே என்பதனை அறிந்து கொள்கிறான்.
லக்கியின் மனம் வஞ்சம் வேண்டித் துடிக்கிறது. பட் போகரை உடனடியாக தன்னுடன் ஒண்டிக்கு ஒண்டியாக துப்பாக்கி மோதலிற்கு அழைக்கிறான் அவன். இடம்பெறும் ஒண்டிக்கு ஒண்டியில் பட் போக்கரை சுட்டுக் கொன்று விடுகிறான் லக்கி லூக்.
தன் பெற்றோர்களின் மரணத்தின்பின் அவர்கள் சமாதிகள் முன்பாக தன் வாழ்நாளில் எந்த உயிரையுமே பறிக்க மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்ட லூக்கின் மனம், பட் போக்கரை கொன்ற காரணத்தால் கலங்கித்தவிக்கிறது. பிரமை பிடித்தவன் போல் அலைகிறான் லக்கி. தன் வாழ்வை முடித்துக் கொள்ளவும் முயல்கிறான்.
செல்ல வேறு இலக்கின்றி தான் வாழ்ந்த வீட்டிற்கு திரும்புகிறான் லக்கி. தன் பெற்றோர்களின் சமாதிகளிற்கு முன்பாக நின்று கலங்கும் அவன் தன் மனதில் கேள்விகளை எழுப்புகிறான். இது நாள் வரை தான் செய்து வந்த தீரச்செயல்கள் யாவும் தன் ஆழ்மனதில் ஒளிந்து கிடந்த வஞ்சத்தின் வேடமே எனும் தீர்மானத்திற்கு வரும் அவன், இனி துப்பாக்கியை தன் கைகளில் ஏந்தப்போவதில்லை எனும் முடிவிற்கு வருகிறான். தன் துப்பாக்கியை பெற்றோர்களின் சமாதிமேல் வைத்து விட்டு நகரம் நோக்கி திரும்புகிறான் அவன்.
ஹாட் டாக் சலூனிற்குள் நுழையும் லக்கி, அங்கு கூடியிருப்பவர்களிடம் நகரின் ஷெரீஃப் பதவியை யாராவது ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறான். லக்கியிடம் துப்பாக்கி இல்லை என்பதை அறிந்து கொள்ளும் ரவுடிகள் அவனை இஷ்டத்திற்கு அடிக்க ஆரம்பிக்கிறார்கள். மயங்கி விழும் லக்கியை பில்லி த கிட்டின் தலைமையில் நகரின் மத்தியில் தூக்கில் போடுகிறார்கள் அவர்கள்.
தூக்குக் கயிறு கழுத்தில் இறுகி பரலோகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துவிட்ட லக்கியை அவ்வேளையில் நகரிற்குள் நுழையும் Calamity Janeம்(Sylvie Testud), Jesse Jamesம்(Melvil Poupaud) காப்பாற்றுகிறார்கள். லக்கி ஒரு சரித்திரம், அவன் என் கையால்தான் இறக்க வேண்டும், வரலாற்றில் என் பெயர் இடம்பெற வேண்டும் என முழங்குகிறான் ஜெஸி ஜேம்ஸ். இதனைக் கேட்கும் பில்லி தானும் வரலாற்றில் இடம்பிடிக்க விருப்பம் தெரிவிக்கிறான். கேடிகள் இருவரும் டெய்சி டவுனின் ஷெரீஃப் பதவியை லக்கிக்கு நல்ல புத்தி திரும்பும்வரை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானிக்கிறார்கள்.
அரை மயக்கத்தில் கிடக்கும் லக்கியை அவன் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கலாமிட்டி ஜேன். லக்கியின் வீட்டிற்கு அவனைத்தேடி வரும் பெல், அவனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஜேனிடமிருந்து அபகரித்துக் கொள்ள, லக்கியின் வீட்டிற்கு காவலாக இருக்க ஆரம்பிக்கிறாள் ஜேன்.
படிப்படியாக உடல் நலம் தேறும் லக்கி லூக், ஹீரோ வாழ்வை உதறிவிட்டு சாதாரண மனிதன் ஒருவன் போல் வாழ ஆரம்பிக்கிறான். லக்கி, குளிக்கிறான்!!!! வயலை உழுகிறான், ஜேனுடன் முஷ்டி சண்டை போடுகிறான், பெல்லுடன் காதலில் வீழ்கிறான், கிதார் இசைத்து காதல் பாட்டு பாடுகிறான். பெல்லை கட்டியணைத்துக் கொண்டு ம்ம்ம்ம் தூங்குகிறான். பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட அவன் மனம் ஆவல் கொள்கிறது.
லக்கியின் மனதில் தனக்கு இடமில்லை என்பதை அறியும் கலாமிட்டி ஜேன் கோபத்துடன் அவனை விட்டு பிரிந்து செல்கிறாள். தன் மாமா தனக்கு வழங்கிய டிக்கட்டுகளுடன் ஜரோப்பிய உல்லாச பயணத்திற்கு பெல்லுடன் கிளம்புகிறான் லக்கி. செல்லும் வழியில், ஒர் மழை இரவில் அவன் அறிந்து கொள்ளும் ஓர் உண்மை அவனை மீண்டும் துப்பாக்கியை தன் கையில் ஏந்த வைக்கிறது…..
சர்வதேச காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளம் கவர் காமெடிக் கவ்பாய் லக்கி லூக்கின் சாகசங்களை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியிருக்கும் LUCKY LUKE எனும் பிரெஞ்சுத்திரைப்படமானது அசர வைக்கும் ஸ்டைலுடனும், ரசனை மிகுந்த நுண்ணிய நகைச்சுவை நிறைந்த சம்பவங்களுடனும் கலக்கலான வெஸ்டர்ன் சினிமா பாணியில் திரைப்படுத்தப்பட்டிருகிறது.
வெள்ளித்திரை வரலாற்றில் இவ்வளவு அழகான, ஸ்டைலான லக்கி லூக்கை ரசிகர்கள் கண்டிருக்க முடியாது. Jean Dujardinக்கு அளவெடுத்து தைத்தாற்போல் கனகச்சிதமாக பொருந்திப்போகிறது லக்கிலூக் பாத்திரம். அவரின் தொப்பியிலிருந்து காலணிகள் வரை மிக அக்கறையுடன் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். தன் திறமையான நடிப்பால் இதுவரை நாம் கண்டிராத ஒரு லக்கி லூக்கை ரசிகர்களிற்கு வழங்குகிறார் நடிகர் ஜான் டுஜார்டான்.
லக்கி லூக்கிற்கு எதிராக மோதும் வில்லன் பாத்திரங்கள் காமிக்ஸ் புத்தகங்களில் லக்கியை பெருமளவு ஓரம் கட்டிவிடும் பாணியில் படைக்கப்பட்டிருப்பார்கள். திரைப்படத்தில் லக்கிக்கு போட்டியாக சீட்டுக்கட்டுகளில் ஜிகிடிஜிக் வித்தை காட்டும் பட் போக்கர், நிலத்தில் தவழும் தன் நீண்ட மேல் கோட்டுடன் ஷேக்ஷ்பியரின் நாடக வசனங்களை மேடை நடிகன் போல் அள்ளி உதிர்க்கும் ஜெஸி ஜேம்ஸ், வாயைத்திறந்தால் நல்ல வார்த்தைகளே வெளியே வராத பெண்சிங்கம் கலாமிட்டி ஜேன், தன் சிறுபிள்ளைத்தனமான கேடித்தனங்களால் சிரிக்க வைக்கும் பில்லி த கிட் எனும் அட்டகாசமான கூட்டணி. இவர்களில் பில்லி த கிட் தன் குறும்புகளால் ரசிகர்களிடம் நெருங்கிவிடுகிறார்.
ஜொலி ஜம்பர் இல்லாத லக்கியா! ஜொலி ஜம்பர், முதல் முதலாக லக்கி லூக்குடன் பேச ஆரம்பிக்கும் அந்தக் காட்சி மனதை நெகிழ வைக்கும். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இத்திரைப்படத்தின் சிறந்த காட்சியும் அதுவே. ஜொலியை படம் முழுவதும் வளவளவென்று பேசவைக்காது அளவுடன் அழகாக அட்டகாசமான கிண்டல்களுடன் பேசவைத்திருக்கிறார்கள். காமிக்ஸ் கதைகளில் ஜொலி செய்யும் நம்ப முடியாத ஸ்டண்ட்கள் எதுவும் படத்தில் கிடையாது என்பது ஓர் நிம்மதி.
இவ்வளவு நல்ல தருணங்கள் இருந்தும் லக்கி லூக் சாதாரண வாழ்வில் குதிக்கும் போது, திரைப்படம் ரசிகர்கள் மேல் கொண்ட பிடி தளர ஆரம்பிக்கிறது. எதிர்பாராத திருப்பத்துடன் ஆரம்பிக்கும் படத்தின் இறுதிப்பகுதிகூட அதற்குரிய போதிய உப்பு, காரம் மற்றும் மந்திரப் பற்றாக்குறையால் ரசிகனை தன் பிடிக்குள் முழுமையாகப் பற்றிக் கொள்ள தவறி விடுகிறது.
படத்தின் இயக்குனர் James Huth, காமிக்ஸ் ஆல்பங்களில் வாசகர்கள் கண்டு மகிழ்ந்த லக்கி லூக்கை தவிர்த்து விட்டு, தனக்கே உரிய ஓர் புதிய லக்கியை பார்வையாளர்களிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். புகழ் பெற்ற கவ்பாயான லக்கியை, சாதாரண வாழ்வில் தள்ளி விட்டு அவன் உள்மன அவாக்களினை ஆழமாக அலசிப் பார்த்திருக்கிறார். லக்கி லூக் காமிக்ஸ் ஆல்பங்களில் நினைத்தே பார்க்க முடியாத செயல்களை திரையில் தோன்றும் லக்கியை செய்ய வைத்திருக்கிறார்.
அவரது துணிச்சலான இந்த முயற்சி லக்கியின் தீவிர ரசிகர்களை திருப்திப்படுத்தாது ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும். கண்ணிற்கு விருந்தான அழகான காட்சிகள், காமெடி, இசை, அலங்காரங்கள், ஆக்ஷன் என முற்றாக ஓரங்கட்டி விட முடியாத கலவையுடன் இருக்கிறது திரைப்படம். எதிலும் ஒர் புதுமையையும், மாற்றத்தையும் வேண்டி விரும்பும் உள்ளங்களை இத்திரைப்படம் அதிகம் ஏமாற்றாது சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும். இந்த டெய்சி டவுன் மாட்டுக்காரன், காமிக்ஸ் லக்கி லூக் போல் இல்லாவிடிலும் கூட அவன் ஸ்டைலே தனிதான். (***)
பிரெஞ்சு ட்ரெயிலர்